இந்தக் கதையில் நான் யாரென்று தெரியவில்லை. அதை இப்போது யோசிக்க போவதும் இல்லை.

ஊரே பற்றி எரிந்து கொண்டிருக்கையில் பிடில் வாசித்துக்கொண்டிருந்தானாம் நீரோ மன்னன். அப்படித்தான் இருந்தது அந்த இரவு. இரவுகளின் பிடியில் நடுங்கிக் கொண்டு தவழும், எதுவோ விரட்டும் எதுவுமற்றவனாகி இருந்தான் அவன். 

அவன் குடித்துக் கொண்டிருந்தான். 

பக்கத்து இருக்கையில் குடித்து விட்டு வழக்கம் போல செய்த ரகளையில் பார் சப்பளையருக்கும் குடித்து தலை தொங்கிய அந்த நால்வருக்கும் வாய் சண்டை மற்றவர் அம்மாவின் அந்தரங்கத்தை புட்டு புட்டு வைக்க, அந்தந்த மகன்களின் ரத்தம் கொதித்து தலைக்கேறிய கோபத்தில் ஆளுக்கொரு போத்தலை மாற்றி மாற்றி மண்டையில் அடித்து கொண்டார்கள். பார் சப்ளையர்கள் ஆறு பேர் சேர்ந்து கொண்டு கிட்டத்தட்ட மட்டையாகி விட்ட அந்த நான்கு நல்ல குடும்பத்து பசங்களை புரட்டி எடுத்தார்கள். அந்த அறையில் ஆங்காங்கே வட்டமாய் சதுரமாய் முக்கோணமாய் ஒற்றையாய் இரட்டையாய்....அமர்ந்து, நின்று, படுத்தபடி குடித்துக் கொண்டிருந்த நண்பர்கள் அனைவரும் மிரண்டு பயந்து ஓடி அறையில் ஒரு மூலைக்கு செல்ல அல்லது மெல்ல, வேகமாக வெளியேற... அவன் மட்டும் அத்தனை களேபரத்திலும் கவனம் சிதையாமல் குடித்துக் கொண்டிருந்தான். 

மண்டைக்கு குறி வைத்த போத்தல் நூலிழையில் தவறி சுவற்றில் பட்டு தெறித்து சிதறியது. சிதறிய அத்தனை முகங்களிலும் குருதி வழிந்தது. வழிந்த துளி ஒன்றோ இரண்டோ அவன் மீது தெறிக்காமலில்லை. தெறித்தாலும் அறை எங்கும் செத்துப் போன சொல் பூண்ட உவமையென அவன் தன்னை தகவமைத்துக் கொண்ட இருத்தலில்......போதை மிளிரத் துவங்கியிருந்தது.

அவன் தன்னை அசை போடும் நெடுந்துயர் சுவற்றில் அடித்து உடைந்த சில்லிலெல்லாம் பிரபஞ்சம் தாண்டி நிறைந்திருந்தது அவனின் ஏக்கம்.

"என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது ஏன் சுழலுகிறது எதற்கு இந்த பிரபஞ்சம்.. ஏன் பிறப்பு.. எங்கே வாழ்வு..."-மனம் தேடும் தனிமைக்குள் ஆற்றாமையின் சூடு அவனை அப்பியிருந்தது. பகல் முழுக்க அவன் செய்யும் பணி அவனை தீரா துயருக்குள் மூழ்கடித்துக் கொண்டிருந்தது.

எவன் விதைத்த கனவோ...பி இ படிப்பு...அவனுள் முளைத்திருந்தது. கல்லூரி முடித்த கையோடு தேடு தேடு தேடு என்று அவன் திசையெல்லாம் தேடல்களே. கிடைத்தது எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை. பகல் முழுக்க அந்த ஷோ ரூமில் அவன் மட்டும் அமர்ந்திருக்கும் வேலை. ஒரு கணிப்பொறி கூட இல்லாத ஒரே ஒரு சுழலும் மின்விசிறி கொண்ட ஆஸ்பேஸ்ட்டாஸ் சீட்டால் வேயப்பட்ட அந்த குறுகிய அறைக்குள் பல நாள்பட்ட எலியின் வாசத்தோடு அவனை கடக்க ஆரம்பித்திருந்தது அவன் கண்ட பெருங்கனவு.

