மஞ்சள் நிற இலை ஒன்று செம்மஞ்சள் நிறமென பூத்திருந்த மரத்தில் இருந்து விழுந்திருந்தது, மரங்கள் கைகள் கோர்த்தபடி பரிதியின் சுடு ஒளியை அணைக்கட்டிக் கொண்டது. இப்படி ஒரு காட்சியை ஆறு அங்குலம் கொண்ட கைபேசியில் ரசித்துக் கொண்டிருந்தார் ராமநாதன், எம்பதுகளில் எட்டிப் பார்க்கும் வெறுமையை நிரப்பிக் கொள்ள காடுகளும் அதில் விசாரிப்பின்றி நின்றிருக்கும் மரங்களும் தான் வந்துபோகும்.

பல நிறங்களேற்று பளபளக்கும் பட்டு ரக சேலைகளை ஒன்றின் பின் ஒன்றாக தொடுதிரையில் தேர்வு செய்து கொண்டிருந்தாள் அலமேலு மாமி. தான் நினைத்த வடிவமைப்பு கொண்ட தோடு திரையில் அலசிக் கொண்டிருந்தாள் அனு.

இப்படி அந்த அடுக்குமாடி குடி இருப்பின் தரைத்தளத்தில் அன்று இரவு மின் பழுது காரணமாக அனைவரும் கைபேசி கையுமாக திரிந்துக் கொண்டிருந்தனர்.

“ டேய் ராகுல் அந்த அசைன்மென்ட் அனுப்புடா நான் அப்பிடியே காப்பி பண்ணிக்கிறேன் ... இங்க எலக்ட்ரிசிட்டி ப்ரோப்லம்... ஜெனெரேட்டரும் ஒர்க் ஆகுல...” என்று பிரசாந்த் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

ரத்தக் கரைகளில் படிந்து கூர்தீட்டிய நகங்கள் திடிரென வெளியே வந்தவுடன் திடுக்கிட்ட சைலஜா , தன்னைச் சுற்றி ஆட்கள் இருப்பதை உறுதி செய்துகொண்டு மீண்டும் அந்த சின்னத்திரையில் , தன் செவிக்கு மட்டும் கேட்ட ஆங்கில திகில்படம் ஒன்றை கைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறிய ரொட்டி துண்டில் வெட்டப்பட்ட, தக்காளியும், வெள்ளிரியும் அலங்கரிக்க வளர்ந்து கொள்ளும் புழுவென படிந்து கொண்டது மயோனைச, அதற்கு மேல் தெறிக்கப்பட்ட மசாலா பொருட்கள் திரைத்தாண்டி விமலின் நாசியை வருடியது.

அன்றே புசித்திட ஆன்லைனில் ஆர்டர் செய்துகொண்டிருந்தான். குழந்தை தள்ளுவண்டியில் குழந்தையை வைத்துக்கொண்டு தாய்ப்பாலின் நன்மைகளை யூ டியூபில் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷீலா. வானத்தை அன்னார்ந்து பார்த்தவாறு பெருவிரலில் சுரந்துக் கொள்ளாத பாலை உரிந்துக் கொண்டே தூங்கிப் போனது குழந்தை..

அந்த பெரிய தரை தளத்தில் தனக்கென்று ஒரு ரகசிய வட்டத்தை ஏற்படுத்தி

"இன்னைக்கு நீ போட்டிருக்கிற சல்வார் அருமை.." என்று இமோஜி சின்னங்களின் மூலம் வருணித்துக் கொண்டிருந்தான் ராகுல். வார்த்தைகளற்ற ஒரு சில சமிக்கைகளை கொண்டு உளவியல் ரீதியாக ஒருவருக்குள் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்திவிட்டு போவதில், இமோஜி பெரும்பங்கு வகிக்கிறது.

கருவிழிகள் விரல்களுக்குகேற்ப நாட்டியமாடியது,

"டாய் உன் பின்னாடி பாரு அவனப் போடு... எஸ்... அப்படித்தான் .."

பப்ஜி யில் மும்மரமானான் விகாஷ்.

விலா எலும்பு தெரியும் படி, வயிறு ஒட்டி உயிர் காற்றை வெளியேவிட்டு வியாபாரமாகிக் கொண்டிருந்தவரை பார்த்து.. வளைகாப்பு செய்வதற்கு தகுதியான வயிற்றை வைத்துக் கொண்டு அதே போலச் செய்வதற்கு ஒத்திகைபார்த்துக் கொண்டிருந்தார் ராகவன்.

