யாருமே சாப்பிடவில்லை. எல்லோரையும் தேற்றிப் பார்த்தார் அப்பா. கேட்டபாடில்லை. நாங்கள் எல்லோரும் விடாப் பிடியாய் இருந்தோம். சந்தைக்குக் கொண்டுபோய் விற்றுவிட்டு வந்த மாட்டை மீண்டும் வீட்டிற்கு ஓட்டிவர வேண்டுமென்று. அப்பா சொன்னார், ‘வித்தது வித்ததுதான். இதுக்குமேல வாங்குனவன் கிட்ட போயி கேட்டா… அவன் இன்னா நெனப்பான்’ என்று. அவன் எது நினைத்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு நாளைக்குள் மாடு வேண்டும் என்றான் தம்பி. அவன் சொல்வதையே வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆமோதித்தோம். ‘மாட்ட வாங்குனவன் எந்த ஊருன்னு தெரியாதே’ என்று சொல்லித் தப்பித்துவிடலாம் என நினைத்தார் அப்பா. நாங்கள் விடவில்லை. தரகரைப் பிடித்தால் மாட்டை வாங்கினவனைப் பிடித்துவிடலாம் என்றோம். எங்களை அப்பாவால் ஜெயிக்க முடியவில்லை. நீண்ட நேர மெளனத்திற்குப் பின் மாட்டை வீட்டிற்கு ஓட்டி வந்துவிடுவதாகச் சம்மதம் தெரிவித்தார்.

குடும்பத்திற்கு நெருக்கடிதான். பசியும் பட்டினியுமாய்த்தான் கிடக்கின்றோம். வானம் மழை பொழியவில்லை. அதனால் விவசாயம் பொய்த்துப் போனது. நாமே சோற்றுக்குத் திண்டாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறோம். நம்மோடு சேர்ந்து தவிட்டுக்கும் கஞ்சி தண்ணிக்கும் புண்ணாக்குக்கும் இந்த மாடுகள் இரண்டும் ஏங்க வேண்டுமா என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை அப்பா. மேய்ந்துகொண்டிருந்த மாடுகளை நேராக வீட்டிற்கு ஓட்டி வராமல் சந்தைக்கு ஓட்டிப் போய்விட்டார். அவர் சந்தைக்குப் போனதுகூட தங்கவேல் தாத்தா சொல்லித்தான் அம்மாவிற்குத் தெரியவந்தது. அம்மாவிற்கு வந்ததே கோபம். அவள் முகத்தை இதுவரைக்கும் நான் அப்படிப் பார்த்ததே இல்லை. அவரைத் திட்டித் திட்டித் தீர்த்தவள் அப்பாவின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தாள். விடியற்காலை இருக்கும், சாக்கடையில் கை கால்களைக் கழுவிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவரை வறுத்தெடுத்துவிட்டாள் அம்மா. இதுவரைக்கும் அவள் இப்படி கோபப்பட்டு நாங்கள் பார்த்ததே இல்லை. எப்போதும் அப்பாவின் கோபத்தையும் முரட்டுக் குணத்தையுமே பார்த்து வளர்ந்த எங்களுக்கு அவரின் பயத்தையும் பதட்டத்தையும் கண்களால் பார்க்கும் பாக்கியம் இப்போதுதான் கிடைத்தது. பாவம் அரண்டுபோய்விட்டார் மனிதர்.

“நீ இன்னா செய்வியோ யேது செய்வியோ தெரியாது… நாளைக்குள்ள மாடு வீட்டுக்கு வந்துடணும்” - கராராய்ச் சொல்லிவிட்டாள் அம்மா.

“எவனாவது கசாப்புக் கடகாரனுக்குப் போறதுக்கு முன்னாடி வாங்கன பணத்த குடுத்துட்டு ஓட்டிக்கினு வர வழியப்பாரு… சாவாலிக்கும் நம்பகூட கடந்து செத்துப் போவட்டும்… இப்ப அத வித்துத்தான் எங்கப் பசிய ஆத்தனும்னு இன்னா இருக்குது” - அவள் பேசுவதையே அமைதியாய் கவனித்துக்கொண்டிருந்தார் அப்பா. அவருக்கும் அந்த மாடுகள் மேல் பிரியம்தான். அதுகள் தீனியில்லாமல் கஸ்டப்படுவதைப் பார்க்கப் பொறுக்கமுடியாமல்தான் அப்பா இந்த காரியத்தைச் செய்துவிட்டார் என்பது எங்களுக்கும் அம்மாவிற்கும் தெரியும். இருந்தாலும் எங்களைக் கேட்காமல் முடிவெடுத்த அப்பாவிற்கு இது தேவைதான் என்பதுபோல் இருந்தது அவரின் மெளனம்.