வேறு வேலைக்கு முயற்சி செய்து கொண்டே இருக்கிறான். எதுவுமே நடக்கவில்லை. கிடைக்கும் இந்த 8000 சம்பளத்தில் 5000 வீட்டுக்கு,. மீதி 3000த்தில் ரூம் வாடகை... சாப்பாடு...தினசரி செலவுகள். போதவில்லை. பணமும் போதவில்லை. மனமும் போதவில்லை. எங்கோ நின்றுவிட்ட கழிவிரக்கத்தில் அவன் யாரிடமும் பேசுவதில்லை. இப்போதெல்லாம் பேச்சுக்கள் தீர்ந்து விட்டன என்பது போலத்தான் அவனின் உடல்மொழி இருக்கிறது. எப்போதாவது வரும் வாடிக்கையாளரை திசை திருப்பி குடோனுக்கு அனுப்பி வைப்பது மட்டுமே அவன் வேலை. அதற்கு சில சொற்கள் போதுமானதாக இருக்கிறது. நேரம் மறக்கத் தொடங்கினான். காலம் அவனுக்கு ஒரு பொருட்டில்லாமல் போனது. ஒரு மிருகத்தின் வாழ்வுதனை தன் மேல் ஏற்றிக் கொண்டு கூண்டுக்குள் அடைபட்ட குரங்கின் மனதோடு எதுவோ வெடித்துக் கிளம்பும் தருணத்தில் பின் மதியக் காடு ஒன்று அவனுக்குள் முளைக்கும் போது மேசைக்கு கீழே சுய இன்பம் செய்து கொண்டிருக்கும் அவனின் 24 வயது விசை.

அவன் பார்வை எதிரே சாலையில்.... நகர சாபமென போய்க் கொண்டும் வந்து கொண்டிருக்கும் தொடர் வாகனத்தின் பேரிரைச்சலில் லயித்திருக்கும். உச்சம் தொடும்போது மேசையின் மீது வயிற்றை எக்கி யாருக்கும் தெரியா உடல் மொழியோடு அடங்கி சுருளும் போது ஏனோ அழுகத் தோன்றும். தன் மீதே வெறுப்புமிழ... ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து கடைசி பக்கத்திலிருந்து வெறித்தனமாக படிப்பான்.

கண்ணாடிக் கூண்டில் ஒரு வதை செய்யும் ஒப்புக் கொடுத்தலின் விதியோடு அவன் வாழ்ந்து செத்துக் கொண்டிருந்தான். இன்று குடிக்க வேண்டும் போல தோன்றியது. அந்த தோன்றலின் அழுத்தம் ஆதி முகத்தை கிழித்து அம்மணம் பூசிக்க கொள்ளும் சாபத்தை விலக்குவதாக நம்பினான். மாலை, வேலை முடிந்ததும்...காலே சுமையாகி காலமே இமையாகி நடந்து வந்து சேர்ந்திருந்த இடம் கவுண்டம்பாளைய மது கூடம். 

இருப்பதிலேயே மட்டமான சரக்கை வாங்கி வந்து அமர்ந்தான். நேரம் கொடுக்க தேகமற்று வேக வேகமாய் முதல் வட்டத்தை முடித்தான். உடல் எரிய உள்ளம் புரிய மெல்ல நேரத்தை நகர்த்தினான்.

அடி வாங்கி ரத்தம் சிந்திய அந்த நால்வர்... நொண்டிக் கொண்டும்... தலையை பிடித்துக் கொண்டும்.. பிய்ந்து தொங்கிய கன்னத்தை அள்ளிக் கொண்டும்... வெறி கொண்ட கண்களில்... "வேற ஊர்லருந்து எங்கூருக்கு வந்து பார்ல வேலை செய்யற உங்களுக்கே இவ்ளோ இருந்தா, இதே ஊருக்கார்ங்கடா நாங்க... இருங்க.. யாருனு காட்றோம்.. இந்தா இப்போ வர்றோம்" என்று முணங்கிக் கொண்டே நகர்ந்தார்கள். ஒருவன் நாயைப் போல கிடந்து நாலு காலில் நடந்தான். முதுகில் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. இத்தனை நேரம் மறைந்து நின்று கொண்டும்...பம்மிக் கொண்டும்....வேடிக்கை பார்த்தபடியே குடித்துக் கொண்டிருந்த கூட்டம் மெல்ல மெல்ல போத்தல் சில்லுகள் சிதறி ரத்தம் சொட்டிக் கிடந்த அறைக்குள் வந்து வந்து தாறுமாறாக தடம் புரண்டு கிடந்த அவரவர் இருக்கைகளை எடுத்து சரியாக கிடத்தி அமர்ந்தார்கள். 

