"போர்ஹே பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஆங்கில இலக்கியம், செவ்வியல் நாவல் என்ற நூறு சிறப்புரைகள் ஆற்றியிருக்கிறார். இப்படி நான் அறிந்தவரை உலக இலக்கியவாதிகளான நபகோவ், வில்லியம் பாக்னர், மார்க்வெஸ், உம்பர்த்தோ ஈகோ, வோலே சோயிங்கா, ரேமண்ட் கார்வர், டி.எஸ். எலியட், எஸ்ராபவுண்ட் என பலரும் கல்விப்புலங்களில் தொடர்ந்து சிறப்புரைகள் ஆற்றியிருக்கிறார்கள். இளம் எழுத்தாளர்களுக்கான பயிலரங்குகளில், கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். தனது அக்கறைகளைப் பகிர்ந்துகொள்ள அவர்கள் எந்த இடத்திலும் தயங்கியதேயில்லை. அதிலும் இலக்கியம், தத்துவம், மொழியியல் என பல்துறை சார்ந்து உம்பர்தோ ஈகோ போன்றவர்கள் வருசத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட செமினாரில் கலந்து கொள்கிறார்கள்".

dayalan 251தமிழின் குறிப்பிடத்தகுந்த நவீன எழுத்தாளர்களில் ஒருவரின் பதிவு இது. இதில் தவறில்லை. நாம் இதில் குற்றங்காணவும் இல்லை. நமக்கு இதில் முரண்பாடுகளும் இல்லை. ஆங்கிலம் உள்ளிட்ட பிற தேயத்து மொழிகள் அறிந்த தமிழறிஞர்கள் நிறைய உண்டு நம் மண்ணில். 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும். மேலை நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' எல்லாம் சரி. ஆனால், நமக்கு கேள்வியெல்லாம், அவர்கள் எந்தளவிற்கு நம் நாட்டு அறிஞர் பெருமக்களின் சாத்திரங்களை பிறநாட்டுக்குப் பெயர்த்திருக்கிறார்கள் என்பதே. முற்றிலும் துப்புரவாக இல்லை என்று சொல்ல வரவில்லை. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒப்புக்கு இருக்கிறதேயன்றி, ஒப்பீட்டளவில் பிற இங்கு வந்து குவியுமளவிற்கு தமிழ் கொண்டு செல்லப்பட்டிருக்கிறதா என்பதே நம் கேள்வி? பிறகு எப்படி உலக இலக்கியத்தில் தமிழ், தமிழறிஞர்கள், தமிழ்ச் சிந்தனைகள் பூக்க முடியும்?

வெளியிலிருந்து இங்கு வருவதற்கு நிகராக இங்கிருந்து கொண்டு சென்றால்தானே உலகளவில் தமிழ் இடம்பெறும். இல்லாவிட்டால் மேற்குறிப்பிட்ட பதிவுகளைக் கண்டு ஏதோ தமிழில் அறிஞர்களே சிந்தனைகளே போதுமான அளவில் இல்லை என்ற முடிவிற்குத்தானே எதிர்கால சந்ததிகள் நினைக்கும். இதற்கு யார் பொறுப்பு? தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் உழைப்பில் கொடுக்கும் வரிப்பணத்தில், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் உயர் படிப்பு படித்துவிட்டு, உயர்சம்பளத்தில் தரமான வாழ்க்கை வசதி கொண்ட எண்ணற்ற பேராசிரியப் பெருமக்கள் செய்யவேண்டும் இதை. வெறுமனே பாடங் கற்பித்தல் என்பதையும் தாண்டி நம் படைப்புச் செல்வங்களை பிற மொழிகளுக்கும் பெயர்த்தல் வேண்டும். பல நூறு கருத்தமர்வுகளில், பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான எதிர்கால சந்ததியர்களிடையே உரையாற்றி நமது படைப்புகளை, படைப்பு ஆளுமைகளை வெளிக்கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு அவர்களுக்கிருக்கிறது. செய்யப்படுகிறதா நம் தமிழ்ச் சூழலில்?

இத்தகைய நிதர்சனமான தமிழ்ச் சூழலில்தான் எழுத்தாளர் பி. தயாளன் அவர்கள் "செம்மொழி செதுக்கிய சிற்பிகள்" என்கிற நூலினைக் கொண்டுவந்துள்ளார்கள். பொதுவாக எந்த ஒரு மொழியிலும் வளமான படைப்புச் செல்வங்களும், விழுமியங்களும், படைப்பாளர்களும், சிந்தனையாளர்களும் நிறைந்திருப்பார்கள் என்பது பொது உண்மை என்றாலும், நம் தமிழ் மொழி ஏற்கெனவே செம்மார்ந்த இலக்கிய இலக்கண விழுமியங்களையுடைய நீண்ட நெடிய கால வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள செம்மொழிகளுள் தலையானதொன்றாகும். நமது மொழியின் காத்திரமான படைப்பாளிகளும், சிந்தனையாளர்களும், அறிஞர் பெருமக்களும் நிறைய உண்டு. அவர்களை வருங்கால சந்ததியர்களுக்கு அறிமுகப்படுத்துவதின் மூலம் கரைந்தழிந்து போ1கா நினைவோடையில் நித்தம் நித்தம் நினைவூட்டிடும் அருமையான செயலைச் செய்துள்ளார் எழுத்தாளர் பி. தாயளன் அவர்கள்.

