ஒன்று

1500 ஆண்டுகால தொன்மையினைக் கொண்ட தன் வரலாற்றில் இஸ்லாம் மார்க்கம் சந்தித்தப் பெருந்துயரம் வஹாபிஸம்.
.
mujeeb rahman bookஐரோப்பியக் காலனியம் கீழை நாடுகளின் நிலங்களை அபகரிக்கவும், வளங்களைச் சுரண்டவும் சதிவலைகளை விரித்துப் போட்டது, எண்ணெய் வளமிக்க அரபுலகை அபகரிக்க விரிக்கப்பட்ட காலனியச் சதிவலையின் பாதுகாப்பு அரணாக இருந்திட இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டது வகாபியம்.
.
முன்னூறுக்கும் மேற்பட்ட சமூகக் குழுக்களின் மத்தியில் அறிமுகமான இஸ்லாம், அக்குழுக்களின் நம்பிக்கைகளை, கதையாடல்களை , சடங்குகளை , புனிதங்களை , விழுமியங்களை அரவணைத்தும், உள்ளிழுத்தும், தன்வயப்படுத்தியும் அக்குழுக்களை வெற்றிகண்டது.
.
ஆனால் வகாபியம், இஸ்லாம் முன் வைக்கும் இந்த முறையியலை மறுதலிக்கிறது. நிராகரித்தல், விலக்கிவைத்தல், அழித்தொழித்தல் என்னும் நடவடிக்கைகளின் வழியாக எதிர் இஸ்லாம் ஒன்றைக் கட்டமைக்கிறது.
.
எண்பதுகளுக்குப் பிறகான முஸ்லிம்களின் நாடுகள், முஸ்லிம்கள் இவர்களின் நெருக்கடிகளின் பின்னால் வகாபியம் சார் கருத்தியலே இருக்கிறது. பன்மைச் சமூக அமைப்பில் பொது நீரோட்டாத்தில் இருந்து முஸ்லிம்களை விலகிச் செல்ல வைத்ததிலும் இஸ்லாமிய சமயப் பரப்பிற்குள் தன் அல்லாத மற்றவர்களை நிராகரிப்பாளர்கள் என்று அடையாளப்படுத்தி தூரத்தில் நிறுத்தியதிலும் வகாபியம் காத்திரமான வகிபாகம் எடுத்திருக்கிறது.
.
தன் சொந்தச் சகோதரரின் மாமிசத்தைப் புசித்து துருக்கியில், யேமனில், லிபியாவில், எகிப்தில், ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில், சிரியாவில், ஈராக்கில் தன் சொந்தச் சகோதர்களின் மாமிசம் புசித்து தன் கொடும்பசி ஆற்றிக் கொள்கிறது வகாபிசம்.
.
இஸ்லாத்தின் உள்ளிருந்து கொண்டே சன்னம் சன்னமாக இஸ்லாம் முன்மொழிந்த மானுட மதிப்பீடுகளை கொன்று குவிக்கிறது. அழிவின் விளிம்பில் இருந்து முஸ்லிம் நாடுகளும், துயரத்தின் பதுங்கு குழிகளிலிருந்து முஸ்லிம்களும் மீண்டு வரவேண்டுமென்றால் வகாபிய கருத்தியலுடன் தீவிர எதிர் உரையாடல் ஒன்றை அனைத்து நிலைகளிலும் நிகழ்த்த வேண்டியிருக்கிறது.
.
அந்த வகையில் பேராசிரியர் கலாநிதி முஜீப் ரஹ்மான் அவர்கள் எழுதி கீற்று வெளியீட்டில் வெளிவர இருக்கும் "நான் ஏன் வகாபி அல்ல?" என்னும் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இஸ்லாமிய சமய, சடங்கியல், பண்பாட்டுத் தளத்தில் நின்றுக்கொண்டு வகாபியத்துடன் சமரசமற்ற உரையாடலை இந்நூல் நிகழ்த்துகின்றது.

