வழக்கமான மூன்றாவது அலாரத்திற்கு அடித்துப் பிடித்து எழுந்து அரக்கப்பரக்கக் கிளம்பி ஆபிஸ் பஸ் பிடிக்கக் கிளம்பினாள் சுகந்தி . நடையும் ஓட்டமுமாக ஆபிஸ் பஸ் நிற்கும் இடத்திற்கு வருவதற்குள் பேருந்து அவள் கூப்பிடும் தூரத்திற்கு அப்பால் சென்றுவிட்டது. ஆபிஸ் பேருந்தைத் தவறவிட்டால் தன் காரில் ஆபிஸ் செல்வது சுகந்தியின் வழக்கம்.

தவறவிட்ட பேருந்தை பார்த்துப் பெருமூச்சு விட்டுவிட்டு வீட்டை நோக்கி நகரத் தொடங்கியவளை ஓர் அரசு பேருந்தின் பயங்கரச் சத்தம் தடுத்து நிறுத்தியது.

பேருந்தைப் பார்த்தவுடன் சட்டென்று இன்றைக்கு ஆபிசுக்கு அரசு பேருந்தில் போனாலென்ன என்று அவளுக்குத் தோன்றியது. கடைசியாக அரசு பேருந்தில் சென்று பத்து வருடம் இருக்குமென்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு அருகிலுள்ள பேருந்து நிலையத்தை நோக்கி நகர்ந்தாள்.

அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து சற்று மிரண்டு போனவள் , அருகில் இருந்தவரிடம் தன் அலுவலகம் வழியாகச் செல்லும் பேருந்தின் எண்ணைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள் .

10 வருடமாக வசிக்கும் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் ஒரு முகம் கூட அவள் அறிந்த முகமாக இல்லை. ஏதோ ஒரு புத்தம் புதிய ஊரில் இருப்பதைப் போன்றே அவளுக்குத் தோன்றியது.

இனி ஒருவருக்குக் கூட இடமில்லையென்று சொல்லும் அளவிற்கான கூட்டத்துடன் வந்து நின்ற அனைத்து பேருந்துகளும் மேலும் சிறு கூட்டத்தை ஏற்றிக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தபின் பேசாமல் கார்லயே போய்டலாமா என்று யோசித்துப் பின் நோ நோ ..பஸ்லயே போலாமென்று சொல்லிக்கொண்டாள்.

Client meeting, onsite call , status meeting , escalation Email, production issue போன்ற பரபரப்பிற்கு பழக்கப்பட்டவளுக்கு அங்கு நிலவிய காலை நேர பரபரப்பு அனைத்தும் அந்நியமாகவே தோன்றினாலும் அங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் கவனித்துக்கொண்டிருந்தாள்.

அங்கு நடக்கும் எதையுமே கண்டுகொள்ளாமல் செல்போனில் சிரித்துச் சிரித்து வழிந்துகொண்டிருந்த இளைஞர் ..பள்ளிச் சீருடையுடன் காத்திருந்த மாணவர்கள் ... பாண்டு மண்வெட்டியுடன் நின்றுகொண்டிருந்த கட்டிட தொழிலார்கள் .. வியாபாரிகள் , அலுவலகம் செல்வோர் , சிறுவண்டியில் கடலை விற்றுக்கொண்டிருந்தவரென்று வேறு ஒரு வாழ்வியல் அங்கு இயங்கிக்கொண்டிருப்பதை பேருந்து வரும்வரை பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த வாழ்வியலில் அவளால் பொருந்திப்போக முடியவில்லை, அந்த வாழ்வியலும் அவளுக்குப் பொருத்தமானதாக இல்லை.

அவளின் பேருந்து வந்தவுடன் ஏறுவதற்கு முன்னே சென்றவளை கூட்டம் அதுவாக பேருந்துக்குள் இழுத்துச் சென்றது , என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் அவள் பேரூந்துக்குள்ளே சென்றுவிட்டாள். அருகிலிருப்பவர்களின் மூச்சுக்காற்றின் வெப்பம் மேலே படும் அளவிற்கான கூட்டம். திரும்பி நிற்பதற்குக்கூட இடமில்லை, உள்ளே அதீத புழுக்கம் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.

அடுத்த நிறுத்தத்தில் அவள் அருகிலிருந்த ஓர் அம்மா எந்திரித்தவுடன் இவளுக்குச் சன்னலோரத்தில் உட்கார இடம் கிடைத்து. மிகப்பெரிய புழுக்கத்திலிருந்து விடுபட்டுப் புதியக்காற்றைச் சுவாசித்த சுகந்தி சுற்றி ஒரு பார்வை பார்த்தாள்.

காற்றுகூடப் புகமுடியாத கூட்டத்திலும் டிக்கெட் டிக்கெட் என்று கூவிக்கொண்டு ஒவ்வொருவரிடம் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துநரிடம் ஒரு காரப்பாக்கம் ப்ளீஸ் என்று கேட்டு டிக்கெட் வாங்கிக்கொண்டாள்.

பின் சீட்டில் இரண்டு பூக்காரம்மாக்கள் கதைபேசிக்கொண்டே பூ கட்டிக்கொண்டு இருந்தனர். பேருந்தின் குலுக்கல், உள்ளே இருக்கும் அதீத புழுக்கம் , வெளியே வாகனங்களின் புகையுடன் இரைச்சலைகள் இவை எதையுமே பொறுத்தப்படுத்தாமல் முன்சீட்டில் ஓர் அம்மா அமைதியாகத் தூங்கி கொண்டிருப்பதைப் பார்த்து கொடுத்து வெச்சவங்க என்று நினைத்துக்கொண்டாள்.

