புதுக்கவிதை நவீனக் கவிதையாகி பல வடிவங்களில் எழுதப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கவிஞருக்கும் ஒவ்வொரு வடிவம் கைவருவது சாத்தியக் குறைவே. கவிஞர் மயூரா ரத்தினசாமிக்கு இக்கலை நன்கு வாய்த்துள்ளது. அவரின் தொகுப்பு 'நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை.'

உதிப்பதும் மறைவதுமில்லாத சூரியன்
உதிப்பதும் மறைவதுமாயிருக்கிறது  

எனத் தொடங்கி

பிறப்பதும் இறப்பதுமில்லாத நான்
பிறப்பதும் இறப்பதுமாயிருக்கிறேன்  

என முடிகிறது முதல் கவிதை. ஒரு தத்துவமாயுள்ளது. ஒரு ஞானியின் மனநிலை வெளிப்பட்டுள்ளது. வடிவமும் வித்தியாசம். சுயமெனினும் சிந்திக்கச் செய்கிறது. இயற்கையோடு தன்னை ஒப்பிட்டுள்ளார். பொய் எனினும் மெய்யாக்க முயற்சித்துள்ளார்.

'முகங்கள்' இரண்டாம் கவிதை வேடதாரிகனை விமரிசிக்கிறது. வேடமிடாதவர்களை வேடதாரரிகள் என்கிறார்.

வேஷம் கலைந்து விளையாடப் போய்விட்டனர்
குழந்தைகள்
பரிசளிப்பு விழாவில் கத்திக் கொண்டிருந்தனர்
பெற்றோர் வேடமிட்டவர்கள்  

என அடையாளப்படுத்துகிறார். கபடமற்றவர்கள் குழந்தைகள். பெற்றோர்களே அசல் வேடக்காரர்கள். வேடங்களோடு குழந்தைகளால் ஒத்து போக முடியாமல் தவிப்பது அவர்கள் உண்மையாவைர்கள் என உறுதிப்படுத்துகிறது.

வடிவத்தில் புதுமை இல்லை எனினும் மொழியில் மாறுபட்டுள்ளது 'செகப்பு'. வழக்கில் அமைந்துள்ளது.

எல்லாருக்கும்
அக்கா தான்
மருதாணி
வச்சு விடுவா
அக்கா அரைச்சு வச்சா
அப்படி செவக்கும்
கோவப் பழமாட்டா  

என அக்காவின் பெருமைப் பேசுவதாகத் தொடங்கி

செகப்பு நகத்தடியிலெ
வெள்ளை முளைச்சப்ப
மத்தியான பஸ்சுலெ
அக்கா வந்தா
தனியா
ஆரு வச்சு விட்டது
அக்கா கண்ணுக்கு
மருதாணி  

என முடிக்கிறார். ஒரு குழந்தை பேசுவதாக ஒரு குழந்தையின் பார்வையிலே எழுதி பூடகமாய் பெண்ணுக்கு நிகழ்ந்ததை உணர்த்துகிறார். அக்காவின் கண் சிவந்ததற்கும் மருதாணியே காரணம் என எண்ணும் வெள்ளை உள்ளம் உடையது குழந்தை. ஆனால் கவிஞர் கூறியது ஒரு சமூக பிரச்சனை. குழந்தையின் வாயிலாக பெரியவர்களுக்கு புரியச் செய்துள்ளார். வழக்கிலேயே எழுதப்பட்ட மற்றொன்று 'வேண்டுதல்'.

