உங்கள் குறுகிய கண்ணோட்டத்திலேயேகூட இப்பிரச்சினை குறித்து சிந்தித்துப் பாருங்கள். பிரிட்டிஷார் ஆட்சிக்கு முன்னர் தீண்டாமையால் நீங்கள் அருவருக்கத்தக்க இழிநிலையில் இருந்தீர்கள். தீண்டாமையை அகற்ற பிரிட்டிஷ் அரசு ஏதேனும் செய்துள்ளதா? கிணறுகளிலிருந்து நீர் எடுக்க உங்களுக்கு உரிமையில்லை. பிரிட்டிஷ் அரசு, கிணறுகளை அணுக உங்களுக்கு உரிமை பெற்றுத் தந்துள்ளதா? பிரிட்டிஷார் வருமுன் ஆலயங்களில் நுழைய உங்களுக்கு அனுமதி இல்லை. இப்போது நீங்கள் நுழைய முடியுமா? பிரிட்டிஷார் வருமுன் காவல் துறைப் பணியில் சேர உங்களுக்கு அனுமதி இல்லை. பிரிட்டிஷார் வருகைக்கு முன் போர்ப்படைகளில் சேர்ந்து பணியாற்ற உங்களுக்கு அனுமதி இல்லை. பிரிட்டிஷ் அரசு இப்போது உங்களைச் சேர்த்துக் கொள்கிறதா? இப்போது அப்பணிகள் உங்களுக்குத் திறந்து விடப்பட்டுள்ளனவா?

பெரியோர்களே! இந்த வினாக்களில் எதற்குமே ‘ஆம்' என்று நீங்கள் பதில் கூற இயலாது. ஒரு நாட்டின் மீது இவ்வளவு நீண்ட காலம் வலிமை மிகுந்த அதிகாரம் செலுத்துவோர் சில நன்மைகளையாவது செய்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் நிலை குறித்து அடிப்படைக் கவனம் கூட செலுத்தப்படவில்லை என்பது உறுதி. ஒரு சீனத் தொழிலாளியிடம் புதிய மேலாடை தைப்பதற்காகத் துணியும், அளவுக்காக பழைய மேலாடை ஒன்றும் கொடுக்கப்பட்டபோது, அவன் பழைய மேலாடையில் இருந்ததைப் போன்றே புதிய மேலாடையிலும் கிழிசல்களும் ஒட்டுகளும் இருக்குமாறு தைத்துக் கொடுத்தான் என்று ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. அவனைப் போன்றுதான் பிரிட்டிஷ் அரசும். அவர்கள் வரும்போது எத்தகைய சமூக அமைப்பு இருந்ததோ, அதில் சிறிதும் மாற்றமின்றி, அத்தனை குறைகளுடனும் மாற்றங்களின்றி இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றனர். உங்கள் இன்னல்கள் அனைத்தும் ஆறாத புண்களாய் அப்படியே தொடர்கின்றனவேயன்றி, அவற்றிலிருந்து இளைப்பாறுதல் ஏதும் கிடைக்கவில்லை.

பிரிட்டிஷ் அரசு என்னதான் நல்லெண்ணப் போக்குடன் செயல் பட நினைத்தாலும், உங்கள் துயர்களைத் துடைப்பது என்பதில் அவர்கள் ஆற்றலற்றவர்களாகவே செயல்படுவார்கள். அரசியல் அதிகாரம் உங்கள் கைகளில் வந்தாலன்றி உங்களால் இத்துயரங்களுக்கு முடிவு காண முடியாது; உங்களைத் தவிர பிறர் எவராலும் உங்கள் துயர்களைக் களைய முடியாது. பிரிட்டிஷ் அரசு இன்றுள்ள நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கும் வரை, அரசியல் அதிகாரத்தில் உங்களுக்குப் பங்கேதும் கிடைக்காது. தன்னாட்சி அரசமைப்புச் சட்டத்தின் மூலமாகத்தான் உங்கள் கைகளில் அரசியல் அதிகாரம் கிடைப்பதற்குச் சிறிதேனும் வாய்ப்பு உண்டு. அத்தகைய அதிகாரம் கிடைக்கப் பெறாமல் உங்கள் மக்களுக்கான விடுதலையை நீங்கள் பெற்றுவிட இயலாது. உங்களில் பெரும்பாலானோருக்குத் தன்னாட்சி என்பது ஒரு வெற்றிடமான மாயத் தோற்றமாகவே தோன்றலாம். அவ்வாறு தோன்றுவதே அதன் இயல்பு.

