ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்னு ஆரம்பிக்கறதாலேயே இந்தக் கதை பாடாவதின்னு நெனச்சுக்கப்படாது. கீர்த்தனாரம்பத்திலேன்னு காலாட்சேபம் பண்ண ஆரம்பிக்கறதுக்கு முன்ன இருந்தே எல்லாரோட பாட்டியோட பாட்டியோட பாட்டி கூட இப்படித்தான் கதைய ஆரம்பிப்பாங்களாம். அட நம்ம ஊர்லையே நெறையா முன்னணி கதை சொல்லிகள் இப்படிச் சொல்லி கதைய ஆரம்பிச்சிருக்காருன்னு படிச்சப்போ தான் இந்த வரியோட தொடங்கினா தப்பில்லன்னு தோணுச்சு. சாமர்செட்மாகமும் ஆன்டன் செகாவும் இப்பிடி கதைய தொடங்கி இருக்காங்களான்னு உலக இலக்கிய வாசகர்கள் சொன்னா தேவல. அது கெடக்குது கழுத, நாம கதைக்குள்ள போவோம்.

​ராஜான்னு சொன்னவுடனே ஏதோ உடம்பு முழுக்க நகைய மாட்டிட்டு, பட்டு சேலைய அங்கவஸ்த்தரமா சுத்திட்டு தலையில கிரீடம், இடுப்புல இடைவாளோட "யாரங்கேன்னு" கத்திக்கிட்டு கெடக்குற உத்தமபுத்திரன் காலத்து ராஜான்னு நெனச்சீங்கன்னா தயவுசெஞ்சு உங்கள அப்டேட் பண்ணிக்கோங்க. நம்ம ராசா எப்பவும் கலர்கலரா ஷெர்வானி போடுவார். பண்டிகை காலத்துல ரக ரகமா தலப்பா கட்டுவார். ஒருவாட்டி தெற்கு தெரு வந்த சீன பயணி எவாங் சவாங்கோட எளனி குடிச்சப்போ வேட்டி கூட கட்டி இருக்கார். ஒரு லச்ச வராகனுக்கு துணி போடுறார்னு புரளி கூட கெளம்புச்சு. ஆனா எத்தினி காஸ்ட்லி துணி போட்டாலும் அவரோட மானம் காத்துல பறந்துட்டு தான் இருக்குன்னு சில அரச துரோகிகள் கத்திகிட்டு கெடக்குறது அவரோட காதுல விழாம இருக்குமா என்ன?.

​நம்ம ராசா ஒண்ணும் ராசாவுக்கு மகனா பொறந்ததால ராசாவா ஆகல. கடும் ஒழைப்பு தான் அவர ராசாவாக்குச்சுன்னு அவரே சொல்லிக்குவாரு. எங்க ஒழச்சீங்கன்னு கேட்டா மாட்டு வண்டி ஸ்டாப்பிங்ல (அய்யய்யோ மாடுன்னு சொன்னா அவரோட தொண்டரடிப்பொடிக சண்டைக்கு வருவாங்க. கோ வண்டின்னு வெச்சுக்கலாம்) கூழுக்கடைல டெலிவரி பாயா வேல செஞ்சதா சொல்லுவாரு (அந்தக் காலத்தில் டீயும் இல்லை). ஆனா இன்னிக்கு வரைக்கும் அந்த கடை எங்க இருந்துச்சுன்னு ஒரு பயலுக்கும் தெரியாது. தெரிஞ்சிருந்தா இன்னேரம் கோயில கட்டணும், கும்பாபிஷேகம் செய்யணும்னு கூட்டம் கூட்டம கெளம்பி இருப்பாய்ங்க.

