சுதந்திரத்திற்க்கான  மரணப் போராட்டங்கள் நிகழ்ந்த களங்களை சந்திக்க வேண்டுமா…? கிரைம் ஸ்டோரி படிக்க வேண்டுமா..? விடுதலை வேட்கைக்கான படைப்பை வாசிக்க வேண்டுமா..?  ஓடுக்கப்பட்ட மனித மனங்களின் ஓலங்களை கேட்க வேண்டுமா..? அதிகாரத்துவத்தின் ஆணவத்தை,  திமிரை, கொடுமையான அத்துமீறல்களால் நேர்ந்த வேதனைகளால் துடிக்க வேண்டுமா..? தோழர் பாலன் எழுதிய 112 பக்கங்கள் கொண்ட சிறிய நூலான சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் படிக்கும் பொழுது இந்த உணர்வுகளை நமக்குள்  எழுதுவது தவிர்க்க இயலாது. 

balan book on special campதமிழீழ விடுதலைக்கு, ஈழத்தமிழர்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. சிங்கள பாசிச இலங்கை அரசின் மீது போர் குற்ற விசாரணை, இனப்படுகொலையாளன் ராஜ பக்‌ஷ்வை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிப்பது, தமிழீழ விடுதலைக்கு பொதுசனவாக்கெடுப்பு நடத்துவது,  போரில் காணாமல் போனவர்களை பற்றிய விசாரணை ..என்று பல கோரிக்கைகளை முன்நிறுத்தி ஈழத்தமிழர்களும்,  தமிழக தமிழர்களும் போராடி வருகிறார்கள். இவைகளில் தமிழக தமிழர்கள், தமிழ்நாட்டை, இந்தியாவை பொறுத்தமட்டில் பிரதானமானதும், முதன்மையானதும் ஏது? 

தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகள் கோரிக்கைகள்தான் அவை!

அவைகள்

1.சிறப்பு அகதிகள் முகாமை(இப்பொழுது திருச்சியில் மட்டும்) என்னும் சிறப்பு சித்ரவதை சிறைச்சாலை முகாம்களை இழுத்து மூடு!! 

2.குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு (2 முதல் 5 ஆண்டுகள் ) மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கு!

அல்லது

ஈழ அகதிகளுக்கு  இரட்டை குடியுரிமை வழங்கு!!

அல்லது

தமிழீழ ஏதிலியர் கூட்டமைப்பு முன் வைத்துள்ள தமிழீழ ஏதிலியர் அனைவருக்கும் இடைக்கால குடியுரிமை வழங்கு !!

போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியவர்கள் இலங்கை அரசோ, உலக நாடுகளோ, அய்.நா சபையோ கிடையாது. இந்திய அரசும், தமிழக அரசும்தான்! 

இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிப்பதை என்பார்கள். தமிழக மக்களின் ஈழத்தமிழருக்கான பல கோரிக்கைகள் இலங்கை அரசை, அய்.நா.சபையை, பன்னாட்டு நீதிமன்றத்தை.. நோக்கியதாகவே இருக்கின்றது. ஆனால் தமிழக மக்கள்  தாங்கள் வாழும் எல்லை பரப்பின் இந்திய அரசை, தமிழக அரசை நோக்கியும், இந்த அதிகாரத்தின் – ஆட்சியின் பங்குதாரர்களான திமுக – அதிமுக கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் ஈழ விடுதலைப் போரினால் இங்கு அகதிகளாக வந்துள்ள சில இலட்சங்கள் ஈழத்தமிழர்களை எப்படி நடத்துகின்றன என்பதுதான் முதன்மையானது. தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு இயக்கங்கள், கட்சிகளின் முதன்மையானதாக இங்குள்ள ஈழ அகதிகளை இந்திய அரசு எப்படி நடத்துகின்றது என்பதை பற்றியதாக இருக்க வேண்டும்.. ஆனால் இதில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பது மட்டுமல்ல..இன்னும் மிக தொடக்க நிலையிலேயே  அகதிகள் பிரச்சனை தமிழகத்தில், இந்தியாவில் இருக்கின்றது. 

இந்த நூல் இதை பற்றிய தமிழகத்தில், இந்தியாவில் உள்ள ஈழ ஆதரவு இயக்கங்கள், கட்சிகள், தமிழக மக்கள், இந்திய மக்களின்  கவனத்தை கோருக்கின்றது. கடுமையாக விமர்சிக்கின்றது. 

நான்கு பகுதிகளாக உள்ள இந்த நூலில்…

முதல் பகுதி ஈழ அகதிகள், சிறப்பு அகதிகள் முகாம்கள், பற்றிய விரிவான தகவல்களை, வரலாற்றை, இன்றைய நிலையை கேள்வி – பதில் மூலம் தெளிவாக விளக்குகின்றது. இந்திய அரசு  யாரையும் அகதிகளாக கடந்த  69 ஆண்டுகளில் அங்கீகாரம் செய்தது கிடையாது. 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ்தான் எல்லா அகதிகளும் நடத்தப்படுகின்றனர்.  இந்திய அரசு அய்க்கிய நாடுகள் சபையின் அகதிகள் சட்டத்தில் இன்றுவரை கையெழுத்திட வில்லை. இந்தியாவில் டூரிஸ்ட் விசாவில் வரும் வெளிநாட்டவரும் , போர், இயற்கை பேரிடர், அரசுகளின் பழிவாங்கல் போன்ற காரணங்களுக்காக வரும் வேறு நாட்டினரும் ஒன்றாகவே இந்திய அரசும், தமிழக அரசும் நடத்துகின்றன. இந்த நிலையில் தனது ஆட்சியை தக்கவைக்க கருணாநிதி ஆட்சியில் தொடக்கப்பட்டது சிறப்பு முகாம் என்ற சித்ரவதை முகாம்கள்.. தங்களுக்கு  இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டும் என்ற குறுகிய சுயநலத்திற்காக இன்றுவரை கருணாநிதி, ஜெயலலிதாவும் மாற்றி மாற்றி இதை நீடித்து வருகின்ற அவலம், அநீதி தொடர்கிறது…இதை விரிவாக புள்ளிவிவரங்களுடன் இந்த பகுதி அலசுகின்றது. 

