இரும்பு காந்தத்தை மட்டும்தான் தன் வசம் ஈர்க்கும் என்ற விஞ்சான உண்மையை நம்புவீர்களானால் உங்களுக்கு ஒரு கூடுதல் செய்தி. இரும்பு மக்களையும் அதே அளவு ஈர்க்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஒரு நடை என்னுடன் புற நகர் மின்சார ரயில் தடத்திற்கு வந்தால் நான் உங்களின் கண் முன்னே உதாரணத்துடன் விளக்குவேன். குறிப்பாக காலை ஒன்பது மணியிலிருந்து பத்து மணி வரை அதிகமான ஈர்ப்பு விசையுடன் இருக்கும். பிறகு மெல்லக் குறைய ஆரம்பித்து மாலை ஐந்திலிருந்து ஏழு வரையும் இந்த ஈர்ப்பு மிண்டும் முன்பு போல அதிகவிசையுடன் தொடரும்.

human shadows faceless

தடக் தடக் என்று குழந்தையின் முதல் நடையில் மெல்ல மெல்ல ஆரம்பித்து, சிறிது இறுமாப்புடன் நெஞ்சை நிமிர்த்தி ஒரு குறிப்பிட்ட விசையுடன் தொடர்ந்து, கடைசியாக வாழ்ந்து முடித்த முதியவரின் தளர் நடையில் ரயிலடி மேடையில் மூச்சு முட்டி நிற்கும்.

கிண்டி ரயில் தடத்தில் வண்டி நின்றதும் ஈர்ப்பு விசையில் இருந்து என்னை பிய்த்தெடுத்து வேளியேற்றினேன். அன்றைய அலுவலக வேலைகள் மனக்கண் முன் தோன்றி என் விசையை மேலும் முறுக்கேற்றியது. நடையின் வேகத்தைக் கூட்டினேன். சிறு கல்லைப் போட்டவுடன் சீரான வேகத்துடன் கரையைத் தீண்டும் நீர் வட்டங்களைப் போல மக்கள் தத்தம் அலுவலகங்களில் சரணடைந்தார்கள்.

கால்களைப் பற்றிய கணக்கெடுப்பில் அவன் மிகவும் திவீரமாக இருந்த ஒரு நாள் அவனை ஆழ்ந்து கவனித்தேன். கால்கள் அவனைக் கடந்து போகும் போதெல்லாம் அமைதியாகப் பார்ப்பதும், சிரிப்பதும், சில சமயம் மிகவும் சப்தமாக எக்காளமிட்டுச் சிரிப்பதும் அவனை ஒரு மனநோயாளி என்ற பிடிவாதமான பிம்பத்தை அவனுள் திணித்திருந்தது. அவனின் மௌனத்தை நூறு சதவிகித ஒப்புதல்களாக ஏற்றுக்கொண்ட மக்கள் அவனின் சுயத்தை வெண்டுமளவு மறக்கச் செய்திருந்தார்கள். பருத்த கால்கள், உழைத்து முறுக்கேறிய கால்கள், நோயினால் வற்றிச் சூம்பிய கால்கள், குழந்தையின் கால்கள் என ஏராளமான கால்கள் அவன் பட்டியலில் இருந்தது. அவனைக் கடந்து சென்ற கால்களின் சொந்தக்காரர்கள் அவன் முணுமுணுப்பதை கேட்டு அவனின் பார்வையை ஏளனத்துடன் புறக்கணிக்கும் போது அதை அவன் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு மன உளைச்சல் அடையாமல் ஒரு ஆராய்ச்சி மாணவனின் ஆர்வத்தில் அடுத்த வேறு கால்களை கவனிக்க ஆரம்பித்துவிடுவான். சரசரவென்று அவனைக் கடந்து செல்லும் சில மனிதர்களின் கால்களுக்கு அவன் பெயர்கூட வைத்திருப்பதாக பலர் கூறினார்கள். என் கால்களுக்கு அவன் என்ன பெயர் வைத்திருப்பான் என்று யோசித்தேன். அவசரம், அவதி என்று ஏதாவது ஒரு பெயரை வைத்திருப்பான். என்றாவது ஒரு நாள் அவன் முன் உட்கார்ந்து அவன் முகத்தை எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்று நான் பல சமயங்களில் நினைத்ததுண்டு.

அன்று அவனை அதே இடத்தில் பார்த்த போது ஏதாவது சாப்பிட வாங்கிக்கொடுத்தால் என்ன என்று யோசித்தேன். அருகில் இருக்கும் கடையில் இருந்து டீயும் பன்னும் வாங்கிக் கொடுத்தேன். டீயை உறிஞ்சிக் குடித்தவன் தோசையை பிய்த்து அருகில் இருக்கும் நாய்களுக்குப் போட்டான். இந்த சந்தர்ப்பத்தைக் காரணமாக வைத்து அவன் முகத்தை ஒரு முறை பார்த்துவிடலாம் என்று உற்றுப்பார்த்தேன். வழக்கத்திற்கு அதிகமாகக் குனிந்திருந்தான். நெற்றியில் வழிந்த தலை முடி அவன் முகத்தை மேலும் விகாரமாக்கியது.

அனுதினமும் அவனைக் கடந்து வரும் போது ஒரு நொடி தடுமாறி நிற்பேன். பிறகு அவனைக் கடந்து போய்விடுவேன். மறுபடியும் மாலை அலுவலகம் விட்டுச் செல்லும் போது ஒரு தடவை. இப்படியாக ஒரு துப்பறிவாளன் போல கிடைக்கும் சமயங்களில் அவனைக் கண்காணிக்க ஆரம்பித்தேன். மின்சார ரயிலில் பயணித்தபடியே அவனுக்கு வித விதமான முகங்களை பொருத்திப் பார்ப்பேன். எதுவும் சரியாக அமையவில்லை. சில சமயம் அலுவலக ஓய்வு நேரங்களில் அவனைப் பற்றி அதிகம் நினைக்க ஆரம்பித்தேன். அவனைப் பற்றித் தெரிந்துகொள்வதை விட அவன் முகம் எப்படி இருக்கும் என்பதான தவிப்புடன் அவனை தினமும் கடந்து சென்றுவிடுவேன்.

ஒவ்வொரு முறையும் அலுவலகம் செல்லும் வழியில் அவனைப் பார்ப்பேன். நடை மேடையின் ஓரத்தில் குனிந்தபடியே உட்கார்ந்திருப்பான். அழுக்கேறிய அவனது உடையும், உடலும் கடந்து செல்வோரின் முகத்தைச் சுளிக்க வைக்கும். இது நாள் வரை யாரும் அவனின் முகத்தை பார்த்ததேயில்லை. மாலை வேலை முடிந்து வீடு செல்லும் போது சிறிது நேரம் அவனை அவதானிப்பேன். அவனுடைய பார்வையின் உயரம் இரண்டே அடிகள்தான். வளைந்த முதுகுடன் தாங்கலாக தன் இடது கையை தரையில் ஊன்றிக்கொண்டு சிறிது நேரம் தரையைப் பார்த்தவாறு ஏதோ சிந்தனையில் இருப்பான். பல சமயங்களில் அவனைக் கடந்து செல்பவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருப்பான். அவனின் முகத்தை இதுநாள் வரை யாரும் பார்த்ததில்லை. நெற்றியிலிருந்து முகத்தில் வழிந்து படர்ந்த தலை முடி அவனை ஒரு சிறைச்சாலை கம்பிகளிற்கிடையில் இருந்து ஏக்கமாக பார்ப்பதான தோற்றத்தைக் கொடுக்கும்.

அந்த தெளிவற்ற பிம்பத்தை வைத்து நீங்கள் எவ்வளவு பெரிய ஓவியாராக இருந்தாலும் அவன் முழு முகத்தை வரையவே முடியாது. ஒரு நாள் இரண்டடிக்கு சற்றே உயரம் குறைந்த குழந்தை ஒன்று அவனின் முழு முகத்தை பார்த்ததாக மழலையில் பிதற்றியது. குழந்தையின் மொழியைப் புரிந்துகொண்ட தாய் மிகவும் வியந்து போனாள். கண்களை விரித்து குழந்தை சொல்வதை மீண்டும் கேட்டு மறுபடியும் உறுதி செய்து கொண்டாள். குழந்தை என்னைப் பார்த்துச் சிரித்தது.

அன்று வியாபாரிகள் கடையடைப்பு. அலுவலகம் செல்லவா வேண்டாமா என்பதான குழப்பத்தில் மேலாளர் தொலைபேசியில் அழைத்து எப்படியாவது வரவேண்டும் என்று கட்டளையிட்டார். மெதுவாக வந்தால் போதும். ஆனால் கண்டிப்பாக வந்துவிடவேண்டும் என்று கூற, முதன் முறையாக அலுவலகத்திற்கு பதட்டம் இல்லாமல் கிளம்பினேன். வழக்கம் போல மின்சார ரயில் ஓடியது. கிண்டியில் இறங்கினேன். சுற்றும் முற்றும் பார்க்க அவனைக் காணவில்லை. அவன் இருந்த இடத்தில் இருந்த வெறுமை என்னை அதிகம் பாதித்தது. அருகில் இருக்கும் சிலரிடம் கேட்க தங்களுக்குத் தெரியாது என்று கை விரித்தார்கள்.

மாலை வீடு திரும்பும் போது கிண்டி ரயிலடியில் ஒரே கூட்டம். அரை மணி நேரமாக எந்த வண்டியும் வரவில்லை என்று கூறினார்கள். அடுத்து வந்த வண்டியில் அவ்வளவு கூட்டம் இல்லை. வேகமாக ஏறினேன். வாயிலில் ஒரு போலீஸ் நின்றிருந்தார். பாதுகாப்பு கருதி இருக்கிறார் என்று நினைத்தேன். எதிர் வாயிலில் சிமெண்ட் சாக்கினால் எதையோ சுற்றி வைத்திருந்தார்கள். எதிர் காற்றில் சிமேண்ட் சாக்கு மெல்ல விலக கால்கள் தெரிந்தது. சட்டென ஞாபகம் வந்தது. மிகவும் பார்த்துப் பழகிய கால்கள். அருகில் நிற்கும் போலீஸிடம் விசாரிக்கலாம் என்றெண்ணி அவரை நெருங்கினேன். விசாரித்ததில் ஏதோ பிச்சைக்காரன் என்றும், பல்லாவரம் பக்கம் தண்டவாளத்தில் விழுந்து கிடந்தான் என்றும் கூறினார். இறுதியாக இப்போதாவது அவன் முகத்தைப் பார்க்க மனம் துடிக்க அவன் அருகில் வந்து நின்றேன். எதிர் காற்றின் விசையில் மொத்த சாக்கும் விலக அவன் முகத்தை முதன் முதலாகப் பார்த்தேன். அச்சு அசலாக அவன் என்னைப் போலவே இருந்தான். என் அருகில் இருந்த அலுவலக நண்பரும் அவன் அவரைப் போலவே இருப்பதாகக் கூறினார்.

- பிரேம பிரபா