ஆண்டுக்கொருமுறை
கூடிக் குடித்து களித்து சாப்பிட
அவசிமாயிருக்கிறது.
கருப்பராயனுக்கு கிடாய் வெட்டும்
வேண்டுதல்கள்  

என வேண்டுதல் பேரில் கிடா வெட்டி உண்பவர்களைச் சாடியுள்ளார். வேண்டுதல்களுக்கும் பல காரணங்கள். அதிலொன்று
 
போன வருசம் விசைத்தறியில் சிக்கி
பழனி செத்துப் போனதுக்கும்  

என்பதாகும். ஆனால்

பழனியின் பொஞ்சாதி
வாசலில் காத்திருக்கிறாள்
மீந்தும் கறிச் சோற்றை
முந்தானையில் வாங்கிச் செல்ல  

என்னும் போது கவிஞர் சொல்ல வரும் செய்தி கிடா வெட்டு. ஆனால் பழனி மனைவிக்கு அனுமதியில்லை. இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பேசியுள்ளார்.

தேடல் மனித வாழ்வில் அவசியம். தேடல் இல்லா வாழ்வு சிறக்காது. 'வட்டப்பாதை'யில் தேவையும் நானும்

வட்டப்பாதையில்
ஒன்றையொன்று
துரத்தியபடி
ஏதேனுமொரு
தேவையை முன்னிட்டு  என தன் தேடலைக் குறிப்பிட்டுள்ளார். இது பொதுவானதே.

விலங்குகளில் அதிகம் கவிதைகளில் பாடு பொருளாக்கப்பட்டது நாய்களே. அதே போல் சாலையில் அதிகம் விபத்துக்குள்ளாகி இறப்பதும் நாய்களே.

வீதியில் புணர்ந்து தவிப்பதும்
சாலையில்
செத்துச் சிதைவதுமாயிருக்கிறது
நாய்களின் பொழுதுகள்  

என 'நாய்' குறித்து கவிஞரும் எழுதியுள்ளார். தொடர்ந்து

வெட்கத்துடன்
தலைகுனிந்து கடந்த
சிறுமியினுள் பதிந்த
பாலுறவின் சித்திரத்தை
யாரிடம் பகிர்வாள்   

என சிறுமியின் சார்பாகவும்

மூடிய ஜன்னலின்
ரகசியக் கண்கள்
அறியுமா நாயின் வலி  

என நாயின் சார்பாகவும் எழுதி நினைவுகளைக் கிளறி விடுகிறார். புணரும் நாய் அறிவதில்லை வெட்கம். பெரியவர்கள் பாராதிருப்பர். சிறுவருக்கோ குழப்பம். இரு நிலைகளிலும் எழுதியுள்ளார். 'அரூபக் கத்தி'யும் நாய் தொடர்பானதே. முதலில் குரைத்த நாய் பின்னர் சினேகமாகிவிட்டதாகக் கூறுகிறார். நாய் குறித்த மற்றொன்று 'காவல். . . '. முந்தையதற்கு மாறானது. அடுக்கு மாடி குடியிருப்புகளில் நாய் வளர்க்கக்கூடாது என முடிவெடுத்தையும் பின்னர் தொடர் திருட்டுகளால் 'பைரவ சாமி' யை பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தையும் குறிப்பிட்டுள்ளார். நாயை தெய்வமாக வணங்கலாம். ஆனால் நாய் போல் 'பைரவர்' காவல் புரிவாரா? என ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் பல முகங்கள் இருக்கும். இடத்துக்கு இடம் வேறுபடும். சூழ்நிலைக்கேற்ப வெளிப்படும். 'கண்ணாடி முகம்' கவிதை அழகாக எடுத்துக்காட்டுகிறது.

ஈரோட்டில்
கருப்புச் சட்டைக்காரனென்றும்
திருப்பூரில் வெள்ளையுடுத்தியவனென்றும்
கோவையில் பச்சைச் சட்டைக்காரனெனவும்
பழனியில் காவியென்றும்
சின்னியம்பாளைத்தில்
சிவப்புத்துண்டுக் காரனென்றும்
மேல்மருவத்தூரரில்
செவ்வாடைக் காரனெவும்
ஊருக்கொரு பெயரால்
அறியப்படுகிறேன்  

என தன்னையே முன்னிலைப்படுத்தி எழுதி

எனது நிர்வானம்
அவிழ்க்கப்படும் பொழுது
எனது பெயர்  

என சுயவிமரிசனம் செய்துள்ளார். ஆயினும் இக்குணம் பொதுவானதே. வாசிப்பவரையே சுய விமரிசனம் செய்து கொள்ளச் செய்கிறது.
 