இஞ்சி, மிளகை, எலும்பிச்சை கொண்டு உடலில் உள்ள சளியை விரட்ட போட்டிபோட்டு கொண்டு ஒளிபரப்பும் காணொளியை தேர்வுசெய்து கொண்டிருந்தார் பொன்னுசாமி, பாட்டிகள் இல்லாமல் போனதை சில பாட்டி வைத்தியங்கள் நிறைவுசெய்கின்றன.

அந்த தரைத்தளம் இருளை கைபேசி ஒளிகொண்டு அலங்கரித்தது.

இதற்கிடையில் இரவின் சுவாசத்தையும், காற்றின் மெல்லிசையையும், செவிகளினுடே உற்று பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

அனைவரையும் பவர் பேங்க் வைத்திருந்ததால் கைபேசி அவர்கள் கைகளை கட்டிப்போட்டிருந்தது. நிலவின் பார்வைக்கு பூமியில் பல நட்சத்திரங்கள் மிண்ணிக்கொண்டிருப்பதைப் போல இருந்தது அந்த வளாகம் அன்று இரவு.

நடு நிசி தொட்டுவிட்ட வேளையில் கூட யாரும் விடைபெறுவதாய் இல்லை.

அம்புலியைக் கூட உள்ளங்கைகளுக்குள் வைத்துக் கொண்டு வடைக்கதை மறந்து போனார்கள். மெலடோனின் சுரப்பதற்கு மறந்து உறங்கச் சென்றது.

வாழ்வியல் நிறமிகள் போதைக் கொண்டு ஒளிர்ந்தது .

திடீரென எந்த தகவலும் இல்லாமல், ராமநாதன் தொடுதிரைகளில் ரத்தம் சொட்டியது … தொடர்ந்து அலமேலு மாமி... பொன்னுசாமி… கண்கள் சிவந்து குருதி கொப்பளித்தது ... பெரும் அலறல் அந்த வளாகத்தை பேரச்சத்தில் ஆழ்த்தியது.

அனைவரும் தங்களை காப்பாற்றிக் கொள்ள கிலி கொண்டு ஓடினார்கள்...

மருத்தவ உதவிக்காக அன்று தான் மனிதனின் குரல் சாபம் அகன்று அடிவயிற்றில் இருந்து ஒரு யானையைப் போல பிளிறியது.

“எதோ வைரஸ் செல்லுக்குள்ள வந்துருச்சு ...” என்று சிலர் அலறினர்.

“ஹைபீமா…” என்றனர் சிலர்

“ஐயோ ரத்த குழாய் வெடிச்சிருச்சு... அந்த செல்ல தூக்கி போடுங்கோ…”

இங்கும் அங்கும் ஓடினார்கள்... கைகளில் இருந்த கைபேசி வீசப்பட்டது. விழுந்ததில் ஒளியை துண்டித்துக் கொண்டது கைபேசி.

சிலர் தங்கள் கண்களை சுய பரிசோதனை செய்துகொண்டனர்.

ஒளியை பிடுங்கிகொண்ட இருள் ஒளிர்ந்து இருந்தது. அனைவரும் அவரவர் வீடுகளில் சென்று தாழிட்டு கொண்டனர். வெகுநேரம் சலனப்பட்ட காற்று பக்குவப்பட்டு தென்றலானது .

இப்படி கைபேசியும் கையுமாக திரிந்துக் கொண்டிருந்த கண்ணன், சென்றவருடம் இதுபோன்ற சம்பவத்தில் கண்களை பறிகொடுத்தவன்.

எவ்வளவு முயன்றும் பார்வையை திரும்ப பெறமுடியவில்லை. வாழ்க்கைக்கான அர்த்தத்தை இருட்டின் வெளிச்சத்தில் தேடிக் கொண்டிருந்தவன், இனி கைபேசியின் ஆதிக்கம் அழிய தொடங்குமென குறுநகைப்போடு தன் கைத்தடி துணைக் கொண்டு எழுந்து நடந்தான்.

தூரத்தில் குறைந்த ஒலியில்…

"தி டிரைவர் இந்த தி பஸ் சேஸ்..." பாடலை தரையில் உடைந்த நிலையிலும், கண் சிமிட்டியது ஒரு கைபேசி.

- சன்மது