அடித்து கலைத்திருந்தவர்கள்.. அவர்களின் மறு விஜயத்துக்காக கம்பிகளையும் கட்டைகளையும் எடுத்து தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

எதற்கும் அசையாமல் பிணம் போல குடித்துக் கொண்டிருந்தான் அவன். அவன் சட்டையில் கூட சொட்டிக் கொண்டிருந்தது எவனோ ஒருவன் வாசித்த கோபம்.

யுத்தத்தின் இடைவெளி அங்கே பெரும் மௌனத்தை கிளறிக் கொண்டிருந்தது.

ஒரு மூத்த திருநங்கை பாதி முலை காட்டிக் கொண்டு உள்ளே வந்தாள்.

கழுத்து வெட்டிய திரும்பல்களுடன்... எப்போதும் வரும் அதே ஆழ்மன புலம்பல்களோடு... தீட்டிய கண் மை இன்னும் பளபளவென மின்ன... அதீத பார்வையை மங்கிய வெளிச்சம் கொண்ட அந்த அறையெங்கும் படர விட்டு......"பாவி பசங்க.. குடிச்சா மூடிட்டு இருக்கவே மாட்டானுங்க... இதே வேலையா போச்சு... ........... பசங்க..." என்று கரகரத்த குரலில் முணுமுணுத்துக் கொண்டே பார்த்து பார்த்து பூனை நடை நடந்தபடியே உள்ளே வந்து ஒரு வட்டமடித்து நின்றாள். 

ஆங்காங்கே நீட்டிய கைக்கு 10, 20 என்று காசு வாங்கிக் கொண்டு சில பேரிடம் கண்கள் மட்டுமே வாங்கிக் கொண்டு....." இந்தா..... முடிஞ்சா குடு.. இல்லனா விடு.. அத விட்டு வேண்டாத பேச்செல்லாம் பேசாத...... சொல்லிட்டேன்......." என்றபடியே பக்கத்து டேபிளில் முறைத்துக் கொண்டு வந்தவள்.. படக்கென்று சிலை போல் அமர்ந்திருந்த அவனிடம் சிலை போல நின்றாள்.

இடுப்பில் கை வைத்தபடி கழுத்தை சற்று முன்னால் காற்றில் அசைய விட்டு இடது பக்கமாக உள்ளிழுத்து, அப்படி இழுக்கையில்.. இடது புருவம் சற்று மேல் எழும்பி ஒரு சிறு வட்டமடித்து திரும்பி இருக்க...மொத்த முகமும் மலர்ந்து அவனைப் பார்த்தபடியே......."என்ன....... லவ் பெய்லியரா... இவ்ளோ சோகம் கூடாதும்மா...... ஜாலியா இருக்க வேண்டிய வயசு.. இப்டி இருளடைஞ்சா கிடக்கறது....?" - என்று கூறினாள். தலையை சற்று கீழே இறக்கி அவனின் முகத்தை அத்தனை கிட்டத்தில் பார்த்தாள். 

குடியிலிருந்தும்...மனக் கடுமைலிருந்தும் மனதை சற்று திருப்பி அவளைக் கண்டவன் திரும்பவும் கீழே குனிந்து கொண்டு குடிப்பதில் கவனத்தைக் குவித்தான்.

ஆழம் பார்த்து விட்டவள் பேச்சை நயமாக்கினாள். பேரத்தை ஞாயமாக்கினாள்.