அதெல்லாம் செரி, ஒரு டெலிவரி பாய் எப்பிடி டிக்டேட்டர் ஆனாருன்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம். ஆனா எங்க ராசாவோட கதையத்தான் தெற்குத் தெருவுல மணிவண்ணன்னு ஒருத்தர் படமெடுத்து பயாஸ்கோப்புல விட்டாரு (அந்தக் காலத்துல ஏதுங்க சினிமான்னு நீங்க கேட்டீங்கன்னா, இந்த கத உங்களுக்கானது இல்ல. நிறுத்தீட்டு உருப்படியான பொழப்பு ஏதாச்சும் பாக்கலாம்.) அந்தக் கதையில அவருக்கு அம்மாவாசைன்னு பேரு. பட்டத்துக்கு வர மோத்வானின்னு ஒருத்தர் ஏழு குதிர பூட்டுன ரதத்துல நாடு முச்சூடும் அலஞ்சுட்டு கெடந்தாரு. என்ன ஆச்சார்யம் பாருங்க அந்த ரதம் போன ரோடு முழுசும் குபுகுபுன்னு ரத்தம் பொங்கி வழிஞ்சுச்சாம். காய்ஞ்சு பேன ரத்தம் காவி நெறத்துல மினுக்கிக்கிட்டு கெடக்க, நம்ம ராசா அந்த வழில பகுமானமா நடந்து வந்து நோகாம நோம்பி கும்புட்டுட்டாரு. அந்த இன்னொருத்தர் இப்ப எங்கன்னு கேட்டீங்கன்னா நீங்க கதைக்குள்ள வந்துட்டீங்கன்னு அர்த்தம். ஆனா ராசா சீட்ல உக்காரறதுக்கு முன்னாடி மக்கள்ட்ட உட்டாரு பாருங்க ஒரு அறிவிப்பு... பதனஞ்சு லச்சம் வரகன இனாமா தரேன்னு அவரு விட்ட டூப்புல ஜே போட்டவனெல்லாம் இப்ப மண்டபத்து தருமி மாதிரி தனியா பொலம்பிட்டுத் திரியறான். அத விடுங்க.

​ராசான்னா அவருக்குன்னு ஒரு பட்ட பேரு இருக்கணும்லன்னு நீங்க நெனைக்கறது எனக்கு தெரியுது. நம்மாளுக்கும் ஒரு பட்டப்பேரு இருக்கு. அவர அன்பா அம்பத்தாறு இன்சுன்னு அவரோட ஜிங் சங்கிக (வெறும் சங்கிகன்னு காதுல விழுந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல) கூப்பிடுவாங்க. என்னடான்னு கேட்டா அவரோட புஜ பல பராக்கிரமம்னு சொல்லுவாங்க. ஆனா ஆளப் பாத்தா அப்பிடி ஒண்ணும் தெரியாது. 42 சைஸ் பீட்டர் இங்க்லேண்ட் சட்டையே கொஞ்சம் தொள தொளன்னு இருக்கத்தான் வாய்ப்புகள் இருக்கு. ஏண்டா யாராச்சும் அளந்து பாத்தீங்களான்னு கேட்டா ஜிங்சங்கிகளுக்கு கண்ணு செவக்கும். இல்ல மகாராணிகிட்ட கேட்கலாம்னா அந்தம்மாவும் கூட இல்ல. அதுவும் இல்லாம அது நாகரீகமும் இல்ல.

இந்த பெயர்க் காரணத்த கண்டுபிடிச்சுப் போடணும்னு நிகண்டுகளையும், ஓலைச்சுவடிகளையும் தொழாவுனப்போதான் காவியகண்ட கணபதி ஐயர்ன்னு ஒருத்தர் (நீங்க நெனைக்கிற கணபதி ஐயர் இல்ல) எழுதின குறிப்பு கெடச்சுது. வெவரம் என்னான்னா, இவரு கூழுக் கடைல சேல்ஸ்மேனா வேல பாத்தப்போ அந்த கடைல சுக்கு கூழு, ஏலக்காய் கூழு, இஞ்சிக்கூழு ரொம்ப ஃபேமஸ். ஒரு நாளைக்கு மொத்தமா 50 லோட்டா வித்தாலே உத்தமம். ஆனா நம்மாளு வேலைக்கு சேர்ந்த ராசியோ என்னவோ ஒரு அம்பத்தாரு பேரு, அய்யோத் தீல பீமர் கோயிலு கட்ட கறை சேவை செய்ய போகும்போது கூழு குடிக்க கோமாதா வண்டிய நிறுத்தி இருக்காங்க. ராசா அவங்ககிட்ட என்ன குடிக்கறீங்கன்னு கேக்க, எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி இஞ்சிக் கூழுன்னு சொல்லி இருக்கானுவ. அடடா, இன்னிக்கு விக்கிற கூழுக்கு நம்ம மொதலாளி ரெண்டு வராகன் சேர்த்து தருவாருன்ற உற்சாகத்துல நம்மாளு அங்கிருந்தே "அம்பத்தாறு இஞ்சீ" ன்னு கத்த, அதக்கேட்ட மொதலாளி நம்ம கடைல இத்தாத்தன்டி யாவாரமான்னு நெஞ்சடச்சு அங்கனக்குள்ளையே செத்து போயிட்டாரு. அன்னைல இருந்து தான் நம்ம ராசாவுக்கு அம்பத்தாறிஞ்சீன்னு பெயர் வழங்கப் பெற்று கடைசீல ஐம்பத்தாறு இஞ்சு என்று நிலைத்து விட்டது.

​பட்டத்துக்கு ராசாவோட மல்லுக் கட்டுனவங்களையும் லேசுபாசா நெனச்சுறாதீங்க. நிலக்கரி வெட்ன கணக்கெல்லாம் எலி தின்னு போடுச்சின்னு ஒரே போடா போட்டவிங்க தான். வெளிநாட்டுக்காரன்கூட நடந்த சண்டைக்குப் பின்னாடி வந்த ராசாவோட மகள், பேரன்னு தான் பட்டத்துக்கு வந்தாங்க. ஆனா வேற வழி இல்லாம வேறொரு ஆளுக்கு பட்டம் கட்ட வேண்டியதாப் போச்சு. பழைய ராசா ரொம்ப சாது. நெறையா படிச்சவர். (இந்த எடத்துல நம்ம ராசா என்ன படிச்சிருக்கார்னு எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வரும். அவருகிட்ட எல்லா டிகிரிக்கும் சர்ட்டிபிகேட் இருக்கு. ஆனா எந்த குருகுலத்துல படிச்சாருன்னு கேட்டா ஜிஞ்சங்கிக மேல உழுந்து பெராண்டிருவானுக. அதனால விட்டுடுவோம்). வாயத் தொறந்து ஒரு வார்த்த பேச மாட்டாரு. டெய்லி காலைல தன்னை தானே பூட்டிட்டு சாவிய எஜமானி அம்மாகிட்ட குடுத்துருவாரு. அந்த அம்மா கொடுக்குற "கீ"க்கு தக்கன நடமாடுவாரு. ஆனா மக்கள முடிஞ்ச அளவு சந்தோசமாத்தான் வெச்சுக்கிட்டாரு. அவங்க ஆட்சில மாடு திங்கிறவன் மாடு திங்கலாம். நோம்பு வெக்கலாம். திருப்பலி குடுக்கலாம். யாரையும் தொந்தரவு பண்ணாம தேமேன்னு ஆட்சி பண்ணிட்டு இருந்தாரு. ஒண்ணுமே பண்ணாதவங்க ஆட்சிய பொற்கால ஆட்சின்னு நம்மளை எல்லாம் நம்ப வெச்சது தான் நம்ம ராசாவோட பெருஞ்சாதனை.

​சிம்மாசனத்துல உக்காரப் போகும்போதே நம்ம ராசா தன்னுடைய முத்திரையப் பதிச்சுட்டாரு. பொதுவாவே அவருக்கு கடல மடிக்கிற பேப்பர்ல இருந்து கட்டைல போறவன் மேல போத்துற கோடி வரைக்கும் தன்னோட மொகம் தான் தெரியணும்னு ஒரு நப்பாச. அதனால பாருங்க ஒருவாட்டி அவங்க வயசான அம்மாவ தன்னை கொஞ்ச வெச்சு அத முப்பது கேமரால சூட் பண்ணி ஏழைப் பாயின் மகன்னு ஒரு கேப்ஷன் போட்டு உலகமெல்லாத்தையும் பாக்க வெச்சாரு. அதப் பாத்த ரெண்டு ஜிங்சங்கிக அழுது அழுது ஜன்னி வந்து செத்துப் போயிட்டாங்க.

பதவி ஏற்கறதுக்கு முன்னாடி தடால்னு மண்டபத்துல உழுந்தாரு. என்னடா அபசகுனம், காலு தடுக்கி விட்டுடுச்சேன்னு எல்லாப் பயலும் பதறினப்போ அபூர்வ சகோதரர்கள் ஜனகராஜ் கணக்கா எந்திரிச்சு உக்காந்து என்ன தவம் செய்தனைன்னு கண்ணுல ஜலம் வெச்சுண்டார். அடடே, இப்பிடி ஒரு மனுஷனான்னு நாடே தேம்பி தேம்பி அழுதது. அந்த மாசம் கர்ச்சீப் விற்பனை உச்சத்தை தொட்டதுன்னு நியூஸ்ல கூட சொன்னாங்க. கதவத் தொறந்து வெச்சுட்டு காத்து வாங்கினவங்களுக்கு வேணும்னா கேமரா எங்க இருக்குன்னு தெரியாம இருக்கும் ஆனா நம்ம கதையில வர ராசாவுக்கு தான் பாலுமகேந்திராவுக்ககு அப்புறம் அதிகமான கேமரா கோணம்லாம் அத்துப்படி.

​ஆட்சிக்கு வந்த உடனே, மக்களோட போறாத காலம், திருவிளையாடல் படத்த நம்ம ராசா பாத்துப் போட்டாரு. உலகத்தைத் தானே, இதோ ஒரு நொடியில் சுற்றி வருகிறேன்னு முருகன் மயில்மேல ஏறி ஜொய்ங்ன்னு கெளம்புனத பாத்து ராசாவுக்கும் கெளம்பிருச்சு. அதுக்கப்புறம் எப்ப பாத்தாலும் டூரு தான். ஒரு கட்டத்துல அவரோட கக்கத்துக்கு அடில றெக்க மொளைக்கிற அளவுக்கு பறந்துட்டே கெடந்தாரு. லாண்டரில இருந்த துணிய வாங்கறதுக்கு மட்டும் தான் நாட்டுல லேண்டாகுற அளவுக்கு பறக்கும் பாவையா சந்தோசமா திரிஞ்சிட்டு இருந்தாரு. எவன் கண்ணு பட்டுச்சோ. அவருக்கு செக் போஸ்ட்டு ஒரு குட்டி வைரஸ் ரூபத்துல வந்துச்சு. 100 நாளுக்கு மேல வீட்டுக்குள்ளையே கெடக்குறாரு ராசா. இந்த கேப்ல அவரோட புஷ்பக விமானத்தை சர்வீஸ் பண்றதா கேள்வி. சாரி அதத்தவிர வேற என்ன பண்ணினாருன்னு கேக்குறீங்களா. வர்றேன் வர்றேன்.

​பதுக்கல் வராகன ஒழிப்பேன்னு மக்கள்ட்ட சத்தியம் பண்ணிக் குடுத்தது ஒரு சுப யோக சுப தினத்தில் ராசாவுக்கு நெனப்புக்கு வந்து தொலைக்க, அவருக்குள்ள இருந்த பொருளாதார நிபுநிபுநுநி... ச்சைக்.. நிபுணர், பெப்பரப்பேன்னு முழுச்சுக்க, ஒரு நாள் ராத்திரி துஷ்ட தர்ஷன்ல ஒரு அறிவிப்ப விட்டாரு. அதாகப்பட்டது மக்களே, பதுக்கல் வராகன நான் ஒழிக்க போகிறேன், அதனால இன்னில இருந்து ஏற்கனவே புழக்கத்துல இருக்குற வராகனெல்லாம் எக்ஸ்பயரி ஆயிருச்சு. நான் புதுசா வராகன புடம் போட்டுத் தர வரைக்கும் நல்ல குடிமகன்களா இருந்து கொஞ்சம் உயிர கையில பிடிச்சுக்கோங்க. செத்து கித்து தொலஞ்சுறாதீங்கன்னு அக்கறையோட சொன்னத கேட்ட ஜிங்சங்குக எல்லாம் ஆனந்தக் கண்ணீர வடிச்சாங்க. எங்க நாட்ட காப்பாத்த வந்த மகா பிரபுவே உன்னால் தான் இந்த உலகம் உய்யும்ன்னு உய் உய்ன்னு விசிலடிச்சாங்க. ஆனா பாவம் மக்கள் தான் கையில இருந்த கொஞ்ச நஞ்ச வராகன கிடங்குல செலுத்தி செல்ல வைக்க வரிச கட்டி நின்னாங்க. இதையெல்லாம் கண்டுக்கற அளவுக்கு நம்ம ராசாவுக்கு நேரமில்ல. கொஞ்சமே கொஞ்சம் மக்கள் செத்துப்போன பிறகு ராசா உட்டாரு பாருங்க நியூ அப்டேட்டட் வராகன்கள. அப்பதான் அவரோட ராச தந்திரம் இந்த உலகத்துக்கு தெரிஞ்சுது. கருப்பா இருந்த வராகனெல்லாம், காவி, ஊதா, நீலம், பச்சை, மஞ்சள்ன்னு ஜொலி ஜொலிக்கிது. மக்களோட ஜோலிதான் முடிஞ்சு போச்சு. இதான் நீங்க பதுக்கல் வராகன ஒழிக்கிற லட்சணமாடான்னு கேள்வி கேட்ட கொஞ்சப் பேர அரசாங்க விருந்தாளியா கொண்டு போயிட்டாங்கன்னு ஊருக்குள்ள பேச்சு. கருப்பு வராகன கலர் வராகனா மாத்தி பதுக்கலுக்கு பேதி குடுத்துட்டாருன்னு இப்பவும் கண்ணும் ஜலமுமா அந்த ஜிங்சங்குக சுத்திட்டு கெடக்குறானுவ.

​ராசாவோட பெருமைய சொல்லிக்கிட்டே போகலாம். வடக்குத் தெரு முழுசையும் ராசா புடுச்சுட்டாரு. தெக்குத்தெருவுல ரெண்டு வீடு மட்டும் அவருக்கு அடங்கல. ஒரு வீட்டுல அரிவாளையும் சுத்தியையும் போட்டு அடச்சு வெச்சுருக்கானுவ. இன்னொரு வீட்டு வாசல ஒரு பெரிய வளைஞ்ச கைத்தடியால மறிச்சு வெச்சிருக்கானுவ. எப்பிடியாச்சும் தன்னோட சின்னமான எருக்கம்பூவ மலர வெச்சுடணும்னு ராசா போடாத தோப்புக்கரணம்லாம் போட்டு பாக்குறாரு. ஆனா ராசாவால முடியல.

வடக்குத் தெரு ஆளுங்கல பீமரையும் ஆவியையும் காட்டி மயக்குன மாதிரி இவங்கள மயக்க முடியல. ஆவியாவது காவியாவது.. ஓவியாகூட ஓக்கே.. நீ போவியான்னு கொமட்டுல குத்துறான். இன்னிக்கு வரைக்கும் அம்பத்தாறிஞ்ச லெப்ட் ஹேன்ட்ல டீல் பண்ணுறாய்ங்க அந்த தெக்குத் தெரு மச்சானுக. அகண்ட ஜீரகம் அமைக்கலாம் வாங்கப்பான்னு சொன்னா எங்களுக்கு ஜீரகம் சாப்டா வயித்தால போகும்னு நக்கலடிக்கறானுவ. ஆனா ஒண்ணு நம்ம ராசவ காப்பாத்தவே கஜகர்லால் சாருன்னு ஒருத்தரும் இளிச்சவாயஸ்தான்ன்னு ஒருத்தரும் இருக்காங்க. ராசாவுக்கு மலச்சிக்கல்ன்னா கூட இந்த சிக்கலுக்கு சாருவும் இளிச்சவாயச்தானும்தான் காரணம்னு பான் கீ பூத்ல ஒரு வாட்டி அழுதுருவார். அவர் அழுகறதப் பாத்து மக்களும் அழுது எல்லாத்தையும் மறந்திருவாங்க. ஆனா சிக்கல் மட்டும் அப்பிடியே இருக்கும். அதான் அந்த ராசாவோட டெக்கினிக்கி.

​ராசா பேசும்போது நல்லா ஏத்த எறக்கத்தோட தான் பேசுவாரு. ரெண்டு பக்கமும் கண்ணுக்குத் தெரியாத ஓலைச் சுவடிய வெச்சுகிட்டு மணிக்கணக்கா பேசுவாரு பாருங்க, அப்பிடி இருக்கும். ஜிங்சங்கிக எல்லாம் ஒண்ணுமே புரியாம கவித கவிதன்னு கதறுவானுக. ஆனா யாராச்சும் பேட்டின்னு கேட்டா மட்டும் இதுக்குன்னே இருக்குற அமைச்சர் ஜண்டா ஜா வ பேச விட்டுட்டு இவரு தேமேன்னு உக்காந்து இருப்பாரு. அப்ப மட்டும் அவருக்கு கூச்சம் வந்துரும். சமஞ்ச பொண்ணு மாதிரி அத்தன அமைதி. ஆமா நீங்க பேசுற மாதிரி ஏதாச்சும் நல்லது செஞ்சீங்களான்னு கேட்டா பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்னு சொல்லுவாரு பாருங்க.. அய்யய்யய்யையோ.. சும்மா புல்லரிக்கும். அவரோட சாதனைகள பேசறதுக்குன்னே மண்டையப் பொளந்து கோமாதா பிரசாதத்த உள்ள வெச்சு தெச்ச ஒரு குரூப்ப நாடு முழுசும் உலாவ விட்டிருக்காரு. அவங்கள கண்டு பிடிக்கறது ஈஸி. தாகம் எடுத்தா கோமாதாவோட வாலத் தூக்கி பாப்பானுக.

​சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுப்பான் ஆண்டின்ற கணக்கா, இது ஆவி நாடு, பச்சை மக்களெல்லாம் இன்னும் இங்க இருக்கணும்னா அடையாள அட்டை வேணும்னு போட்டாரு ஒரு சட்டம். பச்சை மக்கள் பரிதவிச்சுப் போயிட்டாங்க. ஒண்ணும் மண்ணுமா கெடந்த பச்சையும் மத்தவங்களும் இதை ஒத்துக்கல. ஆனா இந்த பாழாப் போனா ஆவிப்பசங்க இது தான் சாக்குன்னு மாட்டத் திங்கிறவன அடிக்கறதும், பச்சை மக்களைக் கொல்றதும்னு வெறியாட்டம் ஆடுறாய்ங்க. ஆனா அதப்பத்தி எல்லாம் ராசாவுக்கு என்ன கவல. அவரோட கவலை எல்லாம் கை வலிக்க மணியாட்டி கொஞ்சூண்டு சம்பாதிச்சு அபேரிக்காவுல செட்டிலான மூணு பெர்சன்டேஜ் ஏழைகளப் பத்தித்தான்.

நிலாவுக்கு அனுப்பின நிலாயான் பொதுக்கடீர்னு விழுந்தப்ப விஞ்ஞானிகள கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வெச்சத உலகமே கண்ணு வியர்க்கப் பார்த்துச்சு. ஆனா அதே நேரத்துல பூமில தோண்டுன குழில விழுந்த ஒரு கொழந்தை தான் பாவம். அப்பிடி விழற கொழந்தைகள தூக்குறதுக்கு ஒரு மெஷின கண்டுபிடிக்க இன்னுமே அவரு உத்தரவு போடல. அவருக்கு அத விட எத்தனையோ முக்கியமான சோலி கெடக்கு. லொல்லைய்யாவோட இடிஞ்சு கெடக்குற சாம்ராஜ்யத்த தூக்கி நிறுத்த வேணாம்?.