செம்மொழி என்றவுடன் இது ஏதோ மொழி ஆய்வு நூல் என எடுத்த எடுப்பில் எண்ணிட வேண்டாம். இது தமிழ் செம்மொழியாகப் பரிணாமப்பட, இயங்கு விசைகளாக விளங்கிய ஆற்றல் தகைமைகளின் அணிவகுப்பின் தொகுப்பே இந்நூல். செம்மொழியாம் நம் தமிழைச் செதுக்கிய எண்ணற்றவர்களில் நூலாசிரியரால் தெரிவுசெய்யப்பட்ட ஐம்பத்தியோரு தமிழறிஞர்களின் அழகிய அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தமிழின் ஆகச் சிறந்த அரும் பெரும் தொண்டாற்றிய ஐம்பத்தியோரு தமிழறிஞர்களை நினைவுபடுத்தி, அவர்களை நிரல்படுத்தி, அந்த நிரலை 'இலக்கியப் புள்ளிகள்', 'இலக்கணக் கோடுகள்', 'புதுமை நதிகள்' என மூன்று வகைப்படுத்தி, அந்த அரும் பெரும் ஆளுமைகள் குறித்தான நல்லதொரு குறுங்கட்டுரைகளைத் தந்திருக்கிறார்.

பைந்தமிழ் மன்னர் பாஸ்கர சேதுபதி, வள்ளல் பாண்டித்துரைத் (தேவர்) தொடங்கி நம்காலத்தில் நம் கண்முன் வாழ்ந்து சாதித்து மறைந்த அறிஞர் திரு. வ.அய். சுப்பிரமணியம் ஈறாக இலக்கிய ஆளுமைகளை 'இலக்கியப் புள்ளிகள்' என்ற வகையில் நிரல்படுத்தி நல்லதொரு சுருக்கமான அதே சமயம் அந்த ஆளுமைகளின் ஆற்றல்களை சிறிதும் குறைவுபடாவண்ணம் நிரல்படுத்தித் தந்துள்ளார். அடுத்ததாக, 'இலக்கணக் கோடுகள்' என்ற நிரலில் மனோன்மணியம் சுந்தரம் (பிள்ளை) அவர்களில் தொடங்கி மொழிப்போர் அறிஞர் சி. இலக்குவனார் ஈறாக தொகுத்துத் தந்துள்ளார்.

இலக்கிய இலக்கண என்பதைத் தாண்டி புத்திலக்கியப் பெருவெள்ளமாய் பெருக்கெடுத்துவரும் புதுமை நதிகளாக சிறுகதை ஆசான் கு.பா.ரா முதற்கொண்டு மனிதநேய மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் வரை அன்னார்களது வாழ்வையும், அவர்களின் தமிழ்ச் சாதனைகளையும் முன்வைத்துள்ளார். பொதுவாக இந்தக் கட்டுரைகள் அந்தந்த ஆளுமைகளின் மீதான ஆழ்ந்தகன்ற ஆய்வுக் கட்டுரைகளல்ல. மாறாக, எளிய அறிமுகக் கட்டுரைகள். வரலாற்றின் காலப் பெரு வெளியில் மறைந்துபோகாமல், மறந்துபோகாமல் இருக்க தக்கதொரு நினைவோடைக் குறிப்புகளாய் நம்கால மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்குக் கையளித்துப்போகும் அருமையான தொகுப்பு இந்நூலாகும். அதேநேரம் வெறுமனே அறிமுகம் செய்துவைத்தல் என்கிற சடங்கு சம்பிரதாயம் போலின்றி, அந்தந்த ஆளுமைகளின் வாழ்வில் நிகழ்ந்த அபூர்வ தருணங்களையும், ஆச்சர்யகரமான நிகழ்வுகளையும் சுவைபடச் சொல்லிப் போகிறது இந்நூல். அந்த அபூர்வ தருணங்களின் சுவைதான் நம்மை அயர்ச்சியடைச் செய்யாவண்ணம் இந்நூலுக்குள் நம்மை வாசக பயணம் செய்யவைக்கிறது.

சிக்கல் சிடுக்கலில்லாத எளிமையான நடை. அதேசமயம் சுழித்துக் கொண்டோடுகிற ஒரு குளிர் நதியின் ஆற்றுப்போக்கு. நேர்த்தியாக ஒவ்வொரு ஆளுமைகளையும் அறிமுகப்படுத்திடும் பாங்கு என எழுத்தாளர் பி. தயாளன் அவர்களின் எழுத்து வன்மை பாராட்டுதலுக்குரியதாகும். ஏற்கெனவே "செந்தமிழ் சிந்தனையாளர்கள்" என்கிற நல்லதொரு நூலினை எழுதி, தமிழ்கூறு நல்லுலக வெளியில் உலவவிட்டு, அதன் தொடர்ச்சியாய் உலாவரும் இந்த "செம்மொழி செதுக்கிய சிற்பிகள்" நூல் ஒவ்வொரு வீட்டிலும், அதைவிட ஒவ்வொரு பள்ளியிலும், நூலகங்களிலும் கண்டிப்பாய், தவறாமல் இருக்க வேண்டிய நூலாகும். ஏனென்றால் இந்நூல் கலைக்களஞ்சிய வரிசையில் வைக்கப்பட வேண்டியதொரு நல்நூலாகும். தமிழ்நாட்டரசு பாடநூல் குழுவினர் முன் இந் நூலை முன்வைப்பது பதிப்பகத்தாரின் முகாமையான அடுத்த பணியாகும்.

- பாட்டாளி