nallamma_400இன்றுமிந்தப் பின்னிரவில்,
அலாம் அலறி ஓய்கையிலே
திகைச்செழுந்த நல்லம்மாள்
பாயிருந்து,
சோம்பல் முறிக்கையிலே,
எங்கிருந்தோ நாயொன்று
ஊளையிட்டுக் கேட்கிறது...!
 
"எழும்பு பிள்ள...!
மணி அடிச்சுப் போட்டு...து;
நேரம் போகு...து"
 
தட்டிவிட
எழுந்த மகள்,
பின் தொடரத்
தான் நடந்து
குசினிக்குப் போகின்றாள்.
 
"சிரட்டை உடை
அடுப்பு மூட்டு;
தேங்காயுடை
பாலைப் பிழி
மணி,
இரண்டடிச்சுப் போட்டு...து.
 
சந்திக்கடை ராசதுரை
கடைதிறக்க நாலுமணி
ஆகும்; அதுக்கு முன்னம்
அப்பஞ் சுட்டுப் போடோணும்."
 
பால் பிழிஞ்சு
மாக்கரைச்சு,
அடுப்பூட்டி முடிச்ச மகள்
தூங்கிவிழ, போய்ப்படுக்கச்
சொல்லியவள் --தனியிருந்து
அப்பம்,
சுடுகின்றாள்.
 
பற்றியயெரி சிரட்டைத்தணல்
கரிபற்றத் தணல் நிறைந்த
நெருப்புச் சட்டிகள்;
வீசுகிற பெரு வெக்கை
நெஞ்சினிலும் முகத்தினிலும்
முன்னெழுந்து தாக்கித்
தன்னுடலைத் தின்கையிலும்,
குந்தியிருந்தபடி
அவள், அப்பம் சுடுகின்றாள்.
 
ஓம்...!
பின்னிரவின் இரண்டுமணிப்
போதிருந்து முற்பகலின்
எட்டுமணிப் பொழுதுவரை,
அவள் அப்பம் சுடவேண்டும்.
 
மூத்தமகன் பள்ளியில்
பத்துப் படிக்கிறாள்;
சின்னவனும் இன்னும் இரண்டு
பிள்ளைகளும் கூட,
பள்ளிக்குப் போகின்றார்.
 
கடலுக்குப் போற அவள்
புருஷன் பின்னேரம்,
கொண்டுவரும் நாலைந்து
ரூபாய்கள்...?
 
பற்றியெரி,
ஆறு வயிறுகளின்
நெருப்பணைக்கக் காணாது;
பள்ளிச் செலவுக்கும்
வழிகாண ஏலாது...
 
ஆதலினால்,
வாழ்வு திணித்த அந்த
சுமைச்சட்டி நெருப்பேந்தி...
 
பற்றியெரி சிரட்டைத்தணல்
கரிபற்றத் தணல் நிறைந்த
நெருப்புச் சட்டிகள்;
வீசுகிற பெருவெக்கை
நெஞ்சினிலும் முகத்தினிலும்;
முன்னெழுந்து தாக்கித்
தன்னுடலைத் தின்கையிலும்,
குந்தியிருந்தபடி
அவள், அப்பம் சுடுகின்றாள்.
 
நாளைக்கும் மீண்டு மந்தப் பின்னிரவில்,
அலாம் அலறி ஓய்கையிலே
திகைச்செழுந்து நல்லம்மாள்
பாயிருந்து,
சோம்பல் முறிக்கையிலே,
எங்கிருந்தோ நாயொன்று
ஊளையிடுங்
குரல் கேட்கும்...!
 
7.8.69
 
ஈழத்து கவிஞர் யேசுராசா தனது தாயார் “நல்லம்மா“ காலமாகியதை முன்னிட்டு இந்த தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். எழுபதுகளில் எழுதப்பட்ட இந்தக் கவிதை அவரின் தாயாரின் வாழ்க்கைப் போராட்டத்தை சித்திரிக்கிறது. அவரது ஞாபகமாக இந்தக் கவியை படித்து அவரை நினைவு கூறுவோம்.
 
கீதாஞ்சலியின் பகுதி ஒன்றுடன் தொடங்கும் இந்தத் சிறு தொகுப்பில் அ.யேசுராசாவின்  “நல்லம்மாவின் நெருப்புச் சட்டி“ என்ற கவிதையுடன் அறியப்படாவர்கள் நினைவாக, காத்திருப்பு, உயிர் வாழ்தல், இன்னு..., முதலிய கவிதைகளும் நிலை மயக்கம் என்ற ஜோசப் ஃப்ரொட்ஸ்கியின் மொழிபெயர்ப்புக் கவிதையும் இடம் பெறுகின்றன.
 
அத்தோடு சண்முகம் சிவலிங்கத்தின் ஓரு ஞாயிற்றுக் கிழமை, மு.புஷ்பராஜனி்ன் வாடைக்காற்றே...!, நவாலியுர் நடேசனின் அஞ்சலி  முதலிய கவிதைகளும் நாக.பத்மநாதனின் சிலுவை, முருகைக் கற்புக்கள்,  த. ஆனந்தமயிலின் முருகைக் கற்புபூக்கள் முதலிய கதைகளும் இடம் பெறுகின்றன.
 
திரைப்படம் தொடர்பான அ.யேசுராசாவின் நேர்காணலின் சில பகுதிகள், மாரடைப்பு மார்புவலி நோய்களை அறிவது எப்படி? புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியுங்கள்! நீரிழிவு நோயைப் பற்றி சகலரும் அறிய வேண்டியவை முதலிய டொக்டர் எம்.கே முருகானந்தனின் பதிவுகள், நீங்கள் புகைப்பிடிப்பவரா? நவீன் குமாரின் கட்டுரை, மாணவர்களுக்காக வேகமாக வாசித்தல், உதைபந்தாட்டத்தில் ஆட்டக்காரருக்கும் பார்வையாளருக்குமான அறிவுரைகள் என்பனவும் இடம்பெறுகின்றன.
 
பெரும்பாலும் காலமாகியவர்களை நினைவுகூறும் கல்வெட்டுக்கள் அவர்களை பற்றி புலம்பல்களுடன் அமைந்திருக்கும். இந்த தொகுப்பு நினைவேடு என்பதற்கு அப்பால் பல விடயங்களை காவிச் செல்கிறது. நல்லாம்மா என்ற தாயின் ஞாபகங்களை எடுத்துச் சொல்லி அதன் வாயிலாக தரும் படிப்பினைகளும் காலம் குறித்த எழுத்துக்களும் உயிர் வாழ்தலில் நோயால் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களையும் தொகுத்துத் தருகிறது.

- தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)