தத்துவார்த்த நூல்கள் கடினமானவை.கண்டறிதலை விண்டுதருகிற செயலே தத்துவம்.ஆத்திகமும் நாத்திகமும் இரு துருவங்கள்.அவரவர் நம்பிக்கைகளுக்கு தக்கவாறு அவரவர் தத்துவங்களை நாடுகின்றோம்.தர்க்கங்களும் வாதங்களும் குறைந்தும் கூடியும் சிக்கலான பின்னல்களுக்குள்ளான வாழ்வை வாழுமாறு நிர்பந்தப்படுத்தப்படுகிறோம்.ஒரு கேள்வியைப் பற்றிக்கொண்டு மெய்யான விடையை அறிவதற்கான உள்ளகப் பயணத்தை பெரும்பாலானவர்கள் எள்ளுகிறோம்.அவ்வாறு பயணிக்கிறவர்களை மேலோட்டமாக பகடி செய்கிற அதே நேரம் ஆழ்மனதில் பயத்தோடு அணுகுகின்ற இரட்டை மனோ நிலையானது தொடர்ந்து வருகிறது.அதீதமான பயம் தரும் இருள்மூட்டைகளில் தலையானது "மரணித்தல்" மற்றும் மரணம் தொடர்பான சிந்தனைகளும் கண்டறிதலும்.

தன் பயத்தை வெறியாக மாற்றிக்கொள்கிற மிருகத்தின் பேர் மனிதன்.அவன் மரணத்தை அணுக விரும்புவதே இல்லை.மரணம் பற்றிய புரிதல் அது குறித்த விசாரணை அது தொடர்பான தேடல் ஆகியவற்றை அவன் கசப்போடு தூர எறிகிறான்.அவனைப் பொறுத்தவரை மரணம் என்பது மெல்லிய கண்ணாடிச்சுவருக்குப் பின்னாலிருந்து கொண்டு விழுங்கத் துடிக்கும் பசிகொண்ட மிருகம்.தப்பிக்கிறதற்கான முயல்வுகளே வாழ்க்கை.அதன் தோல்விமுனை மரணம்.

அ-புனைவு நூல்கள் கையாளவேண்டிய கடினவிஷயங்களில் ஒன்றான மரணம்,அது குறித்த அகப்பயணம் ஆகியவற்றை ஒரு புனைவின் துணை கொண்டு அணுகுகிறார் இறையன்பு.ஒரே நேரத்தில் இரட்டை இடரேற்பு..புனைவுக்குண்டான பசி தீர்க்கப்படல் வேண்டும் மேலும் தத்துவார்த்த நிஜங்கள் நீர்த்துப்போய்விடக் கூடாது.இரண்டு குதிரைகளின் பயணமாய்த் தன் அவ்வுலகத்தை வென்றெடுத்திருக்கிறார் நூலாசிரியர்.ஒரு புனைவு கண்ணீரை வரவழைக்கலாம்.அல்லது வாய்விட்டுச்சிரிக்க வைக்கலாம்.ஆனால் ஒரு நீண்ட பயணத்தின் முடிவில் ஒரு பாடத்தின் கடைசி வகுப்பில் ஒரு இசைக்கருவியினை இயக்கத்தேர்ந்த கணமொன்றில் உணரும் தனித்த உணர்வு ஒன்றை ஒரு புதினத்தின் ஈற்றுவரிகளில் வாசிக்கிறவன் அடைவது என்பது எல்லாராலும் எப்போதும் நிகழ்த்தப்படுவதில்லை.கண்டறிதலை சொல்லுகிறது எளிது.கண்டறிதலைப் பகிர்வது சிரமம்.அதைவிடக் கடினசிரமம் தன் கண்டறிதலை பிறர் அறியச்செய்வது.அதை வெகு நேர்த்தியாக செய்துவிட முடிகிறது இறையன்புவால்.

இந்திரா பார்த்தசாரதி,உள்ளிட்ட வெகு சிலரே தீவிர இலக்கிய முயல்வுகளில் அங்கதத்தை முயன்று இருக்கிறார்கள்.ஆனால் அங்கதம் ஒரு நாவலில் நுழைகையில் அது மறைமுக வலியை பெயர்க்கும் எனினும் வெளிப்படையாக இலகுவான நகைச்சுவையாக மலரும்.அங்கதத்தின் நோக்கமே இனிப்பின் போர்வையிலான கசப்புத்தானே.ஆனால் பெரும்பாலான முயல்வுகளில் மைய நோக்கத்தின் தீவிரத்தன்மையை அதன் கட்டுறுதியை அங்கதம் குலைத்துவிடும் அபாயமும் இருக்கிறது.கத்தி மேல் நடக்கிறதன்று.இது கத்தி மீது சிரசாசனம் செய்தற்போல்.அவ்வுலகத்தின் மைய இழை வெகு தீவிரமான விஷயமொன்றைக் கையாண்டு கொண்டே முன்னகர்ந்தாலும் அதன் கிளைத் துணைக் கதைகள்(sub stories) மெலிதான பகடியினைக் கொண்டே நகர்கின்றன.

அவ்வுலகம் நாவல் திரிவிக்ரமன் என்ற ஒற்றை மரத்தின் முளைபருவம் முதற்கொண்டு வீழ்ந்துதிர்கிறது வரையிலான வாழ்தலை அவரது மரணத்தின் கண்கொண்டு நோக்குகிறது.காலம் நேரம் ஆகியவற்றைக் கடந்து அல்லது அவற்றைக் கணக்கில் கொள்ளாமல்,ஒரு நியதியற்ற நியதியை வகுத்துக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.திரிவிக்கிரமன் என்ற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டும் தான் தொடர்பொதுமை.மற்றபடி நிகழ்தல்கள் காலவரிசைக்கிரமாக கையாளப்படாமல் அவை உணர்கிற வரிசையில் அடுக்கப்பட்டிருக்கின்றன.இந்த கலைத்தல் மிகவும் ஸ்வாரஸ்யமானதாக ஆக்கிவிடுகிறது.மூன்று வயது திரிவிக்ரமனின் எண்ணங்களில் இருந்து ஆரம்பிக்கிற நாவல் அடுத்து அவர் வேலைக்கு சேர்கிற காலத்துக்குள் புகுந்து அதற்கடுத்து அவர் பணி ஓய்வுக் காலத்துக்குள் நுழைந்து அதற்கடுத்து அவர் மரணமடையும் காலத்துக்குள் செல்கிறது.அதற்கடுத்து மீண்டும் அவரது கல்லூரிக்கால சம்பவங்களுக்குள் பயணித்துக் கொள்கிறது.

இதுவரை மரணம் என்ற சொல்லை இத்தனை அருகாமையில் சந்தித்திருக்க மாட்டோம்.இறையன்பு தன் அவ்வுலகத்திற்குள் கண்மூடிப் பயத்தின் உச்சியில் பிதற்றல் மனோ நிலையில் இருக்கிற யாரையும் கைபிடித்து அழைத்துச்செல்கிறார்.மரணத்தை சரியான சொற்கள் கொண்டு சரியான பொருள் சொல்லி அறிமுகம் செய்கிறார்.மரணம் நிகழ்ந்தே தீரும் என்ற உண்மையை இதைவிட அழகாக இதைவிட எளிமையாக இதைவிட உறுதியாக சொல்லமுடியாது என்ற அளவில் சொல்லப்படாத அரிய விஷயத்தை தன் புனைவு கொண்டு புரிவிக்கிறார்.

இதன் மைய இழையானது மனிதனின் வாழ்வென்பது பிறப்பில் துவங்கி இறப்பில் அடங்குகிறது.அதன் பின் மனிதனின் உயிர் என்னவாக ஆகும் என்பதனைக் கொண்டு இதுவரைக்கும் எத்தனையோ கதைகள் தோன்றியிருந்தாலும் கண்டவர் விண்டிலர் என்ற நிலையில் மரணம் அதன் பின்னதான எந்தவொரு எழுத்துமே அடிப்படையில் மனிதன் கொண்டிருக்கிற மரணபயத்தை அப்படியே தக்கவைக்கிற விதமாய்ச்சில கணங்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தினவே ஒழிய நிரந்தரமான நகர்வுக்கு இதுவரைக்கும் எவரும் எதுவும் முயலவே இல்லை.

சொர்க்கம் நரகம் எண்ணைக் கொப்பறை என்றெல்லாம் சின்னஞ்சிறு வயது தொடங்கிப் பலரும் பல கதைகளிலும் சொல்லிவந்த விஷயத்தின் ஷெல் எனப்படுகிற மூலச்சட்டத்தை அப்படியே எடுத்துக்கொள்ளும் இறையன்பு அதைக் கொண்டே தான் சொல்ல வந்ததை சுவைபடச்சொல்லவும் செய்திருக்கிறார்.

த்ரிவிக்ரமன் முதன் முறையாக அவர் வாழ்வில் பக்கத்த்து வீட்டுத் தாத்தா மரணித்த பொழுது முதல் மரணத்தை சந்திக்கையில் அவ்வுலகம் துவங்குகிறது.அதன் பின் அவர் வாழ்க்கையினை ஊடாய்ப் பிளந்த சில மரணங்களுக்கு முன்னும் பின்னுமான நிகழ்தல்கள் அவ்வுலகத்தில் இடம்பெறுகின்றன.

இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால்...நான் நல்லவனாய் ஆகியிருப்பேனே...என்றது தொடங்கி மனித வாழ்வின் கடைசிக்கணத்து நிராசைகளும் தீராக்கனவுகளும் ஏக்கங்களும் வீண்பிடிவாதங்களும் வக்ரமும் வெறியும் இன்னபிறவும் மரணம் என்ற ஒற்றைப்புள்ளியில் அற்றுவிழுந்துவிடுகின்றன என்ற உண்மையை பொட்டிலறைந்து சொல்கிறது இந்நாவல்.

சின்ன சின்ன சம்பவங்கள் மனிதர்கள் என கலாச்சாரம், மதம், ஒழுக்கம், குடும்பம், காதல், நட்பு, அதிகாரம், பொறாமை, பக்தி, சுயநலம் என பெரியகனமான விஷயங்களைப் போகிற போக்கில் அவிழ்த்து செல்கிறது அவ்வுலகம்.மதிப்பீடுகள் சார்ந்து எவ்வெவற்றை எப்படியெல்லாம் பார்த்துவருகிறோம் என்பதை எல்லாம் தகர்த்தெறிகிறார் ஆசிரியர்.

அடுத்தவர் மீது தன் அதிகாரத்தை செலுத்திக்கொண்டே இருந்த அதிகாரி,உண்ட வீட்டுக்கே கெடுதல் நினைக்கும் சிப்பந்தி, எப்போதுமே முதல் மாணவனாக வரும் ஒற்றை சிந்தனையில் இருக்கிற மாணவன், காலமும் நேரமும் எந்த ஒரு கதைவடிவத்தையும் அடுக்குகிற பொது மூலகங்களாகவே கருதப்படுகின்றன. அதனை உடைத்து முன்னும் பின்னுமாய் சம்பவங்களைக் கலைத்திருப்பது இந்த நாவலுக்கு பெரிய பலம். அடுத்தடுத்து மனித மனங்களின் விசித்திரங்கள் ஒவ்வொன்றாக அறிமுகமாகி அவிழ்த்தெறியப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. எது குற்றம் எது பாவம் எது தண்டனை போன்ற விடையிலாக் கேள்விகள் தொட்டு பலவும் தத்துவார்த்தச்சாவி கொண்டு திறக்கப்படுகின்றன.புதினத்தின் கற்பனைவெளியைப் பயன்படுத்தி அந்த சுதந்திரத்தை கையொற்றி தத்துவங்களையும் ஆன்ம விசாரணையையும் கலந்து முயற்சித்திருக்கிற இறையன்பு கரணம் தப்பியிருந்தாலும் இரண்டிலும் தோல்வியுற்று எள்ளி நகையாடப்பட்டிருப்பார். இந்த அபாயகரமான விளையாட்டை தன் மெய்மொழி,உறுதி மற்றும் விட்டுக்கொடுக்காத நேர்மை ஆகியவற்றின் உதவியோடு அனாயாசமாக வென்றிருக்கிறார் என்றால் அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

நாவலின் கனமே அதன் கடைசி 30 பக்கங்களில் அவிழும் திரிவிக்ரமனும் அவர் மனைவியும் அவ்வுலகத்தில் சந்திக்கிற பகுதி தான்.கண்களில் கண்ணீரை வரவழைக்கிற முடிவு. தொண்டைக்குழிக்குள் கனமானதொரு உணர்வாய் சேகரமாகிற துக்கம். நாவலென்பதையும் மீறி இதை வாசிக்கிற யாரையும் இந்த உலகத்தில் வாழக்கிடைத்திருக்கிற ஒற்றை வாய்ப்பை எங்கனம் காதலிக்க வேண்டும் என்பதை போதித்து எவ்வெவற்றையெல்லாம் செய்யாதிருந்தால் இந்த வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் இருக்கும் என்பதனைக் கற்பித்து விடுகிறது. இழந்தால் வராத ஒற்றை வாய்ப்பாக வாழக்கிடைத்த வாழ்க்கையை எந்தவிதமான நிராசையோ அல்லது வெறுப்போ இன்றி அன்புமயமாக்கி வாழச்சொல்வதே அவ்வுலகம்.

இறையன்புவின் அவ்வுலகம் நாவல்,  தவறவிடக்கூடாத அமுதம். நில்லாமழை. 

உயிர்மை பதிப்பக வெளியீடு
விலை ரூ.140