நாம் தமிழர் கட்சியினர் சமீப காலமாக இருமொழியாளர் மீது வெறுப்புணர்வையும், அவர்களை தமிழ்த்தேசியத்தின் எதிரியாக கட்டமைக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகின்றது. அதன் உச்சமாக தமிழீழ இனப்படுகொலையை பேசி கட்சி ஆரம்பித்தவர்கள், தமிழ்நாட்டு இளையோர்களுக்கு சிங்களர்கள் மீதும் இந்திய அரசு மீதும் ஏற்பட்ட கோபத்தை இருமொழியாளர்கள் எதிர்ப்பாக்கி, வீரத்தமிழர் முன்னணியின் "மறைக்கப்பட்ட தமிழீழ வரலாறு" என்ற ஆவணப்படத்தில் இனப்படுகொலையை தெலுங்கர்கள் தான் செய்தார்கள் என்ற பச்சை பொய்யை சொல்லி தமிழீழ வரலாற்று ஆய்வாளர்களை எல்லாம் அடிமுட்டாள்களாக ஆக்கியுள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

kandy nayakkarஎந்த ஒரு அரசியல் இயக்கமும், எதிர்ப்பரசியல் மூலமாகவே வேகமாக வளர முடியும். பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதோர் என்ற எதிர்ப்பு அரசியலில் தான் நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் எல்லாம் வளர்ந்தது. வடவர் எதிர்ப்பு என்று பேசித்தான் திமுக வளர்ந்தது. தேசபக்தி, சுயராஜ்யம், ஆங்கிலேயர் எதிர்ப்பு என்று பேசி தான் காங்கிரஸ் வளர்ந்தது. பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதோர் என்ற அரசியலில் சுயமரியாதை இயக்கம் தமிழருக்கு துரோகம் செய்து ஏமாற்றியதாக வீரத்தமிழர் முன்னணி சொல்கிறது. அந்த இடங்களில் எல்லாம் பெரியாரின் படத்தையே காட்டி மக்களிடம் பெரியாரின் மீது வன்மத்தை உண்டாக்கும் உளவியலைச் செய்கிறது. இந்த பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதோர் என்று உருவான வரலாற்றுச் சூழலை நாம் கவனிக்க வேண்டும்.

பார்ப்பான் தமிழன் என்று இப்போது சீமான் சொல்கிறார். ஆனால் சீமானுக்கு முன்பே பார்ப்பனானை சுத்தத் தமிழன் ஆக்கியவர் ஐயா ம.பொ.சி அவர்கள், இதற்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்,

"1937 - ல் அமைந்த காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தமிழகத்தை தன்னுள் கொண்ட சென்னை மாநிலம் ஒரு தமிழரை முதல்வராகப் பெறும் பேற்றினை அடைந்தது. ஆம் காங்கிரஸ் ஆட்சியிலே தமிழரான ராஜாஜி முதல்வர் பதவிக்கும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்." (ஆதாரம்- தமிழகத்தில் பிறமொழியினர்-ம.பொ.சி , பக்கம் -28)

"காங்கிரஸ் கட்சி தேர்தலில் ஈடுபட்ட பின்னரும் 1936ல் நடந்த தேர்தலில் அக்கட்சியின் சார்பில் தமிழரான திரு. எஸ் சத்தியமூர்த்தி(ஐயர்) அவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டார்".(ஆதாரம்- தமிழகத்தில் பிறமொழியினர்-ம.பொ.சி , பக்கம் -28)

எப்படி ராஜாஜியும், சத்திய மூர்த்தியும் தமிழர்கள்?. அடுத்து "அந்தணரெல்லாம் தமிழரே" என்ற அத்தியாயத்தில் 1920 முதல் 1949 வரை உயர் உத்தியோகங்களில் இருந்த பெயர்களை இன அடிப்படையில் ம.பொ.சி கொடுத்திருக்கும் பட்டியல் முக்கியமானது. அவர் சொல்லும் தமிழர் பட்டியலை பாருங்கள். அப்போது தான் பார்ப்பனர் -பார்ப்பனர் அல்லாதோர் வரலாற்றுச் சூழலை புரிந்து கொள்ள முடியும்.

