1

காலை சரியாக 7.25 மணிக்கு பெங்களூர் கே. ஆர் புரம்(கிருஷ்ணராஜபுரம்) இரயில் நிலையத்தில் வந்து நின்றது 'லால்பாக் எஸ்பிரஸ்'. முன்பதிவு செய்திருந்த D5 'கோச்சில்' கூட்ட நெரிசல்களுக்கிடையில் உள்ளே புகுந்து என் இருக்கையை கண்டுபிடித்து அமர்ந்தேன். முன்பதிவு செய்யாத பயணிகள் அதிக அளவு நடைவழிப் பாதையை ஆக்ரமித்து நின்று கொண்டிருந்தார்கள். எனது இருக்கைக்கு வலதுபுறம் அடுத்த பகுதியில் ஜன்னலோரத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி, அடுத்து நடுத்தர வயது பெண்மணி, அவருக்கருகில் சுமார் ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை அமர்ந்திருந்தனர். அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறை பெண்மணிகள். பெங்களூரில் அவர்கள் உறவினர் திருமண விழாவில் கலந்து விட்டு சென்னை திரும்பி கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிய வந்தது. பெரும்பாலானோர் குடும்பம் குடும்பமாகவே அந்தப் பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

lal bagh express

 கே.ஆர். புரத்திலிருந்து கிளம்பிய இரயில் சுமார் 45 நிமிடங்களில் 'பங்கார்பேட்' இரயில் நிலையத்தை வந்தடைந்தது. இரயில் நின்றதுதான் தாமதம். குபுகுபுவென கூட்டம் முண்டியடித்து ஏறிக்கொண்டிருந்தது. இரண்டு மூன்று நிமிடங்களில் இரயில் நகர ஆரம்பித்தது. கடைசியாக ஏறிய இரு பயணிகள் ஒருவருக்கொருவர் முட்டி மோதியவாறு பலத்த சத்தத்துடன் வாய்த்தர்க்கத்துடனேயே பெட்டியினுள் நுழைந்தார்கள். இருவருமே முன்பதிவு செய்யாமல் டிக்கெட் மாத்திரம் எடுத்து வந்தவர்கள்தான். வண்டி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த இருவரின் வாய்ச்சண்டை மட்டும் ஓய்ந்த பாடில்லை. இருவரில் ஒருவர் கருத்த, கனத்த உடம்பு. கெட்டியான மீசை. வேஷ்டி சட்டையின் வெள்ளை நிறம். பார்வைக்கு பளீர் என தெரிந்தது மட்டுமல்லாமல் கொஞ்சம் முரட்டுத்தனமாகவும் தெரிந்தார். மற்றொருவர் பேண்ட், முழுக்கை சட்டையுடன் ஆஜானுபாகுவாகத் தோற்றமளித்தார். இருவர் வாயிலிருந்தும் வெளிவந்த கெட்ட, கெட்ட வார்த்தைகள் 'கூவத்தைக்' காட்டிலும் அருவறுப்பானவை. கூட்ட நெரிசலுக்கிடையிலும் இவர்களின் வாய்ச்சண்டை ஓய்ந்தபாடில்லை. காது கொடுத்துக் கேட்க முடியவில்லை.

 வெள்ளை ஆடை அணிந்திருந்த கருத்த மனிதர் நினைத்தால் மற்றவரை ஒரே அடியில் சாய்த்து விடலாம். அப்படி ஒரு திடகாத்திரம். ஆனாலும் அப்படி ஒரு நிகழ்வு ஏற்பட வில்லை. பெட்டியினுள் பயணித்துக் கொண்டிருக்கும் எல்லா பயணிகளையும் சுற்றும்முற்றும் ஒரு பார்வை பார்த்தார். பெண் பயணிகள் அனைவரும் இவர்கள் இருவரின் வார்த்தைகளையும் கேட்க இயலாதவர்களாய் காதுகளைப் பொத்தியவாறு தலைகுனிந்து இருந்தார்கள். இந்தக் காட்சியைக் கண்ட வெள்ளைச் சட்டைக்காரர் தன் கோபத்தை அடக்கி, பேசுவதை நிறுத்திக் கொண்டார். அவருடன் பயணித்த நண்பர் யதார்த்தமாக சிந்தித்து, தன் நண்பரை வேறொரு பெட்டிக்கு அழைத்துச் சென்று விட்டார்.  

                                                                                                                                                 2        

 அதன் பின்னும் நாங்கள் அமர்ந்திருந்த பெட்டியினுள் நின்று கொண்டிருந்த மற்ற நபர் (பேண்ட், ஷர்ட் அணிந்தவர்) முன்னிலும் அதிக சத்தத்துடன் கெட்ட, கெட்ட வார்த்தைகளை அதிகமாக உபயோகப்படுத்தி திட்டிக் கொண்டே வந்தார். எதிரியில்லாத இடத்தில் எகத்தாளமாகக் கொக்கரித்துக் கொண்டிருந்தார். சுற்றிலும் அமர்ந்திருந்த பெண்கள் எல்லோரும் சங்கடத்தில் முகம் சுளித்தார்கள். அவர் எதையும் பொருட்படுத்திய பாடில்லை.

