ஒருசால் ஓட்டி முடித்த மாரிமுத்து இரண்டாவது சாலில் இரண்டாவது வலப்பை ஓட்டிக் கொண்டிருந்தான். மெதுவாக நடந்து கொண்டிருந்த மாடுகளின் பிட்டத்தில் சாட்டையால் ரெண்டு வைக்க, மாடுகள் எகிறிக் குதித்துக்கொண்டு ஓடின. மழையின் வருகையால் நீண்ட நாட்கள் கரம்பாய்க் கிடந்த கழனியை ஒரு வாரத்திற்கு முன்தான் ஓட்டிப்போட்டு, வேப்பந் தழைகளையும், காவாடு தழைகளையும் வெட்டிப் போட்டு மிதித்திருந்தான். அவற்றின் அழுகல் வாடை அவன் மூக்கைத் துளைத்தன. பத்துமணிக்குள் எப்படியாவது உழுது முடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் மாடுகளைச் சீண்டிக் கொண்டே இருந்தான் மாரிமுத்து. பேச்சுத் துணைக்குக் கூட பக்கத்தில் யாரும் இல்லாததால் அவன் தன் மனதோடு சில சினிமாப் பாடல்களைப் பாடிக்கொண்டும், மாடுகளோடு பேசிக்கொண்டும் கலப்பையைக் கவனமாகப் பிடித்து ஓட்டிக்கொண்டிருந்தான். இரண்டாவது வலப்பு முடிந்து மூன்றாவது வலப்புக்குப் போய்க்கொண்டிருந்தன மாடுகள். அப்போது கிழக்குப்பக்கத்தில் சேற்றில் ஒரு உருவத்தின் நிழல் தெரிவதைக் கவனித்த மாரிமுத்து, அது யாரென்பதை உணர்ந்துகொண்டான். ஆனால் அந்த உருவத்தை அவன் தலைநிமிர்ந்துகூட பார்க்கவில்லை. மாடுகளும் அவனும் மேற்காகப் போய்க் கிழக்கில் திரும்பும்போது ‘நடந்தா…. பஸ்லயா’ என்று கேட்டுவிட்டு மாடுகளை விரட்டினான்.

farmer 600கிழக்குப் பக்க வரப்பில் ஒருவித படபடப்புடனும் பயத்துடனும் நின்றுகொண்டிருந்த மாரிமுத்துவின் மாமனார், ‘நடந்துதான்’ என்றார். அது அவன் காதுகளில் விழுந்ததா இல்லையா என்றுகூட தெரியவில்லை. அடுத்த சுத்து வரும்போது ‘இவ்ளோ காலைல இன்னா சேதியா….’ என்று கேட்டு வைத்துவிட்டு கலப்பையில் பிடித்திருந்த சேற்றைக் காலால் தள்ளியபடி சாட்டையைச் சுழற்றிய மாரிமுத்துவின் கேள்விக்கு அவன் மாமனாரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. அவனே ஒரு முடிவிற்கு வந்தவனாய் ‘இன்னா…உங்க பொண்ணு குளிச்சிட்டாளா…’ என்று கேட்டுவிட்டு மாடுகளைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்தவன், அவிழ்ந்து விழப்போன தலைப்பாகையைச் சரிப்படுத்திக் கொண்டான். அப்போது தன் மாமனாரின் முகத்தை வேண்டா வெறுப்பாகப் பார்த்தான் மாரிமுத்து. அவர் முகத்தில் சோகம் சூழ்ந்திருந்ததைக் கண்ட மாரிமுத்துவிற்கு பதட்டமும் பயமும் அதிகமாகிப்போனது. நின்றுகொண்டிருந்த மாடுகளை மீண்டும் விரட்ட, அவைகள் தலையை ஆட்டியவாறு சேற்றில் சலக்சலக்கென்று கால்களை எடுத்து வைத்துக்கொண்டு ஓடின.