இரண்டாவது பகுதியும், நான்காம் பகுதியும்  சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டு இருந்த விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவா என்பவரும், இந்த நூலின் எழுதிய மா-லெ இயக்கத்தினை சேர்ந்த தோழர் பாலனும் நீதிமன்றங்களில் அளித்த வாக்கு மூலங்களாகும். மூன்றாவது பகுதி தாயகம் திரும்பிய மலையகத் தமிழர் இரா.சிவலிங்கம் அவர்களின் சித்ரவதை சிறப்பு முகாம் சிறைக்குறிப்புகளாக எழுதிய கட்டுரைத் தொடர்.

கொடூரமான சிறைகளை விட மோசமான சிறப்பு முகாம்களில் வதைக்கப்பட்ட ஈழ அகதிகளின் இரத்த கண்ணீரை, பெரு வேதனைகளையும் இந்த பகுதிகள் விவரிக்கின்றன. 

தமிழக நிர்வாகத் துறையின் கீழ் இந்த சிறப்பு அகதிகள் முகாம்கள் வருகின்றன. ஆனால் முழு கட்டுப்பாடும் கியு பிரிவு உளவு காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ்தான் இந்த சிறப்பு அகதிகள் முகாம்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.  பெயரளவிற்கு சட்ட விதிகள் என்று நீதி மன்றங்கள் கூறுவதைக்கூட இந்த அகதிகள் முகாம்களில் பின்பற்றப்பட்டுவது இல்லை. இயற்கை நீதிக்கு எதிராக எல்லா விதி மீறல்களும் இங்கு சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. 

 வெங்கடேஷ்வரி, சோமு, ராஜன், முனியம்மா, பலீல், சிவா, இரா.சிவலிங்கம், தோழர் பாலன்…இன்னும் பலரின் மனிதாபிமானமற்ற ஒடுக்குமுறை, மனவலிகளை, ஆறாத காயங்களை இந்த நூலில் விவரிப்பதை படிக்கும் பொழுது நாம்  வாழும் சமூகம் இத்தகைய  கொடூரமானதா என்று உறைந்து விடுவோம்.. நீங்களே படியுங்கள்!!

ஆயுத போராட்டங்களில் ஈடுப்பட்ட, சந்தேகப்படும் ஈழப்போராளிகளை தனிமைபடுத்த ஏற்படுத்தப்பட்ட இந்த சிறப்பு அகதிகள் முகாம்களில் தமிழக தமிழர்கள் (வெங்கடேஷ்வரி, சோமு..), தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள் ( இரா.சிவலிங்கம்..),  அப்பாவி ஈழ அகதிகள் என்று பலரையும் கியு பிரிவு காவல்துறை பொய்வழக்குகள், காரணங்களை சொல்லி இங்கு அடைத்து மாதங்கள், ஆண்டுகளாக சித்ரவதை செய்துள்ளதை இந்நூல் அம்பலப்படுத்துகின்றன.  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இங்கு சர்வசதாரணமாக நடைபெறுவதை ஆதாரங்களுடன் இந்த நூல் அம்பலப்படுத்துகின்றது. 

இன்னும் விரிவாக தோழர் பாலன் இந்த நூலை எழுதி இருக்கலாம் குறிப்பாக அய்ரோப்பா நாடுகள், கனடா, ஆஸ்திரேலியாவில் அகதிகள் குறிப்பாக ஈழ அகதிகள் நடத்தப்படும், குடியுரிமைகள் வழங்கப்படுவதை விவரித்து இருக்க வேண்டும். அய்க்கிய நாடுகள் சபையின் அகதிகள் சட்டம் இந்தியாவில் பின்பற்றபடுகிறதா என்று எழதப்பட வேண்டும். அப்பொழுதுதான்  ஒப்பிட்டுப்பார்த்து இந்திய அரசின், தமிழக அரசின் அநீதிகளை புரிந்து கொள்ள முடியும். மேலும் ஆங்கிலத்தில் மொழியாக்க செய்து வெளியிட்டால் பிற மொழி நண்பர்கள் புரிந்து அவர்களும்  நமது போராட்டங்களில் கரம்கோர்க்க முடியும்.

கைதியுமில்லை.. வழக்கு இல்லை.. தண்டனை இல்லை… கால எல்லைகள் எதுவும் இல்லை..  ஆனால் காலவரையறை யின்றி சிறையை விட கொடும் சிறைக்குள் இந்த ஈழ அகதிகள்..!

இப்பொழுது சொல்லுங்கள்  தமிழீழ தமிழர்கள் கோரிக்கைகளில் தமிழக தமிழரின் முதன்மையான கோரிக்கை எது..?

வெளியீடு:தோழர் பதிப்பகம். விலை உரு.50 

தொடர்புக்கு 00447753465573, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 - கி.நடராசன்