அலுவலகத்தில் ஏசியை அணைத்து விட்டார்கள் போல, செந்திலுக்குச் சிறிது வியர்க்கத் தொடங்கியது. மணி ௮.30??? கடந்து ஓடிக்கொண்டிருந்தது. இன்றைக்கு இதுபோதுமென்று முடிவெடுத்து லேப்டாப்பை மூடி பையில் வைத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்புவதற்கு எழுந்தவுடன் .

என்ன செந்தில், வேலையெல்லாம் முடிச்சாச்சா ? அதுக்குள்ள கிளம்பிட்டீங்க என்று கேட்ட பக்கத்து cubicle நண்பரிடம்,

வேலையை முடிச்சிட்டுத்தான் வீட்டுக்குபோகணும்னா, இரண்டு வருடமானாலும் நான் வீட்டுக்குப் போக முடியாதென்று சொல்லிச் சிரித்துவிட்டு ..சரிங்க நான் கிளம்புறேன், நாளைக்குப் பார்க்கலாம் என்று கூறிவிட்டு பைக் நிறுத்தம் நோக்கி நடந்தான்.

புறப்பட்டசில நிமிடங்களில் அவன் செல்போன் அடித்தது, வண்டியை ஓரமாக நிறுத்திச் செல்போனை எடுத்து ’ஹலோ, சொல்லுடா’ என்றான் ? மறுமுனையில் செந்திலின் தம்பி.

”எங்க இருக்க ?”

”இப்பதான் கிளம்பினேன் ... ஏன் கேக்குற ?”

”எப்ப வருவ ?”

”அரை மணிநேரம் ஆகும் .. ஏன் என்ன விஷயம் ?”

”ஹ்ம்ம் ... சரி நீ சீக்கிரம் வா” என்று அழைப்பைத் துண்டித்து விட்டான்.

செந்திலுக்கு ஒன்றும் புரியவில்லை . ”எதற்குப் போன் பண்ணான், ஒண்ணுமே சொல்லாமலேயே கட் பண்ணிட்டான், கொஞ்சம் பரபரப்பா வேற பேசுனா மாதிரி இருக்கு” என்று குழம்பியவன், என்னவாக இருக்க கூடுமென நகத்தைக் கடித்துக்கொண்டே யோசித்ததில் ஆயாவுக்கு ஏதேனும் நடந்திருக்குமோ என்று யோசித்தவுடன் அவன் குழப்பம் பதற்றமாக மாறியது.

சேச்சே ..அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டவன், சரி தம்பிக்கே போன் செய்துவிடலாமென்று போன் செய்தான் ஆனால் "User busy " என்று வந்தது. சில நொடி இடைவெளியில் மீண்டும் முயன்றான். மீண்டும் busy என்றுதான் வந்தது. அவன் பதற்றம் எரிச்சலாக மாறியது.

எரிச்சலுடன் வண்டியை ஓட்டத் தொடங்கினான் ஆனால் அவன் சிந்தனை முழுவதும் ஏன் போன் செய்தான் என்ற ஒற்றைக்கேள்வியைச் சுற்றியே இருந்தது. சில நொடிகளில் ஒருவேளை மதுரைக்குப் போயிருக்கும் அப்பாவுக்கு ஏதேனும் நடந்திருக்குமோவென யோசித்தான்

அப்பாவை நினைத்தவுடன்அவனது எரிச்சல் பயமாக மாறியது; அதற்குமேல் அவனால் வண்டியை ஓட்டமுடியவில்லை. வண்டியை ஓரங்கட்டிவிட்டு மீண்டும் தம்பிக்கு போன் செய்தான் இப்பொழுதும் busy என்று வந்து அவனது பயம் மேலும் அதிகரித்தது. மதியம் தானே அப்பாட்ட பேசினேன், அப்படி ஒன்றும் இருக்காதென்று சொல்லிக்கொண்டாலும் அவனுக்கு இருப்புகொள்ளவில்லை.

சரி அப்பாவுக்கே போன் செய்துவிடலாமென்று போன் செய்தான், அப்பா அழைப்பை எடுக்கவில்லை. அவனது பயம் படபடப்பாக மாறியது.

மீண்டும் போன் செய்தான், போனை எடுத்து வேறு ஒரு குரல் ஹலோ என்று சொன்னது.

இவன் சிறிது நடுக்கத்துடன் ’அப்பா’ என்றான்.

”தம்பி நீங்களா, அப்பா பாத்ரூம் போய் இருக்காரு ஒரு நிமிடம் இருங்கள், இந்தா வந்துட்டாரு தரேன்” என்று செந்திலின் அப்பாவிடம் போனை தந்தார்.

என்னப்பா, வீட்டுக்கு வந்துட்டியா ?

இல்லப்பா, இப்பதான் கிளம்புறேன், நீங்க எப்ப வருவீங்க ?

வந்தவேளை முடிஞ்சிருச்சு, 10 மணிக்குதான் வண்டி, நாளைக்குக் காலையில் வந்துருவேன்.

சரிப்பா, காலையில் நான் ஸ்டேஷனுக்கு வரன் ..

இல்லப்பா ..நானே வந்துட்றன், சரி நீ சீக்கிரம் வீட்டுக்குப்போ, நிறைய நேரம் ஆகுது.

சரிங்கப்பா என்று அழைப்பைத் துண்டித்தான். அப்பாவிடம் பேசியபின் பயம், பதற்றம், நடுக்கம் எல்லாம் சிறிது குறைந்ததாலும் தம்பி ஏன் அழைத்தான் என்ற குழப்பமும் அதனையொட்டிய எரிச்சலும் அடங்கவில்லை.

மீண்டும் தம்பிக்கு போன் செய்தான், அவனது எரிச்சலை மேலும் அதிகரிக்கும் விதமாக மீண்டும் அதே பிஸி என்று தான் வந்தது.

வேறு என்ன நடந்திருக்கக் கூடுமென யோசித்ததில் அம்மாவுக்கு ஏதேனும் நடந்திருக்குமோவென்கிற பதற்றம் எகிறத் துவங்கியது. வீட்டுக்கே சீக்கிரம் போய் சேருவோமென்று சொல்லிக்கொண்டு, வழக்கத்திற்குமாறாக வண்டியை வேகமாக வீட்டை நோக்கி விரட்டினான்.

வழக்கமான போக்குவரத்து நெரிசலும் செந்திலின் எரிச்சலை மேலும் அதிகரித்தது. போக்குவரத்து சிக்னலின் ஒவ்வொரு சிவப்பு விளக்கும் இவனைத் தடுத்து நிறுத்துவதற்காகவே எரிவதாக எண்ணி நொந்துகொண்டான். அங்கு நிற்கும் ஒவ்வொரு நொடியும் அவனின் எரிச்சலை அதிகரித்துக்கொண்டே இருந்தது.

ஏன் போன் செய்தான் என்ற யோசனையுடனும், எரிச்சலுடனும் வண்டியை மேலும் நிறுத்தாமல் ஒருவழியாக அவன் தெருமுனையை வந்து அடைந்தான் அப்பொழுது எதிரே ஓர் ஆம்புலன்ஸ் வண்டி ஒலியெழுப்பிக் கொண்டே கடந்து சென்றதைக் கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டான்.

வழக்கத்திற்கு மாறாக அன்று அவனது தெரு சற்று பரபரப்பாக இருந்ததைப் போல் தோன்றியது. அவனது வீட்டிற்கு அருகில் ஒரு பெரிய வண்டி நின்று கொண்டிருந்தது அதைச் சுற்றிச்சிலர் நின்று ஏதோ பேசி கொண்டிருந்ததையும் பார்த்தான்.