தமிழ் இலக்கிய மரபு என்பது செய்யுள், பாடல் வடிவிலேயே தொடங்கியது. பின்னர் கவிதை வடிவமாயிற்று. உரைநடை வடிவம் 1850 களிலேயே அறிமுகமானது. கவிதையும் உரைநடையும் இருவேறு இலக்கியப் பாதைகளாக இருந்து வருகின்றன. மரபாளர்கள் கவிதையை 'உரைவீச்சு' என புறந்தள்ளியே வைத்தனர். இச்சூழ்நிலையில் கவிதையிலேயே உரைநடைக் கவிதை என ஒரு புதுமரபு தொடங்கப் பட்டு வருகிறது. கவிஞரும் அவ்வழியில் சித்திரம் 1, சித்திரம் 2 என இரு உரை நடைக்கவிதைகளை தொகுப்பில் தந்துள்ளார். கதை சொல்லும் போக்கில் அமைந்துள்ளன சித்திரம் 1. குழந்தையின் வாயிலாக குறியீட்டு அடிப்படையில் சாதியத்தை எதிர்க்கிறது சித்திரம் 2 . ஒரு சிறுவனின் இயல்பபைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இவ்வாறான உரைநடைக் கவிதைகள் இலக்கிய உலகில் இடம் பிடிக்குமா என்பது வினாவே. எனினும் கவிஞரும் வித்தியாசமான வடிவ முயற்சிக்கும் சான்றாக உள்ளன.

நெடிய வித்தியாசமான வடிவமைப்புகள் உள்ள கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பில் குறுங்கவிதைகளும் உண்டு.

நிழல் தரவியலாத
பனைமரத்தின் வேதனையை
விடுபட்ட ஓலையொன்று
விசிறியாகி தீர்க்கிறது  

என்பது அதிலொன்று. ஒரு பனைமரத்தால் முடியாததை ஓர் ஓலை செய்வதாக குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. மதிப்பு என்பது உருவத்தை வைத்து அல்ல. அதன் பயன்பாட்டிலேயே உள்ளது என்கிறது இச்சிறுகவிதை. இன்னொன்று 'உறவு'.

உன் மகன் என்னை
'அங்கிள்' என்றும்
என் மகன் உன்னை
'ஆண்ட்டி' என்றும்
அழைக்கும் பொழுது
கலவரமாயிருக்கிறது
நாளை
அவர்களுக்கும் நேர்ந்துவிடுமோ
நம் கதி

என்று  தலைமுறை தலைமுறையாய் ரகசியமாய்த் தொடரும் ஒரு பிரச்சனையை பேசியுள்ளார். நிறைவேறாத பல காதல்கள் உண்டு. வெளியில் சொல்ல முடியா வேதனையில் வாடும் ஒரு தகப்பனின் குரலாயுள்ளது. எனினும்
 
மின்சாரம் போய்விட்டது
விளக்கேற்றி வைத்தேன்
வெளிச்சம் என்றால்
என்ன வென்று தெரிந்தது 

என்பது சாதாரணம். வெயிலின் அருமை நிழலில் தெரியும் பழமொழியின் தழுவலாயுள்ளது.

வீரனுக்கு ஒரு முறை. கோழைக்கு பலமுறை மரணம் என்பர். கவிஞர் தனக்கும் அப்படியே என்கிறார்.

பிறக்கும் போதே
பிறந்து விடும் இறப்பும்   என்று தெரிவித்து
உயிர் பிரிவது மட்டுமா
மரணம்?  

