பயத்தில் இருப்பவர்கள்  பெரும்பாலும் ஒரே மாதிரி தான் யோசிப்பார்கள் என்று நம்பினேன். அப்படியே நடந்தது.

பணம் எப்படி யோசிக்க வைக்கும் என்று யோசித்தேன். அது தான் நிகழ்ந்தது.

அந்த காட்டு வழியே.... 5 லட்சம் வைத்திருக்கும் பையை சுமந்து கொண்டு நடந்து கொண்டிருந்தேன். இருள் சூழ்ந்த வழி. அதுவும் சுடுகாடு ஒன்று பறந்து விரிந்து கிடந்த இடமது. வானம் பார்த்த நிலவின் ஒளியை ஆங்காங்கே தூவிக் கொண்டிருந்த ம்ம்ம்ம்ம்ம்....... என்ற சப்தத்தின் குரல்வளை நெறிக்கும் திறவு அங்கே வியாபித்திருந்தது.

குடித்து விட்டு சீட்டாடிக்கொண்டு இருந்த அந்த இருவர் என்னை பார்த்து விடக் கூடாது என்று நினைத்துக் கொண்டே வேகமாக நடக்க நடக்கவே 

"ஏய்..... யாரா அது......?!" பார்த்து விட்டார்கள். கேட்டும் விட்டார்கள்.

பார்த்ததுமே... கேட்டதுமே முகத்தில் துணி கட்டியிருந்த நான் ஓடத் தொடங்கினேன்...

மறு கணமே பதட்டத்தில் கல் தட்டி விட கீழே விழுந்தேன். பணம் பேக்கில் இருந்து வெளியே சரிந்தது.. வேக வேகமாக எடுத்து உள்ளே போட போட..... அந்த இருவரின் கண்களில் நான்கு நிலாக்கள் மலர...... என்னை தள்ளி விட்டு உதைக்கத் தொடங்கினார்கள். என்ன நடந்தது என்று யோசிக்கும் முன்னமே என் தலை மரத்தில் மோதி அங்கே பேய் ஓட்ட அடித்து வைத்திருந்த ஆணியில் குத்தி நிமிடத்தில் உயிர் போனது.

என்ன செய்வதென்று யோசிக்க முடியாமல்... பயத்தில்....அந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அர்த்தத்தோடு சுற்றிலும் கண்களை சுழல விட்டார்கள். வேக வேகமாக சற்று உள்ளே தள்ளி குழி ஒன்று தோண்டினார்கள். பதட்டம்... பயம்.... தடுமாற்றம் என்று கொஞ்சம் ஆழம் கிடைத்ததும் என்னை நகர்த்தி உள்ளே கிடத்தி தோண்டிய வேகத்தை விட வேகமாக மண்ணை போட்டு மூடினார்கள்.

சுடுகாடு எங்கும் இருளின் நிறத்தில் வெம்மை பரவத் தொடங்கி இருந்தது...

அடுத்த கணம் பணத்தை எடுத்துக் கொண்டு பேய்களை போல காற்றில் கரைந்து மறைந்தார்கள்.

5 மணி நேரத்துக்கு முன்பு....

அதே காட்டுப் பகுதியில் கொஞ்சம் உள்ளே தள்ளி 50 லட்சம் வைத்திருந்தவனை பணத்துக்காக கொலை செய்து விட்டு எப்படி அவனை புதைக்க என்று யோசித்துக் கொண்டு சுடுகாட்டை வந்து நோட்டம் விடுகையில் தான் இந்த இருவரைக் கண்டேன்.

யோசித்தேன்... யோசித்தேன்....

பதட்டப் படுபவர்கள் எல்லாருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் யோசிப்பார்கள். இவர்களை வைத்தே குழி தோண்ட வேண்டும். என்ன செய்யலாம். யோசித்தேன்.

கொள்ளை நடந்தது.. கொலை நடந்தது... பிணம் மறைக்கப்பட்டது என்று நாளை எந்த பிரச்சினை வந்தாலும்.... அது எல்லாமே இவர்களை சுற்றியே பின்னப்பட வேண்டும். நடந்த சம்பவம் உண்மை. ஆனால் உள்ளே நடந்த சம்பவம் வேறு. பொய் சொல்லும் போது கொஞ்சம் நிஜம் சேர்த்து சொல்ல வேண்டும் என்பது போல இந்த கதையை பின்னினேன்.

50 லட்சத்தில் இருந்து 5 லட்சம் மட்டும் எடுத்துக் கொண்டு வேண்டுமென்றே அவர்கள் கண்ணில் பட்டேன். நான் போட்ட திட்டம் அப்படியே நடந்தது.

வேகமாய் எழுந்து  பெரு மூச்சு வாங்கினேன். மரத்துக்கு பின்னால் சாய்த்து வைத்திருந்த அந்த 50 லட்ச பிணத்தை உறை போட்ட என் கைகள் கொண்டு பிடித்து இழுத்து வந்து குழிக்குள் தள்ளி மூடினேன்.

என் திசை இந்தப் பக்கம் சிறகு விரித்திருந்தது... வேகமாய் ஓடி காட்டுக்குள் மறையத் தொடங்கினேன். சிறு வயதில் நீருக்குள் மூச்சடக்கி பழகியது ஞாபகம் வந்தது...

- கவிஜி