இப்போதைய நண்பர்கள், புத்தகங்கள் குறித்தும் கூட அவ்வப்போது எதையாவது பகிர்ந்துகொள்ளத்தான் செய்கிறோம் என்பதே ஆச்சரியம்தான் இல்லையா! சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் போனில் அழைத்த நண்பர் பரிசல் கிருஷ்ணா ஒரு புத்தகம் குறித்து மிகவும் சிலாகித்துக்கொண்டார். அவர் அப்படித்தான், புகழ்வதில் என்னைப்போல சிக்கனமெல்லாம் பார்ப்பதில்லை. பிடித்துப்போய்விட்டால் தலையில் வைத்துக்கொண்டு கரகாட்டம் ஆடிவிடுவார். மேலும் அவர் சொல்வது பெரும்பாலும் எனக்கும் ஒத்துப்போகும் என்பதால் அவர் முன்மொழிந்த அந்த புத்தகத்தை மறக்காமல் வாங்கி வைத்திருந்தேன். பொதுவாக என் புத்தகத் தேர்வு என்பது நன்கறியப்பட்ட, பேசப்பட்ட புத்தகங்களாக இருக்கும். அல்லது நன்கறியப்பட்ட எழுத்தாளர்களை நான் அறிந்து பின் அவர்களில் என் மனதுக்குப் பிடித்தவர்களிடம் பித்தாகி அவர்கள் எழுதிய எதுவானாலும் அது பால்கணக்காக இருந்தாலும் கூட தேடிப்பிடித்து வாங்கும் புத்தகங்களாகத்தான் இருக்கும். இதுபோல நண்பர்கள் சிபாரிசு செய்வது அரிதான நிகழ்வுதான். அப்படியானதொரு புத்தகமே, ‘தாயார் சன்னதி’.

இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. இப்படிப் புத்தகங்களை வாங்குவதில் எந்த பிரச்சினையும் இருப்பதில்லை, அவற்றைப் படிப்பதில்தான் அது இருக்கிறது. தலைவாழை இலை விருந்தில் சோறு, கறி வகைகள், குழம்புகள், பாயசம், அப்பளம் என எல்லாம் இடத்தைப் பிடித்துக்கொள்ள, இந்த ஊறுகாய் மட்டும் ஒரு மூலையிலாவது இடம் கிடைத்து இலையிலே இருப்பதா, இல்லை அங்கும் நெருக்கியடிக்கப்பட்டு நழுவி விழுந்துவிடுவதா என்ற பரிதாப நிலையில் இருக்கும். இருக்கும் கொஞ்ச ஓய்வு நேரத்தையும் எவையெவையோ விழுங்கிவிட, அப்படியான நிலையில்தான் இருக்கிறது, புத்தகம் வாசிக்கும் பழக்கம். அதையும் மீறி அவ்வப்போது ஊறுகாயைத் தொட்டுக்கொள்ளத்தான் செய்கிறோம்.

நெல்லை மண் தந்த தமிழ் இலக்கியச்சொத்துகளுக்கு அளவே இல்லை. புத்தகத்தின் முன்னுரையில் வண்ணதாசன் இப்படிச் சொல்கிறார்.

“நானும், மூத்தோர்களும் தாமிரபரணியைப் பற்றிய பதிவுகளை எழுதித் தள்ளிவிட்டோம். மிச்சம் மிஞ்சாடி இல்லாமல் வள்ளிசாக எழுதியாயிற்று. இனி ஆற்றுக்குள் உறை இறக்கினால்தான் ஆச்சு என்று தோன்றியது. ஆனால் இப்போது சுகா சொல்கிறார், ‘உங்களுக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு? ரெண்டு நாளா மழ ஊத்து ஊத்துனு ஊத்துனதுல தைப்பூச மண்டபம் முங்கி தண்ணி போகுது. மனடபத்து உச்சியில ஆட்டுக்குட்டி நிக்கித படத்தை பேப்பர்ல போட்டிருக்கான் பார்க்கலையா?’ என்று கிழிக்கிறார்”

‘தாயார் சன்னதி’ப் பதிவுகளைத்தான் அப்படிச்சொல்கிறார். ஆம், அவர் வார்த்தைகளிலேயே.. ‘மண்டபம் முங்கித்தான் போகிறது. குறுக்குத்துறையிலும், சிந்துபூந்துறையிலும் செங்காமட்டைக்கலரில் புதுவெள்ளம் சுழித்துத்தான் போகிறது’. நமக்கும் அதே உணர்வுதான். வெள்ளத்தை வேடிக்கைப் பார்த்துவிட்டு முதல் படியில், நனைக்க காலை வைக்கவும் ஒற்றைச்செருப்பு ஆற்றோடு அடித்துக்கொண்டு போய்விடுகிறது. புத்தகத்தை முடிக்கும் போது மீதமுள்ள செருப்பையும் எங்கோ வீசிவிட்டு வெறுங்காலில் நடந்தே வீடுவந்த உணர்வு. நெல்லை என்றில்லை, நம் எல்லோருக்குள்ளுமே ஓடிக்கொண்டிருக்கும் மண்சார்ந்த நினைவுகள் எனும் நதி என்றுமே வற்றிப்போவதில்லை. அந்த நினைவுகளில் ஒரு அணையைத் திறந்துவிட்டு ஒரு புதுவெள்ளத்தைப் பாய்ச்சியிருக்கிறார் சுகா.

மெலிதான சுய எள்ளலும், கீற்றுப்புன்னகையை ஏற்படுத்தும் நகைச்சுவையுமாய்.. சுவாரசியமானது சுகாவின் எழுத்து.