இரண்டு

உலகமே அறிந்த விடயம்தான் பிரிந்தவர் வந்து சேர்வது தான் ஒற்றுமை என்பது. பிரிப்பவர் அவரது பிரிக்கும் வேலையை நிறுத்திவிட்டு முன்னர் இருந்தவர்களுடன் வந்து சேர்வது தான் ஒற்றுமை என்பது. இஸ்லாம் தான் அஸ்ல். இஸ்லாம் தான் முதலாவது மார்க்கம். காபிர்கள் தான் பிரிந்தவர்கள். காபிர்கள் மீண்டும் இஸ்லாத்தில் வந்து சேர்வது தான் ஒற்றுமை என்பது. மார்க்க ரீதியான ஒற்றுமை என்பது.

ஸஹாபாக்களை விட்டும் கவாரிஜ்கள் பிரிந்தார்கள். கவாரிஜ்களுடன் ஸஹாபாக்கள் சேர்வது ஒற்றுமையா, அல்லது கவாரிஜ்கள் அவர்களின் பித்அத்தை விட்டுவிட்டு ஸஹாபாக்களுடன் சேர்வது ஒற்றுமையா? ஸஹாபாக்களின் பழைய கொள்கைக்கு கவாரிஜ்கள் வருவது தான் ஒற்றுமை என்பதை அனைவரும் அறிவார்கள் அல்லவா?

சீஆக்களுடன் ஸுன்னத்து வல்ஜமாஅத்து நான்கு மத்ஹபுளும் போய்ச் சேர்வது ஒற்றுமையா, அல்லது, நான்கு மத்ஹபுகளுடன் சீஆக்கள் வந்து சேர்வது ஒற்றுமையா? சீஆக்கள் தமது புதிய கேட்டை விட்டுவிட்டு நான்கு மத்ஹபுகளுடன் வந்து சேர்வதே ஒற்றுமை என்பதையும் எல்லோரும் அறிவார்கள்.

சரி, வஹாபி இயக்கங்களின் தலைவர்கள் ஒற்றுமை பற்றி என்ன கூறுகிறார்கள் தெரியுமா?

பத்திரிகைகளைப் பாருங்கள் , வானொலி, டீவீயில் அடிக்கடி கூறுவதைக் கேளுங்கள்.

“முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக அந்நியர்களால் ஏற்படும் அநீதிகளை வெல்ல முதலில் முஸ்லிம்கள் தமக்குள் நிலவும் பிரிவினைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்”

போன்ற கருத்துக்களில் அடிக்கடி பத்திரிகை, வானொலிகளில் வஹாபி இயக்கங்களின் மூலம் இஸ்லாம் படித்தவர்கள் கூறுவதைக் காண முடியும். அவர்களிடம் கேட்கிறோம்: முஸ்லிம் சமூகத்தைப் பிரித்தவர்கள் வஹாபிகள் அன்றி வேறு யார்?

உண்மையான தொடரான பழைய இஸ்லாத்தை விட்டுவிட்டு புதிய பித்அத்தான வழிகேட்டை இஸ்லாம் என்று பின்பற்றிக்கொண்டு போனது வ்ன்றிஹாபிகளன்றி வேறு யார்?

40 – 50 வருடங்களுக்கு முன்னர் சாபிஈ, ஹனபி ஆகிய ஸுன்னத்து வல்ஜமாஅத்து மத்ஹபுகளும், காதிரிய்யா, சாதுலிய்யா, அலவிய்யா, நக்ஷபந்திய்யா போன்ற ஆன்மீக தரீக்காக்களும் இருந்த காலத்தில் இவர்கள் யாராவது, மற்றவர்களைப் பார்த்து, “நீ காபிர் நான் முஸ்லிம்”, “நீ முஷ்ரிக் நான் தவ்ஹீத்” என்று முஸ்லிம்களை இரண்டாகப் பிளவுபடுத்தினார்களா?

எல்லாத் தரீக்கா காரர்களும் முஸ்லிம்கள் என்ற நிலை தானே அன்று இருந்தது !

ஒரு தரீக்கா ஆண்கள் மற்ற தரீக்கா பெண்களைத் திருமணம் முடித்தனர். அவர்களின் மார்க்க வைபவங்களில் பங்குபற்றினர். கொள்கை ரீதியாக காபிர் – முஸ்லிம் என்ற பிளவு அன்று இருக்கவில்லையே?

வஹாபிகளாகிய நீங்கள் வந்து தானே குப்ரு, சிர்க்கு, பித்அத்து என்று புதிய இஸ்லாம் போதித்து முஸ்லிம்களுக்குள் பிளவை ஏற்படுத்தினீர்கள் !

ஏன், ஒரு வஹாபி இயக்கத்தினர் மற்ற வஹாபி இயக்கத்தில் திருமணம் முடிப்பதை விரும்பாத அளவு உங்களுக்குள்ளேயே கொள்கை ரீதியில் பிளவு இருப்பதையும் இன்று காண முடிகிறதே !

எல்லா அரபு நாடுகளிலும் வஹாபி பித்அத்தைப் பரப்பி, ஈமானுக்குப் பதில் கொலைவெறியை ஊட்டி, சகல நாடுகளிலும் முஸ்லிம்களை (போலி) முஸ்லிம்களே தற்கொலை குண்டுத் தாக்குதல்களால் கொன்று குவிப்பது உங்கள் புதிய மார்க்கம் வந்ததன் விளைவு அன்றி வேறென்ன?

உங்கள் புதிய வஹாபி மார்க்கம் வந்து முஸ்லிம்களைப் பிளவுபடுத்தியதன் விளைவு அல்லவா இன்று அமெரிக்கா. இஸ்ரேல் அரபு நாடுகளில் ஆதிக்கம் செலுத்த காரணம்?

இப்படியாக முஸ்லிம் சமூகத்தை துண்டு துண்டாகப் பிளவுபடுத்திய வஹாபிகளாகிய நீங்கள் “முஸ்லிம்களே ஒன்றுபடுங்கள்” என்று கூறுவது வேடிக்கையா முனாபிக்குத்தனமா என்ன?

ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்கள் அனைவரும் உண்மையான இஸ்லாத்தை விட்டுவிட்டு, உங்கள் வஹாபி மார்க்கத்தில் வந்து இணைய வேண்டும் என்பது தானே உங்கள் ‘ஒற்றுமை அழைப்பின்’ நோக்கம்?

“இஸ்லாத்தை விட்டுவிட்டு வஹாபி பித்அத்துக்கு வாருங்கள்” என்பது தானே வஹாபி அகராதிப்படி ஒற்றுமை என்றால் பொருள்?

நாம் கூறுகிறோம் : ஒற்றுமை வேண்டுமா? முஸ்லிம் சமூக ஒற்றுமையில் உங்களுக்கு அக்கறை இருக்கிறதா?

சைத்தானின் கொம்பு உருவாகும் என்று எங்கள் தலைவர் நபிகள் நாயகம் அவர்கள் எச்சரித்த ஸவூதி நஜ்தில் புதிதாகத் தோன்றிய பித்அத்தான வஹாபி மார்க்கத்தை விட்டுவிட்டு, உங்கள் தகப்பன், பாட்டன், பூட்டன்மார் தொடராகப் பின்பற்றிய ரஸூலுல்லாஹ் அவர்கள் முதல் இன்றுவரை தொடராக உள்ள பழைய இஸ்லாத்துக்கு இன்றே நீங்கள் வாருங்கள்.

அப்படி நீங்கள் உண்மையான இஸ்லாத்துக்கு வந்தால் நாளையே முஸ்லிம்கள் அனைவரும் அற்புதமான ஆச்சரியமான முறையில் ஒற்றுமையாக ஒரே சமூகமாக மாறுதை நீங்கள் காண்பீர்கள். முஸ்லிம் சமூகத்தில் கொள்கை ரீதியான காபிர் – முஸ்லிம், முஷ்ரிக் என்ற பிளவு மறைந்து ஒற்றுமை நிலவும் இன்ஷா அல்லாஹ். ஒற்றுமையான முஸ்லிம் சமூகம் காண நீங்கள் விரும்புகிறீர்களா ? அல்லது பொய்யாக, “ஒற்றுமை” நாடகம் ஆடி முஸ்லிம்களை ஏமாற்றி இஸ்லாத்திலிருந்து பிரிக்கும் சதியைத் தொடரப் போகிறீர்களா ?

மூன்று

பேராசிரியர் எச். முஜீப் ரஹ்மானின் நான் ஏன் வகாபி அல்ல? என்ற நூல் மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த நூல் சமகாலத்தின் கண்ணாடியாக அகில உலக அளவில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய திவிரவாதம் என்ற சொல்லாடலை மறுவாசிப்பு செய்து இஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறது. மானுடநேயத்தை வலியுறுத்தும் சூபித்துவம் இஸ்லாத்தின் அடிநாதமாக இருக்கிறது. ஆனால் சவுதி அரசால் முன்னெடுக்கப்படும் வகாபியம் என்ற கருத்தியல் தான் திவிரவாத்த்தை ஆதரிக்கிறது. எனவே வகாபிய தீவிரவாதம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். வகாபியம் வேறு. இஸ்லாம் வேறு இந்த உண்மையை புரிந்து கொண்டால் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் இதுவரை இருந்துவந்த கற்பிதங்கள் விலகும். 800 பக்கங்களில் வரலாற்று ஆவணமாக வகாபியத்துக்கு சொல்லப்பட்ட எதிர்வினையாக அடித்தள முஸ்லிம்களின் பாதுகாப்பிற்க்காக இந்நூல் பல்வேறு கோணங்களில் வகாபியத்தை ஆய்வு செய்து அதன் கருத்தியல் தீவிரத்தை, பகுத்தறிவு அராஜகத்தை, ஜனநாயக விரோதத்தை தோலுரித்து காட்டுகிறது.

இன்றைய சூழலில் இது போன்றதொரு நூல் எந்த மொழியிலும் சரி எந்த நாட்டிலும் சரி வரவில்லை என்பது இந்நூலை குறித்த ஆர்வத்தை தூண்டும் செய்தியாகும். சூபித்துவத்தின் அடிப்படை அம்சங்களான தஸ்கிய்யத்துன் நப்ஸ் என்ற மனத்தூயமையாக்கம், திக்ரு என்ற இறைதியானம், இஹ்சான் என்ற அகமியம் ஆகியவை இஸ்லாத்தை வழிநடத்த வகாபிகள் சூபித்துவத்தை மறுத்து இஸ்லாத்துக்கும் சூபித்துவத்துக்கும் தொடர்பில்லை என்று பரப்புரை செய்து இஸ்லாத்தின் ஆன்மாவை அவமதிக்கின்றனர்.

பல்வேறு பெயர்களில் பல்வேறு முகங்களில் வகாபிகள் இருந்து கொண்டு அரபுலகத்தின் நிதியுதவியை வைத்து தர்ஹா பண்பாட்டை சிதைப்பதோடு மட்டும் அல்லாது தர்ஹாக்களை உடைத்தெறியவும் செய்கின்றனர். ஹஜ், பர்தா, ஊடகம் என்று வகாபிய முதலாளித்துவம் கொழுத்து வளர சாதாரண விளிம்பு நிலை முஸ்லிம்களை காபிர்களாக பார்க்கும் மனநிலையை வகாபிகள் வளர்த்துவருகின்றனர். ஆணாதிக்கத்தை முன் நிறுத்தி தலாக் கலச்சாரத்தை வளர்த்து பெண்களை அடிமைகளாக்கும் எல்லா உத்திகளையும் வகாபிகள் கடைபிடிப்பதோடு மாத்திரமல்ல போராட்டம் என்ற பெயரில் பெண்களை மூலதனமாகி அரசியல் இலாபம் ஈட்டவும் செய்து பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்து அரசியல் நடத்துவதும் வகாபிய நடைமுறைகளாக இருக்கிறது. மதானிகள் உள்ளிட்ட வகாபி மௌலவிகள் மார்க்கத்தை கடைத்தெரு பண்டமாக எப்படி மாற்றி கோடீஸ்வரர்களாக மாறுகிறார்கள் என்பதும் வகாபிய தீவிரவாத்த்தை எப்படி இளைஞர்கள் மத்தியில் விதைக்கலாம் என்பதும் வகாபிகளது மார்க்க பணிகளாக இருக்கிறது என்பன போன்ற உண்மைகளை இந்நூல் ஆணித்தரமான ஆதாரங்களுடன் ஒரு பெரும் விவாதத்தை நிச்சயம் உருவாக்கும்.

நான் ஏன் வகாபி அல்ல?
எச். முஜீப் ரஹ்மான்
கிரௌன் சைஸ். 800 பக்கம்
விலை:ரூ. 750
தொடர்புக்கு:பேரா. எச். ஹாமீம் முஸ்தபா
கீற்று வெளியீட்டகம்
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பேச:9791954174