அவரின் மவுனத்திற்கான விடை தனக்குத் தெரிந்துவிட்டதுபோல் மாரிமுத்து சொன்னான், ‘எனுக்கு இப்ப தெரிஞ்சி போச்சி… அவ திரும்பியும் பொட்டகட்டயத்தான் பெத்து போட்டிருப்பா…ஏற்கனவே பெத்துப்போட்ட மூனு பொட்ட கட்டைங்களுக்கும் கஞ்சி ஊத்தவே வக்கில்ல… இதுல நாலாவதா ஒன்னா…நம்பலால முடியாது சாமி… அவளயும் அவ பெத்ததுங்களையும் நீங்களே வெச்சிக்கிங்க….’ என்று கூறிக்கொண்டே தன் கோபத்தை மாடுகள் மீது காட்டத் தொடங்கிய மாரிமுத்து, மீண்டும், ‘ஒரு ஆம்பள புள்ளய பெத்துக் குடுக்க வக்கில்லாதவ… எனுக்கு வாணாம்… அவ பெத்து போட்டதுங்களும் எனுக்கு வாணாம்… நீங்க போங்க… பின்னாடியே நான் வறன்… வந்து நான் கட்டன தாலிய அவுத்துக்குனு வந்துடுறன்…’ என்று கத்திக்கொண்டே தன் முகத்தில் வழிந்த வியர்வையைத் தலைப்பாகையைக் கழற்றித் துடைத்துக்கொண்டான். மாடுகள் வேக வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. அவன் கைகள் கலப்பையை அழுந்தப் பிடித்துக்கொண்டிருந்தன. வரப்பில் நின்ற மாரிமுத்துவின் மாமனார் சற்றுநேரம் அங்கேயே அமைதியாக நின்றுகொண்டிருந்தார். அவன் தன் மனைவியை யோசித்து யோசித்துத் திட்டிக் கொண்டிருந்தான். எவற்றுக்கும் வாய் திறக்காத அவர், ‘நான் கிளம்பறன்’ என்று கூறிவிட்டுத் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினார். அவர் சொல்லிய வாசகங்கள் மாரிமுத்து தன் மனைவி பூங்கொடியை ஏசும் சத்தத்தில் கரைந்து போயின.

            வேகவேகமாக உழுதுமுடித்துவிட்ட மாரிமுத்து, பக்கத்திலிருந்த குட்டைக்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு போனான். அவைகளை ஒன்றும் பாதியுமாகக் கழுவி கரம்பில் கட்டிவிட்டுத் தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவன் மனைவி பூங்கொடியை நினைக்க நினைக்க அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. ‘அவ.. ரெண்டாவதா ஒரு பொட்ட கட்டயப் பெத்து போட்டப்பவே அவள.. அவ ஆத்தா ஊட்டுக்குத் தெருத்தியிருக்கனும்… எப்பிடியும் ஒரு ஆம்பளப் புள்ளய பெத்துக் குடுத்துடுவானு நம்பி உட்டதால எனுக்கு வந்த கெதியப் பாத்தியா…’ என்று முனகிக்கொண்டே நடந்த மாரிமுத்து, ‘ஆம்பளப் புள்ளன்னு ஒன்னு இருந்தா கூடமாட… ஓடியாடி வேல செய்ய எவ்ளோ ஒத்தாசயா இருக்கும்.. கடசிக் காலத்துல கொள்ளி போட ஒரு வாரிசு ஓணும்னு நான் நெனக்கிறதுல இன்னா தப்பு இருக்குது.. இந்த பொட்டக் கட்டைங்களுக்கு இன்னா… என் ஒழைப்பையெல்லாம் வாங்கிக்கினு எவனுக்குனா கழுத்த நீட்டிக்கினு போயிடுவாளுங்க…. கடசி காலத்துல… கஞ்சி ஊத்தக்கூட ஒரு புள்ள இல்லாத.. நான் கிடந்து சாவனுமா’ என்று தன் மனதில் பதிந்திருந்த எண்ணத்தை காற்றில் கலக்கும்படி கத்திக்கொண்டே ஓடினான் மாரிமுத்து.

