கடலை மிட்டாய்க்காரர்களுக்கும், ரோஸ்மில்க்காரர்களுக்கும் தொடக்கத்திலிருந்தே ஆகாது. உள்ளூரில் ஓஹோவென்றிருந்தாலும் வெளியூர் சந்தையில் விழுந்து கிடக்கும் கடலை மிட்டாய்க்காரர்களுக்கும், உலக விற்பனை வெளுத்து வாங்கினாலும் உள்ளூர் விற்பனை உளுத்துப் போயிருந்ததில் ரோஸ்மில்க்காரர்களும் கொதிப்பில் இருந்தார்கள். அதுபோக குடிக்கவே முடியாத கடலை மிட்டாயும், கடிக்கவே முடியாத ரோஸ்மில்க்கும் எதிரிகளாகப் போனதில் ஆச்சர்யமில்லை. மஞ்சள் சட்டை போட்டவர்களைக் கண்டால் கடலை மிட்டாய்க்காரர்களுக்கு சந்தோசம் தாங்க முடியாது. அப்படி எவனையாவது கடைத்தெருவில் கண்டுவிட்டால் அலேக்காகத் தூக்கி வந்து அன்போடு உபசரித்து வாயில் ஐந்து கடலை மிட்டாயைத் திணித்து மூச்சுத் திணற வைத்துத்தான் அனுப்புவார்கள்.

ரோஸ்மில்க் கடைக்காரர்கள் சட்டையையெல்லாம் சட்டை செய்வதில்லை. எந்த சட்டை கிடைத்தாலும் ரோஸ்மில்க்கை கொட்டி 'இது ரோஸ்கலர் சட்டை' என்று பீற்றிக் கொள்வார்கள்.

'இன்னா கலர் சட்டைன்னா இன்னாப்பா? அது ஒன்னப்பா' என்று பாட்டெல்லாம் பாடுவார்கள் ரோஸ்மில்க்காரர்கள்.

கடலை மிட்டாய்க்காரர்கள் 'ஆமா... இது என் டயலாகுல்ல?' என்று ஜெர்க் கொடுத்தாலும் உஷாராகி ஏதாவது செய்ய வேண்டுமே என்பதற்காக அந்த பாட்டையே தடை செய்தார்கள். அந்த பாட்டை மட்டுமல்ல அந்த பாட்டு போட்ட கோட்டுக்காரனைப் போட்டு மிதித்தார்கள், பாட்டுக்காரனின் பாட்டுகள் இருந்த கேஸட்டுகளையெல்லாம் தூக்கிப் போட்டு உடைத்தார்கள்.

இப்படி ஃபர்னீச்சர்களை உடைத்தே பழக்கப்பட்ட கடலை மிட்டாய்க்காரர்களும், அண்டாவோடு அபேஸ் பண்ணும் ரோஸ்மில்க்காரர்களும் பரஸ்பரம் எதிரிகளாக இருந்தாலும். நேரடியாக சமர் செய்வதில்லை. அவர்கள் இவர்களைப் பார்த்து 'நமஸ்தே' என்பதும், இவர்கள் அசடு வழிய, 'ஹிஹிஹி... பிஸ்தே' என்பதும் வழக்கம். அதுபோக ஒரு மூத்த கடலை மிட்டாய்க் கடைக்காரர் திடீரென்று ஒருநாள் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க் கடைக்குப் போய் ரோஸ்மில்க் குடித்துவிட்டு 'தவறான கடையிலிருக்கும் சரியான பானம்' என்று புகழ்ந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வதுண்டு.

ஆனால் அதெல்லாம் இங்கே கதைக்காகாது. கடலை மிட்டாய் கடைக்காரர்கள் தங்கள் கடையில் அசுரய்யா என்பவரின் படத்தை மாட்டி வைத்திருக்கிறார்கள். அசுரய்யாதான் கடலை மிட்டாய் செய்யும் சூத்திரத்தைச் முதன்முதலில் சொன்னவர் என்பது கடலை மிட்டாய்க்காரர்களின் நம்பிக்கை. அவர் படத்துக்கு தினமும் மாலை அணிவித்து கற்பூரம் காட்டி மணியடித்து பூசை செய்துவிட்டுத்தான் கடலை மிட்டாய்க்காரர்கள் வியாபாரம் செய்யத் தொடங்குவார்கள்.

