நூல் அறிமுகம்

அற்றைத் திங்கள் : புதினம்
ஆக்கம் : கலைச்செல்வி
வெளியீடு : யாவரும் பதிப்பகம்
விலை : ₹ 175

attrai thingalசகோதரி கலைச்செல்வி எழுதிய 'அற்றைத் திங்கள்' புதினத்தை வாசித்தேன். சமகால தமிழ் இலக்கியத்தில் மிகமுக்கியமான முன்னெடுப்பு இப்புதினமென்று தாராளமாகக் கூறலாம்.

சாமான்யர்களுக்கான அரசியலென ஒன்று இருந்திருக்கவே இல்லை எப்பொழுதும் என்பதுவே அப்பட்டமான நிஜம். ஒவ்வொரு குடிமகனும் தத்தமது மிக எளிய வாழ்விற்கான பிரயத்தனங்களில் பல்வேறு நெருக்கடிகளுடன் உழன்றுகொண்டிருக்க, ஆளும் அதிகாரசக்திகளோ எல்லையற்ற ஊழற்பணத்தில் பாரபட்சமின்றி கொழித்துக் கொக்கரிக்கின்றன.

அரசுகள் அறிவிக்கிற ஒவ்வொரு மக்கள்நலத் திட்டங்களின் பின்புலத்திலும் பல்வேறு வகையான இலாபநோக்க அரசியல் விளையாட்டுகள் நிகழ்கிறதென அறிகையில் பெரும் அயர்ச்சிகொள்கிறது மனம்.

மக்களால் தேரிவுசெய்யப்பட்ட அரசியல் வியாதிகள் பெட்டிகளுக்காக இடமும் வலமும் மாறிமாறி அலைகின்ற அவலச்சூழல் பெரும் அசூயையை ஏற்படுத்துகின்றன. கொள்கைகளுக்காக அன்றி கோடிகளுக்காகவே இடம்விட்டு இடம்தாவுகின்ற குரங்குகளாக அவர்கள் மாறிவிட்டமை நமது அரசியலமைப்பின் வெட்கக்கேடுகளில் ஒன்று.

பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தங்களால் மாநிலங்களின் பாரம்பரியக் கூறுகளை காவுகொள்ளவும், இயற்கை வளங்களை வகைதொகையின்றிச் சுரண்டிக்கொடுப்பதுமாக மிக ஆழமான அழுக்கரசியல் அது. நன்றாக ஓடமுடிபவரையும், நடக்கவியலாத மாற்றுத்திறனாளியையும் ஒரே ஓட்டப்பந்தயத்தில் ஓடவிட்டு அழகுபார்த்து அதன்வழி அவர்தம் தரத்தினைத் தெரிவுசெய்யும் அதிமேதாவித்தனமான அரசியல்.

ஓரளவேனும் எதிர்த்துக் கேள்வியெழுப்பக்கூடிய சூழலுள்ள பிராந்தியங்களிலேயே இப்படியெனில், இயற்கையைத்தவிர வேறு சூதுவாதுகள் அறியாத மக்களின் நிலைபற்றி என்ன சொல்ல ? பன்னெடுங்காலமாக மலைவாழ் இன மக்களுக்கு அரசுகள் கொடுக்கின்ற இன்னல்களையும் சுரண்டல்களையும் பட்டவர்த்தனமாகப் பேசுகிறது இந்நூல்.

ஒருபக்கம் அரசுகளாலும், மறுபக்கம் மேட்டிமை மக்களின் ஜாதீய ஒடுக்குமுறைகளாலும் எப்படியெல்லாம் அவர்கள் அல்லறுகிறார்கள் என்பதை எவ்விதப் பூச்சுகளுமின்றி முன்வைக்கின்றது. தனக்கேயான மிக எளிய ரசனைமிக்க பிரத்தியேகமான மொழிநடையில் விரியும் இப்புதினம் பன்னாட்டு நிறுவனங்களின் அருவருக்கத்தக்க பின்வாசல் நுழைவு அரசியலையும், அவற்றின் ஆதாயத்தேடல்களுக்கான நாராச உத்திகளையும் நயம்பட பதிவுசெய்திருக்கிறார் கலைச்செல்வி.

மிகக்கடினமான தனது கள உழைப்பின்வழி சேகரித்த தரவுகளை, தகவல்களை சற்றும் உறுத்தாமல் கதையின் போக்கில் ஆங்காங்கே தெளித்துவிட்டிருக்கிறார்.  தன்வழி கதைகூறும் பாங்கில் எழுதப்பட்ட இப்புதினத்தில், நாயகி தமது ஊடகப் பணிகளினூடாக தான் சந்திக்கநேரும் நெருக்கடிகளையும், ஆதாயக்காரணிகளுக்கான ஊடகங்களின் அரசியலையும் சற்று பேசியிருப்பின் இன்னமும் கூட முழுமையடைந்திருக்குமென எனக்குத்தோன்றியது. அது கதையின் மையத்தைவிட்டு நகரச்செய்துவிடுமென எண்ணினாரோ என்னவோ.

மலைவாழ் மக்களது பழக்கவழக்கங்கள், இயற்கையோடு ஒன்றிணைந்த அவர்தம் வாழ்முறைகளை எளிதான விவரணைகளின் வழி பகிர்ந்துகொள்கிறார். புதினத்தில் வரும் கோமதி பாத்திரமும், நாயகியின் அம்மா பாத்திரமும் அற்புதமான உயிர்ப்பான குணவார்ப்புகள்.

சாதுர்யமாக பேசிப்பேசியே மூளையை மழுங்கச்செய்துவிட்ட திராவிட இயக்கங்கள் எதுவும் பிரத்தியேகமாக இல்லாமல் இருந்திருப்பின் தமிழகத்தின் நிலை இன்னமும் கூட மிகச்சிறப்பாக இருந்திருக்கக்கூடிய சாத்தியம்பற்றிய விரக்தியை மிகவும் ரசித்தேன்.

கூடவே தாதுமணற் கொள்ளை, சினிமா, வனங்களின்பாலான நடிகர்களின் திடீர் அக்கறைகள், என்று சமூகம்சார்ந்த பல்வேறு விஷயங்களையும் அலசத்தவறவில்லை. காடென்பதும் ஒரு குழந்தையைப்போலவே சட்டென்று வசீகரிக்கின்ற ஒன்று. புதினத்தை வாசிக்கிற எவரும் தாமே சிலகாலம் வனத்தில் வசித்துவந்ததுபோலும் உணரவைத்ததுடன், அரசுகளின் நயவஞ்சகத் தந்திரங்கள் பற்றி புரிதலை ஏற்படுத்தியதே  புதினத்தின் பெரிய வெற்றியெனலாம்.

- ஸ்ரீரங்கம் மாதவன்