என்றும் வினவியுள்ளார். மரணம் என்பது மனிதர்க்கு பலமுறை நேர்கிறது என்பது கவிஞரின் கருத்து.

'செருப்பு வர்ணம்' சாதியம் பேசுகிறது. தலித்தியருக்கு உரிமைக் கோருகிறது. சமத்துவம் போதிக்கிறது.

செருப்பு ஸ்டேண்டுகளில்
வீற்றிருக்கும்
சமத்துவ தெய்வங்களை
அறிந்திருக்கவில்லை  

என சாதியில் வேறுபாடு காணும் மனிதர்களுக்கு அறிவுரைத்துள்ளார். 'செருப்பு' என்பது இங்கு தாழ்த்தப்பட்டவர்களின் குறியீடாக உள்ளது.

நெடுஞ்சாலையைக் கடக்கும் 'நத்தை' கவிஞரை நன்கு பாதித்துள்ளன என இரண்டு கவிதைகள் சாட்சியம் கூறுகிறன்றன. ஒன்று 'பயணத்தின் வழி'

சற்றுமுன் பார்த்த அந்த நத்தை
நெடுஞ்சாலையைக் கடந்திருக்குமா?  

என வினவி அதிரச் செய்கிறார். நெடுஞ்சாலையை நத்தை கடக்க முடியமா? கடக்கையில் விபத்து நேரமால் இருக்குமா? என பல வினாக்கள் எழுகின்றன. கவிஞரே

சற்றுமுன் பார்த்த அந்த நத்தை
நெடுஞ்சாலையைக்
கடந்திருக்கலாமென்ற
எனது நம்பிக்கைக்கான
காரணங்கள் மூன்று   

என்கிறார் 'நெடுஞ்சாலை'கவிதை வழி. இதுவே இத் தொகுப்பின் இறுதிக் கவிதை. கவிஞர் கூறும் காரணங்கள்.

1. நெடுஞ்சாலையைப்பற்றி நத்தைக்குத் தெரியாது.
2. நெடுஞ்சாலையைக் கடக்கிறோம் என்பதும் தெரியாது.
3. நெடுஞ்சாலையென்று ஒன்று இருப்பதே நத்தைக்குத் தெரியாது.  

நத்தைக்குத் தெரியாது என்பதை விட மனிதர்க்குத் தெரிந்துள்ளதே கடக்க முடியாததற்கு காரணம் என்கிறார். எதுவொன்றை பற்றியும் தெரியாது எளிதில் கடந்து விட முடியும். வெற்றிப்பெற முடியும் என்பதே உண்மை.

ஓர் இரவு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய்க் கடக்கிறது என்கிறார். மற்றவர்களையும் துணைக்கு அழைக்கிறார். 'அசம்பாவிதங்கள் நிகழ்வதாகக் சொல்லப்படும் ஓர் இரவில் 'அவ்வாறு எதுவும் நிகழவில்லை' என்கிறார். ஆனால் செய்தி அறிந்த போது ஆச்சரியம் எனவும் குறிப்பிடுகிறார்.

பக்கத்து வீட்டுக் கொடியில்
காய்ந்து கொண்டிருந்த
அவளது உள்ளாடைகளுடன்
கிறங்க வைக்கும் பலகதைகள் பேசியபடி
பின்னிரவு வரை
நாய்களைக் கவனித்தபடியிருந்தேன்  

என்பது கவிஞரை பின்னடையச் செய்கிறது.

அவனுடைய அப்பா காளியப்பன்
எனக் குறிப்பிட்டுள்ளது
உண்மையெனினும்
அது எனக்குத் தெரியும் என
கையெழுத்திட்டவர் உரைத்தது பொய் 

என்கிறது 'நிரூபணம்'. விவகாரமான கவிதை. அம்மா என்பது மெய். அப்பா என்பது நம்பிக்கை. அம்மாவே அப்பாவை உறுதிப்படுத்த இயலும். அப்பா என அடுத்தவர் சான்றளிப்பது ஒரு நம்பிக்கையே. பொய் எனக் கூறவதும் தவறு.