இருபது முப்பது வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் ’திருநவேலி’ மக்களோடு கலந்துபோய்விட்ட, சமயங்களில் இப்போதும் கூட கலைந்துபோகாமலிருக்கும் சின்னச்சின்ன விஷயங்களை அதன் இயல்பு குலையாமல் எடுத்து வைக்கிறார் சுகா. திருநவேலி, துப்பு, பொங்கப்படி, நட்சத்திரம் பார்த்தல், சில்வர் டோன்ஸ், கலர் போன்ற பதிவுகள் அப்படியானவை. காலம் அடித்துச்சென்றுவிட்டவை என்ற சிறு பெருமூச்சோடு கடந்துபோய்விடக்கூடிய பதிவாகவே பலவும் இருந்தாலும் அவற்றில் இருக்கும் அழுத்தம் அசாதாரணமானது. ’பாலாபிஷேக’த்தில் வரும் கல்யாணி ஆச்சி அவள் வாழ்நாள் முழுதும் செய்துகொண்டிருந்த காரியம் பின்னெப்போதும், யாராலுமே செய்யமுடியாத காரியம் என்பது நமக்கு உறைக்கையில் துணுக்குறாமல் இருக்கமுடியாது. எத்தனையோ தலைமுறையாய் நடந்துகொண்டிருந்த வழக்கத்தின் கடைசி சாட்சி அவள். குருக்களையா தாத்தா பூஜை செய்துவரும் ’உச்சிமாளி’ கோவிலின் பலிபீடத்தில் வைக்கப்படும் நைவேத்தியத்தை உண்ணக்காத்திருக்கும் ‘ஜம்பு’ எனும் நாயின் பின்னணி சுவாரசியமானது. ‘இருப்பு’ பதிவில் சுப்பிரமணி தாத்தா சிதையில் எரிந்துகொண்டிருக்கையில் அவர் வயதையொத்த பெருமாள் பிள்ளையும், வெங்கடாசல ரெட்டியாரும் பேசிக்கொள்வது அவர்களை நம் மண்ணின் மனிதர்கள் என்று பெருமையோடு உரிமைகொண்டாட வைக்கிறது. ‘பந்தி’ நினைவுகள் சுகமானவை. அதிலும் பணம் வசூலித்து மஹாதேவ அஷ்டமியன்று பஜனை மடத்தில் பிராமணர்கள் நடத்தும் பந்தியும் அதற்கான காரணமும் ரசமானவை. சந்திராவின் சிரிப்பு, காதல் மன்னன் போன்ற பதிவுகள் எக்காலத்துக்கும் பொருத்தமானவை. இன்னும் எத்தனை எத்தனையோ மனிதர்கள், நிகழ்வுகள். நெல்லை மண்ணை தம் பங்குக்கு அதன் மணம் மாறாமல் சிறப்பாக பதித்திருக்கிறார் சுகா.

ஒவ்வொரு பதிவுமே ஒரு அழகிய முத்தாய்ப்புடன் முடிகிறது. ஆனால், அதுவே ஒரு குறையாகவும் இருக்கலாம். அப்படியான நோக்கத்தோடே செய்யப்பட்டவை என எண்ணத்தக்க வகையில் பல கட்டுரைகளில் அந்த மெனக்கெடல் தெரிகிறது. கயத்தாறு, ஆய்புவன் போன்றவற்றைக் குறிப்பிடத் தோன்றுகிறது. ’இடுக்கண் களைவதா’மில் இருக்கும் அவ்வளவு இயல்பான, பொருத்தமான முத்தாய்ப்பு, ’கயத்தாறி’ல் இல்லை. மேலும் கட்டுரைகளெங்கும் வந்துபோகும் நாஞ்சில்நாடன், ஜெயமோகன், பாலுமகேந்திரா, பாரதிமணி, கமல்ஹாஸன், சீமான், செழியன் போன்ற விஐபிகள் வரிசை சுகாவைப் பொருத்தவரை நிஜமாக இருக்கலாம். ஆயினும் ஒரு வாசகனுக்கு ‘எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்’ என்பது போல நானும் சினிமாவில் இருக்கிறேன் என்று சொல்ல ஆசைப்படுகிறாரோ என்று எண்ணவைக்கலாம். இப்படிச் சின்ன மாற்றுக்கருத்துகள் இருப்பினும், எடுத்தால் லேஸில் கீழே வைத்துவிட முடியாதபடியான சுகாவின் எழுத்து நடை, நம்மை இடையில் எங்கும் தடைபட்டுப்போகாமல், புத்தகத்தை முடிக்கும் வரை கட்டிப்போட்டுவிடுகிறது என்பதே நிதர்சனம். புத்தகத்தின் இடையிடையே விரவிக்கிடக்கும் நெல்லையின் பழைய புகைப்படங்களும், கோட்டோவியங்களும் கட்டுரைகளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

சுகா எழுத்தாளர் மட்டுமல்லாது சினிமாக்காரரும் கூட. பாலுமகேந்திராவின் சீடர் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ‘படித்துறை’ என்றொரு சினிமாவை இயக்கியுள்ளதாக அறியவருகிறோம். வேறு புத்தகங்கள் ஏதும் எழுதியிருக்கிறாரா தெரியவில்லை. இணையத்தில் http://venuvanamsuka.blogspot.in/ என்ற தளத்திலும் இயங்கிவருகிறார்.

புத்தகம் : தாயார் சன்னதி
எழுதியவர் : சுகா
வெளியீடு : சொல்வனம் http://solvanam.com/
பக்கங்கள் : 280
விலை : ரூ.180