"ஹெலோ... காசு குடு" என்று கைகளை நீட்டி படக்கென்று அவன் கன்னத்தை கிள்ளினாள். உள்ளுக்குள் ஏதோ பற்றிக் கொள்வது போல இருந்தது. பாதி கண்களை அவள் முலை வாங்கிக் கொள்ள... தடுமாற்றம் திசை திருப்பும் முனைகளில் மீதி கண்களைக் காட்டி "போ...." என்பது போல பார்த்தான்.
"வாழ்க்கை அப்டித்தான் பிரெண்ட்... எல்லாத்துக்கும் மருந்து இருக்கு... 500 ரூபாய் இருந்தா.................."  

அவன் தலை குனிந்தே அமர்ந்திருந்தான்.

"300 ரூபாய் இருந்தா.................." 

அவன் தலை குனிந்தே இருந்தது.

முகத்தில் கெட்ட வார்த்தையை சுமந்து கொண்டே........"150 இருந்தா...."

அவன் தலை நிமிர்ந்து பார்த்தான். 

அவ்ளோதான் இருக்கா........? நினைச்சேன்...! ........"சரி......குடு..." என்று மார்பை நீட்டினாள். முந்திக் கொண்டு கை வாங்கியது.

சுற்றும் முற்றும் பார்த்தபடியே... பணத்தை எடுத்துக் கொடுத்தான். அவன் கைகள் நடுங்கின. 

"என்ன டுபுக்கு.......இன்னைக்கு தேத்திட்ட போல" என்று சப்தம் வந்த திசையை வலது கையால் "பேசாம இரு" என்று காக்காயை விரட்டுவது போல செய்து விட்டு அவனிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.

மனம் சுற்றி சுற்றி பார்க்க...முகத்தை வேறு எங்கோ திருப்பிக் கொண்டே... டம்ளரில் மிச்சம் இருந்த சரக்கை படக்கென்று ஒரே மிடறில் விழுங்கினான். போத்தலில் மீதம் இருந்த கால்வாசி சரக்கை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு எழுந்தான். உடல் சற்று தள்ளாடி பின் நின்றது.

"இந்த பாருக்கு பின்னால போ....ஒரு மூத்திர சந்து வரும்.....அங்க.....நம்மாளு ஒருத்தி நிப்பா......நான் வாட்சப்ல மெசேஜ் போட்டுட்டேன்.....போ... எல்லாம் அவ பார்த்துக்குவா..... சரியா செல்லம்... என்ஜாய்......."என்று சொல்லி நகர்ந்தாள்.

இருட்டும்.....போதையும் அவனை கிளர்ந்தெழ செய்தது. உள்ளுக்குள் கொப்பளிக்கும் எல்லாவற்றுக்கும் வடிகால் தேடும் ஆதி பழக்கம்தான் என்றாலும்.. மனதுக்குள் பயம் உருண்டோடியது. 

"என்ன பண்ணிட்டு இருக்கேன்....ஏன் இப்டி இருக்கேன்.. எனக்கு மட்டுமே ஏன் இப்டி நடக்குது......நான் ஒன்னு நினைக்க மனசு ஒன்னு நினைக்குது" அவன் புலம்பிய எதுவும் அவன் காதில் விழவே இல்லை. மூத்திர சந்து உடலையே பொத்த வைத்தது. அதையும் மீறி சந்தணம் மணக்க இருட்டில் சில் அவுட் ஷாட் போல ஒருத்தி அவனின் கை பற்றி இழுத்தாள். மல்லிகையின் வாசனை மூத்திரத்தை தாண்டியது.

அவன் நடுங்கிக் கொண்டே நின்றான். மூத்திர சந்தின் இருட்டில் இரு நிழல்களாகி போனார்கள். அவளின் முகம் தெரியவில்லை. அவளுக்கும் அவன் முகம் தெரியவில்லை. முகம் தெரிந்தால் என்ன.....தெரியாவிட்டால்........ என்ன...... என்று நிழல் வளைய இருள் விலக்கி கீழே குத்த வைத்து அமர்ந்தாள்.

இருட்டு இன்னும் இன்னும் வேகமாக பரவியது போல இருந்தது. ஆன்மாவின் திரவம் அவனெங்கும் நரம்பின் முடிச்சுகள் தாண்டி எகிறி குதித்தன. காடு சொல்லும் பச்சை திமிரின் உச்சம் தொட இன்னும் இன்னும் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டியிருந்தது. 

அவள் ரயிலென தொடர்ந்தாள். வேகமாய்.. மின்னலின் கீற்றை பற்சக்கரங்கள் கொண்டிருக்க வேண்டும். 

உணர்ச்சி வயப்பட்ட உடல்மொழியில் நெளிந்தான். பேராசை ஒன்று கிளர்ந்தெழுந்து... எல்லாம் சரியென நினைக்கும் ஆசைக்குள்...நெளிந்து கொண்டே...." உன் பேர் என்ன....?"  என்று மூச்சின் வழியாக உள்ளிழுத்து வெளிவிட்டு வார்த்தைகளை வனப்பு மிக்க இருளுக்குள் படர விட்டு கேட்டான்.

"ம்ம்ம்ம்.......ம்ம்ம்......." என்று வார்த்தைகளை குதப்பியவள்...... அவன் தொடையில்...நடு விரலால் ஓவியம் தீட்டுபவளைப் போல எழுதிக் காட்டினாள். தொடையில் கிறுக்கும் அவள் விரலில்... பெண்மை வழிந்தோடுவதை உணர்ந்த போது...படக்கென்று அவள் கைகள் பற்றி இறுக்கினான். மிச்சம் இல்லாமல் அன்பை கொடுத்தாள். ஆண்மை பறித்தாள். அடங்கிய தேகத்தோடு சுவற்றில் சாய்ந்து நின்ற போது மூத்திர வாசம் குடலை புரட்டியது. எழுந்து தன்னை சரி செய்து கொண்டவள்.. கன்னத்தை தட்டி "கிளம்பு" என்பது போல ஜாடை காட்டி விட்டு இருளுக்குள் இருளாய் மறைந்து போனாள். அந்த மாயப்பேயின் வாசம் அவனோடு ஒட்டிக் கொண்டதை போல உணர்ந்தான்.

சோர்வுற்ற உடலோடு..... இன்னும் அதிகமாய் ஏறிய பாரத்தோடு மனது வலிக்க மீண்டும் உள்ளே வந்து அதே இருக்கையில் அமர்ந்தான். பாக்கெட்டில் இருந்த போத்தலை எடுத்து இரண்டு மிடறு வேக வேகமாய் குடித்தான். கலக்க எதுவுமில்லை. கலங்கிய உடலில் எல்லாமே எரிந்தது.  இன்னும் நடுக்கம் குறையவில்லை.

மீண்டும் சல சலப்பு...

"மட்சான் இவுனுங்க தான்டா... ஒருத்தனையும் விடக்கூடாதுடா.." என்று கத்திக் கொண்டே முதலில் வந்து விழுந்தது பீர் போத்தல் ஒன்று. கூட்டம் சலசலத்து பரபரத்து கலையத் துவங்கியது. ஓடியும் நடந்தும் வெளியேறியது. அவரவர் சரக்கை எடுக்க மறக்காத கூட்டம் ஓர் அற்புதமான சண்டைக் காட்சியை காணும் ஆவலோடு உள்ளுக்குள் கிளுகிளுத்தது. 

கூட்டத்தோடு கூட்டமாக சற்று முன் வெளுத்து வாங்கிய சப்பளையர்கள் மூவரும் வெளியே ஓட முயற்சி செய்ய..."எங்கடா ஓடுறீங்க..... மிச்ச பேர் எங்க... திரும்ப வந்துட்டோம்னு சொல்லுங்கடா... மிச்ச பேரையும் வர சொல்லுங்கடா..." என்று உடைந்த மண்டையை பொசுக் பொசுக்கென திருப்பிய ஒருவன் அதிதீவிரமாக கையில் வைத்திருந்த செங்கல் கொண்டு தாக்கினான். முகம் வீங்கி மண்டை உடைந்து ரத்தம் உறைந்து பிசு பிசுத்திருந்தவன் இன்னும் வேகமாக தாக்கத் தொடங்கினான். அவன் கையில் இரும்பு கம்பி துருப்பிடித்து நாக்கு நீண்டு கிடந்தது. சப்பளையர்களை உள்ளே வைத்து சுற்றி வளைத்தபடி இடுப்பிலும் வயிற்றிலும் மாறி மாறி உதைத்துக் கொண்டே......."இப்போ சொல்லுங்கடா........ பெரிய......க்காரனுங்கனு சொன்னீ ங்கள்ல.....இப்போ சொல்லுங்கடா......"என்று என்று அடித்து துவைத்தார்கள். வசமாய் வாகாய் மாட்டிய ஒருவனின் கால்முட்டியை முன்னாலிருந்து ஓங்கி ஓங்கி அழுத்தி மிதித்தான் ஒருவன். உடைய நேரமெடுத்த முட்டி சற்று நெகிழ்ந்து இடது பக்கமாக நழுவி வழக்கம் போலவே மடிந்து விழா......'அயோ.....' என கத்தி உடையும் குரலில் வலியை தெறிக்க விட்டது... சற்று முன் அதே நேரத்தில் காதை பதம் பார்த்திருந்த இரும்புக் கட்டை  ஒன்று.

அடிதடியில்... சலசலப்பில்..... தள்ளு முள்ளில் .... உருண்டு புரண்டு... அந்த அறை மீண்டும் தன் பாவங்களை சிந்தத் தொடங்கியிருந்தது. இம்முறை சற்று ஒதுங்கி நின்று வெளியேற முயற்சி செய்தபடி இருந்தான் அவன். சில திருநங்கைகள் கூட்டம் கூட்டத்தை விலக்கிக் கொண்டு "என்ன சண்டை... எதுக்கு சண்டை" என்றபடியே உள்ளே வர.....கூட்டத்தில் இருந்து ஒரு நல்ல உள்ளம்... "ஏய் உள்ள போய் மாட்டிக்காதிங்கடி..." என்று கத்த கத்தவே.... திருநங்கை கூட்டம் சற்று உள்ளேயே சென்று விட்டது. 

"எப்ப  பாரு... இதே வேலை ........... காட்டிட்டு பிச்சையெடுக்கறது.. ... ......  ... உங்களையெல்லாம்" என்றபடியே ஓங்கி இடுப்போடு சேர்த்து ஒருத்தியை மிதிக்க, அவள் தெறித்து வந்து வெளியேற தடுமாறிக் கொண்டும்.. சுவற்றோடு ஒட்டிக் கொண்டும் நின்று கொண்டிருந்த அவனின் காலடியில் விழுந்தாள். 

அதே சந்தன வாசம். சற்று முன் இருட்டில் இணைந்திருந்த அதே வாசம். விழுந்தவள்.. இடுப்பை பிடித்துக் கொண்டு வலியில் துடிக்க அவனின் மனதுக்குள் ஏதோ உடைந்தது..

விழுந்தவளை உற்றுப் பார்த்த கணத்தில் எல்லாம் புரிந்து விட்டது. அந்த முகம்.... அந்த உடல்...!

"அயோ.. அயோ... கடவுளே.. ஏன் என்னை இப்டி சோதிக்கற.. இப்டி ஒரு தப்பையா நான் பண்ணனும்.. இது அவனா இருக்காது.... இருக்க கூடாது..." என்று சுவற்றுப் பக்கம் நின்று தடுமாறியபடியே மெல்ல திரும்பி அவள் தொடையில் எழுதிய பெயர் கொண்டு பயந்து கொண்டே கூப்பிட்டான். மறுகணம், குனிந்து கீழே கிடந்தவள் தன்னை யாரோ கூப்டுகிறார்கள் என்பது போல போல தலை தூக்கி பார்க்க, படக்கென்று முகம் திருப்பிக் கொண்டான். அதற்குள் அவளின் தோழிகள் அவளைத் தூக்கிக் கொண்டு வேகமாக வெளியேறினார்கள்.

"அது என் தம்பியாச்சே...." அயோ.... அயோ" என அவன் மனம் வெந்து துடித்தது. தலையை சுவற்றில் வேக வேகமாய் முட்டினான். மூளைக்குள் இதயம் சிதறியது. 

"அந்த முகம்.....அந்த திருநங்கை.. தன் தம்பி......தன் தம்பியேதான்" என்று முழுதாக உணர்ந்த நொடியில்...."நான் போறேன்.. என்னால உங்க யாருக்கும் அவமானம் வேண்டாம்.....நான் சாகவெல்லாம் மாட்டேன்.......நான் இப்டி பொறக்க நானா காரணம்... எனக்கு ஒன்னும் வருத்தமில்லை... நான் எப்படியும் பொழைச்சுக்குவேன்..." என்று 2 வருடங்களுக்கு முன் சொல்லி போன தம்பியுடனா சற்று முன் அவன் பிழைக்க மூத்திரப்பையை வாய்க்குள் திணித்தோம்...." - நெஞ்சு நெஞ்சாய் அடித்துக் கொண்டான். சுவற்றில் தன் உடலை வேக வேகமாய் மோதிக் கொண்டவன் கையில் கிடைத்த பீர் போத்தலை சண்டை இட்டுக் கொண்டிருந்த ஒருவன் தலையில் படு வேகத்தோடு அடித்தான். 

ஒரு கணம்... ஸ்தம்பித்த அறைக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த கூட்டம் காலம் நிறுத்தி நின்றது. 

"யாரிவன்..?!" என்பது போல பார்க்க பார்க்க......

இந்த போத்தலை எடுத்து அந்த மண்டையில் அடித்தான். அதே நேரம் அந்த போத்தலை எடுத்து இந்த மண்டையில் அடித்து நொறுக்கினான். அதே நேரம் காலால் ஒருவனின் உயிர் தடத்தில் ஓங்கி மிதிக்க....மிதிக்கவே......ஒருவன் கழுத்து கிடைக்க அதை புலியின் பற்றுதலோடு பறித்து சுவரில் மோதி தலையை சிதற விட......ஒருவனின் காது வசமாக வாய்க்குள் மாட்ட கடித்து கொழ கொழவென்று மென்று துப்ப... அதே சமயம் அவன் தலையிலும் அடி விழுந்து கொண்டிருந்தது.

போத்தல்களின் சிதறலில் அந்த அறையே... ரத்தக் காட்டை வழிந்து கொண்டிருந்தது. அடி அடி அடியென இடி இடி இடியென போத்தல்கள் பறக்க....கை உடைந்து கால் உடைந்து... தலை உடைந்து சில ஆணிகள் கண்கள் குத்தி கிழிக்க அங்கே சண்டையிட்ட அத்தனை பேரும் சரிந்து விழுந்தார்கள். கணத்தில் பிடித்த பேய் விட்டு விட.. மனதுக்குள் நிறைந்து வழிந்த தம்பியை நினைத்துக் கொண்டே நெஞ்சு நெஞ்சாக பரிதவிக்க ... தலை தலையாய் அடித்தபடி பாருக்கு பின்னால் இருந்த காட்டுக்குள் உடல் தெறிக்க ஓடினான். 

"இது என்ன மாதிரி வடிவம்.. இது என்ன மாதிரி வாழ்க்கை.. இது என்ன மாதிரி உறவு......இது என்ன மாதிரி பிண்டம்....இது என்ன மாதிரி ஆன்மா....யார் படைத்தது......ஏன் படைத்தார்கள்.......எதுவுமே சரியில்லை..." அவன் ஒரு முள் காட்டில் தலை குப்புற விழுந்தான். அவன் உடல் எங்கும் முற்கள் குத்தி கிழித்தன. இருட்டுக்குள் தன்னையே தனக்கு தெரியாத நடுக்கத்தில் எழுந்தான். காலில் குத்திய முள் கம்பியை இன்னும் வேகமாய் அழுத்தி உள்ளுக்குள் ஏற்றினான். உயிர் வலித்ததை உணர்ந்த நொடியில் மறத்து போனது கண்கள். வயிற்றுப பகுதியில் தொங்கிய சதையை அப்படியே தொங்க விட்டுக் கொண்டே ஓடி ஓடி குதித்து ஓடி உருண்டு புரண்டான்.  தலை ஒரு பாறையில் மோதி... நச்சென்று ரத்தம் தெறித்தது. காது பக்கம் உராய்ந்து கல்லில் பாதி காதை காணவில்லை. 