பத்து மணி பஸ்ஸைப் பிடித்தால் சீக்கிரமாய்ப் போய் அவள் கணக்கை முடித்துவிட்டு பொழுதுசாய வீட்டிற்கு வந்துவிடலாம் என்பது மாரிமுத்து உழுதுகொண்டிருக்கும்போதே தனக்குள் போட்டு வைத்துக் கொண்ட கணக்கு. எதையெதையோ மனதில் போட்டுக் குழப்பிக்கொண்டே தன் வீட்டையடைந்த மாரிமுத்து கொடிக்கயிற்றில் கிடந்த ஒரு சட்டையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு வெளியே கிளம்ப முயற்சித்தான். அப்போது குடலைப் புரட்டுவது போன்ற ஏதோ ஒரு வாடை அவன் மூக்கிற்குள் நுழந்தது. திடீரென்று வீட்டின் மூலைமுடுக்கெல்லாம் ஆராயத் தொடங்கினான் மாரிமுத்து. ஆனாலும் எலிகள் எதுவும் அந்த வீட்டில் செத்துக் கிடக்கவில்லை. தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாரிமுத்துவின் முகத்தில் அவன் தோளில் போட்டிருந்த சட்டையின் ஒரு பகுதி விழுந்தவுடன்தான் அவனுக்குப் புரிந்தது. இது எலி செத்த வாடையில்லை. தன் சட்டையில் இருந்து வரும் வாடை என்று. தனக்குத் தானே வெட்கப்பட்டுக்கொண்ட மாரிமுத்து, சுமாராக அழுக்கேறியிருந்த ஒரு சட்டையை எடுத்துத் தன் தோளில் போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். அவன் மட்டும் இருந்த அந்த வீடு அலங்கோலமாய்க் கிடந்தது. பார்ப்பதற்கு அது ஒரு குப்பைக் கிடங்கைப் போன்று தோற்றமளித்தது. ‘பொம்பளை இல்லாத வீடு இப்படித்தான் இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டாலும், பூங்கொடியை மட்டும் பெண்கள் வரிசையில் வைத்து எண்ணிப் பார்ப்பதற்கு மாரிமுத்துவிற்கு ஏனோ பிடிக்கவில்லை. ஒரு ஆம்பள புள்ளய பெத்துக் குடுக்கத் தகுதியில்லாதவளுக்கு எதுக்கு மரியாதை வேண்டிக்கிடக்கு என்று நினைத்துக் கொண்டானோ என்னவோ.

            வீட்டைவிட்டு வாசலுக்கு வந்த மாரிமுத்து சட்டையைப் போட்டுக் கொள்ளாமல் சுருட்டி அக்குளில் வைத்துக்கொண்டு பஸ்டாண்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். இன்றோடு அவள் உறவை வெட்டி விட்டுவிட்டு வந்துவிடவேண்டும் என்பதையே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தது மாரிமுத்துவின் மூளை. ‘எவ்ளோ தெகிரியம் இருந்தா பொட்டகட்டயப் பெத்துப் போட்டுட்டு… அப்பன தூதுவுட்டு அனுப்புவா… நாங்கேட்ட கேள்விக்கி அந்த ஆளு வாயத் தெறந்தாரா பாத்தியா… அந்த மனுசனுங்கூட…. இங்க வர்றதுக்கு முன்னாடி நல்லா யோசிக்க வாணாமா’ என்று சத்தமாக பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்த மாரிமுத்துவின் காதுகளில் பஸ் வரும் சத்தம் கேட்கவே, சட்டையையும் துண்டையும் கையில் பிடித்துக்கொண்டு பஸ்டாண்டை நோக்கி ஓடத் தொடங்கினான். ஆனாலும் அந்த ஓட்டத்திற்குப் பலன் கிடைக்கவில்லை. அவன் ஊர் நிறுத்தத்தைக் கடந்து போய்விட்டது அந்த பஸ். அடுத்த பஸ் இரண்டு மணிக்குத்தான் என்றாலும் மாரிமுத்துவுக்கு வீட்டிற்குத் திரும்புவதற்கு மனம் வரவில்லை. அவளை ஒருகை பார்த்துவிட்டு வந்துவிடவேண்டும் என்பதிலேயே குறியாய் இருந்தவன் வேறு வழியில்லாமல் தன் மாமியார் வீட்டிற்கு நடந்தே போய்விடலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டான். கையில் வேப்பங்குச்சி ஒன்றை உடைத்து பல்லைத் தேய்த்துக் கொண்டே நடந்த மாரிமுத்து, சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தன் தலையைக் காத்துக்கொள்ள கையிலிருந்த துண்டை எடுத்து முக்காடுபோல் போட்டுக்கொண்டு நடக்கத் தொடங்கினான். மாரிமுத்துவின் ஊரில் இருந்து அவன் மாமியார் ஊர் எப்படியும் பத்து பர்லாங்கு தூரம் இருக்கும். நடப்பது ஒன்றும் அவனுக்குப் புதிது இல்லையென்பதால் நடையைப் பற்றிக் கவலைப்படாமல் தன் நிலையைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு நடந்து கொண்டிருந்தான் மாரிமுத்து.

            போகும் வழியில் ஒரு சிறிய நாஸ்டா கடை இருந்ததைப் பார்த்த மாரிமுத்து, முகத்தைக் கழுவிக்கொண்டு உள்ளே போய் நான்கு இட்லிக்காக காத்திருந்தான். கடைகாரர் கொண்டுவந்து வைத்த இட்லியை சாப்பிடுவதற்காக ஒருவாய் பிட்டு, வாய்க்குக் கொண்டுபோனான் அவன். அந்த நேரத்தில் அந்த சிறிய கடைக்குப் பின்னாலிருந்து ஒரு பெரியவரின் அழுகுரலையும் அவர் புலம்பலையும் கேட்டு திடுக்கிட்டு எழுந்த மாரிமுத்தை கைப்பிடித்து அமர்த்திய கடைகாரர், ‘நீங்க சாப்பிடுங்க தம்பி…இது இன்னிக்கி நேத்தில்ல… பல வருசமா நடக்குது… ஒரே புள்ள ஒரே புள்ளன்னு பாசத்தக் கொட்டி வளத்தாரு அந்த பெரியவரு… இன்னிக்கி அவன் ஒதைக்கிறான்… குடிக்க பணம் குடு… கூத்தியாளுக்குக் குடுன்னு ஒதைக்கிறான்… சேத்து வச்ச சொத்து சொகத்தையும் ஒத்த ஆளா அழிச்சிபுட்டான்… அவுரோட மூனு பொண்ணுங்கதான் அவுர மாசத்துக்கு ஒருமுற வந்து பாத்துட்டு வேண்டியத வாங்கி குடுத்துட்டு போவுதுங்க… அதுங்க குடுத்துட்டுப் போறதையும் இந்த பாவி புடுங்கிக்கிவான்… அதுங்க கூப்டாலும் இந்த பெருசு போவமாட்டங்குது… இன்னும் எவ்ளோ காலம் இந்த கூத்தோ தெரியல… தம்பி, என்று அடுக்கிவிட்டு அடுப்பில் வேகும் இட்லியைப் பதம்பார்து ஒவ்வொரு தட்டையும் வெளியில் எடுத்துக் கொண்டிருந்தார். இதுபோன்ற அப்பன் மகன் சண்டைகளை மாரிமுத்து பலமுறை பார்த்திருக்கிறான். ஆனாலும் அச்சம்பவங்கள் அவனை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் இந்த சம்பவம் மாரிமுத்துவின் மனதைக் கிளற ஆரம்பித்துவிட்டது.

            அந்த நான்கு இட்லியையும் மெதுவாக சாப்பிட்டு முடித்த மாரிமுத்து. கடையின் பின்பக்கமிருந்து வந்த அழுகுரல் இன்னும் அடங்கவில்லை என்பதையும் கவனித்துக் கொண்டிருந்தான். நான்கு இட்லிக்கான காசைக் கொடுத்துவிட்டு தன் மாமனார் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினான் மாரிமுத்து. சற்றுநேரத்திற்கு முன்பு அவனுக்குள் குடிகொண்டிருந்த ஆத்திரமும் கோபமும் குறைந்திருந்தது. அமைதியான மனநிலையில் நிதானமாக சிந்தித்துக்கொண்டே நடந்தான் மாரிமுத்து. இப்போது தன் மாமியார் ஊரை நெருங்கிவிட்டான் மாரிமுத்து. கையில் சுருட்டி வைத்திருந்த சட்டையை எடுத்து உடுத்திக்கொண்டான். முகத்தை இலேசாகத் துடைத்துக்கொண்டான். முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொண்டான்.

            மாமியாரின் வீட்டிற்கருகே போய்விட்ட மாரிமுத்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன் பெண்பிள்ளைகளைக் கூப்பிட்டு கையில் பிடித்துக் கொண்டான். அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த மாரிமுத்து, தன் மனைவியைப் பார்த்து புன்னகைத்துவிட்டு பிறந்து இரண்டு நாட்களே ஆன அந்த பெண்குழந்தையை தன் விரல்களால் தடவிக் கொடுத்தான். உடனே திரும்பிய அது அவன் முகத்தைப் பார்த்துச் சிரிப்பதுபோன்று தன் பொக்கை வாயை ஆவென்று திறந்து மூடியது. இதையெல்லாம் வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மாரிமுத்துவின் மாமனாருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் மாரிமுத்துக்கே கூட இது புரியாதபுதிர்தான்.

- சி.இராமச்சந்திரன்