கடைசிப் படிக்கட்டில் கால் கட்டை விரலை மட்டும் வைத்துக்கொண்டுதொங்கிக்கொண்டு வந்த பத்துப் பேரில் ஒரு கல்லூரி மாணவர் முன் சீட்டில் அமர்ந்திருக்கும் பெண்ணின் கவனத்தை ஈர்க்கப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருந்தார் , தேவைப்பட்டால் தலைகீழாகத் தொங்குவதற்கும் தயாராக இருந்ததைப் பார்த்து "பசங்க இன்னும் மாறவேயில்லை" என்று நினைத்துச் சிரித்துக்கொண்டவளின் எண்ண ஓட்டங்கள் அவளின் கல்லூரி காலத்திற்குச் சென்று வந்தது.

இதனிடையே கடைசிச் சீட்டில் அமர்ந்திருந்த ஒருவரை

"ஹலோ ..எந்திரிங்க , இது லேடீஸ் சீட்டு" என்று ஒரு பெண்மணி அதட்ட ...

"நான் ஏன் எந்திருக்கணும் .. இது ஜெனரல் சீட்டு தான் .. நாங்களும் உட்காரலாம்

"இல்லை இது லேடீஸ் சீட்டு தான் எழுந்துருங்க" என்று மீண்டும் சொல்ல

எந்திரிக்கலாம் முடியாது" என்று அவர் சொல்ல ..

இருவருக்கிடையே ஒரு வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருந்தது..

(நீங்களாவது சொல்லுங்கள் , கடைசிச் சீட்டு யாருக்கானது )

என்னமா .. ஆபிசுக்கா போற ? என்று பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியம்மா சட்டென்று கேட்க ..

சற்று திகைத்து பார்த்தவள் ... ஆமாம்மா ஆபிஸ் தான் போறேன் என்றாள்..

இன்னா வேலை பாக்குற ?

அது ...நான் ப்ராஜெக்ட் என்று இழுத்தவள் .....கம்யூட்டர்ல வேலை பார்க்கிறேன் என்று முடித்துக்கொண்டாள் ...

ஓ ..சாப்ட்வேர் கம்பெனியா ... என்று அந்த அம்மா சொல்ல

ஆமாம்மா ...சிரித்துக் கொண்டே சாப்ட்வேர் கம்பெனி தான் என்று சொல்லி முடிப்பதற்குள் ..

உன்னாலதாம்மா மெட்ராஸில் வீட்டு வாடகைலாம் ஏறிப்போச்சுனு சொல்லிவிட்டு, வெடுக்கென்று அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டார் அந்தப் பெரியம்மா ..

இதைச் சற்றும் எதிர்பார்த்திராத சுகந்தி என்ன சொல்வேனதென்று புரியாமல் முழித்தாள் .. "என்னால எப்படி வீட்டு வாடகை ஏறிச்சு, நானே இன்னும் வாடகை வீட்ல தான் இருக்கன்" என்று நினைத்துக் கொண்டவள் பதில் எதுவும் சொல்லாமல் மீண்டும் வேடிக்கை பார்ப்பதை தொடர்ந்தாள். அந்தப் பெரியம்மாவின் கேள்வி இவளிடம் எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

அந்தப் பேருந்து பயணத்தில் சுகந்தி கண்டவையும் கேட்டவையும் அவளின் இன்றைய வாழ்க்கைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் அவள் வேறு ஓர் உலகத்தில் அகப்பட்டுக் கொண்டதாகவே அவளுக்குத் தோன்றியது. அந்தப் பேருந்து பயணம் பல புதிய அனுபவங்களை வழங்கிக் கொண்டிருந்தது. ஆபிஸ் பேருந்தில் ஏறியவுடன் "head -செட் " மாட்டிக்கொண்டு கண்ணைமூடி ஆபிஸ் வாசலில் கண்ணைத் திறக்கும் சுகந்திக்கு இந்தப் பயணம் படு சுவாரஸ்யமாகவே இருந்தது.

நகரப் போக்குவரத்து நெரிசலில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒவ்வொரு நிறுத்ததிலும் சிலரை இறக்கியும் ஏற்றியும் சென்றாலும் கூட்டம் மட்டும் குறைந்ததாகவே அவளுக்குத் தெரியவில்லை. கூட்டம் குறைவதற்குள் அவள் இறங்கவேண்டிய காரப்பாக்கம் அருகில் வந்துவிட , இறங்குவதற்குச் சீட்டிலிருந்து எழுந்து படிக்கட்டு அருகில் வந்தாள்.

அவள் ஆபிஸ் வாசலில் இருக்கும் நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன் இறங்கிக்கொண்டாள். அங்கிருந்து பேருந்து புறப்படும்வரை நின்று பேருந்தை பார்த்துக்கொண்டே இருந்தவள் இனி அடிக்கடி அரசு பஸ்சில் வரவேண்டுமென்றும் நினைத்த நொடியில் அவளின் செல்போன் சிணுங்கியது.

எடுத்து ஹலோ சொன்னாள்..

சுகந்தி, "Production issue, bridge இல் join பண்ணுங்கள்"

சரி என்று தொடர்பை துண்டித்தாள்

Teleconference bridge இல் இணைந்தவுடன், அதுவரை அவள் மனதில் ஓடிய அனைத்தையும் ஒரு நொடியில் மறந்துவிட்டு... "Hello, This is Suganathi here" என்றாள்.

- விஜய் பக்கிரி