நீண்ட நெடிய படைப்புப் பாரம்பரியமுள்ள நம் தமிழில், ஆதியில் எல்லாமே மந்திரச் சுருக்கமாய் 'பா' வடிவினங்களாக, கவிதைகளாக மொழியப்பட்டன. பின்னாட்களில் அச்சு, காகிதம், தொழில்நுட்பம் என வளர்ந்த பிறகு, நீள நீளமாய் எழுத வசதிகள் வந்தபோது, மிக நீண்ட உரை வடிவ எழுத்துக்கள் சாத்தியப்பட்டது. அதன்வகையில் படைப்பிலக்கியம் தாண்டி, இன்று நம்முன் நிறைய நிறைய, நிறையவே, துறை, துறைதோறுமான எழுத்துக்கள் நீட்சியுற்றன. அதன்வகையில் இந்திய ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை குறித்து அதிகமான அளவில் ஆங்கிலத்தில் நூல்கள் எழுந்திருந்தாலும், நம் தமிழில் அங்கொன்றும் இங்கொன்றும் ஒருசில நூல்களே வந்திருக்கின்றன. அதன் வழியில் தோழர் சு.அழகேஸ்வரன் அவர்கள் எழுதிய, 'ராணுவத் தளவாட உற்பத்தியில் நெருக்கடிகள்' என்கிற நூல் தமிழுக்கு புதுவரவு.

su azhakeshwaran 340ஆதியில் உணவு, உறவு போன்றே மனித குலத்திற்குப் பாதுகாப்பும் இன்றியமையாதது. மனிதகுலம் பெருக்கெடுக்கத் தலைப்பட்டபோதே, இனக்குழுவாதலின் வளர்ச்சிப்போக்கின்போதே, இயற்கை, விலங்குகள், வேறுபிற இனக் குழுக்களினால், உயிருக்கு, இருப்புக்கு, அச்சுறுத்தல், ஆபத்து எழும்போதெல்லாம் இயற்கையாக எழுந்த தேவையில் ஒன்று இந்தப் பாதுகாப்பு. நாளடைவில் இனக்குழு சமுகம் கடந்து, அரசு, அரசுஉருவாக்கம், நாடுகளாதல், நாடுபிடிக்கப்படுதல், காலனியாதல் எனத் தொடர்ந்து ஏகாதியபத்தியம் கடந்து இன்று ஒற்றை உலக, 'ஒரு துருவ வல்லாதிக்கமாதல்' என்பதை நோக்கி முனைப்புக்கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையிலும் பாதுகாப்பு என்பது மிக அவசியமானது. என்றாலும், அது குறித்த கேள்விகள், வினாக்கள் நம்முன் எழாமல் இல்லை.

உண்மையில் பாதுகாப்பு என்றால் என்ன? அது யாருக்குத் தேவை? யாருக்கான தேவை? யாரிடமிருந்து யாருக்கு? அதை அளிப்பது யார்? என்பது போன்ற எண்ணற்ற கேள்விகளில் அடங்கியிருக்கிறது. நமது அறிவாசான் வள்ளுவன் அது குறித்து ஒரு அதிகாரமே வகுத்திருக்கிறான். அது 'அரசுடைமைக் காலச் சிந்தனை' என்றாலும், இன்றைய 'ஒற்றைத் துருவ வல்லாதிக்கமாதல்' என்கிற நிலைக்கும் பொருந்திப்போவதுதான் வள்ளுவனின் மேதமை.

பொதுவாக, ஒரு மனிதனுக்கு பாதுகாப்பு என்பது பல நிலைகளினாலானது, வகையினங்களினாலானது என்றாலும், இங்கு நாம் எழுப்ப விரும்புவது, குறிப்பாக, ஒரு தேச அரசின் பாதுகாப்பு குறித்தது ஆகும். ஒரு தேச அரசின் பாதுகாப்புக் கொள்கைகள், அதற்கான செயற்பாடுகள், அதற்கான வழிவகைகள் என்பன குறித்ததே ஆகும்.

