இப்படி எப்போதேனும் நிகழும். நான் சரிந்து மேலேறும் மண் சாலை முகப்பில் நின்றிருந்தேன். எதிரே மேலே மேலே சிறுபிள்ளை வாயசைவு போல மேலேறி அப்படியே தானேறும் மலை. பார்த்துக் கொண்டே இருந்தேன். பருவமற்ற காலம் எனதோ. என்னென்னவோ எண்ணம்.

பனி விலகிய மையத்தில் இருந்து திடும்மென பூத்தாற் போன்ற ஒருத்தி. அவள் ஒருத்தி என்றெல்லாம் சற்று முன்பு வரை தெரியவில்லை. தூரத்தில்.. ஒரு புள்ளியாய் எதுவோ அசைந்து பின் நகர்ந்து பின் நெருங்கி பின் என் அருகே வந்து பின் என்னைக் கடந்து பின் தார் சாலையில் திரும்பி அதே நடையில்... சாலையை நகர்த்தியது போல சென்று விட்டாள்.

பாவாடை சட்டையில்... இரட்டை ஜடை... சித்து விளையாட்டு செய்தது. ஏனோ அவள் சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அசராமல்.... போன மாயத்தில் திருப்பி வந்தாள். நேரம் பார்க்க.. ஒரு மணி நேரம் ஆகி இருந்தது. நான் எப்போதேனும் நிகழ்வதை அப்படியே நிகழ்த்திக் கொண்டிருந்தேன்.

மீண்டும் மாலை ஒரு ஆறு மணி இருக்கும். அதே செம்மண் படர்ந்த உடல் மொழியில் அதே படக் படக் நடை. தூரம் நெருங்கி வருவதற்கு அவளொரு மீடியம் போல. உணர்கிறேன். உளர்கிறேன்.

"என்ன வேணும்... ரெண்டு நாளா பாக்கறேன்.. இங்கயே நின்னு என்னையே பார்க்கற மாதிரி இருக்கு..." அவளாகவே பேசுவாள் என்று நினைக்கவில்லை. நானாக பேசி விட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

"இல்ல... செங்கல் சூளை பத்தி ஒரு நாவல் எழுத போறேன். அதான் ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன். நீங்க செங்கல் சூளைலதான வேலை பண்றீங்க..."

நின்று ஆழமாக பார்த்தவள்... கருமையில்... கண்களை ஒருமுறை சுழற்றிக் கொண்டாள். ஆம் என்பது போன்ற நெற்றி ஏற்ற இறக்கம்.

"ஒரு நாளைக்கு எவ்ளோ செங்கல் செய்வீங்க" - படக்கென்று ஆரம்பித்து விட்டேன். ஒரு கணம் அமைதியாய் பார்த்தவள்... மறுகணத்தை கனமாக்கும் குரலில்.." நான் மட்டுமே 700க்கு மேல செய்வேன்" என்றாள். நாக்கை பொய்க் கடி கடித்து வெட்கம் சொட்டியது போல பாவித்தாள்.

"என்னது...700 ஆஹ்... ஏங்க இப்டி கதை விடறீங்க..." என்ற நான் எப்போது அவளோடு நடக்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. ஆனால்....நளினம் கூடியிருந்தது அவள் பாதையில். சாலையோரம் பெட்டி பெட்டியாக செங்கல் சூளையில் வேலை செய்வோருக்கான அறைகள்... செம்மண் பூத்த மண் வாசனையில்.. மலை வாசத்தையும் சேர்த்துக் கொண்டிருந்தது.

வீட்டுக்குள் அழைத்தாள். தடுமாறுவது போல சமாளித்துக் கொண்டே பின் சென்றேன். தேநீர் தந்து சிரித்தாள். "எந்த ஊரு...?" என்றேன். "எல்லாமே நம்மூரு தான்... இதுல எந்த ஊர சொல்ல.." - பேசிக்கொண்டே ராத்திரிக்கு "என்ன சமைக்க" என்றாள்.

'என்னது...!' என்பது போல முகத்தில் நினைத்தாலும்.. "ஐயோ... நான் கிளம்பனும்...!" என்பது போல பார்த்தேன். மனதுக்குள் மாற்றி யோசிக்கும் ஆண் குணம் அங்குசம் தாண்டி கொண்டிருந்தது.

"தனியா இருந்து இருந்து தாமரை இலை நீர் போல ஆகிட்டேன். இன்னைக்கு கூட இரேன்... என் செங்கல் சூளை பூக்கட்டும்" என்று சொல்லி நெற்றி விழுந்த முடியை கவிதையின் கடைசி வரியைப் போல மெல்ல ஒதுக்கினாள். நிறைய முறை ஒத்திகை பார்த்து பேசியது போன்ற தெளிவான உச்சரிப்பு.