இடம், வலம் குறித்த கவிதை 'இடங்கொடுத்தான்'. இடது கை, கால். வலது கை, கால் ஆகியவற்றின் கடமைகளை விவரிக்கிறது.

வலது நீரூற்ற இடது கை
குண்டி கழுவ வேண்டும்
சாப்பாட்டைத் தொட்டுவிடக்கூடாது
கை மறதியாய் 

என இரு கைகளிளடையே உள்ள வேறு பாட்டை விவரிக்கிறார். இறுதியில்

திருச்செங்கோட்டில்
அருள்பாலிக்கும் அர்த்த நாரிஸ்வரா  

என முடித்து இரண்டும் சமம் என்கிறார். இடம், வலம் வேறுபாடு கூடாது எனவும் உணர்த்தியுள்ளார்.

'வாய்ப்பாடு வர்க்கப்பாடு' வித்தியாசமானது. வாய்ப்பாடு வடிவிலேயே தொடங்குகிறது.

எல்லா வாய்ப்பாடும் சரி
நூத்துக்கு நூறு
எல்லோரும் பாஸ்
என
அரசாங்க பதிவேட்டில்
பதிந்துள்ளதை
பெருந்தனக் காரரும்
ஆமோதிக்கிறார்
உங்களால் முடிகிறதா?  

என வினவி வர்க்க வேறுபாட்டைக் கூறுகிறார். வாய்ப்பாட்டுக்கு சரி. வர்க்கத்துக்கு தவறு.

நியாயம் என்பதற்கு எதிராக, மாற்றாக அநியாயம் உண்டு. ஒருவருக்கு நியாயம் என்பது அடுத்தவருக்கு அநியாயம். நியாயமே நபருக்கு நபர் வேறுபடும். 'கொலை நியாயம்' கவிதை மூலம் கவிஞர் தன் நியாயத்தை முன்வைக்கிறார்.

நியாயங்கள் நம்மை
கொலை செய்ய வைக்கிறது
சமாதாகப்படுத்துகிறது
தண்டனை கொடுக்கிறது
ஏமாற்றுகிறது
உன்னையும் என்னையும்
வாழ வைக்கிறது  

என நியாயம் உண்டாக்கும் விளைவுகளை பட்டியலிட்டுள்ளார். நியாயங்களே மனிதரை இயக்குகின்றன. நியாயங்களை நம்பியே மனிதரும் இயங்குகிறன்றனர்.

நவீனக் கவிதை பயணத்தில் மயூரா ரத்தினசாமி 'நெடுஞ்சாலை கடக்கும் நத்தை' மூலம் தன் தடத்தை சிறப்புற பதிவித்துள்ளார். கவிதையின் தளம் மாறினாலும் சமூகப் பிரக்ஞையை கைவிடாமல் இருப்பது பாரட்டத்தக்கது. வடிவம் பலவற்றில் கவிதைகளை அமைத்திருப்பது கவிதை இயக்கத்தை அடுத்த கட்ட முயற்சிக்கு கொண்டு செல்லும். வரியமைப்பு வித்தியாசம் எனினும் வார்த்ததைகள் புரிதலுக்குட்பட்டேயுள்ளன. புதிய சொற்களை உருவாக்கியுள்ளார். படிமம், குறியீடு ஆகியவற்றை கவிதைகளில் பிரயோகித்து தன்னாளுமையை புலப்படுத்தியுள்ளார். சமூகத்தைக் காட்டியவர் தன் சமூகம் எதுவென காட்டியிருக்க வேண்டும்.

நூல் தயாரிப்பும் வடிவமைப்பும் தொகுப்பின் பலத்தை அதிகரிக்கிறது. சமீப வரவுகளில் கவனிப்புக்குரியதாயுள்ளது. 'நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை'