திரு. சிவனு மனோகரனின் சிறுகதைகளை அவ்வப்போது பத்திரிகையிலும் சஞ்சிகைகளிலும் வாசித்திருக்கின்றேன். நிகழ்வுகளை அவர் பார்க்கின்ற கோணமும் மொழியும் சற்றே மாறுபட்டதாய் இருந்தது. இத்தொகுப்பில் உள்ள கதைகளை முழுமையாக கொண்டு நோக்குகின்ற போது சில அம்சங்கள் தெளிவாக தெரிகின்றன. 

மலையக இலக்கிய தொகுதி இரு வகைப்பட்டோரால் எழுதப்பட்டு வந்துள்ளது. அவை வருமாறு:

1. மலையகத்தை வாழ்விடமாகக் கொண்டவர்கள். அந்த பண்பாட்டுக்குள்ளிருந்து தோற்றிய இலக்கியம் கர்த்தாக்கள். - மலையக மண்ணின் மைந்தர்கள்.

2. மலையகத்தோடு தொடர்புகொண்ட அதே சமயம் மலையகத்தை பிறப்பிடமாகக் கொள்ளாத இலக்கிய கர்த்தாக்கள்.

இவ்விரு வகைப்பட்ட எழுத்தாளர்களினாலும் மலையக இலக்கியம் செழுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதில் இரு நிலைப்பட்ட  கருத்துக்களுக்கு இடமில்லை. இவ்விரு பகுதி எழுத்தாளர்களுக்கிடேயேயும் சிற்சில வேறுபாடுகள் கண்டு கொள்ளத் தக்கவராய் உள்ளது என்பது பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. மலையக வரலாற்றினையும் அதன் அபிவிருத்தி குன்றிய நிலையினையும் நோக்கும் போது இந்நிலை ஒருவகையில் தவிர்க்க முடியாதது எனக் கூறலாம்.

 மலையக பெருந்தோட்டப் பண்பாட்டுக்குள் நின்று அம்மக்கள் பற்றிய இலக்கியம் படைத்தவர்கள் மலையக வாழ்வியலை உள்நின்று சிந்திக்க முனைவதைக் காணலாம். (இவ்வகைப்பாட்டினுள் மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட அனைத்து எழுத்தாளர்களையும் கொள்ள முடியாது.) யதார்த்த நோக்கு, சமூக அசைவியக்கம், வர்க்க முரண்பாடு என்பவற்றை சித்திரிப்பதில் இவர்களிடையே நுண்ணிய தத்துவார்த்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. மலையக மக்களின் பிரச்சினைகளை உள்நின்று மலையக வாழ்க்கை முறையின் நடப்பியலைப் புரிந்து உண்மையின் பக்கம் நின்று சிறுகதை எழுத முனைந்ததில் சிவனு மனோகரனின் கோடங்கி எனும் தொகுப்பு முக்கிய இடமுண்டு.

 உலகில் இன்று இடம்பெற்றுவரும் அட்டூழியங்கள், மனித அழிப்புக்கள், வதைகள், மரணஓலங்கள்-பிள்ளைகளின் கதறல்கள் இவை ஒருப்புறமிக்க இவற்றையெல்லாம் மூடி மறைத்து சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக அவற்றை சமன் செய்து விடலாம் என நம்பவைத்து கூத்துக்களை முன்நின்று நடாத்தும் கோமாளிகள், இவையெல்லாம் மலையச் சமூகத்திற்கு அந்நியமானதொன்றல்ல.

 இன்று உலகலாவிய ரீதியிலும் இலங்கையிலும் மீள எழுச்சி பெற்று வரும் தேசிய முற்போக்கு ஜனநாய இடதுசாரி சக்திகளைச் சிதைப்பதற்கான முயற்சிகளில்; பண்டு நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களாக மலையக மண்ணிலே அதிகமாக ஊடுருவியுள்ளன. தமது ஆன்மாவையும் தன்மானத்தையும் பன்னாட்டு கம்பனிகளிடம் அடகு வைத்து விட்ட சிலர் தமது பிழைப்பிற்காக கேவலமான எந்த செயலையும் செய்யத் தயாராக உள்ளனர். மக்கள் போராட்டத்தில் ஜக்கியப்பட வேண்டிய சக்திகளையெல்லாம் பகையாக்கி மக்கள் போராட்டத்தை தனிமைப்படுத்துவதும் இந்நிறுவனங்களின் தந்திரோபாயங்களில் ஒன்றாகும்;. சிதைந்து சின்னாபின்னமான சிவப்பு சடi;டக்காரர்கள் சிலரும் இந்நிறுவனங்களில் அடைக்களம் தேடியபடி, மலையகத்தில் வளர்ச்சி பெற்று வருகின்ற நேச சக்திகளை மனநோயாளர்கள் என வசைப்பாடி வருவது தற்செயல் நிகழ்ச்சியல்ல. அவர்களே இன்று இந்நிறுவனங்களுக்கு சிவப்பு சாயத்தை பூசி வருகின்றனர்.