வீட்டிற்கு அருகில் செல்லச் செல்ல அவனது பதற்றமும் எரிச்சலும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒருவழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

இவனது வண்டி சத்தத்தைக் கேட்டு ஏற்கனவே கதவு திறந்து வைக்கப்பட்டு இருந்தது, நேராக வண்டியை உள்ளேவிட்டு வண்டியை நிறுத்தினான்.

இன்றைக்கும் லேட்டா என்று கேட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் அவன் பையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார் செந்திலின் ஆயா.

ஆயாவுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று நினைத்துக்கொண்டு, வீட்டுக்குள்ளே சென்றவனை "டாய், ஷூவை கழட்டிட்டு உள்ளே வா, அன்றாடமுமா சொல்லுவாங்க?”, என்று அதட்டினார் செந்திலின் அம்மா.

ஷூவை கழட்டிவிட்டு உள்ளே சென்றவன் அம்மாவிடம் “எங்க அவன்?”, என்று கேட்டான்.

இவனின் சத்தத்தைக் கேட்டுப் போனில் பேசிக்கொண்டே உள்ளேயிருந்து வெளியே வந்த செந்திலின் தம்பி, இவனைப் பார்த்து இரண்டு நிமிடம் என்று செய்கை செய்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றான்.

“யாருகிட்டமா பேசிட்டு இருக்கிறான்?”

“தெரியலடா ..நிறைய நேரமா போன்ல தான் இருக்கிறான்”, என்று சொல்லிவிட்டு, “இருடா உனக்கு டீ போட்டுத் தருகிறேன்”, என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குச் சென்றுவிட்டார்.

செந்திலின் பயம், பதட்டம் எல்லாம் குறைந்தாலும் எதற்குப் போன் செய்தானென்ற குழப்பமும் அதனையொட்டிய எரிச்சலும் மட்டும் அப்படியே இருந்தது. உடைகளை எதுவும் மாற்றாமல் அப்படியே சோபாவில் அமர்ந்தான்.

ஐந்து நிமிடத்திற்குப் பிறகு வெளியே வந்த தம்பியைப் பார்த்து

“எதுக்குடா போன் பண்ண?”

“நைட் ஷோ படத்துக்குப் போறன், உன் வண்டி வேண்டும் அதான் நீ எப்ப வருவேன்னு? கேட்கத்தான் போன் பண்ணன்.”

“அதை ஏன் சொல்லல?”

“நீ தான் 30 நிமிடத்தில் வந்துருவன்னு சொன்ன, அதான் வெச்சிட்டன்”

“இவ்வளவு நேரம் யாருகிட்ட பேசிட்டு இருந்த?”

“டிக்கெட்டுக்காக ஒருத்தரிடம் பேசிட்டு இருந்தேன், என்ன ஆச்சு? ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்ட தம்பியிடம் ஒண்ணுமில்லடா, சும்மா தான் கேட்டேன் என்று சொல்லிவிட்டு ஹெல்மட் போட்டுப்போ என்று வண்டி சாவியைக் கொடுத்தான்.

இதற்குள் அம்மா டீயுடன் வெளியே வந்தார். அம்மாவிடம் படத்திற்குப் போயிட்டு வரேன்மா என்று சொல்லிவிட்டு வெளிய சென்ற தம்பியை அழைத்து 500 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு "போன் பண்ணா, செய்தியை சொல்லிட்டு வை" என்று சொல்லி தோளில் லேசாகத் தட்டினான். ஒன்றும் புரியாமலே சரி என்று சொல்லிவிட்டு தம்பி வெளியே சென்றான்.

செந்தில் பொறுமையாக வந்து சோபாவில் அமர்ந்துகொண்டு அமைதியாக டீ குடிக்கத் தொடங்கினான். அவனது குழப்பம், பதற்றம், பயம், எரிச்சல் எல்லாம் மெல்லக் கரைந்து போனது.

- விஜய் பக்கிரி