முந்தைய நாட்களில் நமது நாட்டு மக்களே நம்மீது செலுத்திய வன்கொடுமைகள், ஒடுக்குமுறைகள், அநீதிகள் குறித்த கசப்பான நினைவுகள் உங்கள் மனதில் தோன்றி, தன்னாட்சி அளிக்கப்பட்டு விட்டால் இக்கொடுமைகளெல்லாம் மீண்டும் தலைதூக்குமே என்ற அச்சம்கூட உருவாகலாம். ஆனால் பழையனவற்றை ஒரு கணம் மறந்து விட்டு வருங்காலத் தன்னாட்சியைப் பற்றி எண்ணிப் பார்த்தால், அது நீங்களும் பங்கு பெற்று ஆட்சி செலுத்தக் கூடியதோர் அரசாங்க முறையே என்பதையும், அது மாயத்தோற்றமன்று என்பதை யும் உணர முடியும். மற்றெல்லா வகையிலும் சமநிலை அடையும்போது, இந்நாட்டின் அரசியல் இறையாண்மையாளர்களாய் திகழ நல்வாய்ப்பைக் காண்பீர்கள். பழைமையை எண்ணித் தயங்க வேண்டாம். நீங்கள் முடிவெடுப்பதில் பிறரது ஆசைகாட்டலுக்கோ அச்சுறுத்தலுக்கோ ஆளாக வேண்டியதில்லை. உங்களது உகந்த நலன்கள் எவை என்பதை எண்ணிப் பார்த்தீர்கள் என்றால், தன்னாட்சியையே நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள் என்பது உறுதி.

27. இந்தக் கண்ணோட்டத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் எனில், வருங்கால இந்திய அரசு குறித்த சைமன் ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு நீங்கள் இசைவு அளிக்க மாட்டீர்கள். ஆணையத்தின் அறிக்கை குறித்த விரிவான ஆய்வினை இப்போது மேற்கொள்ள நான் முனையவில்லை. அதை மேற்கொள்ள இப்போது நேரமுமில்லை. இந்நாட்டு அரசாங்கத்தில் எந்த அளவுக்குப் பொறுப்பு காட்டப்படும் என்பது பற்றிய ஆணையத்தின் நோக்கம் குறித்து மட்டும் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். மய்ய அரசைப் பொருத்தமட்டில் இன்றைய நிலையைப் போன்றே புதிய அமைப்பிலும் அது பொறுப்பற்றதாகவே இருக்கும். ஆனால் மாநிலங்களில் அரசுகளை சட்டமன்றங்களுக்குப் பொறுப்பாக்க முயற்சி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இது முழுமையானது அல்ல. மாநில ஆளுநர் தமது அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநில சட்டமன்றத்திற்குப் பொறுப்பில்லாத எவரையும் ஆட்சியாளராக்கலாம்; எந்தவொரு துறையின் பொறுப்பையும் தாமே எடுத்துக் கொள்ளலாம்.

பெரியோர்களே! சைமன் ஆணையத்தின் திட்டம் குறித்து ஒரேயொரு கருத்தை மட்டும் முன்வைக்க விரும்புகிறேன். இச்சிக்கலை அணுகுவதற்கு இரண்டு வழிகள் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒன்று இந்தியாவின் மய்ய, மாநில சட்டமன்றங்களுக்கு ஆட்சியாளர்கள் மீது எந்த அளவுக்கு அதிகாரம் கொடுக்கலாம் எனும் நோக்கு. இரண்டாவது, இந்தியாவின் மய்ய, மாநில

சட்டமன்றங்களில் வரம்புக்குட்படாமல் எந்த அளவுக்கு அதிகாரங்களை ஆட்சியாளர்கள் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கலாம் எனும் நோக்கு. இவ்விரண்டில் முதலாவது அணுகுமுறையை சைமன் ஆணையம் கடைப்பிடித்திருப்பதாகத் தோன்றுகிறது.

சட்டமன்றங்கள் என்பன அனைத்து தரப்பினரின் நலன்களின் சார்பாக விளங்குவதால், முதலாவது அணுகுமுறைக்கு மாறாக, இரண்டாவது அணுகுமுறையே சரியானதாயிருந்திருக்கும் என்று கருதுகிறேன். இது சரியெனில், இன்றைய நிலையில் இயலாத சில விதிவிலக்குகளைத் தவிர்த்து பிற விவகாரங்கள் அனைத்திலும் ஆட்சியாளர்களை சட்டமன்றத்திற்குப் பொறுப்பு வாய்ந்தவர்களாக ஆக்குவதே சரியான முடிவாகும். மாநில ஆட்சியாளர்களை சட்டமன்றங்களுக்கு முற்றிலும் பொறுப்பானவர்களாக ஆக்காதிருப்பதற்குச் சரியான காரணம் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. மேலும், ராணுவம், வெளிநாட்டு உறவு தவிர பிற பொருள்கள் குறித்து மய்ய அரசையும் சட்டமன்றத்திற்குப் பொறுப்பாக்குவதில், இடர்ப்பாடு ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

28. டில்லி என்பது இன்னும் எட்டாத தொலைவிலேயே இருப்பதால், ஒடுக்கப்பட்ட வகுப்பினர் மாகாணங்களில் பொறுப்பு என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என நம்மில் ஒரு சிலர் கருத்து தெரிவிக்கக் கூடும். அவர்களுக்கு நான் கூற விரும்புவது இதுதான்; மாகாண ஆட்சியாளருக்காயினும், மய்ய ஆட்சியாளருக்காயினும் பொறுப்பு என்பது குறித்து நமது கருத்தை முடிவு செய்வதில் இரண்டு கூறுகளை நமது மனதில் கொள்ள வேண்டும். முதலில், ஒடுக்கப்பட்ட வகுப்பினர் உட்பட நாட்டு மக்கள் அனைவரின் நலனும் மாகாண ஆட்சியாளரைவிட, மய்ய ஆட்சியாளர்களைத்தான் மிக நெருக்கமாகவும் மிக விரிவாகவும் சார்ந்துள்ளது என்பது.

எனவே, இந்த நாட்டு மக்களின் முன்னேற்றமும் வள வாழ்வும், மய்ய அரசு எந்திரம் எந்த அளவுக்கு செம்மையாகச் செயல்படுகிறது என்பதை சார்ந்தே அமையும். அது எந்த அளவுக்கு நன்கு செயல்படும் என்பது, அது எந்த அளவுக்கு சட்டமன்றத்துடன் இசைவாக இயங்குகிறது என்பதை ஒட்டியே அமையும். எனவே நீதிநெறியிலும், பொருளியல் நிலைமையிலும் விரைவான முன்னேற்றங்களை பெறுவதில் அக்கறை கொண்டுள்ள எவரும் மய்ய அரசின் பொறுப்பு குறித்து அக்கறை காட்டாமலிருக்க முடியாது. மற்றொரு கூரை எண்ணிப் பார்த்தாலும் நமது சிந்தனை இதே திசையில்தான் அமைய முடியும். சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாகாண அரசுகள் மய்ய அரசின் முகவர் எனும் நிலையிலிருந்துதான் எப்போதும் செயல்படப் போகின்றன. அவையிரண்டும் சீரான ஒத்தியக்கத்தில் செயல்பட வேண்டுமெனில், இரண்டுமே ஒரே ஊற்றுக் கண்ணிலிருந்துதான் தமது அதிகார மூலத்தைப் பெற வேண்டும்.