 இந்த பின்னணியில் இன்றைய உலகமயமாதலின் முகத்தை அண்மைக்காலங்களில் பல்வேறு திசைகளில் வரையறை செய்யும் முயற்சி நாளாந்தம் நடந்தேறுகின்றன. இந்த கூழலில் முதலாளித்துவத்தின் உண்மை முகம் எப்படியிருக்கின்றது என்பது பொறுத்த பார்வையை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ளாதவரையில் நமது செயற்பாடுகள் அனைத்தும் திசையற்றதாகவே அமையும். இவ்வாறானதோர் சூழலில் நமது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

 இச்சிறுகதையாசிரியர் தமது சிறுகதையினூடாக சமுதாய பிரச்சினைகளையும் ஓரளவிற்கு நோக்கியுள்ளார். அவற்றினை கோட்பாடாக விபரிக்காமல் பாத்திர படைப்புக்களின் ஊடாக வெளிக்கொணர்ந்துள்ளமை இத்தொகுப்பின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.

 இச்சிறுகதைகளில் சோகவுணர்வு இழையோடியிருப்பதை காணலாம். துன்ப இயற்கைக் கோட்பாடு பெரும்பாலான கதைகளுக்கு ஓர் ஒருமைப்பாட்டை அளித்திருக்கிறது. படர் (தா)மரை, கூட்டாஞ் சோறு, நிமிர்வு, லயத்துக் குருவிகள், தவளைகள் உலகம் முதலிய கதைகளில் சோக உணர்ச்சியே அடிநாதமாய் விளங்குகின்றது.

 சோக உணரச்;சி இக்கதைகளில் முனைப்பாக இடம்பெறுவதன் காரணமாக இவற்றில் உளவியல் சார்பு சற்று மேம்பட்டு காணப்படுகின்றது. இன்னோருவிதத்தில் இவற்றில் வெளிப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் அக உலகிலும் பார்க்க வாழும் புற உலகை சித்தரிப்பனவாக அமைந்துள்ளமையினால் சோர்வுவாதத்தை கடந்து தன்னம்பிக்கையும் தருவனவாக  உள்ளது.

 சமீப காலமாக இளைஞர்களிடையே குறிப்பாக மலையகத்தில் வாழும் எழுத்தாளர்களிடையே பிரச்சினைகளை இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்து பரிகாரம் கூறும் இலக்கிய படைப்புக்கள் வெளிவர வேண்டும் எனும் கருத்து வேகம் பெற்று வருகின்றது. இதற்கு தர்க்க ரீதியிலான காரணங்கள் இல்லாமலும் இல்லை. மனிதாபிமான முறையில் பிரச்சினைகளை சித்தரிப்பது என்ற கருத்து கால வழக்கமான பின் அடுத்து என்ன? எனும் வினா எழவது இயல்பானதே. அதன் தர்க்க ரீதியான வளர்ச்சியாக மரபு மீறல்- எதிர் மரபு  குரல் எனும் சிந்தனைகன் தோன்றுவது இயல்பு.

 போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் உள்ளத்தை உணர்ந்து அவர்களின் துன்பத் துயரங்களை வெவ்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் எதிர்த்துக் குரல் எழுப்பிவந்துள்ள எதிர் மரபு ஒன்று உலகின் பல மொழிகளிலும் இருப்பதையும் போல மலையக பாரம்பரியத்திலும்; அத்தகைய மரபு ஒன்று வளர்ந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். எதிர் - மரபு என்று நான் கூறிப்பிடுவது மரபை எதிர்க்கும் ஒன்றையல்ல:  மாறாக எதிர்த்து இயங்கும் மரபு ஒன்றினையேயாகும். இந்த போக்கினை வரிந்து நிற்கின்ற இச்சிறுகதையாசியர், இரு நூற்றாண்டுக் காலமாக அடக்கியொடுக்கப்பட்டு அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த மலையகத் தொழிலாளர்கள் அவ்வப்போது செய்த கலகங்கள், எழுச்சிகள் என்பவற்றுடன் இவ்வெதிர்ப்புணர்வை இணைக்க தவறிவிட்டதை தோழமையுடன் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.

இதற்கு காரணம் என்ன?

மனித சமூகத்தின் வளர்ச்சியை தூண்டும் சக்தியாக அதிகாரத்திற்கு எதிராக போராடும் வர்க்கங்கள், வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே சமூகத்தை மாற்றியமைக்க முடியும். தமது அடிமை முறையிலிருந்து விடுப்பட்டு பொருளாதார ரீதியாகவும் ஆத்மார்த்த ரீதியாகவும் சுதந்திர பிரஜையாக வாழ முடியும். இந்த விடுதலையை அடைவதற்கு தொழிலாளர்கள்-விவசாயிகள் தங்கள் நலன்சார்ந்த கட்சியை அமைத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகர சிந்தாந்தம் இன்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. அவ்வகையில் மிகவும் முன்னேறிய சித்தாந்தத்தையும் அது பெற்றிருக்க வேண்டும்.

இத்தகையதோர் மானுட அணியில் கால் பதித்து புதியதோர் சமுதாயத்தை நோக்கி நகர்வதே மலையக இலக்கியத்தின் இன்றைய தேவையாகும். இவ்வாறானதோர் சூழலில், இன்னொரு விடியலுக்காய் மனித சமூகத்தின் சிகரத்தை எட்டிப் பிடிக்க கடின உழைப்பை மேற்கொள்ளும் இலக்கிய படைப்பாளிகளின் வரிசையில் சிவனு மனோகரனும் தன்னை இனைத்துக் கொள்வார் என நம்புகின்றேன். வாழ்த்துக்களுடன்.

வெளியீடு: டிசைன் லெப், கொழும்பு
விலை: ரூ. 250 (இலங்கை)