பல்கலைக்கழக துணைவேந்தர்
கனம் கே.சீனிவாச ஐயங்கார் ( தமிழர்) - 1920-23
ஆர்.வெங்கடராமன் (தமிழர்) - 1925-28
தற்காலிகத் தலைமை நீதிபதி
சி.வி குமாரசாமி சாஸ்திரி(தமிழர்)

உயர்நீதிமன்ற நீதிபதிகள்
சி.வி அனந்தகிருஷ்ண ஐயர் (மலையாளி) - 1928-34
எஸ்.வரதாச்சாரியார் (தமிழர்) - 1934-39
கே.எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் (தமிழர்) - 1938-44
எம்.பதஞ்சலி சாஸ்திரி (தமிழர்) - 1939-47
என்.சந்திரசேகர ஐயர்(மலையாளி) 1943-48
வி.கோவிந்தராச்சாரி(ஆந்திரர்) - 1946 - 48

அடிஷனல் நீதிபதி
சி.கிருஷ்ணசாமி ராவ்(தமிழர்) -1921
வி.வி சீனிவாச ஐயங்கார் (தமிழர்) - 1924-28
சி.வி.விசுவநாத சாஸ்திரி (தமிழர்) 1925
சி.ஆர். திருவேங்கடாச்சாரியார் (தமிழர்) 1927,28,29
வி.பாஷ்யம் ஐயங்கார் (தமிழர்) - 1930
சி.என்.குப்புச்சாமி ஐயர்(தமிழர்) -1914,42,47

தலைமைப் பொறியாளர்(மின்சாரம்)
ஜி,சுந்தரம் (தமிழர்)

தலைமைப் பொறியாளர்(நீர்பாசனம்)
எல். வெங்கடகிருஷ்ண ஐயர்(தமிழர்)

அறநிலைக்குழுத் தலைவர்
சர்.டி.சதாசிவ ஐயர்(தமிழர்)

சட்டமன்றத் தலைவர்
பி.ராசகோபலாச்சாரி (தமிழர்) 1920-23

நியமன அமைச்சர்கள்
சர்.சி.பி. ராமசாமி ஐயர்(தமிழர்
டி.ஆர். வேங்கடராம சாஸ்திரியார்(தமிழர்)
கே.சீனிவாச ஐயங்கார்(தமிழர்)
சர்.சி.பி ராமசாமி ஐயர்(தமிழர்)
சி,வி. ஆனந்தகிருஷ்ண ஐயர் (மலையாளி)
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்(தெலுங்கர்)".

(ஆதாரம்- தமிழகத்தில் பிறமொழியினர்-ம.பொ.சி , பக்கம் -81-82)

ம.பொ.சி கொடுத்திருக்கும் பெயர் பட்டியலை பார்த்தாலே பார்ப்பனர்- பார்ப்பனர் அல்லாதோர் என்ற எதிர்ப்பு அரசியலின் நியாயப்பாட்டை புரிந்து கொள்ள முடியும். பெரியார் குடியரசில் கொடுத்திருக்கும் பட்டியல் இன்னும் நீளமானது. பெரியார் ஒவ்வாமை இருப்போருக்காக சுத்தத்தமிழர் ம.பொ.சி யின் பட்டியலே கொடுக்கவேண்டியதாயிற்று.மேலும் பக்கம் 105 ஐ பார்க்க.

தமிழ்நாட்டில் பிராமணர்கள் உத்தியோகத் துறையில் பெற்று வந்த ஆதிக்கத்தைத் தகர்ப்பதற்காகவே ஐஸ்டிஸ் கட்சி தோன்றியது என்ற உண்மையை ம.பொ.சி ஏற்றுக் கொள்கிறார். இப்போது சீமானைப் போல தமிழரல்லாதோர் என்று பேசும் ம.பொ.சி ஐஸ்டின் கட்சியிலிருந்த தமிழரல்லாதரை பற்றி பேசிவிட்டு, அவர் இருந்த பேராயக் கட்சியில் உள்ள தமிழரல்லாதரைப் பற்றி அமைதி கொள்கிறார்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பார்ப்பனர்கள் தமிழர்களாக என்ற கேள்விக்கு திரு சீமான் அவர்கள் "அவுங்க எல்லாம் வீட்டில தமிழ் தானே பேசுங்றாங்க. அதுக்குள்ள தானே வாறாங்க" என்று பதிலளித்தார் (பார்ப்பனர்கள் பேசக்கூடிய தமிழும் அதிலுள்ள மேட்டுக்குடித்தன மனப்பான்மையும் விரிவாக பேசக்கூடிய ஒன்று.) இந்த பதில் முன்பே தமிழ்மண்ணில் ஒலித்தது தான்.