ஒரு தேச அரசின் பாதுகாப்பு என்பது, பாதுகாப்புக் கொள்கைகள் என்பது, அதற்கான ஏற்பாடுகள் என்பது, முழுக்க முழுக்க அந்தத் தேசத்துக் குடிகளின் அடிப்படை நலன்களின் மீது எழுந்ததாய் இருக்க வேண்டும் கட்டமைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும். ஆனால், உண்மையில் அப்படித்தான் இருக்கிறதா? என்பதே நம் முதல் கேள்வி.

முதல் உலக நாடுகளோ அல்லது மூன்றாம் உலக நாடுகளோ அல்லது வளர்ச்சியுற்ற, வளர்ச்சியடைந்து வருகிற, வளர்ச்சியடையாத என்கிற ஏகப்பட்ட பதங்கள் உலா வரும், அடையாளப்படுத்தப்படும் நாடுகளின் பாதுகாப்பு, பாதுகாப்புக் கொள்கைகள் என்பது அந்த நாடுகளுக்கானதா? அன்றி அந்த நாடுகளின் குடிகளுக்கானதா? அல்லது அந்நாட்டின் அதிகார மையங்களுக்கானதா? ஆதிக்க மையங்களுக்கானதா? என்கிற கேள்விகள் நிறையவே நம்முன் எழுகின்றன.

யதார்த்தம் என்னவென்றால், நாட்டுக்கானது, நாட்டின் குடிகளுக்கானது என்கிற போர்வையில் துவங்கி, அது அதிகார ஆதிக்க மையங்களுக்கானது என்றாகிறது. அதன் நலன்களுக்கானது என்றாகிப்போகிறது இதில் சோகம் என்றவென்றால், கடைசியில் அது அந்நாட்டின் குடிகளை அடக்கி ஒடுக்குகிற வன்முறை கருவியாகவே ஆகிப்போவதுதான் அதன் அவலம்.

பொதுவாக ஒரு நாட்டில் வகுக்கப்படுகிற பாதுகாப்பு, பாதுகாப்புக் கொள்கைகள், அதைச் செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகள், அந்த செயற்பாட்டு ஏற்பாடுகளின் வழி முகாமையாக வருவதுதான் 'ராணுவம்' என்பது. அந்த ராணுவத்தில்...... (இனி நாம் 'ராணுவம்' என்கிற பொதுப் புரிதல் சொல்லாடலை விட்டு 'படை' என்றே நம் தமிழில் சுட்டுவோம்) படை மற்றும் படைவீரர்கள், படைக்கருவிகள், அந்தப் படைக் கருவிகளைத் தயாரித்துத் தரும் படைக்கலத் தொழிற்சாலைகள் என்று நீளும். ஆனால், ஒரு பொதுப்புத்தி சார்ந்து வடிவமைக்கப்பட்டிருக்கும், வனையப்பட்டிருக்கும் குடிமைச் சமூகமான நமக்கு, இந்திய ஒன்றிய அரசின் பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை எனும்போது எத்தகைய புரிதல் இருக்கிறது?

வெறும் செய்தித்தாள்களிலும், இந்திய ஒன்றிய அரசின் ஆண்டு வரவு செலவுப் பட்டியலின்போது அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் துறை என்கிற அளவிலும், அவ்வப்போது ராணுவம், ராணுவ அணிவகுப்பு போன்ற காட்சிகளாலும், தேசப் பாதுகாப்பு, எல்லையோரத் தியாகம் என்கிற பெருங்கதையாடல்களின் மூலமாகவும், புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களின் போது நம்மைக் காக்க வருகிற அமைப்பு என்கிற அளவிலும் மட்டும்தான் புரிதல் இருக்கிறது. ஆனால், அதைத்தாண்டி அதற்குள் ஓராயிரம் அரசியல் இருப்பதும், அதற்குள் ஆதிக்க அதிகார மையங்களின் நலன்கள் குவிக்கப்பட்டிருப்பதும், ஆகப் பெரிய ஊழல்களின் ஊற்றுக் கண் என்பதுவும், பிராந்திய என்கிற புவிசார் பாதுகாப்பு என்கிற நுண் அரசியற் தளங்களும் அதனுள் பொதிந்திருக்கின்றன.

இத்தகைய பொதுப்புரிதல்களைக் கொண்டிருக்கும் ஒரு சாரசரி தமிழ் வாசகத் தளத்திற்கு, பாதுகாப்புத் துறையின் கொள்கைகள், ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கும் அரசுகளின் கொள்கைகள், கொள்கைகள் சார்ந்த முன்னெடுப்புகள், அதன் கீழ் இயங்கும் படைக்கலத் தொழிற்சாலைகள், அதன் உற்பத்தி சார்ந்த நெருக்கடிகள் என ஒரு விரிந்த தளத்தை தமது நூலின் வழியே அறிமுகம் செய்கிறார் இந்நூலாசிரியர் சு.அழகேஸ்வரன்.

ஆளும் மோடி அரசின் 'அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்வும் விளைவும்' என்கிற துவக்கக் கட்டுரை முதலாக, 'படைக்கலத் தொழிற்சாலை தணிக்கை அறிக்கை' ஈறாக, பதினான்கு கட்டுரைகள் கொண்ட நூலினைத் தந்திருக்கிறார் நூலாசிரியர். எண்பத்தி நான்கு பக்கங்கள் கொண்ட சிறிய நூல்தான் எனினும், தன்னுள் பெருகி விரியக் கூடிய ஓராயிரம் புதிய புதிய செய்திகளை, பதிவுகளை தன்னுள் உள்ளடக்கிய நூலிது.

மோடி தலைமையிலான ஆளும் பாசக அரசின் கடந்த முப்பதுமாத ஆட்சிகாலத்தில், பாதுகாப்புத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை நூற்றுக்கு நூறாய், முற்று முழுவதுமாய், முழுக்க முழுக்க தனியார் மயாக்கியது. தாராளமயமாக்கியது. அந்திய முதலீட்டுமயமாக்கியது. மேலும், 'குதிரை குப்புறத் தள்ளிவிட்டு குழியையும் பறித்ததாம்' என்பதுபோல, நேரடி அந்நிய முதலீட்டை நூற்றுக்கு நூறு அகலத் திறந்துவிட்டதோடு மட்டுமல்லாமல் படைக்கல உற்பத்திக்கான மூலப் பொருட்கள் மற்றும் இறக்குமதிக் கொள்முதல் நடைமுறைகளில் திருத்தம் செய்தது. 'இந்தியாவில் தயாரிப்போம்' ('மேக் இன் இந்தியா') என்று மேலோட்டமாய்ப் பார்க்கையில் கவர்ச்சிகரமாய் ஈர்க்கும் திட்டத்தால், படைக்கலத் தொழிற்சாலைகளை மறு சீரமைப்பது போன்ற அபாயகரமான, பாதுகாப்பு என்கிற பதத்தையே கேலிக்குள்ளாக்கும் காலியாக்கும் செயலைச் செய்கிற, ஆளும் மோடி அரசின் பாதுகாப்புத் துறைக் கொள்கைகளை தோலுரிக்கிறது இந்நூல்.

இப்படித் தோலுரிப்பதை மட்டுமே ஆசிரியர் செய்திருந்தால், ஒரு மாற்றுக் கட்சிக்காரர், மாற்றுச் சிந்தனைக்காரர், காழ்ப்பில் ஒவ்வாமையில் பேசுகிறார், எழுதுகிறார் என்று புறந்தள்ளி விட வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஆசிரியர் உண்மையை, அதன் உள்ளீடை தயவு தாட்சண்யமின்றி, குடிமைச் சமுக மக்களின் நலன்களின்பால் நின்று, கிழித்து வெளிக்காட்டுவதோடு மட்டுமின்றி மோடி அரசின் உட்ச் சூட்சுமங்களையும் சேர்த்து நுட்பமாக, ஆழமாக வெளிக்கொண்டு வருவதுதான் சிறப்பு.