"இரவு தின்று விட்டதோ...இறகென்று மென்று விட்டதோ..."

மீண்டும் எழுந்து ஓடினான். தன் மரணத்தை விரட்டி போகும் வெறித்தனத்தில் உள்ளம் பாவம் கலைய முற்பட்டது. இருள் மெல்ல மெல்ல அவன் கண்களுக்கு புலப்பட ஆரம்பித்தது. ஓடினான். ஓடினான்... எதிரே நின்றிருந்த ஆயிரம் காலத்து மரத்தில் உடல் அத்தனை வேகத்தில் மோதி நெஞ்செலும்பு நொறுங்கியது. அவனுக்குள் சுகம் ஒன்று மயிலிறகால் வருடியது போல இருந்தது. தன் மரணம் இப்படித்தான் இருக்க வேண்டும். பாவத்தின் சமபளத்தை அவன் இப்படித்தான் பெற வேண்டும் என்று இன்னும் இன்னும் வேகமாக உணர்ந்தது அவனின் உள்ளுணர்வு.

நொண்டிக்கொண்டே....தள்ளாடியபடியே... ரத்தம் நிழலாய் சொட்ட.......மரண வாடை தலைக்கேறிய முடை நாற்றத்தில்... நடக்க முடியா தூரத்தில்... பாறைகளில்.. முள் தடங்களில்......கற்களில்... தன்னை இழுத்துக் கொண்டு... உடல் உராய தேய்த்து தேய்த்து தவழ்ந்தும் நடந்துமிருக்க...நரி ஒன்றின் பார்வைகள் இந்த இரவைத்தாண்டி அவன் முன்னே பளபளத்தது. இனித்தது மூளை. உள்ளே சிரித்தது தம்பியின் உதடு. வேகமாய் முன்னேறிச் சென்றவன்... நரியின் வாயில் தன் உடைந்த கையை கொடுத்து விட்டு பரவச நிலை ஒன்றை அடைந்ததாக நினைத்து கத்தி கூச்சலிட்டான். காடு திரும்ப கத்தியது. இரவு திரும்ப காடானது. கரடி ஒன்று பின்னால் வந்து அவன் பின்னந்தலையை பிராண்டத் துவங்கியது. ரத்தம் குபுக்கென்று கொட்ட.... அது தாகத்தின் நாவை சுருட்டியது. பாம்பொன்று அவன் கால்களில் இரண்டு மூன்று முறை கொத்திப் போனது. முயல் ஒன்று அவன் விரல்களை கொறித்து போனது. முள்ளம்பன்றி ஒன்று அவன் வயிற்றில் முட்டி புரள அவன் உடலெங்கும் பன்றியின் கூரிய முற்கள்...... குத்தி குத்தி நிற்க..... வலி தாண்டிய இன்பத்தில்... மெல்ல மெல்ல புரள.. முற்கள் நெஞ்சுக்குள் இறங்கி முதுகில் நகமாய் நீண்டது. 

எலி ஒன்று அவன் குறியை கவ்வி எடுக்கும் போது.... பிண்டத்தின் வாழ்வுதனை எதுவும் கொய்யும்.. கொய்வதெல்லாம் குமட்டலின் விதி என்றால் இங்கே பிரபஞ்சத்தின் சூதும் சூனியம்தான்.  உள்ளுக்குள்... சுழன்ற கருப்பொருள் மையத்தில் மூச்சிரைத்த மூத்திர சந்துக்குள் நிகழ்ந்த, நடந்த அது இல்லாமல் போனதாக நம்பி நம்பி நம்பி நம்பி நம்ப ........அவன் பிரபஞ்சம் இருளத் தொடங்கியது.....

எவனோ ஒருவன் வாசிக்கும் மரண இசையை பால்வெளிக்குள் தூக்கி சுமக்க ஒரு முள்கிரீடத்தோடு வரிசையில் அமர்ந்திருக்கும் அவனை அவன் அதற்கு பின் பார்க்கவேயில்லை.

இப்போது தெரிகிறது நான் யாரென்று. ஆனால் சொல்ல போவதில்லை உங்களுக்கு.