மய்ய சட்டமன்றத்திற்குப் பொறுப்பின்றி பிரிட்டிஷ் உள்துறைச் செயலரின் அமைச்சர் (ஆணைகளை) மேற்கொண்டு செயல்படும் மய்ய அரசின் ஆணைகளை, மாகாண அரசு எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? இதனால் இரு அரசுகளுக்குமிடையே கடுமையான பூசல்கள் தோன்ற வாய்ப்பு உண்டாகும். இத்தகைய பூசல்களால், அவசர காலங்களில் நாட்டு நிர்வாகமே செயலற்று நிற்கும் நிலைக்குப் போய்விடக் கூடும். எனவே, நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மய்ய ஆட்சியாளர்களுக்கு ஓரளவேனும் பொறுப்பு உருவாக்காமல், மாகாண ஆட்சியாளர்களுக்கு மட்டும் பொறுப்பு உருவாக்குதல் என்பது இயலாத செயலாகும்.

VI. தாழ்த்தப்பட்ட வகுப்புகளும் சட்ட மறுப்பு இயக்கமும்

29. பெரியோர்களே! பாதுகாப்புகளுடன் கூடிய ‘டொமினியன்' தகுதி என்ற இலக்கை ஏற்றுக் கொள்ள நாம் முடிவு செய்தாலும், அதற்காக கடந்த மார்ச்சில் காந்தி இந்நாட்டில் தொடங்கிய சட்ட மறுப்பு இயக்கத்தில் நாமும் சேர்ந்தாக வேண்டுமா? என்ற வினாவை அடுத்து பார்ப்போம். நமது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்திட வேண்டிய வினா இது. இவ்வியக்கம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று நிதான உணர்வுடையோர் அனைவருமே கண்டனம் தெரிவித்திருப்பதை அனைவரும் அறிவீர்கள். ஆனால் இந்த வாதம் என்னை ஈர்க்கவில்லை என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். நமது ஆலய நுழைவு இயக்கம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனப் பழைமைவாதிகள் கூறினால், அதற்கு நீங்கள் கூறும் பதிலென்ன?

நேரடிச் செயல்பாட்டைக் கைவிட்டு, பழைமைவாதிகளுக்கு மனு செய்தல், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்தல், சட்டத்தைத் திருத்தி யமைக்க முயலுதல் போன்ற செயல்களிலா இறங்குவீர்கள்? பழைமைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில், உங்கள் அற்ப சொற்ப வளங்களில் வரம்புக்கேற்ற போராட்டங்களோடு நின்று விடுவீர்களா? ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்ட முறைகளில் தீர்வுகாண முடியுமென்பதை நீங்கள் வலியுறுத்திக் கேட்க மாட்டீர்களா? ஆனால் அத்தகைய அரசமைப்புச் சட்டம் எதுவும் இல்லாத நிலையில், அரசமைப்புச் சட்ட முறைகளில் போராடுதல் எனும் பல்லவிக்குச் செவிசாய்க்க எவரும் முன்வர மாட்டார்கள். இத்தகைய கண்ணோட்டம், பிரிட்டிஷாரின் சிந்தனைக்குக் கூடப் புதியதன்று.

சொல்லப்போனால், அல்ஸ்டர் இயக்கம் என்பது ஒரு சட்ட மறுப்பு இயக்கம் அல்லவா? மிகச் சிறந்த பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் அதை ஆதரித்து இயக்கத்தில் கலந்து கொள்ளவில்லையா? எனவே சட்ட மறுப்பு இயக்கம் சரியா, தவறா என்பதல்ல இங்கு கேள்வி. நமது நலன்களின் பாதுகாப்புக்கு அது ஏற்றதும் உகந்ததும்தானா என்பதுதான் கேள்வி. சட்ட மறுப்பு இயக்கத்தில் நாம் பங்கேற்பதை நான் எதிர்ப்பதற்கு, அது இப்போது நமக்கு அறவே உகந்தவாறு இல்லை என்பதுதான். பிரிட்டிஷ் பேரரசின் பேராதிக்கப் போக்கின் தீமைகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தாலும், அந்த ஆட்சியில்தான் இந்திய மக்களின் மேம்பாட்டுக்குக் கொஞ்சமாவது வழியிருப்பதைக் காணலாம்.

– தொடரும்

Pin It