புதிதாக ஒரு கதைக்களனைத் தேர்ந்தெடுக்கும்போதே, ஒரு நாவல் பாதி வெற்றியடைந்து விடுகிறது. சொல்ல வந்ததை சரியாகச் சொல்லி விட்டால் முழு வெற்றியையும் பெற்று விடுகிறது. பல எழுத்தாளர்கள் புதியதொரு கதைக்களனைத் தேர்ந்தெடுத்துவிட்டு, சொல்லும் முறையில் கோட்டை விட்டு விடுவார்கள். ஆனால், கதைக்களன், சொல்லும் முறை இரண்டிலும் கோட்டை கட்டியிருக்கிறார் குணா.கவியழகன்.

appal oru nilamகிளிநொச்சியை சிங்களர்களிடமிருந்து மீட்க, புலிகள் மேற்கொண்ட வேவு நடவடிக்கைகள்தான் கதையின் களம். இதைச் சுற்றி விடுதலைப் புலிகளின் அன்றாட வாழ்க்கை, பயிற்சி முறைகள், இயக்க செயல்பாட்டு முறைகள், போர்க்குணம், போரினால் அலைக்கழிந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை ஆகியவற்றை மிக நெருக்கமாக நம்முன் காட்சிப்படுத்துகிறார் குணா.கவியழகன்.

குணா.கவியழகனின் வார்த்தைகளில் பெருமிதமோ, மிகைப்படுத்தலோ இல்லை. அந்தப் போராளிகளின் வாழ்க்கைக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறார். ஆங்கிலப் போர்ப் படங்களில் வரும் போர் வீரர்கள் போல் அசகாய சூரர்களாகவோ, நாடி நரம்பெல்லாம் தேசபக்தி புடைத்து, எதிரிகளை நிலைகுலையச் செய்யும் வீராதி வீரர்களாகவோ இல்லாமல், இயல்பான மனிதர்களாக விடுதலைப் புலிகளை உலவ விட்டிருக்கிறார்.

அமைப்பில் இளையவர்கள் சேர்வதற்கான காரணம், போருக்கான நியாயம், சிங்களப் படையினரும், புலிகளும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த மதிப்பீடுகள் என பல செய்திகளை குணா.கவியழகன் மிக நுட்பமாக சொல்லிச் செல்கிறார்.

நாவலின் அமைப்பும், போக்கும் நம்மைக் கட்டிப் போடுகிறது. எந்தவொரு இடத்திலும் தொய்வு இல்லை. தேவையான அளவு விவரணைகளும், வர்ணிப்புகளும் எளிதாக நம்மை நாவலுக்குள் உள்ளிழுத்துக் கொள்கின்றன.

இலக்கியம் என்ற பெயரில், விலைக்கு வாங்கப்பட்ட எழுத்தாளர்களால் விடுதலைப் புலிகளைப் பற்றிய எதிர்மறையான செய்திகளே தமிழ் இலக்கியமாக அதிகம் பரப்பப்பட்டு வந்த சூழலில், இந்நாவல் இரண்டு முக்கியமான செய்திகளைத் தொட்டுச் செல்கிறது. ஒன்று, புலிகள் இயக்கத்துக்கும் மக்களுக்கும் இடையே இருந்த நெருக்கம். மற்றொன்று, போரினால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை சீர்படுத்த, முறையானதொரு அரசு போன்று புலிகள் இயக்கம் காட்டிய அக்கறை.

இயக்கத்தில் சேர்ந்த வீரர்களின் குடும்பங்களை, தங்களது குடும்பமாகவே புலிகள் அனைவரும் கருதியது; அந்தப் பக்கமாக செல்லும் புலிகள், அந்த வீரர்களின் வீடுகளுக்கு சென்று வருவது, குடும்பத்தினரும் தங்களது பிள்ளைகள் போலவே, புலிகள் அனைவரையும் பாவித்து உணவு வழங்குவது; புலிகள் பெறும் சிறுவெற்றியைக் கூட மக்கள் அனைவரும் கொண்டாடிக் களிப்பது, போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிலம் வழங்குதல், தொழில் வாய்ப்பு நல்குதல், குழந்தைகளுக்கு படிக்க வசதி ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவற்றில் புலிகள் காட்டிய அக்கறை, இயக்கத்தில் இருந்த கட்டுப்பாடுகள், ஒழுக்க விதிகள் வளர்ச்சிப் போக்கில் படிப்படியான மாற்றம் பெறுவது ஆகியவை மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

பிரமிப்பை ஏற்படுத்தும் இன்னொரு விஷயம், ஓர் அமைப்பாக புலிகள் செயல்பட்ட விதம். கட்டளைப் படிநிலை, குறைந்த படைக்கருவிகள், வீரர்கள் இருந்தாலும் இலக்கை அடைவதில் புலிகளின் திட்டமிடல், வீணாக ஓர் உயிரிழப்பு நேர்ந்துவிடக் கூடாது என்பதில் இயக்கம் காட்டிய அக்கறை, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதில் புலிகள் காட்டிய தீவிரம், ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் வழங்கப்பட்ட சிறப்பான பயிற்சி, போரில் சாதித்துக் காட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை, பதவி உயர்வு, காயமடைந்த வீரர்களுக்கு இயக்கம் வழங்கிய மாற்றுப் பணிகள் என நாவலில் ஆங்காங்கே தொட்டுக் காட்டப்படும் செய்திகள், உலகின் சிறந்ததொரு இராணுவ அமைப்பாக புலிகள் இயக்கம் வளர்ந்திருந்ததைக் காட்டுகிறது.

போர் இலக்கியத்தில் மட்டுமல்ல, தமிழ் இலக்கியத்திலும் உன்னதமான ஒரு நாவலாக ‘அப்பால் ஒரு நிலம்’ அமைந்திருக்கிறது. குணா.கவியழகனுக்கு எழுத்து நன்கு வசப்பட்டிருக்கிறது. தனது எழுத்தின் மூலம் நாவலின் முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரை வாசகனை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சூட்சுமம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. காதல், வீரம், பாசம், தியாகம், நட்பு என அனைத்து உணர்வுகளையும் தனது எழுத்தின் வழி வாசகனுக்குக் கடத்தத் தெரிந்திருக்கிறது. எந்த இடத்தில் விவரிக்க வேண்டும், எந்த இடத்தில் குறிப்பால் உணர்த்த வேண்டும், எந்த இடத்தில் சொல்லாமல் புரிய வைக்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கிறது.

வேவுப் படை குறித்தே இவ்வளவு நுட்பமான செய்திகளையும், சம்பவங்களையும் குணா.கவியழகனால் தர முடிகின்றது என்றால், அவரிடம் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்பதை உணர முடிகிறது. வயதிலும் இளையவர் என்பதால், அவரிடம் இன்னும் இதுபோன்ற பல நாவல்களை எதிர்பார்க்கலாம். மூன்று நாவல்களிலேயே தமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்தமான முத்திரையைப் பதித்துவிட்ட குணா.கவியழகன், அடுத்தடுத்து வரும் படைப்புகளில் சிகரம் தொட்ட தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவராக இருப்பார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

அப்பால் ஒரு நிலம்
குணா.கவியழகன்
வெளியீடு: தமிழினி பதிப்பகம்,
25-ஏ, தரைத்தளம், முதல் பகுதி, ஸ்பென்சர் பிளாஸா,
769, அண்ணா சாலை, சென்னை – 2. தொலைபேசி: 044-28490027
பக்கம் – 269, விலை – ரூ.240

- கீற்று நந்தன்