இந்திய சாதி இந்துக்களின் மனநிலை இருக்கிறதே அது பொருட்களின் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளும், புதிய புதிய கண்டுபிடிப்புகளை எண்ணி வியக்கும் பெருமையடையும். ஆனால் சமூக வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளாது.

பொருட்களின் வளர்ச்சியை விரும்பும் சாதிச் சமூகம் அந்தப் பொருட்கள் ஒரு தலித்துகளின் கையில் சேர்வதை விரும்பாது. அடுத்தவேளை கஞ்சிக்கு வழியில்லாவிட்டாலும் தன் ஆண்ட பரம்பரைக் கனவைக் கைவிடாது. அந்த ஆண்ட பரம்பரைக் கனவில் கைகட்டி சேவகம் செய்யும் தலித்துகளை நிஜத்திலும் மீளவிடாது; நிம்மதியாக வாழவும் விடாது.

ஒரு தலித்தின் சிறு முன்னேற்றமும், சாதி வெறிக்கு எதிரான எதிர்வினையும் கூட, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் மிக மட்டகரமான பாசிசத்தனமான சாதிவெறி கொண்டு ஒடுக்கப்படும். அப்படி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட தஞ்சை வட்டார மக்களின் சமகால நிகழ்வை சொல்லும் கதைதான் இந்தக் குறுநாவல்.

'நேத்துவரைக்கும் நம்மகிட்ட இரந்து குடிச்ச பயலுக இன்னைக்கு செல்போனோட சுத்துறானுக' என்று பேசும் ஆதிக்க சாதி மனநிலை இன்றும் அதே வக்கிரத்தோடு இருப்பதை ஒரு இடத்தில் சொல்கிறார் நாவலாசிரியர்.

ஆம் அந்த சாதிய சிந்தனை தான் 'தலித் பசங்க ஜீன்சும் டீசர்ட்டும் போட்டுக்கிட்டு எங்க பொண்ணுகளை மயக்குறாங்க' என ராமதாசைப் பேச வைத்தது . கொங்கு ஈஸ்வரன் போன்ற ஆட்களை வேறுவகையில் ஆனால் இதே பொருளில் பேச வைக்கிறது.

சாதி இந்துக்களின் விருப்பு வெறுப்புகளே எமக்கான சட்டங்கள் என அண்ணல் அம்பேத்கர் சொல்லியது போல, தேவனாதன் போன்றோர் கோயிலில் சல்லாபிக்கலாம், ஜெயேந்திரன் போன்றோர் கோயிலில் கொலை செய்யலாம்; ஆனால் தலித் ஒருவன் சாமி கும்பிட முடியாது. கொலை செய்தவனுக்கும், சல்லாபம் செய்தவனுக்கும் இல்லாத தண்டனை சாமி கும்பிட்ட தலித்துக்கு உண்டு. அதுதான் சாதிப் படிநிலை.

கிராமக் கோயில்கள் இன்றும் சாதிவெறியின் கோட்டையாக இருப்பதையும், அதில் தலித் ஒருவன் அவன் சிறுவன் என்றாலும் உள் நுழையவோ, கற்பூரத் தட்டைக்கூட தொட்டு வணங்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. தெரியாத்தனமாக மீறினால் கூட அவன் தண்டிக்கப்பட தவறுவதில்லை.

அப்படித்தான் தண்டிக்கப்படுகிறான் சங்கரனின் மகனான சாத்த ஊமை என்னும் சிறுவன். அவன் தாக்கப்பட்டதைப் பார்த்த வெளியூரைச் சேர்ந்த உறவினர்கள் பதிலுக்கு சாதி இந்து பூசாரியைத் தாக்கி விடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களால் சாதி இந்துக்கள் தாக்கப்படுவதை எப்படி ஊர் ஏற்றுக்கொள்ளும் ?

பஞ்சாயத்தைக் கூட்டி சங்கரனையும் சாத்த ஊமையையும் தண்டிக்கத் தயாராக இருக்கிறது ஊர். சாத்த ஊமை தண்டிக்கப்படுவதை விரும்பாத அவன் அப்பா சங்கரனும், அவன் அம்மாவும் இரவோடு இரவாக அவனை வெளியூருக்கு அனுப்பிவிட்டு ஊர் பஞ்சாயத்துக்குப் பயந்து தங்களை மாய்த்துக் கொள்கின்றனர். இது தான் கதைச் சுருக்கம்.

ஆனால் இந்த குறுங்கதையில், நெடுங்கால சாதிக்கொடுமைகளை பேசுகிறார். சாதி இந்துக்களின் மன வக்கிரங்களைக் காட்டுகிறார். எடுத்துக்காட்டாக 'நம்ம சாதிக்காரனுக்குப் பொறந்த பயலுகடா அதான் நம்மளையே எதிர்த்து நிக்குறானுக' என்னும் சொல்லாடல் மூலமாகக் காட்டுகிறார்.

கம்யூனிஸ்ட் அமைப்புகளின் சாதிக்கு எதிரான போராட்டங்களைப் பேசுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் எரிந்துகொண்டிருக்கும் விடுதலை நெருப்பை, மரணத்திற்கு அஞ்சாத போர்க்குணத்தை காட்டுகிறார் நாவலாசிரியர்.

தஞ்சை வட்டார வழக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல், கதை மாந்தர்களை கண்முன்னே உயிரோட்டமாக உலாவ விடுகிறது.

பெருமாள் முருகனும், புலியூர் முருகேசனும் சாதிவெறியர்களால் தாக்கப்பட்டதைப்போலவே இந்த நாவல் எழுதியதற்காக தோழர் துரை.குணா சாதி இந்துக்களாலும், சாதி இந்துக்களின் தூண்டுதலாலும் தாக்கப்பட்டார் என்பது இந்த நாவல் கொண்டிருக்கும் மையக்கருத்தான சாதிவெறிக்கு ஒரு சான்றாகும்.

அவசியம் படிக்க வேண்டிய நாவல்.

நூலின் பெயர் ... ஊரார் வரைந்த ஓவியம்
ஆசிரியர் .... துரை.குணா
விலை..... ரூபாய் 40/-
வெளியீடு ... கீழாண்ட வீடு
விற்பனை உரிமை... கருப்பு பிரதிகள்

- வீர பாண்டி