மோடி அரசின் பாதுகாப்புத்துறையின் மீதான இக் கொள்கை நிலைபாடுகள் என்ன செய்யும் என்றால், இத்துறை சிறந்து விளங்கிட வேண்டும் என்கிற உள்ளார்ந்த அக்கறையோடு, நீடித்த வளர்ச்சி அடைய வேண்டும் என்கிற வேட்கையோடு, இத்துறை வல்லுனர்கள் மற்றும் இத்துறையில் ஆழ்ந்த அக்கறையோடு உழைக்கும் தொழிலாளர்கள், இவர்களின் சிறந்தன செய்ய வேண்டும், சீரியன செய்ய வேண்டும் என்கிற ஆய்வு முயற்சிகளையும், புதியன செய்யும் தொழில் நுட்ப உத்திகளையும் காயடித்து மலட்டுத் தன்மையாக்குகிறது என்கிற நிதர்சன உண்மை ஒருபுறம் என்றால், அடுத்தபுறமாக, இதன் புறனடையாக, இதுநாள்வரை கோடிக்கணக்கான இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணத்திலிருந்து எடுக்கப்பட்ட பல லட்சம் கோடிகளினாலான மூலதனம், இத்துறையின் தொழிலாளர்களின் மனித உழைப்பினால் பல்கிப் பெருகிப் பெருகி பெருக்கெடுத்து, பிரம்மாண்டமாய்க் குவிந்துள்ள மூலச் செல்வாதாரங்களையும், இதுகாறும் பல பத்தாண்டுகளாய் உழைப்புப் போக்கின் மூலம் பெற்ற தொழில்நுட்ப உத்திகள் கொண்ட மூளை உழைப்பையும், உடல் உழைப்பையும் ஒருங்கே கொண்ட ஆகச் சிறந்த மனித வளங்களையும், தனியார் நிறுவனங்களுக்கு மடைமாற்றுவது என்பது போன்ற மோடி அரசின் உட்ச் சூட்சுமங்களையும் சேர்த்து கூர்மையாக, நுட்பமாக, ஆழமாக வெளிக்கொண்டுவருவதுதான் இந்நூலின் சிறப்பு.

சிக்கல் சிடுக்கலற்ற எளிமையான மொழிநடை. எடுத்த பொருளில் ஆழ்ந்த, அவதானிப்புகளுடன் கூடிய பார்வையை கூர்மையாக, நுட்பமாக, ஆழமாக வெளிக்கொண்டுவரும் திறம். தேவையான புற ஆதாரங்களோடும், அடிக்குறிப்புகளோடும், ஒரு எளிய வாசகனுக்கு, இத்துறை தெரியாத ஒரு புதிய வாசகனுக்குள்ளும், தான் சொல்ல வந்த செய்தியை உள்ளனுப்பிடும், மடைமாற்றிடும் எழுத்தாடல் என சிறப்பாய், மிகச் சிறப்பாய் இயங்கியிருக்கிறார் நூலாசிரியர் தோழர் சு. அழகேஸ்வரன் அவர்கள்.

இறுதியாக நாம் மொழிவதெல்லாம்.... எந்த ஒரு எழுத்தும், மனித குலத்தின் வலிகளை, வாதைகளை, அவலங்களைக் களையும் விழிப்பு விடுதலை வேட்கையிலிருந்துதான் எழும். எழ வேண்டும். அதன் வழி எழுந்திருக்கும் 'ராணுவத் தளவாட உற்பத்தியில் நெருக்கடிகள்' என்கிற தோழர் சு.அழகேஸ்வரன் அவர்களின் நூலினை வெகுவாகவே வரவேற்பதோடு மட்டுமல்ல, பரவலாக எல்லோரிடமும் கொண்டு சென்று சேர்க்கவும் வேண்டும் நாம். ஏனெனில், தமிழுக்கு இந் நூலின் பொருண்மை புதுசு.

இராணுவத் தளவாட உற்பத்தியில் நெருக்கடிகள்
ஆசிரியர் சு.அழகேஸ்வரன்
முதல்பதிப்பு : 2017
பக்கங்கள் : 84
கலைநிலா பதிப்பகம்,
46, ஆசாத் நகர், கருணாநிதி நகர்,
திருச்சிராப்பள்ளி - 21
விலை ரூ : 50

- பாட்டாளி