ம.பொ.சி சொல்வதைப் பாருங்கள்

" சாதியால் அல்லது வருணத்தால் பிராமணர்களாக இருப்பவர்கள் தமிழை வீட்டு மொழியாகக் கொண்டிருப்பார்களானால் இனத்தால் அவரெல்லம் தமிழரேயென்பது பொதுக்கருத்தாகும்" ".(ஆதாரம்- தமிழகத்தில் பிறமொழியினர்-ம.பொ.சி , பக்கம் -84)

பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்ற கருத்து உருவான வரலாற்றை சூழலை "பிராமணர் செய்த பெருந்தவறு" என்ற அத்தியாத்தில் ம.பொ.சி ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அதனால் பல தமிழர் அல்லாதோர் உள்ளே வந்து விட்டனர் என்று பல இடங்களையில் பதறுகிறார். (சுத்தத்தமிழர்களான பார்ப்பனர் ஆதிக்கம் குறைந்தனாலோ என்னவோ!). ம.பொ.சி யின் கருத்தை தான் வீரத்தமிழர் முன்னணியினரின் "மறைக்கப்பட்ட தமிழீழ வரலாறு" ஆவணப்படத்தில் சொல்கிறார்கள்.

பார்ப்பனர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்வதில் பெரியாருக்கு எந்த பிரச்சனையுமில்லை. நாங்கள் மனித உயர்வு தாழ்வு வேறுபாடுகளை ஒழித்து சமத்துவத்தை கொண்டுவர உழைப்பவர்கள் என்று சொன்னவர் பெரியார். பார்ப்பனரை தமிழனாக ஏற்றுக்கொள்வதில் அவர் நிபந்தனைகள் விதித்தார்.(பூணூல் எதற்கு?, வேதமா-குறளா , சமஸ்கிருதமா-தமிழா?). ஆனால் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் ம.பொ.சியும், சீமானும் பார்ப்பனர்களை சுத்தத் தமிழர்களாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

இவர்களின் தொடர் அரசியலிலும், "மறைக்கப்பட்ட தமிழீழ வரலாறு" ஆவணப்படத்திலும் இருமொழியாளர்கள் மீதான வன்மமும், எதிர்ப்பரசியலும் என்ற பகுதிக்கு வருவோம். இவர்கள் மலையாளிகளை மரவழிப்பட்ட சேர வாரிசுகள் என்று ஏற்றுக்கொள்கிறார்கள். தெலுங்கர் என்றும் கன்னடர் என்றும் இவர்கள் கர்நாடகாவில் வாழக்கூடியவர்களையோ, ஆந்திராவில் வாழக்கூடியவர்களையோ எதிர்க்கவில்லை. மாறாக தமிழ்நாட்டில் பல தலைமுறைகளாக வாழக்கூடிய இருமொழியாளர்களை எதிர்க்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியினர் எதிர்க்கும் இருமொழியாளர்களுக்கு ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ எவ்வித பூர்வீகச் சொத்தும் கிடையாது. தெலுங்கோ, கன்னடமோ எழுதப் படிக்கத் தெரியாது. ஆந்திரா/கர்நாடகாவில் குடும்ப உறவு அதாவது திருமண உறவு கிடையாது. இவர்கள் இருமொழியாளர்கள். தங்களது மொழியையும், பூர்வீக சொத்து, குடும்ப உறவு(திருமண உறவு) இவற்றில் இன்னும் அந்த மொழி பேசப்படும் பகுதியில் தொடர்பு வைத்திருப்பவர்கள் மொழிச்சிறுபான்மையினர் ஆவார்கள். நாம் தமிழர் கட்சியினர் சொல்லும் நாயுடு, நாயக்கர் ஆகியோர் "அருந்ததியரும் தெலுங்கர் தானே" என்று அவர்களை நடப்பில் சமமாக நடத்துவது கிடையாது.

இருமொழியாளர்கள் விடையத்தில் ம.பொ.சி ஐயாவின் கருத்தும், பெ. மணியரசன் ஐயாவின் கருத்தும் மிகமுக்கியமானது.

"இருமொழியாளர்களில் தெலுங்கு பேசுவோரும் உண்டு. கன்னடம் பேசுவோரும் உண்டு. இவர்கள் காலப்போக்கில் தமிழரோடு தமிழராகக் கலந்து வருகின்றனர் எனலாம். இவர்களில் பெரும்பாலோர் தெலுங்கையோ, கன்னடத்தையோ வெறும் பேச்சளவில்தான் -அதுவும் வீட்டளவில்தான் பயன்படுத்துகின்றனர். மற்றபடி நாட்டு மொழியான, தமிழையே பாடமொழியாகக்கொண்டு கல்வி பயில்கின்றனர். ஆம், தமிழையும் அன்றாட வாழ்கை மொழியாகக் கொண்டு இருமொழியாளாராகிவிட்டனர்.

இருமொழியாளர்கள் வீட்டு மொழியால் தமிழரிடமிருந்து சிறிது வேறுபட்டாலும், நாட்டால் தமிழ்நாட்டவராகவே தங்களைக் கருதுகின்றனர். ஆந்திர நாட்டிடமோ, கன்னட நாட்டிடமோ அவர்கள் தனி விசுவாசம் காட்டுவோரல்லர். தமிழ் நாட்டிலுள்ள இருமொழியாளருக்குப் பின்னணி வரலாறு உண்டு. அந்த வரலாறு தமிழரோடு தமிழராக அவர்கள் கலந்து வருவதையே காட்டுகிறது. ஆம்; தமிழ்நாட்டின் நன்மை தீமைகளிலே பூர்வக்குடித் தமிழர் போலவே
இருமொழியாளரும் பங்குகொண்டு வந்துள்ளனர்." ".(ஆதாரம்- தமிழகத்தில் பிறமொழியினர்-ம.பொ.சி , பக்கம் -230-231)

காலம் முழுவதும் தெலுங்கு எதிர்ப்பு பேசிய (சென்னை மாகாணமாக இருந்த சூழல், மாநிலப் பிரிவினையின் போது ஆந்திரா தெலுங்கர்களை எதிர்த்ததில் நியாயமுண்டு) ம.பொ.சி யின் அடுத்த கருத்து மிக முக்கியமானதாகும்.

"பிரிட்டிஷ் ஆட்சிகாலத்திலே தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் கட்டாயமொழியாக இருக்கவில்லை. விருப்பப்பாடமாகவே இருந்து வந்தது. ஆம்; தமிழை விரும்பாவிடில் வேறொரு இந்திய மொழியை ஏற்றுப் படிக்க வாய்ப்பிருந்தது. அதன்படித்தான் பிராமணத் தமிழரிலே சிலர் சமஸ்கிருதத்தையும், இஸ்லாமியத் தமிழரில் பலர் உருதுவையும் தமிழ்மொழிக்குப் பதிலாக ஏற்றுப் படித்தனர். அவர்களைப் போல, தமிழ்நாட்டு இருமொழியார்களும் விரும்பியிருந்தால், தமிழைக் கைவிட்டு தெலுங்கையோ, கன்னடத்தையோ எடுத்துப் படித்திருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. தமிழ்மொழியை மனமார விரும்பி ஏற்று, அதன் மூலம் கல்வி பயின்றனர். இது, இரு மொழியாளரின் பின்னணி வரலாறு." ".(ஆதாரம்- தமிழகத்தில் பிறமொழியினர்-ம.பொ.சி , பக்கம் -235)

நாயக்கர் என்ற பெயரை வைத்துக்கொண்டு இனப்படுகொலையை நடத்தியவர்கள் தெலுங்கர்கள். இலங்கைத் தீவு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த பிறகு ஆட்சி அதிகாரத்தில் ஒரு சுத்த சிங்களன் கூட ஆளவில்லை. ஆண்டவர்கள் , இனப்படுகொலை செய்தவர்கள் அனைவரும் தெலுங்கர்கள், பொதுபல சேனா கூட தெலுங்கு புத்த பிக்குகளின் அமைப்பு(இதை சிங்கள மக்களே கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்) என்றும், அதனால் ஈ.வெ.ராமசாமி நாய்க்கரை எதிர்க்க வேண்டும். இருமொழியாளர்களை எதிர்க்க வேண்டும். சீமானை முதலமைச்சர் ஆக்கவேண்டும் என்று ஆவணப்படத்தில்(?) சொல்கிறார்கள். இதற்கு பெயர் மறைக்கப்பட்ட தமிழீழ வரலாறாம். தங்களது பதவி வெறிக்காக இனப்படுகொலையை பயன்படுத்தி பொய்யான வரலாற்றை சொல்லி ஆதாயம் பெறத்துடிக்கிறார்கள் இந்த வரலாற்றுப் புரட்டர்கள்.

நாயக்கர் என்ற பெயரை வைத்து இனப்படுகொலை பயன்படுத்தி தெலுங்கர்கள் தான் இனப்படுகொலை செய்தார்கள் என்றும் அதன் ஊடாக பெரியார் எதிர்ப்பை கொண்டு வரும் இந்த வரலாற்றுப் புரட்டர்களுக்கு பெ.மணியரசன் ஐயா சொல்லுவதை இவர்களுக்கான பதிலாக நாம் சொல்லலாம்.

"தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் ரெட்டியார், நாயுடு, நாயக்கர், கவுடர், அருந்ததியர் போன்ற சாதிகளைச் சேர்ந்தவர்களைப் பிற இனத்தினர் என்று அடையாளம் காண சாதிப் பெயர்கள் பயன்படும் என்பது அத் தமிழ் உணர்வாளர்களின் வாதம்.

அசல் தமிழ்ச்சாதிகளின் பெயர்கள் சிலவற்றை ஆந்திர,கர்நாடக, கேரள தேசங்களைச் சேர்ந்தவர்களும் வைத்துக் கொண்டுள்ளார்கள். அங்குள்ள சில சாதிப் பெயர்கள் இங்குள்ள தமிழர்களுக்கும் இருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக நாயக்கர் என்ற சாதிப் பெயர் தமிழ் இனத்தில் வன்னியரில் ஒரு பிரிவினருக்கு இருக்கிறது. அதே வேளை தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுவோர்க்கும் இருக்கிறது. தமிழில் நாயக்கர் என்பது தலைமையானவர் என்ற பொருள் கொண்டது. நாயகம், நாயகர், நாயகி என்பதிலிருந்து நாயக்கர் என்ற சிறப்புப்பட்டம் சில சாதிப் பிரிவுகலுக்கு வந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தந்தை பெயர் மாநாய்க்கன், எனவே "நாயக்கர்" என்பதைப் பொத்தாம் பொதுவாகப் பார்த்து, இனத்தை அடையாளம் காண முடியாது." (ஆதாரம்- சாதியும் தமிழ்த்தேசியமும் - பெ.மணியரசன், பக்கம் -107)

தமிழன் என்று தன் பெயருக்கு பின் உள்ள சாதிப்பட்டத்தை துறந்தானோ அன்றே தன்னுடைய அடையாளத்தையும், பெருமையையும் இழந்தான் என்று மிகவும் வேதனைப்பட்டு ஆவணப்படத்தில் சொல்லும் வீரத்தமிழர் முன்னணியினர் நாளையே தங்களது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்ளட்டுமே. முதல் ஆளாக சீமானை போட்டுக் கொள்ளச் சொல்லுங்களேன் பண்பாட்டு மீட்பர்களே(?)

இதற்கும் பெ.மணியரசன் ஐயாவின் பதிலையே எடுத்துக் காட்டலாம்.

"தமிழர் என்பதற்கு சாதியைத் தவிர தனித்த அடையாளம் எதுவுமில்லை என்று தமிழ் உணர்வாளர்களில் சிலர் கூறுகின்றனர். தமிழகத்தில் வாழும் பிற மொழியினரும் தமிழ் பேசுகின்றனர். மலையாளிகள் தமிழர்களைப் போல் உடை உடுத்துகின்றனர். தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள் மலையாளிகள் ஆகியோர்க்கு உணவுப் பழக்கம் கிட்டத்தட்ட ஒரே தன்மையில் உள்ளது. சாதியை வைத்து தான் "அசல் தமிழர்" யார் என்பதை அடையாளம் காண முடியும் என்பது அவர்கள் கருத்து. அதுமட்டுமின்றி சாதிதான் தமிழினத்தின் தனித்தன்மையைக் காக்கிறது என்பதும் அவர்களின் வாதம்.

இந்து மதத்தைக் காக்க சாதி அடையாளம் இன்றியமையாத் தேவை என்று இந்துத்துவாவினர் கூறுவதைப்போல் தமிழர் அடையாளத்தைக் காக்க சாதிகள் தேவை என்று இவர்கள் கூறுகின்றனர்." ." (ஆதாரம்- சாதியும் தமிழ்த்தேசியமும் - பெ.மணியரசன், பக்கம் -106)

ஆவணப்படத்தில் முதல் பகுதியில் சிங்களர்கள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று மகாவம்சத்தில் இருந்து எடுத்துக் கூறி விட்டு, பிந்தைய பகுதியில் அதாவது பெரியார் எதிர்ப்பு பேசுமிடத்தில் "சிங்களர்கள் வட இந்தியாவில் இருந்து வந்தார்கள் என்று தமிழர்கள் இன்னும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்லுவது ஏன்? 

சிங்கள பேரினவாதிகளை குற்றவாளி கூண்டில் நிறுத்த உலகத்தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில், இலங்கைத் தீவு ஆங்கிலேயரிடம் விடுதலை அடைந்த பிறகு இதுவரை "சுத்தச் சிங்களர்கள்" யாரும் இலங்கையை ஆளவில்லை. அவர்கள் எல்லாம் தெலுங்கர்கள் என்பதும், இனப்படுகொலையை நடத்தியவர்கள் தெலுங்கர்கள் என்பதும், அதனால் தமிழ்நாட்டில் "தாயாப்புள்ளையா" வாழக்கூடிய இருமொழியாளர்களை எதிர்க்க வேண்டும் என்பதும் சுத்த அயோக்கியத்தனமின்றி வேறேன்ன சொல்வது?

அடுத்து போகிற போக்கில் ஆவணப்படத்தில் எல்லாளன் சோழ மன்னன் என்று கதை சொல்லுகிறார்கள். பல மக்களின் பொதுபுத்தியில் "தமிழீழத் தமிழர்கள்" தமிழ்நாட்டில் இருந்து போனவர்கள் என்று தானே உள்ளது. அதனால் தான் "நாடுவிட்டு நாடு போயி நாடு கேட்கலாமா?" என்று கேட்கிறார்கள். எல்லாளனை சோழ மன்னன் என்று வீரத்தமிழர் முன்னணி திரித்துக் கூறுவதன் அர்த்தம் என்ன? தமிழீழத் தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து தான் போனார்கள் என்று சொல்ல வருகிறார்களா? எல்லாளன் சோழ மன்னன் என்று சொல்லி தமிழீழ தேசிய இன மக்களின் அரசாட்சியை மறுக்கிறார்களா? தமிழீழத்தவர் "தனித்தேசிய இனமக்கள்" என்பதை மறுக்கிறார்களா?.

இப்படி போகிற போக்கில் எல்லாளனை சோழமன்னன் ஆக்குவது எதற்கா? ஈழத்து வரலாற்று ஆய்வாளர் செ.இராசநாயகத்தின் நூலில் இருந்தே இதற்கான பதில் கூறலாம்,

"சிங்கள அரசின் மீது தமிழரின் படையெடுப்புக்கள் நிகழும் போது,அப்படையெடுப்புக்கள் தென்னிந்தியாவிலிருந்து நிகழ்ந்தாக மகாவம்சம் குறிப்பிடுவது வழமை. ஆனால் உத்திரதேசத்தின் பூநகரிப்பகுதியில் நிலவிய செழிப்பான தமிழ் இராச்சியத்திலிருந்தே இப்படையெடுப்புக்கள் நிகழ்ந்துள்ளன. அநுராதபுரத்தில் ஆட்சி செய்த தமிழ் மன்னர்களின் சாதனைகளை மறைத்தும், திரித்தும் கூறும் மகாவம்சம் இவர்களை ஆக்கிரமிப்பாளர், படைபெடுப்பாளர், சோழமரபில் வந்தவர்கள் அக்கரையைச் சேர்ந்தவர்கள் எனக் கூறுகின்றது. இதற்கு இவர்கள் அனைவரும் தமிழ் நாட்டிலிருந்து படையெடுத்து வந்து ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் விளக்கம் கொடுக்கப்படுகின்றது." (ஆதாரம்- யாழ்ப்பாணச் சரித்திரம் - முத்துதம்பி பிள்ளை-பக்கம் - 10)

இறுதியாக சில

* மறைக்கப்பட்ட தமிழீழ வரலாறு ஆவணப்படத்தில், சமூகத்தில் கடைநிலையிலும், மிகுந்த இழிநிலையிலும் இருக்கக்கூடிய அருந்ததியர்களின் இடஒதுக்கீட்டை எதிர்த்து வன்மைத்தை கக்குவதும்,

* பெரியாரே 1927 க்கு பின் தன் பெயருக்கு பின் இருக்கக் கூடிய சாதிப்பெயரை நீக்கியும் (ஆதாரம் 18-12-1927 குடியரசு இதழையும் 25-12-1927 குடியரசு இதழையும் பார்க்க), தன் வாழ்க்கை முழுவதும் சாதியை ஒழிக்க போராடியவரை "ஈ.வெ.இராமசாமி நாயக்கர்" என்று அவரை சாதிக்குள் அடைத்து அவரை தமிழினத்தின் முதன்மை எதிரியாக சித்தரிப்பதும்,

* தமிழருக்காக பல ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்த, பல சாதிமறுப்பு திருமணங்களை நடத்தி வைத்த தோழர். கோவை.இராமகிருஷ்ணன் அவர்களை "இராமகிருஷ்ண நாயுடு" என்று சாதியில் அடைத்து வன்மைத்தை கக்குவதும்,

நாம் தமிழர் கட்சியினர் சாதித்தூய்மைவாதம் பேசும் தூய்மைவாத இனவாதிகளாக வடிவெடுத்து நிற்கின்றனர் என்பது காட்டுகிறது.

ம.பொ.சி யின் தமிழ்த்தேசியம் சோஷியலிசத்தில் ஆரம்பித்து, மாநில சுயாட்சி பேசி, சாதி தேசியம் வழியாக பயணித்து இறுதியில் இந்து தேசியத்தில் வந்து முடிந்தது. இன்று நாம் தமிழர் கட்சியினர் சாதி தமிழ்த்தேசியத்தில் வந்து நிற்கிறார்கள். எங்கு வந்து முடிப்பார்கள் என்று காலம் தான் பதில் சொல்லும்.

வன்மத்தை தூண்டும் விதமாக, வரலாற்று குப்பைகள் அடங்கிய இந்த "மறைக்கப்பட்ட தமிழீழ வரலாறு(?)" ஆவணப்படத்தை பார்த்து தமிழ்த்தேசியத்திற்காய் போராடியவர்களும், தமிழீழத்து எழுத்தாளர்களும் அமைதி காப்பது மிகவும் வருந்தத்தக்கதேயாகும்.

குறிப்பு: இதை தனிப்பட்ட ஒருவரின் படைப்பாக எடுக்கவில்லை. வீரத்தமிழர் முன்னணியின் அமைப்பின் சார்பாகவே எடுக்கப்பட்டுள்ளது. அமைப்பின் சார்பாகவே வெளியீட்டு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

- வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்