ஆனால் ரோஸ்மில்க்காரர்களுக்கோ அசுரய்யாவைக் கண்டாலே ஆகாது. வேண்டுமென்றே தங்கள் கடைக்கு எதிரில் அசுரய்யாவின் படத்தை வைத்திருப்பதாக பொங்குவார்கள். அசுரய்யா என்பது அசுரய்யாவின் இயற்பெயர் அல்ல. அசுரய்யா, அசுரய்யா ஆவதற்கு முன்பு இருந்த பெயரைச் சொல்லி ரோஸ்மில்க் கடைக்காரர்கள் திட்டுவது கடலை மிட்டாய்க்காரர்களுக்கு பிடிப்பதில்லை. அதெப்படி அய்யாவை அந்தப் பெயர் சொல்லி அழைக்கலாம்? அவருக்கென்று ஒரு மாண்பில்லையா? மரியாதை இல்லையா? இன்னபிற இத்யாதிகள் இல்லையா? என்று இவர்கள் பொங்குவதைக் கண்டு ரோஸ்மில்க்காரர்களுக்கு உள்ளூர ஒரு மகிழ்ச்சி.

ஆனால் கடலை மிட்டாய்க்காரர்களுக்கு ரோஸ்மில்க்காரர்களை விட 'கருப்பட்டி மிட்டாய்'க்காரர்கள் மீதுதான் அசூயை அதிகம். கடலை மிட்டாய் வரிசையிலேயே நான்கு கடை தள்ளி கருப்பட்டி மிட்டாய்க் கடை என்ற பெயரில் அசுரய்யாவின் படத்தினை வைத்து இன்னொரு கடைக்காரர்கள் வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் கடலை மிட்டாய் மட்டுமல்லாமல் எல்லா மிட்டாய்களும் செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 'நாங்கள் செய்வதுதான் ஒரிஜினல் அசுரய்யா ரெசிப்பி' என்று பீற்றிக் கொள்வதுண்டு. அசுரய்யாவே முன்பொரு காலத்தில் இவர்கள் கடையில் ஜவ்வு மிட்டாய் கிண்டியதாக வதந்தியும் உண்டு. இவர்களும் சில நேரங்களில் அசுரய்யாவை, அசுரய்யா என்று அழைக்காமல் 'அந்த-தடைசெய்யப்பட்ட-பேர்' சொல்லி அழைப்பதுண்டு. ரோஸ்மில்க்காரர்கள் போல் மரியாதைக் குறைவாக அழைக்காவிட்டாலும் இந்த கருப்பட்டி மிட்டாய்க் கடைக்காரர்கள் அடிக்க வாகாக இருப்பதாக கூறிக்கொண்டு கடலை மிட்டாய்க் கடைக்காரர்கள் இவர்களைத் தாக்குவதும் நடக்கும். அதுபோக ரோஸ்மில்க் கடைக்காரர்கள் திருப்பி அடிக்க இரண்டு தலைமுறை ஆயுதம் ஒன்றை பூஜை செய்து வைத்திருக்கிறார்கள் என்ற பயமும் கடலை மிட்டாய்க் கடைக்காரர்களுக்கு உண்டு.

கருப்பட்டி மிட்டாய்க்காரர்கள் சொல்லும் குற்றச்சாட்டு என்னவென்றால் கடலை மிட்டாய்க்காரர்கள் அசுரய்யாவின் மூவாயிரத்து நூற்று நாற்பத்திரண்டு பக்க ரெசிபிக்களில் முதல் மூன்று பக்கத்தை மட்டும் படித்துவிட்டு கடலை மிட்டாய் மட்டும் செய்கிறார்கள் என்பதுதான். ஆனால் கடலை மிட்டாய்க்காரர்களுக்கு நன்றாகத் தெரியும் முதல் மூன்று பக்கங்களைத் தவிர அசுரய்யாவின் புத்தகத்தில் உள்ள அனைத்து பக்கங்களும் அடுப்பெரிக்கத்தான் வைத்திருக்கிறார் என்று. ஏனென்றால் முதல் மூன்று பக்க முடிவில் அசுரய்யா

*****

என்ற குறியீட்டைப் போட்டிருந்தார். கடலை மிட்டாய்க்காரர்கள் ஒன்றும் அந்தக் குறியீட்டுக்கு ‘முடிந்தது’ என்ற பொருள் தெரியாத அளவு முட்டாள்கள் இல்லை. அதனால் முதல் மூன்று பக்கங்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற பக்கங்களை அடுப்பெரிக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.

கருப்பட்டி மிட்டாய்க் கடை மட்டுமல்லாமல் தர்பூசணிக் கடை, ப்ளூபெர்ரிக் கடை என கடலை மிட்டாய்க் கடை வரிசையில் இருந்த எல்லாக் கடைக்காரர்களுமே அசுரய்யாவை தவறாக புரிந்து கொண்டனர் என்பதே நம் கடலை மிட்டாய்க்காரர்களின் அரிய கண்டுபிடிப்பு. அப்படி அசுரய்யாவை தவறாகப் புரிந்துகொண்டு பேசுபவர்கள் கண்டிப்பாக ரோஸ்மில்க் கடைக்காரர்களின் கையாளாகத்தான் இருப்பர் என்ற உண்மையையும் கடலை மிட்டாய்க்காரர்கள் பிற்காலத்தில் கண்டுபிடித்தனர். அவ்வாறு ரோஸ்மில்க் கடைக்காரர்களிடம் கையூட்டு பெற்று அசுரய்யாவை அந்த - தடை செய்யப்பட்ட- பேரால் அழைப்பவர்களையோ அல்லது அவரது ரெசிபிக்களை முழுவதாக படிக்கச் சொல்பவர்களையோ அவர்கள் ‘ரோஸ்மில்க் குடித்தவர்கள்’ என்ற பொருள்படும் வகையில் 'பிங்கிகள்' என்று அழைக்க ஆரம்பித்தனர்.

இந்த பிங்கிகள் கடையில் இருந்த அசுரய்யா படத்துக்கும், கடலை மிட்டாய்க்காரர்களின் அசுரய்யா படத்துக்கும் சில வித்தியாசங்கள் உண்டு.

  1. பிங்கிகள் அசுரய்யா படத்துக்கு மாலையிட்டு வணங்க மாட்டார்கள், அவ்வளவு திமிர் பிடித்தவர்கள். ஆனால் கடலை மிட்டாய்க்காரர்களோ, தினமும் மாலையிட்டு வணங்குவதோடு, வருடத்துக்கு மூன்றுமுறை பாலாபிஷேகமும் செய்யத் தவறுவதில்லை. எதிர் காலத்தில் நாற்பத்தெட்டு நாள் ஒரு மண்டல விரதம் இருக்கும் திட்டமும் உண்டு.
  2. பிங்கிகள் படத்தில் 'அசுரய்யா' என்ற பெயருக்கு முன்னொட்டாக, அந்த தடைசெய்யப்பட்ட அசுரய்யாவின் இயற்பெயர் இருக்கும். அந்த மாபாவத்தை அவர்கள் உணர்வதேயில்லை. ஆனால் கடலை மிட்டாய்க்காரர்களோ அந்த மாபாவத்தை செய்ய மாட்டார்கள். சமீபத்தில் ‘அசுரய்யா ஸஹஸ்ரநாமம்’ என்ற அசுரய்யாவின் ஆயிரம் நாமாவளி கொண்ட புத்தகத்தை வெளியிட்டார்கள். வாங்கிப் பிரித்துப் பார்த்தால் ஆயிரம் பெயர்களும் 'அசுரய்யா', 'அசுரய்யா' என்று மட்டும் இருந்தன. இருந்தாலும் அந்த ஸஹஸ்ரநாம புத்தகத்தை வாங்கிப் படிக்காமல் பத்திரமாக அலமாரியில் மட்டும் வைத்துக் கொண்டவர் பலர். அந்த வருட புத்தக சந்தையில் ‘அசுரய்யா ஸஹஸ்ரநாமம்’ விற்பனையில் சாதனை படைத்தது. மேலும் அந்த வருட சாஹித்திய அகாடமி விருதுக்கும் அதைப் பரிந்துரைத்து பல்பு வாங்கினார்கள் என்பது தனிக்கதை.
  3. கடைசியாக பிங்கிகளின் கடையில் அசுரய்யாவின் சைடுபோஸ் போட்டோவுக்கு அருகில்,

என்ற சொற்றொடர் இருக்கும். ஆனால் நம் கடலை மிட்டாய்க் கடைக்காரர்கள் வைத்திருக்கும் சைடுபோஸ் போட்டோவில்

என்று எழுதப்பட்டிருக்கும். கடலை மிட்டாய்க்காரர்கள் கடையிலும் தொடக்கத்தில் பிங்கிகளிடம் இருந்த வசனம்தான் இருந்ததாகவும், திடீரென ஒருநாள் காலப் போக்கில் அது ‘கடலை’ என்ற முன்னொட்டு வைக்கப்பட்டு மாற்றப்பட்டதாகவும் வதந்திகள் உண்டு. ஆனால் அது எப்போது மாறியது என்பதை கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்.

இதுபோக “ஒன்றே மிட்டாய், நன்றே கடலை” என்ற மோட்டோவும் கடலை மிட்டாய்க்காரர்களுக்கு உண்டு.

கடலை மிட்டாய்க்கடைக்கு எதிரிலேயே ரோஸ்மில்க் கடையின் அருகில் இன்னொரு கடலை மிட்டாய்க்கடை இருந்தது. இவர்கள் ‘புரட்சிகர கடலை மிட்டாய்க் கடையினர்’ (புகமிக) என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொண்டனர். இவர்கள் அசுரய்யாவின் ரெசிப்பியைப் படித்ததும் இல்லை, ஒன்றும் இல்லை. ஏன் புத்தகம் கூட பார்த்திருப்பார்களா என்று தெரியாது. ஆனால் அசுரய்யாவின் படத்தை மட்டும் பெரியதாக வாங்கி மாட்டி அதற்கு பெரிய நாமம் போட்டு, 'அசுரய்யா நாமம் வாழ்க' என்று கோஷமிடுவார்கள். இவர்கள் சொந்தமாக கடலை மிட்டாய் செய்யத் தெரியாமல், இறக்குமதி செய்து அதில் ரோஸ்மில்க் தடவி விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களை 'ரோஸ்மில்க் நக்கிகள்' என்று நம் நண்பர்கள் அழைப்பார்கள். அதன் காரணத்தை ஆராய்வது அனாவசியம். நம் நாயகர்களை பொறுத்தவரை அவர்களுக்காக ஒரு பத்தி எழுதுவதுகூட வீண்தான். அதனால் இத்தோடு நிறுத்துவது உசிதம்.

ஏற்கனவே தர்பூசணி கடைக்காரர்கள் ரகசியமாக வெளிநாட்டு சாக்லேட்டுகள் தயாரித்து சிவப்பு நிற கவரில் கட்டி விற்பதாக குற்றச்சாட்டு வேறு இருந்தது. ‘அது எப்படி அசுரய்யா மண்ணில் வெளிநாட்டு மிட்டாய்கள் விற்கலாம்? மண்ணுக்கேற்ற மிட்டாய் வேண்டும்’ என்று கடலை மிட்டாய்க்காரர்கள் போர்க்கொடி தூக்கிய வரலாறும் உண்டு. இப்போது புதிதாக அவர்கள் அசுரய்யாவின் சூத்திரத்தை வெளிநாட்டு சாக்லேட்டுகளுடன் கலந்து புதிய ரெசிப்பி ஒன்றைத் தயாரித்து, ‘அசுரய்யா வட்ட மிட்டாய்’ என்ற பெயரில் புதிய மிட்டாய் தயாரிக்க சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.

கடலை மிட்டாய்க் கடைக்காரர்கள் உடனே பொங்கி விட்டார்கள். “ஏங்கடா டேங்களா... அசுரய்யாவின் புத்தகத்தை மூணாம் பக்கத்துக்கு மேல படிக்குறதே தப்பு. இதுல அவரு பேருல புது மிட்டாயா? அதெப்படிடா அவரு பேரை பிரபலமாக்கலாம்?? அதாவது... அது வந்து... அவரு பேரை ‘நீங்க’ எப்படிடா பிரபலமாக்கலாம்? அவரு செய்யாத மிட்டாயெல்லாம் செஞ்சதா சொல்லுவீங்களா? அவருக்கு கடலை மிட்டாய தவிர எதையும் செய்யத் தெரியாதுடா” என்று தர்பூசணிகடையின் முன்பு நின்று கத்தினார்கள். அத்தோடு நிற்காமல், "ஏன்டா, நீங்க நாலுபேரு யாருமே வராத கடையில டீயாத்தி நீங்களே குடிச்சா பெரியாளுங்களா?" என்றபடி தர்பூசணிக்காரர்கள் கையிலிருந்த ரெசிப்பி புத்தகத்தைப் பிடுங்கி கிழித்துப்போட்டனர்.

ஒருவழியாக வெற்றி பெற்று வெளியேறி வந்தவர்கள் கண்ணில் ரோஸ்மில்க் கடையில் கூட்டம் மொய்ப்பதும் புதிய கடலை மிட்டாய்க்கடைக்கு வருபவர்களையெல்லாம் ரோஸ்மில்க் கடைக்கு அனுப்புவதும் தெரிந்தது. ஆனால் அதையெல்லாம் விட முக்கியமான ஒன்றைக்குறித்து விவாதிக்கத் தொடங்கினார்கள்.

“யோவ், அசுரய்யா பேருக்கு நாம ராயல்டி வாங்கிக்கிடணும்” என்றார் ஒருவர்.

“ஆமாய்யா, நம்ம அனுமதியில்லாம ஒரு பய அசுரய்யா பேர யூஸ் பண்ணக்கூடாது” என்றார் இன்னொருவர்.

“முக்கியமா அந்த தர்பூசணிக்காரனுவ”

“ஆமாப்பா, ப்ளூபெர்ரிக்காரனுவள விட்டிட்டுயே, ப்ளாக் கரண்டு ஐஸ் க்ரீம்க்கு கூட நம்ம அசுரய்யாவும் அவங்க அய்யாவும் ஒன்னா வேலை பாத்ததா பொய் சொல்லிட்டு இருக்கானுவ”

“ஆமாமா, இப்படிதான்யா கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு குரூப்பு வானவில் முட்டாயின்னு ஒன்னு பண்ணி அதுக்கும் அசுரய்யா பேரு வெச்சுட்டாங்க.”

“ஆமாமா, வானவில் முட்டாயெல்லாம் பத்தி அசுரய்யா என்னிக்கு எழுதிருக்காரு?”

“அதும் ‘வானவில்லாம்’, ஏழு கலரையும் பார்த்ததும் எனக்கெல்லாம் வாந்தியே வந்துருச்சு, உவ்வே”

“அதுவும் அதெல்லாம் மண்ணுக்கேத்த முட்டாயே இல்ல”

“ஆமாமா... இதெல்லாம் அசுரய்யாவுக்கே அவமானம்”

“அப்படியே அசுரய்யா படத்தையும் யாரும் பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்லிப்புடணும்”

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் விவாதத்தில் குறுக்கீடு செய்கிறோம் என்ற விவரம் ஏதுமின்றி ஒரு சிறுவன் கடைக்கு வந்தான்.

“அங்கிள் டெய்ரி மில்க் சாக்லெட் இருக்கா?” என்றான்.

சிரித்தபடி சிறுவனை நெருங்கிய ஒரு கடலை மிட்டாய்க்காரர், “கண்ணு, சாக்குலேட்டெல்லாம் திங்கக்கூடாது. பல்லெல்லாம் போயிடும். வயித்துல பூச்சி வந்துடும். அதெல்லாம் வெளிநாட்டு முட்டாயி. இங்க பாரு கடலை முட்டாயி திங்குரியா? அசுரய்யா தாத்தா முட்டாயி? வாயில போட்டா தேனா இனிக்கும்” என்றார்.

மலங்க மலங்க முழித்த சிறுவன், “இல்ல அங்கிள், எனக்கு சாக்லேட்தான் வேணும்.” என்றான்.

அவர்களில் ஒருவர், “தம்பி இப்படியே நாலு கடை தள்ளி தர்பூசணி....” என்று ஆரம்பிக்க அவரைக் குறுக்கிட்டு, “யோவ் நிறுத்து” என்ற வெற்றிலை வாய்க்காரர் விலாசம் சொன்னவரை முறைத்துவிட்டு, பின்பு சிறுவன் பக்கம் திரும்பி, கோபமாக, “யே... சாக்லேட்டும் கிடையாது ஒன்னும் கிடையாது போ... போ...” என்று விரட்டினார்.

சிறுவன் ஒரு அடி பின்னால் போய் தடுமாறி, பயம்கலந்த பார்வையோடு இவர்களைப் பார்த்துவிட்டு பின்னால் திரும்பி முதுகைக் காட்டியபடி நடந்தான்.

“இப்பல்லாம் பொறக்கும்போதே பிங்கியா பொறக்குறாங்கப்பா" என்று புலம்பியபடி இவர்கள் மீண்டும் அசுரய்யாவின் சிலை வைப்பதற்கும் ராயல்டி வாங்குவது குறித்த விவாதத்தில் மூழ்கினார்கள்.

- சத்யா