பேசினோம். பேசினோம். பேசினோம். ஒரு யுகம் கதையை டிவிடி-யில் பதிவு செய்தது போல மூச்சு விடாமல் பேசினாள். ஒரு தொலைதூர சிப்... புதிர் நிறைந்த சூடோ கோடுகள் போல... அவள் பேசிவைகளில் நிம்மதியற்ற வாழ்வு கணிப்பொறி மொழியில் அவள் நெற்றியில் கோடிட்டது போல இருந்தது.

ஒரு கட்டத்தில் சோர்ந்து கண்கள் சொருக....என்னவோ ஏமாந்தது போல படக்கென்று பாதையற்றது போல... அவள் கண் காட்டிய இடத்தில் படுத்துக் கொண்டேன். அறை ஓரத்தில் இருந்த கட்டிலில் அவள் உடல் ஒடுங்கி படுத்திருந்தது அன்றைய நாளின் அலுப்பைக் காட்டியது.

திடும்மென ஏதோ எலக்ட்ரானிக் எலியின் சப்தம் கேட்டது போல திடுக்கிட்டு விழித்தேன். யாரோ அவள் அருகே நின்றிருந்தான். "வம்புல வந்து மாட்டிக்கிட்டோமா...?" உள்ளே உதறினாலும்.... அப்போதைக்கு பொறுமை தேவை என்று மெல்ல போர்வை நகர்த்தி... இருட்டசைக்காமல்... கூர்ந்து கவனித்தேன்.

அவன் அவள் வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தான். உள்ளே எதுவோ பதறியது. "என்ன நடக்கிறது... யார் இவன்...?" - என் மொத்தத்தையும் இன்னும் கூராக்கினேன். அவன் அவள் வயிற்றில் தொப்புள் ஓட்டைக்குள் அந்த ஒயரை சொருகி மறுமுனையை சுவற்று ஸ்விச் பாக்ஸ்க்குள் சொருகி ஸ்விச் போட்டு விட்டு நேரம் பார்க்க ஆரம்பித்தான். இருள் பழகிய வெளிச்சத்தில்... அவன் ஒரு ரோபோவைப் போல இருந்தது தெரிந்தது. எனக்கு தலை சுற்றியது.

"இது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் காலம். யார் வேணாலும் ரோபோவா இருக்கலாம். இந்த கூட்டத்துல உங்கள்ல எத்தனை பேர் ரோபோவோ... ஏன் நான் கூட ரோபோவா இருக்கலாம். இந்த உலகம் இயந்திரங்களின் கைக்கு சென்று விட்டது. சைத்தான் நம் கையில் செல்போனாய் ஆகி விட்டான்.

நம்மை அறியாமல் அறிவியல் உலகம் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது. நம்மை வேவு பார்க்கிறது. AI தொழில் நுட்பம்... நம்மை விழுங்கி கொண்டிருக்கிறது. இங்கு நடக்கும் எல்லா வியாபாரத்துக்கும் மனிதர்கள் தான் மூலதனம். நம்மை ஆட்சி செய்ய வந்து விட்டன ரோபோக்கள்.."

கடந்த வாரம்.. கவிஞர் புவியரசு ஐயா மேடையில் ரோபோக்கள் பற்றி பேசியது நினைவுக்கு வந்தது. "அப்டின்னா இந்த பொண்ணு ரோபோவா...அப்டினா... அவளுக்குள் ஆண் பற்றிய சிந்தனை தானாவே வளர ஆரம்பிச்சிருக்கு... தனிமை பத்தின தவிப்பு உணர ஆரம்பிச்சிருக்கு.

அதான்.. முன்ன பின்ன தெரியாத என்ன கூட வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டா. ஒரு காதலன்கிட்ட பேசற மாதிரி டக்குனு பேச ஆரம்பிச்சிட்டா. சார்ஜ் போகவும் தான் தூங்கிருக்கா.." கண்கள் சிமிட்ட மறந்த போது திடும்மென சமீபமாய் நான் இலக்கற்று அலைந்து திரிந்து யார் யாரையோ வேவு பார்ப்பது நினைவுக்கு வந்தது. மறதிக்கும் நினைவுக்கும் இடையே மெய்ம்மறந்து ஆங்காங்கே நின்று விடுவதும் நினைவுக்கு வந்தது.

ஒருவேளை...

வேகமாய் சட்டைக்குள் கை விட்டு என் வயிறு நெஞ்சு என்று உடல் சுற்றி தடவினேன். கை முதுகுக்கு போகையில்... ப்ளக்குக்கான ஓட்டை கால பொறியை சுமந்தபடி கையில் தட்டுப்பட்டது.

- கவிஜி