 “பெண்கள் இருக்கிறாங்கன்னு பார்க்குறேன். இல்லைன்னா....மவனே..” தொடர்ந்து அசுத்தமான வார்த்தைகளை பிரயோகப் படுத்திக் கொண்டேயிருக்கிறார். பெண்கள் சுற்றிவர இருக்கும்போதே இந்த இலட்சணம் என்றால், பெண்கள் யாரும் அருகே இல்லையென்றால், அப்பப்பா... நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. கொலை, கொள்ளை மட்டும்தானா பாவம்? அது மட்டும்தானா குற்றம். அவ்வைப் பாட்டி மட்டும் இருந்திருந்தால், ‘கொடிது...கொடிது.. அடங்கா நாக்கு’ என்று பாடியிருப்பார். அத்தனை வக்கிரம். சுற்றியிருந்த ஆண்கள் எல்லோரும் அவரிடம் சண்டையிட்டு சில மணி நேரங்களுக்காக மன அமைதியை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதுபோல் இருந்து விட்டார்கள், என்னையும் சேர்த்து. இந்தக் கண்றாவியெல்லாம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக, அருகாமையிலிருந்த நடுத்தர வயது பெண்மணி தன்னுடைய ஆறு வயது மகளை அணைத்து தன் மடியில் படுக்க வைத்து தன் காதுகளையும் மூடியவாறு பயணித்தார். அம்மாவின் இந்த செயலுக்கு என்ன காரணம் என்று அம்மாவின் காதோரம் அந்த பிஞ்சு வினவியது.

 "பேசாம அப்படியே படு" என்று அதட்டி காதைப் பொத்தியவாறு மடியில் சாய்த்தாள். சுற்றிவர அமர்ந்திருந்த மற்ற 'ஆன்டிக்களும்', அக்காக்களும், அம்மாக்களுமே ஏதோ அசௌகரியத்துடன்தான் இருந்து வருகிறார்கள் என்பதை அந்தக் குழந்தை உணர்ந்தாள். ஆனால் ஓன்று மட்டும் அதன் உள்ளத்திலே பதிந்தது. அருகில் நின்று பேசிக் கொண்டே வந்த அந்த 'அங்கிள்' ஏதோ தப்பு தப்பாய் பேசுகிறார் என்பது மட்டும் உள்மனதில் தெரிந்தது. இதுபற்றி எதுவும் அம்மாவிடம் கேட்கப் பயந்து, தாயின் மடியில் சாய்ந்தவாறு பயணித்தாள். சற்று நேரம் செல்லச் செல்ல அந்த நபர், தான் மட்டும் ஏதோ தனித்து நிற்பதாக உணர்ந்தாரோ என்னவோ தெரியவில்லை. தன் நாவுக்கு ஓய்வு கொடுத்து, நின்றுகொண்டே பயணித்தார்.

 வண்டி 'ஜோலார் பேட்டை' வந்து நின்றது. வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் அந்தப் பெட்டியினுள் ஏறினார். நகர்ந்து, நகர்ந்து வந்து அந்தக் குழந்தையின் அருகில் நின்றவாறே பயணித்துக் கொண்டிருந்தார்.

 அந்தக் குழந்தைக்கும் சேர்த்துதான் 'டிக்கெட்' முன்பதிவு செய்து அந்தக் குடும்பம் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பரிசோதகர் வந்து போனபோது நான் அறிந்தேன். இரயில் ஓட்டத்தின் ஆட்டத்தில் அந்த மூதாட்டி தள்ளாடியவாறு பயணித்துக் கொண்டிருந்ததை அந்தக் குழந்தை கவனித்தவாறே இருந்தது. மூதாட்டியை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த குழந்தை தன் தாயின் காதில் சென்று ஏதோ ஓதியது. தாயின் முகத்தில் மெல்லிய புன்முறுவலுடன் 'சரி' என்பதுபோல் தலையாட்டினதுதான் தாமதம். உடனே அந்தக் குழந்தை நகர்ந்து தன் இருக்கையின் விளிம்பில் சாய்ந்துகொண்டு, அம்மாவின் மடியை ஆக்கிரமித்தாள். நின்று கொண்டிருந்த மூதாட்டியை தன் இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொண்டாள். அவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தக் குழந்தையின் கன்னத்தை வருடியவாறு இருக்கையில் அமர்ந்தார்.

 3

அடுத்து ஒருமணி நேர பயணத்திற்குப் பின் அடுத்து வந்த இரயில் நிலையத்தில் அந்த மூதாட்டி நன்றிப் பெருக்குடன் அந்தக் குழந்தையின் கன்னத்தை மீண்டும் வருடி விட்டு இறங்கி கொண்டார்.

 'பங்கார்பேட்' ல் ஏறிய அந்த ