மஹாலஷ்மியின் மடியில் தலை வைத்து படுக்கப் போனான் அன்பு.

"டேய்... வேணாம்டா..." என்றாள் மஹாலஷ்மி.

"ஏன்.. நான் உன் மடியில படுக்கக் கூடாதா? ஏன் வேணாங்கற?" என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டான்.

"டேய்.. பீரியட்ஸ் டா.. ஸ்மெல் வரும்" என்றாள். சில வினாடிகள் அமைதியாய் அவளைப் பார்த்துவிட்டு, "ஸ்மெல் வந்தா பறவால்ல.. நான் கொஞ்ச நேரம் படுத்துக்கறேன். எனக்கு உன் மடில படுத்துக்கணும் போல இருக்கு", என்று சொல்லி விட்டு மஹாவின் மடியில் படுத்துக் கொண்டான்.

"டேய்.. சொன்னா கேளுடா... நான் இன்னும் பேடு கூட மாத்தல"

"அதெல்லாம் பறவால்ல". சொல்ல சொல்ல கேட்காமல் தன் மடியில் படுத்த அன்பரசனின் முகத்தில் தன் தலையில் முக்காடிட்ட சுடிதாரின் இளம்பச்சை நிற துப்பட்டாவை எடுத்துப் போர்த்தினாள் மஹாலஷ்மி. அந்த பிங்க் நிற சுடிக்கு இளம்பச்சை ஷால் பொருத்தமாக இருப்பதாக அன்பு மஹாவிடம் சொன்னான்.

மயிலம் முருகர் கோயிலுக்கு போனவர்களுக்குத் தெரியும். இருசக்கர வாகனங்களும் கார்களும் மலையேறுகிற பாதையில் நடந்து போய், அந்த பாதையை கடந்து போனால் ஆட்களற்ற இடத்தில் மரங்களின் நிழலில் அமைதியாய் சில பாறைகளையும் அதன் மேல் முகம் தெரியாதபடி அமர்ந்திருக்கும் காதல் ஜோடிகளையும் பார்க்கலாம். அதுவும் கிருத்திகை, சஷ்டி, திங்கள் கிழமை, ஞாயிற்றுக் கிழமை அல்லாத நாட்களில் கூடுதல் அமைதி இருக்கும். அப்படி ஒரு அமைதி மிகுந்த நாளில்தான் மஹாலஷ்மியும் அன்பரசனும் அந்த மலையடிவாரத்தில் அமர்ந்திருந்தனர்.

மஹாலஷ்மியின் மடியில் படுத்துக் கிடந்து பேசிக் கொண்டிருப்பது அன்புவுக்கு அவ்வளவு பிடிக்கும். மஹாவுக்கும்தான். அவள் பேசும்போது அவன் மஹாவின் முகத்தைப் பார்க்க, இவன் பேசும்போது அவள் தலையை கீழ் நோக்கி சாய்த்து, இவன் பேசுவதை கேட்பாள். இல்லை, ரசிப்பாள். அவன் புருவங்களை உயர்த்துவதையும் ஆச்சர்யத்தோடு கண்களை விரிப்பதையும் , நடுவில் சில்மிஷம் செய்யும் போது கண் அடிப்பதையும் பார்த்து ரசித்துக் கொண்டே இருப்பாள். தான் சிவில் இன்ஜினியரிங் படிப்பதில் அவ்வளவு பெருமிதம் அன்பரசனுக்கு. கொத்தனார் மகன் சிவில் இன்ஜினியரிங் படித்தால் பெருமிதம் இருக்காதா என்ன? மயிலம் பக்கத்தில் உள்ள திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜனுக்கு சொந்தமான இன்ஜினியரிங் கல்லூரியில்தான் மஹாவும் அன்புவும் படிக்கிறார்கள்.

அன்பு முதன் முதலில் மஹாவை சந்தித்தது, மஹாவின் அருகில் நின்று கொண்டிருந்த இரண்டாம் ஆண்டு கம்பியூட்டர் சைன்ஸ் படிக்கும் அலமேலுவிடம் அவள் படித்து முடித்த முதல் வருட புத்தகங்களை இரவல் தர முடியுமா என்று கேட்கத்தான். எல்லா இன்ஜினியரிங் வகுப்புகளுக்கும் முதல் வருட புத்தகங்கள் ஒன்றுதான். தனக்கு கல்லூரியில் இடம் கிடைத்ததும் எப்படியாவது முதல் வருட புத்தகங்களை யாரிடமாவது கேட்டு பெற்றிட வேண்டும் என்று நினைத்திருந்தான் அன்பு. யாரிடம் கேட்பது என்று இரண்டாம் வருட மாணவர்களின் முகங்களை, கல்லூரியின் முதல் நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டாம் நாள் கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கி, வகுப்பறைக்கு நடந்து வந்து கொண்டிருந்த அலமேலுவிடம் சட்டென்று கேட்டு விட்டான், "அக்கா.. நீங்க செகெண்ட் இயர்தான.... போன வருஷம் நீங்க படிச்ச புக்ஸ் கொஞ்சம் தர முடியுமா" என்று. "ஏன்??. நீ வாங்கி படிக்க மாட்டியா?" என்று சடாரென்று கேட்டு விட்டாள். "இல்லக்கா... எல்லா புக்ஸும் வாங்கணும்னா மூவாயிரம் ரூபா ஆகும்.. வீட்ல அவ்ளோ வசதி இல்ல" என்று அவன் தயங்கி தயங்கி சொன்ன போதுதான் தான் அப்படி கேட்டிருக்கக் கூடாதோ என்று அலமேலு எண்ணினாள். பிறகு கொஞ்சமும் தயங்காமல் 'சரி. நாளைக்கி எடுத்துட்டு வரேன்' என்று சொல்லி விட்டாள். இதை பார்த்துக் கொண்டே கடந்து போனவள்தான் மஹாலஷ்மி. அடுத்தடுத்த நாட்கள் தினமும் அலமேலுவிடம் முதலாமாண்டு புத்தகங்களை அன்பு அலமேலுவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். "அய்யோ.. நான் மறந்துட்டேன்". "அதெல்லாம் எங்க வெச்சேன்னு தேடணும்" என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணமாக ஒரு வாரம் கடந்து போயிருந்தது. அலமேலுவின் பதில்களை மஹாவும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த திங்கட்கிழமை மஹா தன் கைகளில் புத்தம் புதிய முதலாமாண்டு புத்தகங்களோடு, அன்பரசனை நோக்கி நடந்து சென்று "இந்தா.. புது புக்ஸ்லயே படி.. ஒழுங்கா படி.. ஆல் தி பெஸ்ட்" என்று அந்த புத்தகங்களை அவனிடம் கொடுத்தாள். "ஹலோ.. இல்லைங்க.. எனக்கு வேணாம். நான் அந்தக்காட்டயே பழைய புக்ஸ் வாங்கிக்கறேன்" என்று பதறினான் அன்பரசன். "இது எங்கப்பா எனக்கு குடுத்த பாக்கெட் மணி.எனக்கு ஒரு செட் புக்ஸ் எப்பவோ வாங்கியாச்சு. என்ன ப்ரண்டா நெனச்சு இத வாங்கிக்க" என்று எவ்வளவோ சொன்ன பிறகுதான் அன்பரசன் "ரொம்ப தேங்க்ஸ்.. நான் எப்படி சொல்றதுன்னே தெரியலங்க... ரொம்ப தேங்க்ஸ்." என்று அத்தனை முறை சொல்லி விட்டு அந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டான். மொபைல் எண்கள் பரிமாற்றம் செய்து கொண்ட பிறகு, "Dear Mahalakshmi, I am overwhelmed by your kind gesture. Your help means a lot to me. Thanks a million." என்று வாட்சப்பில் நன்றி சொன்னான். மஹாலஷ்மி அவன் ஆங்கிலத்தைப் பார்த்து அசந்து போனாள். அரசு பள்ளியில் படித்தவனுக்கு நன்றாக ஆங்கிலம் தெரிந்த்திருக்கிறதே என்று ஆச்சர்யப் பட்டாள். அவள் ஆச்சர்யம் நியாயம்தான். இந்த ஆச்சர்யத்தை நிகழ்த்தியது அவர் பள்ளி முதல்வர் மாதவன் சார். நீங்கள் முகநூலில் இருந்தால், சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஓர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கிலம் சுலபமாக பேச கற்றுத் தருகிறார்கள், என்ற ஒரு ஐந்து நிமிட வீடியோ பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு மாணவன் ஆங்கிலத்தில் வாக்கியங்களை சொல்ல சொல்ல மற்ற மாணவர்கள் திரும்ப சொல்லுவார்கள். அந்த மாணவன் அன்பரசன்தான். அந்த மாதவன் சார் ஆங்கிலத்தில் வளர்த்த ஆர்வம் அன்பரசனை பன்னிரெண்டாம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் 85% எடுக்க வைத்தது. "பயங்கரமா படிப்ப போல... "என்று வாட்சப்பில் பதில் அனுப்பினாள். "அப்படி எல்லாம் இல்ல.. எங்க மாதவன் சாரால எனக்கு இங்கிலீஷ் புடிக்கும். அவ்ளோதான்" என்றான் அடக்கமாக. இப்படித்தான் மஹாவும் அன்புவும் பழக ஆரம்பித்தார்கள். ஏழெட்டு மாதங்களில் நல்ல நண்பர்களானார்கள். 

இன்னும் பத்து நாட்களில் முதல் வருட செமெஸ்டர் தேர்வுகள் இருக்கும் நிலையில் அந்த சனிக்கிழமை கிரிக்கெட் விளையாடுவதாக இருந்த அன்பரசனிடம், "சொன்னா கேளு.. இன்னும் பத்து நாள்ல எக்ஸாம் வெச்சிட்டு கிரிக்கெட் விளையாட போற... நீ காலேஜ் சேந்தப்ப எப்படி இருந்த.. இப்ப ஏன் இப்டி ஆயிட்ட.. செமெஸ்டர் எக்ஸாம் முடிச்சிட்டு அப்புறம் கிரிக்கெட் விளையாடு.. யார் வேணாம்னா? "என்று பதட்டடத்துடனும் நட்பின் உரிமையுடனும் பேசிக் கொண்டிருந்தாள் மஹாலஷ்மி. "ஒரு நாள் தான். அப்புறம் படிக்கறேன்." என்று பதட்டமில்லாமல் சொன்னான் அன்பு. "நான் யார் உனக்கு? நான் சொன்னா நீ ஏன் கேக்கணும்? போ.. நல்லா விளையாடு "என்று சொல்லிவிட்டு அந்த வெள்ளிக் கிழமை மாலை கல்லூரியில் இருந்து புறப்பட்டாள் மஹாலஷ்மி. மஹாவிற்குத் தெரியாது அன்பரசன் பரீட்சைக்குப் படிப்பவன் அல்ல, எப்போதும் படிப்பவன் என்று.

அந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் மஹாவும் அன்புவும் ஒரு குறுஞ்செய்தியோ அல்லது வாட்சப் மெசேஜோ பரிமாறிக் கொள்ளவில்லை. திங்கட் கிழமை காலை. கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கி வந்த மஹாவிடம் "நான் ஒன்னும் கிரிக்கெட் விளையாட போல.. வீட்ல படிச்சிட்டு இருந்தேன் "என்று சொல்லிவிட்டு அவளது புத்தகப் பையில் இருந்த முதல் ஜிப்பைத் திறந்து மடித்திருந்த ஒரு காகிதத்தை உள்ளே வைத்து மறுபடியும் ஜிப் போட்டான். "என்னது அது? ".......... "அன்னைக்கு நீ கேட்ட இல்ல.. நீ யாரு எனக்குனு...நீ யாருன்னு அதுல இருக்கு" என்று சொல்லிவிட்டு அவன் வகுப்புக்கு சென்று விட்டான்.

"என் வாழ்வின் வெளிச்சம் நீ
என் காதல் தேவதை நீ
என் கனவின் நிகழ்காலம் நீ
என் நிகழ்கால கனவு நீ
என் காதலின் உயிர்ப்பு நீ
என் உடலின் சிலிர்ப்பு நீ
என் உயிரின் உயிர் நீ

உன்னையும், நம் வாழ்வையும்
காதலோடு
கொண்டாடக் காத்திருக்கும்

அன்பு "

ஒரு A4 காகிதத்தில் கொட்டை கொட்டையான எழுத்தில் இப்படி இருந்தது. கீழே அவன் கையெழுத்தும் இருந்தது. கண்கள் கலங்க இதை இரண்டு முறை படித்தாள் மஹாலஷ்மி. முதல் வருட செமெஸ்டர் எக்ஸாமுக்கு முன்பு சொல்லப்பட்ட காதலின் கனத்தோடு , சொல்லப்படாத பதிலின் சுமையோடு அந்த செமெஸ்டர் தேர்வுகள் முடிந்தன. அந்த செமெஸ்டர் தேர்வுகளில் மஹாவை விட அன்பு நல்ல மதிப்பெண் எடுத்து பாஸாகியிருந்தான். பிறகுதான் மஹாவுக்கு தெரிந்தது அன்பு படிப்பில் ஸ்மார்ட் என்று.

இப்போது மஹா நான்காம் ஆண்டு கம்பியூட்டர் சயின்ஸ். அன்பு நான்காம் ஆண்டு சிவில். அன்பரசனை விட மஹா ஆறு மாதங்கள் பெரியவள். மடியில் படுத்துக் கொண்டு தான் செய்யப் போகும் ப்ராஜெக்ட் பற்றி மஹாவிடம் பேசி கொண்டிருந்தான். இதுவரை இந்த மாதிரி முயற்சியை யாருமே செய்ததில்லை என்றும் அதற்கு மஹா அவளுடைய அப்பா நிர்வாகம் செய்யும் சர்க்கரை ஆலையில் இருந்து கரும்புச் சக்கையை வாங்கித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தான். "கரும்பு சக்கையை வெச்சி சிவில் எஞ்சினீரிங்க்ல என்னடா ப்ராஜக்ட் பண்ண போற?" என்றாள் சலிப்புடன். "அதுல இருந்து கல்லு செஞ்சி செங்கலுக்கு பதிலா அத யூஸ் பண்ணி கட்டடம் கட்டலாம். இத பிரேசில் நாட்டுல பன்றாங்க. இன்டர்நெட்ல எல்லாம் படிச்சிட்டேன். நீயும் படிச்சி பாரு" என்றான். "ஒரு அம்பது கிலோ மட்டும் வாங்கி கொடுத்துடு"....... "ஏதாவது பிரச்சினை ஆகிடப் போவுதுடா... பயமா இருக்கு." என்றாள். "வேற ப்ரெண்டுக்குனு சொல்லி கேளேன்......." "ம்ம்ம்.. பாக்கறேண்டா". "என்ன பாக்கறேங்கற.. இது கூட செய்ய மாட்டியா?" என்று கேட்டுக் கொண்டிருந்தான். தியாகராஜன் எம்.எல்.ஏ நடத்தும் கால்லூரியில் சிவில் எஞ்சினீரிங் படிப்புக்கு ப்ராஜக்ட் செய்வது மிகவும் சுலபம். தியாகராஜனே தன் ஆட்களை விட்டு டெண்டர் எடுக்கச் சொன்ன அரசு கட்டிடங்களில், மேம்பாலங்களில் சிவில் மாணவர்கள் வேலை பார்த்ததாக சான்றிதழ் வழங்கப் பட்டுவிடும். தியாகராஜனுக்கு சொந்தமான ஒரு சிமெண்ட் பேக்டரி உள்ளது. சிமெண்ட் பாக்டரியில் விற்காமல் மீந்து போன சிமெண்ட் மூட்டைகள் சேர்ந்து போக, என்ன செய்வதென்று தெரியாமல்தான் தியாகராஜன் இன்ஜினியரிங் கல்லூரியே கட்டினார் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். சில மாணவர்களுக்கு சிமெண்ட் பேக்டரியில் சிமெண்ட் செய்முறை பற்றி ப்ராஜெக்ட் செய்ததாக அறிக்கை மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டு விடும். ஆனால் அந்த மாதிரி சலுகைகள் எல்லாம் தியாகராஜன் ஆட்களுக்கு மட்டும்தான். நடுக்குப்பம் அன்புவுக்கு அந்த மாதிரி போலிக் சான்றிதழ் வாங்க வாய்ப்பும் இல்லை. அதனால் அன்புவுக்கு விருப்பமும் இல்லை. ஏதேனும் சொந்த உழைப்பில் செய்ய வேண்டும் என்று முயற்சித்து நீண்ட நாட்கள் இன்டர்நெட்டில் விவரங்களைத் தேடி, இந்த ப்ராஜெக்டை தேர்ந்தெடுத்தான். 

தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதைப்போல உணர்ந்த மஹா, முக்காடு போட்ட தன் சுடிதார் ஷாலை கண்கள் வரை போட்டுக் கொண்டு, மெதுவாக தலையை வலது பக்கம் திருப்பி, அந்த இளம்பச்சை நிற துணியின் ஊடே யாரென்று பார்த்தாள். இவள் நினைத்ததை போல யாரும் இவளை உற்றுப் பார்க்கவில்லை. ஆனால் அந்தப் பக்கம் நடந்து போனது பன்னீர் மாமாவும் அவரது மனைவியும். சட்டென தலையை திருப்பிக் கொண்டாள். பன்னீர் மாமா இவளை பார்த்தாரா இல்லையா என்பது சந்தேகமாகவே இருந்தது." ஏய் எங்க பன்னீர் மாமா டா ".. என்று மெதுவாக அன்புவிடம் சொல்ல அவனும் ஓரக் கண்ணால் அந்தப் பக்கம் பார்த்தான். ' ஏய். அவங்க நம்மள பாக்கல. நேரா போராங்க' பயப்படாத என்றான். பன்னீர் மாமா பார்த்தாரோ இல்லையோ ஆனால் அதற்கு மேல் அந்த இடத்தில் அமைதியாக உட்கார முடியவில்லை. பன்னீர் மாமா, மஹா வின் அப்பா ராமச்சந்திரனுக்கு தூரத்து சொந்தம். நான்கு வருடங்கள் முன்னர் வரை அவர்கள் இருவரும் சொந்தம் என்று அவர்களுக்கே தெரியாது. ஏதோ ஒரு கல்யாணத்தில் இருவரும் சந்தித்துக் கொள்ள, இருவரும் ஒரே 'கூட்டம்' என்று தெரிய வந்தது. திண்டிவனம் அருகே உள்ள "கோவிந்தராஜன் சர்க்கரை ஆலை" முதலாளியை, அதாவது கோவிந்தராஜன் மகன் சுந்தரமூர்த்தியை, அவரது வீட்டில் பார்க்கும் போது பன்னீரும் கூடவே இருப்பார். பன்னீர்செல்வம் தியாகராஜனுக்கு கொஞ்சம் நெருக்கம்; பங்காளி முறை வேண்டும். அப்படித்தான் பன்னீர் செல்வம் பழக்கம். அந்த கல்யாணத்தில் சொந்தம் என்று தெரிந்ததிலிருந்து ராமச்சந்திரன் குடும்பத்துக்கு இன்னும் நெருக்கமானார்.

கல்லூரிக்குத்தான் அவள் மஹாலட்சுமி. வீட்டில் எல்லாருக்கும் பாப்பா தான். இராமதாசுக்கு இரண்டு தங்கைகள். இருவரும் சென்னையிலும், சிதம்பரத்திலும் வசிக்கிறார்கள். இரண்டு தங்கைகளுக்கும் பெண் பிள்ளை இல்லை. மஹாவின் அம்மா சரஸ்வதியின் அக்காளுக்கும் ஆண் பிள்ளைகள்தான். தன் வீட்டில் பிறந்த முதல் பெண்குழந்தைக்கு "மஹா லஷ்மி" எல்லாருக்கும் பாப்பா தான். அவள் பிறந்ததிலிருந்தே "பாப்பா சாப்ட்டாளா? ", "பாப்பா தூங்கிட்டாளா? "'பாப்பா ஸ்கூல் போய்ட்டாளா?', 'பாப்பா வந்தாச்சா ' என்று மஹா கல்லூரி சேர்ந்த பிறகும் மஹாலஷ்மி அவர்களுக்கு பாப்பா தான். கோவிந்தராஜன் காலத்திலிருந்தே, சுமார் இருபது வருடங்களாக, ராமச்சந்திரன் அந்த சர்க்கரை ஆலையில் வரவு செலவு, நிர்வாகம் போன்ற வேலைகளில் கோவிந்தராஜூவுக்கு உதவி வந்திருக்கிறார். கோவிந்தராஜூ இறந்த பிறகு, ஆலையின் முழு நிர்வாகத்தை ராமச்சந்திரனிடமே கொடுத்துவிட்டு, சுந்தர மூர்த்தி டைல்ஸ் கடை தொழிலில் இறங்கினார். ஆலையில் வேலை செய்கிற பலர், கரும்பு கொள்முதலுக்கு வீட்டுக்கு வந்து பேரம் பேசிவிட்டுப் போகும் உள்ளூர் கரும்பு விவசாயிகள் என அனைவருக்கும் மஹாலஷ்மி பாப்பாதான்.

கல்லூரியில் மஹா-அன்பு காதல் பற்றி கிருபாகரனைத் தவிற வேறு யாருக்கும் தெரியாது. கிருபா நடுக்குப்பம் நான்காவது தெரு. அன்பு ஆறாவது தெரு. இருவரும் ஒன்றாகத்தான் கல்லூரிக்கு வருவார்கள், போவார்கள். கிருபா வண்டியை, அன்பு இரவல் வாங்கி மஹாவை மயிலம் கூட்டி செல்வதால்தான் கிருபாவுக்கும் இந்த விஷயம் தெரியும். இருவரும் ஒன்றாகத்தான் மஹாவும் அன்புவும் மயிலம் செல்வது ஒன்றும் அடிக்கடி நிகழும் ஒன்றல்ல. அவன் காதலை சொல்லி கடந்த இரண்டரை வருடங்களில் இது வரை ஐந்து முறைதான் மயிலம் சென்றிருக்கிறார்கள். இவர்களின் காதல் வெளியே தெரிந்தால் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்று இருவரும் தெரிந்தே வைத்திருந்தார்கள். கிருபாவும் கூட அன்பரசனை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லி எச்சரித்தான். மஹாவும் அன்புவும் இதில் மட்டும் உறுதியாய் இருந்தார்கள். அன்பரசனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை தங்கள் காதல் யார் கண்ணிலும் படாமல், யார் காதிலும் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முனைப்பாக இருந்தார்கள். எல்லா பேச்சுக்களும் தொலைபேசியில்தான்; அதுவும் பெரும்பாலும் வாட்சப் தகவல் பரிமாற்றம்தான். வாட்சப்பில் இருக்கும் ஸ்மைலிகள்தான் இவர்களுக்கான காதல் சம்பாஷணைகள். காதல் கண் கொண்டு பார்த்தல், முத்தமிடுதல், சோகமான முகங்கள், கண்ணீர்த் துளியுடன் அழுகை, என ஸ்மைலிகளால் நிரம்பியதுதான் இவர்கள் காதல். தீராக் காதலுடன் வாட்சப்பில் முத்தம் கொடுத்து விட்டு, தினமும் சந்தித்துக் கொள்ளும் போது அந்நியமாய் "ஹாய்.." சொல்லும் வலி அவர்களுக்குத்தான் தெரியும்.

மஹாலஷ்மி தன் அப்பாவிடம் ஆலையில் உள்ள கரும்புச் சக்கையை தன் நண்பர்களுக்கு ப்ராஜெக்ட் செய்ய வேண்டும் என்று ஒரு நாள் கேட்டு விட்டாள். 'அத வெச்சு என்ன பாப்பா செய்ய போறாங்க'.. அதெல்லாம் உனக்கு சொன்ன புரியாதுப்பா.. என் ப்ரெண்ட்ஸ் வருவாங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ணு' என்று அப்பாவிற்கு கட்டளையிட்டாள்.

பிறகொரு நாள் கல்லூரி முடித்து மஹா வீட்டிற்குள் நுழைகையில், நாலைந்து பேரின் பேச்சு சத்தம் கேட்டது. "பாப்பாவுக்காக இது கூட செய்ய மாட்டமா? "என்று ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார். வெளியே செருப்பை கழட்டிவிட்டு வீட்டின் ஹாலில் நுழைந்தாள் 'பாப்பா'. பன்னீர் மாமா "அட.. பாப்பாவே வந்துடுச்சு.. நூறு வயசும்மா உனக்கு" என்று சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தார். "இப்பதாம்மா சொல்லிகிட்டே இருந்தேன்... அந்த கரும்பு சக்கை கேட்ட இல்ல... சொல்லி விட்டுட்டேன். அடுத்த வாரம் உன் ப்ரெண்ட்ச போய் எடுத்துக்க சொல்லு" என்றார் ராமச்சந்திரன். "சரிப்பா.. தேங்க்ஸ் ப்பா... தேங்க்ஸ் அங்கிள்" என்றாள் அனைவரையும் பார்த்து. 'அட அதெல்லாம் எதுக்கு பாப்பா.. படிப்புக்கு கேக்கற.. அதுக்கு போய்... "என்று இழுத்தார் அந்த வெள்ளை சட்டை ஜீன்ஸ் பேண்ட் போட்ட அங்கிள். அவர் தியாகராஜன் கட்சியில் முக்கியமான ஆள் என்று மட்டும் மஹாவுக்குத் தெரியும். வெளியில் நிற்கும் கருப்பு கலர் ஸ்கார்பியோ வண்டி அவரது வண்டிதான். அவருடன் அப்பாவும் அந்த வண்டியில் சில முறை போயிருக்கிறார். 

கிருபாகரன், செந்தில்குமார் என தன் நண்பர்களுடன் ஆலைக்கு போனான் அன்பரசன். ஒரு தட்டு வண்டியில் பத்து பதினோரு மூட்டை ஏற்றிக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த பன்னீர்செல்வம், கிருபாகரனைப் பார்த்து பேச்சு கொடுத்தார். ' ஆமாம்.. பாப்பா சொல்லுச்சு அன்னிக்கி.. அதுக்கென்ன தாராளமா எடுத்துட்டுப் போங்க.. புள்ளைங்க நல்லா படிச்சா சந்தோஷம்தான்............ என்ன அன்பு?... இப்ப அப்பாவுக்கு எந்த சைட்ல வேலை?' என்று கனிவாக பேசினார். இவ்வளவு சுலபமாக இந்த வேலை முடியும் என்று அன்பு எதிர் பார்க்கவே இல்லை. பன்னீர் மாமா நிறைய பேருக்கு பல உதவிகள் செய்து கொடுப்பாரென மஹா சொல்லியிருக்கிறாள். கல்யாணம், கருமாதி என்று அவர்கள் சமூகத்தில் எது நடந்தாலும் பன்னீரின் உதவியில்லாமல் அது நடக்காது என்று அன்புவிடம் மஹா ஏற்கனவே சொல்லி இருக்கிறாள் பன்னீர் செல்வத்தை பார்த்த பிறகுதான் அன்பரசனுக்கு நினைவு வந்தது. தன் நண்பனுடைய அண்ணன் விஜயபாஸ்கருக்கு விபத்து ஏற்பட்ட போது இவர்தான் அவசரமாக ஆம்புலன்ஸ் வரவைத்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றார். பாவம் விஜயபாஸ்கர்தான் அண்ணன்தான் ஆம்புலன்சில் ஏறியவுடன் இறந்துவிட்டான் என்றும் மஹாவிடம் அன்பு சொன்னான்.

அன்பு தன் ப்ராஜெக்டை தொடங்கி விட்டிருந்தான். மஹா தன் ப்ராஜெக்ட்டுக்காக வார நாட்களில் சென்னை செல்ல வேண்டியிருந்தது. இருவரும் தொலைபேசியில் தினமும் மணிக் கணக்கில் பேசிக் கொண்டார்கள். அன்பரசனின் மொபைலிற்கும் மஹாதான் எப்போதும் டாப் அப் செய்து கொடுப்பாள். "உனக்கிருக்கற திறமைக்கு உனக்கு ஈஸியா வேலை கிடைச்சுடும். எனக்குதான் கிடைக்குமான்னு தெரியல. "என்று ஒவ்வொரு முறை பேசும்போதும் மஹா அன்புவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். "ச்சே... நான் மட்டும் உங்க ஆளுங்களோட பொறந்திருந்தா நல்லார்ந்திருக்கும் இல்ல? எங்க அப்பாவும் ஏதாவது நெலம் கிலம் வெச்சிருந்தா, கெத்தா வந்து உன்ன பொண்ணு கேட்டிருப்பேன் இல்ல..? "என்று அன்பு ஒரு நாள் ஆதங்கப் பட்டுக் கொண்டான். "டேய்... அந்த சரோஜாவும் இப்டித்தாண்டா சொன்னா..ஸ்கூல்ல என் க்ளோஸ் ப்ரண்டு. என்ன வாடி போடின்னுதான் கூப்பிடுவா தெரியுமா? அவ நர்சிங் கோர்ஸ் ஜாய்ண்ட் பண்ணிட்டா.. அதுக்கப்புறம் பாக்கவே இல்ல. போன வாரம் பஸ் ஏறுனப்ப அவளை பாத்தனா..... என்கிட்ட பேசவே இல்லடா அவ.. நானா போய் பேசனத்துக்கப்புறம்.... என்ன வாங்க. போங்க னு கூப்புட்றா.. எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சி டா "என்றாள்.

பெரும்பாலும் அவர்கள் பேச்சு தங்கள் காதலை எப்படி சொல்லி எப்படி மஹாவின் பெற்றோர்களை சமாளிப்பது என்பது பற்றித்தான் இருந்தது. மஹாவின் பெற்றோர்கள் எப்படியும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள். அதனால் மூன்று வருடம் கழித்து தாங்களே பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம். ஒரு குழந்தை பொறந்தா எல்லாம் சரி ஆயிடும் என்பது அன்புவின் நிலைபாடு. "என் அப்பா அம்மா நான் ஆசை பட்டு கேட்டு எதுவும் இதுவரை எனக்கு இல்லனு சொன்னதில்லை.. நீங்க வேற சாதி. நாங்க வேற சாதிதான். ஆனா என் சந்தோஷத்தை எங்க வீட்ல கண்டிப்பா மதிப்பாங்க. நம்ம ரெண்டு பெரும் நல்லா படிச்சு நல்லா சம்பாதிச்சு, நாம நல்லா இருப்போம்னு தெரிஞ்சா அவங்க எப்படி வேணாம்னு சொல்லுவாங்க?.... நான் பேசறேன் எங்கப்பாட்ட"... என்பது மஹாவின் நிலைபாடு. யார் சொல்வதை பின்பற்றுவதென்பதில் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும்.

தான் கொண்டுபோன கரும்பு சக்கையை கொஞ்சம் எரித்து அதனுடன் கொஞ்சம் எரியாத சக்கையை சேர்த்து, கொஞ்சம் சிமெண்ட் கலந்து செங்கல் வடிவ அச்சில் அந்த கற்களை செய்து கொண்டிருந்தான். இன்டர்நெட்டில் தான் படித்ததை விட இந்த கலவையின் அளவுகளை மாற்றி மாற்றி வெவ்வேறு கலவையில் கற்கள் செய்து கொண்டிருந்தான். ஒரு வாரம் அவை காய்ந்த பிறகு, கட்டிடம் கட்ட தேவையான இயற்கை முறையில் தயாரிக்கப் பட்ட கற்கள் தயாராக இருந்தன. மஹாவுக்கு உடனே தன மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டான். கிருபாவும் செந்திலும் ப்ராஜெக்ட்டில் இருந்தாலும் இது முழுக்க முழுக்க இவனது சிந்தனையில் உழைப்பில் மட்டும்தான் உருவானது.

ஒருவழியாக, இருவரும் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்களில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு பிறகு வீட்டில் சொல்லலாம் என்று முடிவுக்கு வந்தனர். இவர்களின் கனவு வாழ்க்கையை தொலைபேசி உரையாடலிலேயே வாழ்ந்து கொண்டிருந்தனர். அன்பு தனக்கு இரண்டு குழந்தைகள் வேண்டுமென்று சொல்ல, "ரெண்டுல்லாம் வேணாம். ஒன்னு போதும்.. நீயா சுமக்க போற "என்றாள். "மஹா... நான் பி.ஏ பெயின்டிங் படிக்கணும்னு நினைச்சேன். படிக்க முடியல.. நம்ம புள்ளைக்கு என்ன புடிக்குதோ அத படிக்க விட்ரனும்.. "என்றான் ஏக்கமாக. "ஆமாண்டா.. அப்புறம்.. அவங்களுக்கு யாரை புடிச்சிருக்கோ அவங்களையே கல்யாணம் பண்ணி வெச்சிடனும்..." என்றாள் மெதுவாக. "கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நீ எப்படி கூப்புடுவ? "என்றான் ஆர்வமாக. "ஏன்.. இப்ப கூப்புட்ற மாதிரிதான் கூப்புடுவேன்.. இந்த வாங்க போங்கல்லாம் சொல்ல மாட்டேன்.. நான்தான் உன்ன விட பெரியவ. நீதான் என்ன வாங்க போங்கன்னு கூப்புடனும்" என்று சொல்லி விட்டு சத்தமாக சிரித்தாள்.

இறுதி தேர்வு வருவதற்கு முன்னரே அண்ணா பல்கலைகழகம் ஏற்பாடு செய்த நடந்த கேம்பஸ் இன்டெர்வியூவில் அன்புவுக்கு எல் அன்ட் டி நிறுவனத்தில் மாதம் முப்பதாயிரம் சம்பளத்தில் வேலை கிடைத்துவிட்டது. இவர்கள் கல்லூரியில் கிடைத்தது ஏழு பேருக்குத்தான். மீதி ஆறு பெரும் கம்பியூட்டர் சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவை சேர்ந்தவர்கள். சிவில் டிபார்ட்மெண்டில் அன்புவுக்கு மட்டும்தான் வேலை கிடைத்தது. இவன் வடிவமைத்த கற்களை இன்டெர்வியூவிற்கே கொண்டுபோய் காண்பித்தான். அன்பரசனை விட மஹாவுக்குத்தான் கூடுதல் சந்தோசம். "உன்ன கட்டிபுடிச்சி.. நிறைய உம்மா.... என் செல்லக் குட்டிக்கு வேலை கிடைச்சாச்சு. நான் செம ஹேப்பி "என்று வாட்சப்பில் அனுப்பியிருந்தாள். அவளுக்கும் விரைவில் வேலை கிடைத்திவிடுமென்றும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் கல்லூரி ஏற்பாடு செய்யப் போகும் கேம்பஸ் இன்டெர்வியூ நடக்கவிருப்பதாகவும் சொன்னான்.

இறுதியாண்டு பரீட்சை, ப்ராஜெக்ட் எல்லாம் முடிந்து கல்லூரி தேர்வின் கடைசி தேர்வு நாள் அன்று, பலரும் பேசிக் கொண்டது போல, இருவரும் கல்லூரி வாசலில் பேசிக் கொண்டிருந்தனர். அன்பு தன் வகுப்பு நண்பர்களிடம் அவ்வளவு நேரம் பேசிவிட்டு மெதுவாகத்தான் மஹாவை பார்க்க வந்ததாக மஹாவுக்கு அவன் மேல் கோவம் வேறு. இவனிடம் பேசுவதற்காகவே தன் தோழிகளிடம் நண்பர்களிடம் விரைவாக பேசிவிட்டு இங்கு காத்திருந்தாள் மஹா. ' கடைசியா ஒரு வாட்டி மயிலம் போலாமா ' என்றான். அவள் கண்டிப்பாக மறுத்து விட்டாள். கோவத்தில் சொல்கிறாளா இல்லை உண்மையிலேயே வேண்டாமென்று சொல்கிறாளா என்று இவனுக்கு குழப்பமாகத்தான் இருந்தது. மயிலம் போகவில்லை. அடுத்த திங்கட்கிழமை அன்பு எல் அண்ட் டி நிறுவனத்தில் சேர வேண்டும்.

" உன்ன இங்கயே கட்டி புடிச்சி அழணும் போலருக்கு' என்றாள் கண்கள் கலங்கியபடி.சற்று தூரத்தில் கிருபா இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான். மஹாவை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தான்.

மஹா, வீட்டில் உள்ள நாட்களில் பேச்சு குறைந்து வெறும் வாட்சப் மட்டுமே இருந்தது. அந்த திங்கட்கிழமை காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து அன்புவுக்கு ' all the best.. kisses.. hugs.. love you ' என்று எல்லா ஸ்மைலிகளையும் போட்டு வாட்சப் அனுப்பினாள். அப்பொழுதுதான் திண்டிவனம் வசந்தபவன் ஹோட்டல் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அவசரமாய் போய்க் கொண்டிருந்தான் அன்பு. அவளுக்கும் சென்னையில் விரைவில் வேலை கிடைத்து விடுமென்றும் விரைவில் இருவரும் சென்னையில் சந்தித்துக் கொள்ளலாம் என்றும் அவன் பதில் அனுப்பி இருந்தான். தன் அறையில் மறுபடியும் தூக்கத்தை தொடர்ந்தாள் மஹா.

எட்டு மணிக்கு மஹா தூக்கத்திலிருந்து எழுந்து அவள் மொபைல் போன் எடுத்து பார்த்த போது, அவள் தலையில் இடி விழுந்தது போல இருந்தது. அவர்கள் கல்லூரி மாணவர்கள் வாட்சப் குழுவில் அன்பரசனின் போட்டோவை பகிர்ந்து, இன்று காலை நடந்த விபத்தில் அன்பரசன் இறந்து போனான் என்று தகவல் வந்திருந்தது. "அய்யோ.. "என்று சத்தமாகக் கத்தி விட்டாள். நல்ல வேளை ஹாலில் ஓடிய டிவி சத்தத்தில் யாருக்கும் கேட்கவில்லை. மொபைல் போனை கீழே போட்டு விட்டு அடுத்த நொடியில் இரண்டு கைகளாலும் தன் வாயை பொத்திக் கொண்டாள். கண்ணீர் தாரை தாரையாக வழிய "அன்பு.. அன்பு.. "என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். "அய்யய்யோ.. அய்யய்யோ... அன்பு.. என்னடா ஆச்சி உனக்கு.." என்று தனக்கு தானே பேசிக் கொண்டாள். அது சிவில் அன்பரசனா இல்லை எலெக்ட்ரானிக்ஸ் அன்பரசனா.... புகைப் படத்தை மாற்றி போட்டு விட்டார்களா என்று மறுபடியும் ஒருமுறை வாட்சப் தகவலை பார்த்தாள். அது சிவில் அன்பரசன்தான். வயிற்றுக்குள் என்னமோ செய்தது... நெஞ்செல்லாம் படபடத்தது. அந்த செய்தியை நம்ப முடியாமல் தலையில் அடித்துக் கொண்டாள். சட்டென்று கிருபாகரனை அழைத்தாள். அவன் எடுக்கவில்லை. செந்திலை அழைத்தான். "செந்தில்.. என்ன ஆச்சு அன்புக்கு" என்று அழுது கொண்டே கேட்டாள். செந்தில் கண்கள் கலங்க அன்புவுக்கு பை பாஸ் ரோட்டில் சாலையை கடக்கும் போது ஒரு லாரி மோதி விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த அடி பட்டுவிட்டதென்றும், அங்கே நிறைய மக்கள் கூடி ஆம்புலன்ஸ் அழைத்தும், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பன்னீர் செல்வம்தான் தன் காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார் என்றும், ஆஸ்பத்திரி சென்று அடைவதற்குள் அன்பு இறந்து விட்டதாகவும் சொன்னான்.

" அய்யோ.. அய்யோ "என்று தலையில் அடித்துக் கொண்டு, சத்தமாகவும் அழமுடியாமல், வாய்க்குள்ளேயே அழுது கொண்டாள். கழிவறைக்கு சென்று சிறுநீர் கழிக்க, நைட்டியை விலக்கும் போதுதான் தெரிந்தது, தனது உள்ளாடையும் நைட்டியும் மாதவிடாய் வந்து ரத்தக் கரையாகி இருந்ததென. அவளது கால்கள் அன்பரசனை நோக்கிச் செல்ல படபடத்தன. கண்களை துடைத்துக் கொண்டு, முகம் கழுவிக் கொண்டே இருந்தாள். கண்ணீர் தாரை தாரையாக வந்து கொண்டே இருந்தது. வேறு நைட்டி மாட்டிக் கொண்டு, தன் அறையை விட்டு வெளியே வந்து அம்மாவிடம் அடுப்பங்கரைக்குச் சென்றாள்.

"என்ன பாப்பா ஆச்சு?.. ஒரு மாதிரி இருக்க.. "......

"தூரமாயிட்டேன்மா... "...

"அதுக்குள்ளயா?... இப்பதானே தலைக்கு குளிச்ச.? டாக்டர் பாத்துட்டு வரலாமா?".....

"இல்லம்மா..வேணாம்மா.. அம்மா.. என் காலேஜ் ப்ரெண்ட் ஒருத்தன் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டான்மா.. நான் போய் பாத்துட்டு வரட்டா? "..

'அய்யய்யோ.. யாரும்மா "என்று சத்தமாக கேட்டாள் மஹாவின் அம்மா. "அப்பாட்ட கேளு பாப்பா.." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அப்பா டிவி சத்தத்தை குறைத்து விட்டு "அந்த காளியப்பன் மகன்தான.... பறப் பய வீட்டு எழவுக்குல்லாம் நீ போ வேணாம். போய் வேற வேலையப் பாரு" என்று சொல்லி விட்டார். கண்ணீருடன் தன் அறைக்குள் சென்றவள், அறையிலேயே முடங்கிக் கிடந்தாள். போர்வையை போத்திக் கொண்டு அழுது கொண்டே இருந்தாள். யாராவது வரும் காலடி சத்தம் கேட்கும்போது, கண்ணீரை துடைத்துக் கொண்டாள் அல்லது தூங்குகிற மாதிரி நடித்தாள். அம்மாவிடம் மட்டும் "வயிறு வலிக்குதும்மா "என்று சொல்லிக் கொண்டிருந்தாள். புவனாவும் இரண்டு முறை வயிரைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவி விட்டுவிட்டு அடுத்த வாரம் அந்த அகிலா டாக்டரை பாத்துட்டு வந்துடலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஒரு சில நாட்கள் கழித்து ஒரு செவ்வாய்க் கிழமை கேம்பஸ் இன்டர்வியூவிற்கு கல்லூரிக்கு செல்ல வேண்டியிருந்தது. அவளுடைய அன்பரசன் இல்லாத கல்லூரிக்கு இன்று போகவிருக்கிறாள். தானும் போகும்போது ஏதேனும் விபத்தில் இறந்துவிடக் கூடாதா என்று நினைத்துக் கொண்டுதான் இருகிய முகத்துடன் புறப்பட்டாள். கல்லூரி பேருந்தில் ஏறி அமைதியாக அமர்ந்தாள். அவள் வகுப்பு நண்பர்கள் பலர் பேச்சு கொடுத்தும், யாரிடமும் பேச்சு கொடுக்கவில்லை. கல்லூரி நெருங்க நெருங்க மஹாவுக்கு என்னவோ போல் இருந்தது. கல்லூரி வந்து விட்டது.

பேருந்து படியில் நின்று இறங்குவதற்கு முன்பு, காற்றில் பறந்து கலைந்திருந்த தன் சுடிதார் ஷாலை உதறி சரி செய்து ஒரு முறை கையில் எடுத்து, மீண்டும் சரியாக அணியப் போகும் போது, அந்த இளம்பச்சை ஷால் வழியாக முன்னே செல்பவர்கள் தெரிந்தார்கள். அவளுக்கு ஏதோ பொறி தட்டியது போல, மயிலத்தில் அந்த இளம்பச்சை ஷால் வழியாக பன்னீர் மாமாவை பார்த்ததும், அவள் வீட்டில் ' பாப்பாவுக்காக இது கூட செய்ய மாட்டோமா ' என்று அப்பாவின் நண்பர்கள் கேட்டதும், அன்புவின் நண்பனுடைய அண்ணன் விஜயபாஸ்கர் இறந்ததும், பன்னீர் மாமா அன்பரசனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் முன்பு இறந்ததும் ஒரு சேர நினைவுக்கு வந்தது. அன்புவை அவள் அப்பாவும் பன்னீர் மாமாவும் கொலை செய்திருக்கிறார்கள் என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. படியில் இருந்து இறங்கியவள் அந்த பிங்க் நிற உடையைப் பார்த்து அப்படியே அந்த மண்ணில் விழுந்து "அன்பு........." என்று கதறி அழுதாள். அவளை சுற்றி இருந்த நண்பர்கள் அவள் கையை பிடித்து தூக்க முயன்றனர். அருகில் வந்த கிருபா, அவளை வலுவுடன் தூக்கி, தனியாக அழைத்து, மெல்லிய குரலில் "உனக்கு இந்த வேலை கிடைக்கும்னு அன்பு எவ்ளோ ஆசை பட்டான்? கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்க. இன்டெர்வியூ நல்லா அட்டென்ட் பண்ணு" என்று அவளை தேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான்.

ஒரு வருடம் உருண்டோடி விட்டது. மஹா திண்டிவனத்திற்கும் சென்னைக்கும் வாரா வாரம் வந்து போகும் சாப்ட்வேர் ஊழியராகி விட்டாள். கடந்த ஒரு வருடத்தில் அவள் அன்புவை நினைக்காத நாளே இல்லை. அன்புவை நினைக்கும் போதெல்லாம் அவள் அப்பா மீதும் பன்னீர் மாமா மீதும் கோவம் கொப்பளித்துக் கொண்டு வரும். போலீசிடம் சொல்லி அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கலாமா என்றெல்லாம் நினைத்திருக்கிறாள். அன்புவின் முதல் நினைவு நாளில், அந்த புதன் கிழமை , அன்புவை பற்றி யாரிடமாவது பேச வேண்டும் என்று மனம் துடித்தது. ஹைதராபாத்தில் வேலையில் இருக்கும் கிருபாவுக்கு அலைபேசியில் அழைத்தாள். "கிருபா.... ஒரு வருஷம் ஆயிடுச்சி கிருபா. ஏன் கிருபா அப்படி பண்ணாங்க?.... தாங்கவே முடியல கிருபா... என்னால ஒண்ணுமே செய்ய முடியல இல்ல.. "என்று மீலாத் துயரில் அழுதாள். "மஹா.. நீ இப்படி அழுதா அன்புவுக்கு புடிக்குமா? நீ சந்தோஷமா இருக்கணும்னுதான நினைச்சான்? அழாத.. கஷ்டப் படாத மஹா.. எல்லாம் மாறும் உன் lifeல.. உங்க வீட்ல பாக்கற பையனை கல்யாணம் பண்ணிக்க.. அப்டியே ஓடிடும் வாழ்க்கை. இதுல இருந்து வெளிய வா.. அதான் அன்புவுக்கும் புடிக்கும்" என்று ஆறுதல் சொன்னான்.

ஒரு மாலைப் பொழுதில் கிருபாவிற்கு அழைத்தாள். "கிருபா.. நான் ஒண்ணு கேக்கட்டா? எனக்கு எப்படியும் யாருன்னே தெரியாத பையன கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அதுக்கு நீயே என்ன கல்யாணம் பன்னிக்கறியா? அவங்க ஜெயிக்க கூடாது கிருபா.. என் கூட வாழறது உனக்கு தண்டனையா இல்லாம இருந்தா எனக்கு போதும் கிருபா. நீ சொன்ன மாதிரி லைஃப் மாறிடும்..... ஆனா அவங்க ஜெயிக்க கூடாது கிருபா "என்றாள். ஒன்றும் பேசாமல் அலைபேசியை துண்டித்தான் கிருபா. மறுநாள் காலை மஹாவை அழைத்த கிருபா, ' நான் பொறக்கும் போதே எங்க அம்மா இறந்துட்டாங்க மஹா. அப்பாவும் இறந்து ஆறு மாசம் ஆச்சு. உன் கூட வாழறது எனக்கு தண்டனை இல்ல மஹா. அது எனக்கு கிடைச்ச வரம். என்ன கல்யாணம் பண்ணிப்பியா மஹா? "என்றான். இருவர் கண்களும் கசிந்தது.

அன்று இரவு வேளச்சேரியில் இருந்து கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்துக்கு சென்றாள் மஹா. ஹைதராபாத் பஸ்ஸில் ஏறி அமர்ந்துகொண்டு, தன் அலைபேசியில் இருந்த ஏர்டெல் சிம் கார்டை கழற்றி தூக்கி எரிந்து, தனது கைப்பையில் இருந்த பி.எஸ்.என்.எல் சிம் கார்டை எடுத்து மாற்றிவிட்டு தன் வாழ்வின் புதிய பயணத்தைத் தொடங்கினாள்.

- ஞானபாரதி

(செம்மலர் இதழில் வெளிவந்த சிறுகதை)