நெகிழ்ச்சியான நடையோடும் பேசாப்பொருளைப் பேசியபடியும் பேசிய பொருளின் காட்டப்படா சித்திரத்தைச் சுமந்தபடியுமான கவிதைகளை எழுத முயற்சித்த தொகுப்பாக 2017இல் வெளியாகியிருக்கிறது கயல் எழுதிய ‘மழைக்குருவி’. கவிதைகள் ஆண் பெண்ணுக்கான உறவுநிலைகளின் சமூகவெளி, பெண்ணுக்குள் காதலும் நட்பும் ஏற்படுத்தும் லௌகீக மாற்றங்கள், பெண்ணால் மட்டுமே பேச முடிகிற அல்லது பேசத் துணிகிற சங்கதிகள் முதலியவற்றைக் கொண்டு நிரப்பட்டவைகளாக இருக்கின்றன. நூலில் உள்ள பல கவிதைகள் ஏற்கனவே எழுதப்பட்டவை. அவைகளை மீண்டும் கயல் அவரது வார்த்தைகளில் சொல்ல முயன்றிருக்கிறார்.

kayal mazhaikkuruviபெண்களின் இருப்பைத் துல்லியமாக மறுவிசாரனைக்கு உட்படுத்தியிருக்கும் கவிதை ‘உடுதுணி’. முந்தானை சரியாக இருக்கும் போதே அது சரிந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு சரிசெய்து தன்னிருப்பைக் காட்டிக்கொண்டே இருக்கும் பெண் ஸ்கேன் அறைக்குள் வெளிர்நிற ஒற்றை ஆடையுடன் இருக்கும் போது தழையாடை உடுத்திய காலம் அவளது முகத்தில் அறைந்து போகும் என்கிற மொழிதல் பெண்ணால் மட்டுமே எழுதக் கூடியது. அதை கயல் மிகச் சரியாகச் செய்திருக்கிறார்.

பெண்ணின் இருப்பை இவ்வளவு சலிப்புடன் சொல்லிய கவிதை சமீபத்தில் எழுதப்படவே இல்லை என்கிற விதத்தில் அமைந்திருக்கும் கவிதை ‘கவனம் கவர்தல்’. தம்மை நேர்த்தியாக அலங்கரித்து, பரிசுகள் வழங்கி பிரியத்தை நிருபித்து இணையத்தில் தன்னிடத்தை உறுதி செய்து ஒருகட்டத்தில் சலிப்படையும் போது குழந்தையாகி விடுவதான நுவல்பொருள் வாழ்க்கையில் அலங்கரித்துக் கொள்வதிலும் பிறருக்கு ஏற்றபடி வாழ்வதிலும் இணையத்தில் தொடர்ந்து கொண்டிருப்பதிலிலும் இல்லை. குழந்தையில் தான் இருக்கிறது. குழந்தை மனத்தோடு வாழ்தலே பூரணமானது என விரியும் இடத்து கவிதை தத்துவச் சாயலைக் கொண்டு முருகலைடைகிறது.

மனிதன் மிருகமாகும் புள்ளியையும் மிருகம் மனிதனாகும் புள்ளியையும் பேசும் கவிதை ‘ஞமலி’. மனிதர்கள் குரைக்கிறார்கள், உறுமுகிறார்கள், மிருகமாகிறார்கள். அது கவிதையில் வரும் நாய்க்குச் சகிக்க ஒன்னாததாக இருக்கிறது. வேறு வழியின்றி நாய் தனது குடும்பத்துடன் இடம் பெயருகிறது. மனிதன் நாகரிகமானவன், அறிவியலை தன்வயப்படுத்தியவன் என்றெல்லாம் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கிற அத்தனை பிம்பங்களையும் உருக்குலைத்துப் போடும் இக்கவிதை இன்றைய குடும்பங்கள் குடும்பம் என்கிற அந்தஸ்த்தை இழந்து வருகின்றன. மனிதர்களை விட மேலான குடும்ப அமைப்பு மிருகங்களிடம் தான் இருக்கிறது. மிருகங்கள் மிருகங்கள் அல்ல. அவை மனிதனுக்கான ஆசான்கள் என்பதான தொனி இக்கவிதையில் சித்திரமாகியிருக்கிறது.

‘முட்டுச் சந்து’ என்கிற கவிதை மனிதன் - நோய் - உறவுகள் என்னும் தளத்தில் அமைந்திருக்கிறது. மனிதனுக்கு நோயே உறவாக இருக்கிறது. உறவே நோயாகவும் இருக்கிறது. தீராத நோய்க்கு வைத்தியம் பார்த்துப் பார்த்து ஒருகட்டத்தில் வேறுவழியே இல்லாமல் நோயோடே வாழப் பழகிவிடுதல் போல உறவுளோடு முரண் பட்டுப்பட்டே அதற்குப் பழகிப்போகிறோம். நோய்களோடும் உறவுகளோடும் வாழ்தல் என்பது முட்டுச் சந்தைப் போன்றது. உள்ளே நுழைந்துவிட்டால் மோதித்தான் திரும்ப வேண்டும். தாண்டி விடவும் முடியாது, தவிர்த்து விடவும் முடியாது என்பதைத் தலைப்பின் வழி உணர்த்தியிருக்கும் விதம் குறிப்பிடத்தக்கது. 

ஆண் × பெண் அல்லது கணவன் × மனைவி உறவு நிலையைத் துலக்கமாக்கியதில் முக்கியமானது ‘தங்க ஊசி’ என்கிற கவிதை. மனைவி பேசுகிற சொற்கள் கணவனின் சொற்களாகவே இருக்கின்றன. கணவனின் முடிவுகளே மனைவியின் முடிவுகளாக இருக்கின்றன. கணவன் களைப்படையும் போதே மனைவிக்கு ஓய்வு கிடைக்கிறது. மனைவிக்கு என்று இங்கு வார்க்கப்பட்டிருக்கிற யாவும் மனைவிக்கானதல்ல. அது கணவனுக்கானதே எனச் சொல்லும் கவிதையை, இதுவரை மனைவியை வன்புணர்வு செய்துகொண்டிருந்த கணவன் இனி அவளது எண்ணங்களையும் வன்புணர்வு செய்யக்கூடும் என்பதாக முடித்திருக்கிற விதம் ஆண்டாண்டு காலமாய் கைக்கொண்டிருந்த சகிப்பின் வெறுப்பாக அமைந்திருக்கிறது.

‘ஆணகராதி’ என்கிற கவிதை சொற்களுக்குள் நிரம்பிக் கிடக்கும் ஆணாதிக்கத்தின் இருப்புகள் மீது கனலைப் பாய்ச்சியிருக்கிறது. கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் என எல்லாமும் ஆண்களால் நிரம்பிக் கிடக்கும் போது அவர்களால் உருவாக்கப்பட்ட சொற்களும், சொற்களின் தொகுதியான அகராதியும் ஆண்களின் உலகமாகத் தானே இருக்க முடியும் என நீளும் கவிதை அவற்றைக் கொளுத்தி விட வேண்டும் என்கிறது. ஆண்களால் உருவாக்கப்பட்ட கற்பிதங்களைக் கொளுத்துவதற்குப் பாரதியை அழைப்பது முரணாக இருக்கிறது.

நூலில் காரமாக அமைந்திருக்கும் கவிதை ‘சீச்சீ’. இக்கவிதையின் ‘முன்பெல்லாம் மகள் பூப்பெய்திய பின்னரே பயப்படத் தொடங்குவர் பெற்றோர்’ என்னும் சொற்கள் முன்னேறியதாகச் சொல்லிக்கொண்டு இழிவுக்குள் வீழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தின் சமகாலத்திய மிருகத்தனத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. முன்பெல்லாம் பெண்கள் பூப்பெய்திய பிறகுதான் பெற்றோர்கள் பயப்பட்டார்கள் இப்பொழுது பெண்ணாகப் பிறந்தாலே பயப்பட வேண்டியிருக்கிறது என்று விரிந்திருக்கிற கவிதை வன்புணர்வுக்கு ஆளான அத்தனை பெண்களையும் நினைவில் கொண்டு வருகிறது.

தொகுப்பில் ‘மங்கள மஞ்சள்’ முக்கியமான கவிதை. மஞ்சள் காப்பிட்ட அம்மனின் முகமும், திருமண வரவேற்பில் வைக்கப்பட்டிருக்கும் சந்தனக் கிண்ணமும் எனக்கு மங்களமாய்த் தெரிவதில்லை. ஏனெனில் நான் கழிப்பறையைச் சுத்தம் செய்கிறவன் என்கிற நுவல்பொருளில் அமைந்திருக்கும் அக்கவிதை பீ அள்ளுகிறவனுக்கு மஞ்சள் காப்பிட்ட அம்மன் முகமும் திருமண வரவேற்பின் சந்தனக் கிண்ணத்துச் சந்தனமும் பீயாகவே தான் காட்சியளிக்கும் என்கிற இடத்தில் கவிதையும் கவிஞரும் புதியதொரு தரிசனம் பெறுகிறார்கள்.

சில கவிதைகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அவை கயல் எழுதத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்டவையாக இருக்கலாம். சில இடங்களில் ஆண்குரலில் பேசுவதை தவிர்த்திருக்கலாம். நட்பு குறித்த கவிதைகள் இன்னும் முதிர்ச்சியைக் கோரி நிற்கின்றன. கவிதையின் வைப்புமுறையை நேர்த்தி செய்திருக்கலாம். கவிதைகளுக்குள்ளாக வைத்திருக்கும் பொருளும் கவிதையாக்கியதில் வெளிப்பட்டிருக்கும் திறனும் கயலின் மேலதிக உழைப்பின் தேவையைச் சுட்டுகிறது. கயல் இன்னும் நிறைய எழுதிப்பார்த்த பிறகு தம்மையும் ஒரு கவிஞராக வார்த்தெடுப்பார் என நம்பலாம்.

வெளியீடு             : வாசகன் பதிப்பகம், சேலம் - 636 007

வெளியான ஆண்டு    : 2017

விலை                                 : ரூ 85/-

- ஞா.குருசாமி