நான் பிறப்பதற்கு முன்பிருந்தே எங்கள் வீட்டி வளர்ந்த அந்த மாடுகளுக்குப் பேசத்தான் முடியாதே தவிர, நாங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளும். கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கும். வீட்டு மனிதர்களையும் வெளிமனிதர்களையும் நன்றாக தெரிந்து வைத்திருக்கும். நாங்கள் வீட்டில் படுத்துக்கொள்வோம் அதுகள் கொட்டகையில் படுத்துக்கொள்ளும் அதுதான் அதுக்கும் எங்களுக்குமான வேறுபாடே தவிர, மற்ற நேரங்களிலெல்லாம் நாங்களும் மாடுகளும் ஒன்றாய்த்தான் இருப்போம்.  

நல்ல விவசாயம் பண்ணத் தெரிந்த அப்பாவிற்கு வாய்த்த அன்பான மாடுகள்தான் அவைகள். ஏரடிக்க, வண்டி இழுக்க, கவலை ஓட்ட என்று எல்லா வேலைகளுக்கும் அதுகளைப் பழக்கப்படுத்தியிருந்தார். எந்த வேலையில் அதுகளை இழுத்துவிட்டாலும் சளைக்காமல் உழைக்கும். முரண்டு பிடித்துக்கொண்டு படுத்துக்கொள்ளாது. வண்டி இழுக்கும்போது எவ்வளவு பாரமாய் இருந்தாலும் பாதைகளின் இடையிடையே இருக்கும் மேட்டுப் பகுதிகளை லாவகமாக ஏறிச் சென்றுவிடும். தம்பியும் தங்கச்சியும் சிலநேரங்களில் கட்டுத்தறியில் படுத்துக்கிடக்கும் அதுகள்மீது ஏறி விளையாடி கூட இருக்கிறார்கள். ஒருநாளும் அவர்களை அதுகள் தங்கள் கொம்புகளால் முட்டித் தள்ளியதுமில்லை. மருண்டு ஓடியதுமில்லை.

எங்களுக்கு மாடுகளின் மேல் இவ்வளவு பாசமும் பக்தியும் ஏற்படுவதற்கு ஒரு கன்றுக்குட்டிதான் காரணமாயிருந்தது தெரியுமா! ஆமாம், இந்த மாடுகளோடு சேர்த்து ஒரு கன்று குட்டியும் எங்கள் வீட்டில் இருந்தது. நல்லா பாக்க அழகா இருக்கும். எப்பவுமே துரு துருன்னு இருக்கும் அது. எங்க மேய்ச்சலுக்குப் போனாலும் சரியா வீடு வந்து சேந்துடும் அது. ஒருநாளு அது மேயப் போன நிலத்துலயே பாம்பு கடிச்சி செத்துடுச்சி. அத பக்கத்துத் தெருவுல இருக்குறவங்க வந்து தூக்கிட்டுப் போனாங்க. மறுநாள், பள்ளிக்கூடத்துல எங்கூட படிச்ச முருகன் சொன்னான். எங்க வீட்டுல ராத்திரி கரிக்கொழம்புடான்னு. அன்னைக்கு சாயங்காலம் வந்து அம்மா கிட்டச் சொல்லி அழுதேன். அவங்ககூட ராத்திரியெல்லாம் அழுதிருக்காங்க. அன்னிக்கு இருந்து எங்க மாடுங்கமேல நாங்க எல்லாரும் அதிகமா பாசம் வைக்க ஆரம்பிச்சிட்டோம். சாயங்காலம் வீட்டுக்கு வரும் மாடுங்களுக்கு தொட்டியில தவிட்டக் கொட்டி புண்ணாக்கக் கலந்து விட்டு அதுங்க தலைய தலைய ஆட்டிக்கிட்டு சாப்பிடுறதையே மொறச்சி பாத்துக்கிட்டு இருப்பா அம்மா. எங்க குடும்பத்துக்கே உழைச்சி சோறு போடறது அதுதானே! அதுங்க பட்டினி கிடக்கலாமா.     

வீட்டில் ஏதோ ஒரு பானையில் கிடந்த நொய்யை எடுத்து கஞ்சி ஆக்கி வைத்திருந்தாள் அம்மா. அதற்குத் தொட்டுக்கொள்வதற்குப் புளியும் காய்ந்த மிளகாயும் போட்டு ஊறுகாய் அரைத்து வைத்திருந்தாள். குண்டானில் போட்டு வைத்த கஞ்சியையும் ஊறுகாயையும் அப்பா அமர்ந்திருந்த இடத்தில் போய் வைத்துவிட்டு வந்தாள் தங்கச்சி. நீண்ட யோசனையில் கிடந்த அப்பா அதைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அம்மாவும் கஞ்சி குடிக்காமல் போய்ப் படுத்துக்கொண்டாள். எனக்கும் சாப்பிடப்பிடிக்கவில்லை. தண்ணீர் சொம்பை வாயருகே கொண்டுபோனாலே மாடுகளின் நினைவுதான் வருகின்றது. பசி வரவேயில்லை. தம்பியும் தங்கச்சியும் மட்டும் ஒன்னும் பாதியுமாகக் கஞ்சி குடித்துவிட்டுத் தூங்கப் போய்விட்டனர்.

எங்கள் ஊரில் இருக்கும் மாட்டுத் தரகரை வீட்டிற்கு அழைத்துப் பேசிக்கொண்டிருந்தார் அப்பா. விற்றுவிட்ட மாட்டைத் திரும்ப ஓட்டிவருவது அவ்வளவு நியாயமாய்ப் படவில்லை என்று கூறிக்கொண்டிருந்தார் தரகர். அவருக்கு வீட்டின் சூழலை விளக்கிய அப்பா, எப்படியாவது நாளைக்கு மாட்டை வீட்டிற்கு ஓட்டி வந்துவிட வேண்டும் என்று தரகரிடம் உறுதியாகச் சொல்லிவிட்டார். வேண்டாவெறுப்பாக ஒத்துக்கொண்டு தரகர் போய்விட, வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து கொண்டிருந்த அப்பா வெட்டு வெட்டென முழித்துக்கொண்டிருந்தார். விழிப்பு வரும்போதெல்லாம் அப்பாவின் பக்கம்தான் என் பார்வை செல்லும். அப்போதும் அவர் தூங்கியதாகத் தெரியவில்லை. அப்படியே குத்துக்கல்லைப் போல் உட்கார்ந்துகொண்டே இருந்தார் அவர். எப்போது தூங்கினார் என்று தெரியவில்லை.

ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்த என்னை இரகசியமாக எழுப்பினாள் அம்மா. எழுந்து அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன். புன்னகையோடு என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு கொட்டகைக்குப் போனாள். எதற்கு இந்த அம்மா அங்கு அழைத்துச் செல்கிறாள் என்று யோசித்துக்கொண்டே பார்வையை கொட்டகைக்குள் செலுத்தினேன். ஆச்சரியம். என்னால் நம்பவே முடியவில்லை. எங்கள் மாடுகள் இரண்டும் அதுக்குள் படுத்திருந்தன. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதுகளைப் பார்த்ததும் உடலை விட்டுப் போன உயிர் திரும்பி வந்துவிட்டதுபோல் இருந்தது எனக்கு. எங்கள் ஊருக்கான வழியை எப்படிக் கண்டு பிடித்து வந்ததுகளோ தெரியவில்லை. பாவம் அதுகள்.

இரவெல்லாம் நடந்த களைப்பால் பார்ப்பதற்குச் சோர்வாய் இருந்தன. முனுசாமி மாமா வீட்டிற்குப் போய் அவர்களின் வைக்கப் போரிலிருந்து கொஞ்சம் வைக்கோல் பிடுங்கி வந்து போட்டாள் அம்மா. அவற்றை ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டுருந்தன அதுகள். தம்பியும் தங்கையும் தூக்கம் களைந்து வந்து எங்களோடு சேர்ந்து இந்த அதிசயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். காலைக்கடனுக்காக கழனிப்பக்கம் போயிருந்த அப்பாவும் வந்துவிட்டார். இனி மாட்டை வாங்கிச் சென்றவர்தான் இங்கு வரவேண்டும். அதுகளை விற்று வாங்கிவந்த தொகையில் ஒரு ரூபாயைக் கூட செலவழிக்காமல் அப்படியே மடியில் கட்டி வைத்திருக்கிறார் அப்பா மாட்டை வாங்கிச் சென்றவருக்குக் கொடுப்பதற்காக.