​இப்பிடி கண்ணீரும் காமெடியுமா ராசாவோட ஆட்சி போயிட்டு இருந்த நேரத்துல தான் ராசாவ ஒரண்டை இழுக்கறதுக்குன்னே வந்துச்சி ஒரானாங்குற கிருமி. ராசாவோட கக்கத்துல வளந்துக்கிட்டு இருந்த றெக்கைய தற்காலிகமா பிச்சு எறிஞ்சது அதான். ராசா இப்ப வீட்டோட ராசா. வீட்ட விட்டு வெளில வராதீங்க. ஒரானா கடிச்சி வெச்சிரும்னு சொல்லி ஒரு நாளு அறிவிச்சார். சரி ராசா ஆனா நாங்க திங்கிறதுக்கு சோறு வேணுமேன்னு மக்கள் எல்லாம் பரிதவிச்சு கேட்டபோது சொன்னாரு பாருங்க ஒரு ஐடியா. ஈரேழு லோகத்தில் ஒரு பயலுக்கும் வராத ஐடியா. வட்டல்னு இருந்தாத் தான அதுல சோறு போட்டு திங்கத் தோணும் அத தட்டி தட்டி ஒடச்சுரு. வட்டலே இல்லாட்டி சோறு திங்கிற நெனப்பு வராது நீ வீட்டுக்குள்ளையே இருப்ப, ஒரானாவ ஒழிச்சிறலாம்னு சொல்ல, ஜிங்சங்கிக எல்லாம் கள்ளு குடிச்ச வானரமாட்டமா ரோட்டுல ஊர்வலம் போச்சுது. அன்னைக்கு மட்டும் ஒரு கோடி ஒரானா குட்டி பொறந்ததா பிபிசில சொல்றாங்க.

அது மட்டுமா, ஒரானாவுக்கு வெளிச்சம் பட்டா அலர்ஜின்னு எவனோ கொளுத்திப் போட, ஒம்போது கெரகம் ஒண்ணா இருக்கும் போது நீ வெளக்குப் போடுன்னு ராசா உத்தரவு போட்டாரு. அவ்வளவு தான், நவதுவாரங்கள்லையும் எண்ணைய ரொப்பி பத்த வெச்சுட்டு இந்த ஜிங்சங்குகள் போட்ட ஆட்டம் இருக்கே, ஒரானாவுக்கே திக்கின்னு இருந்திருக்கும். அதுல பாருங்க, ஒரானாவ ஒழிக்கறதுல முன்னாடி இருக்குற காவல் படை, மருத்துவப்படை, துப்புரவுப் படைக்கெல்லாம் ஒழுங்கா ஒரு தடுப்பு துணி இல்ல. மக்களுக்கு திங்க சோறு இல்ல. அதுக்கெல்லாம் வழி சொல்லாம அந்த ராசா பதனஞ்சு நாளுக்கு ஒரு வாட்டி துஷ்ட தர்ஷன்ல காட்சி தந்து அருள்வாக்கு சொல்றாரு. இப்பக்கூட ராசா.. ஒரு லெச்சத்தி இருவ... ச்சி.. ஒரு லெச்சத்தி இருவத்தி... ச்சைக்.. ஒரு லச்சங் கோடி வராகனுக்கு ஏதோ பிஸினஸ் பிளானு வெச்சிருக்காராம். அப்புறம் தற்சார்போட இருக்கணுமாம். அப்பதான் அவரோட நாடு உலகத்துல பர்ஸ்ட்டா இருக்குமாம். தற்சார்போட இருக்குறது அப்புறம், மொதல்ல உசுரோட இருப்போமான்னு குடிமக்கள் கேட்டுட்டு இருக்காங்களாம்.

​ராசாவோட கதைய இங்கியே முடிச்சுடலாம். ஆனா இன்னும் நாலு வருஷத்துக்கு கதை இருக்கே. அப்புறம் இதை தொடர்கதைன்னு சொல்லிருவாங்க. அடேய்.. எப்பதான் இந்த கத முடியும்னு கேக்குறீங்களா? இன்னும் நாலு வருஷம் கழிச்சு உங்க இடது கை ஆட்காட்டி வெரல்ல ஒரு மை வைப்பாங்க இல்ல. அது கருப்பா இருந்தா கதை முடியும். காவியா இருந்தா கதை தொடரும். அம்புட்டு தான்.

- காலச்சித்தன்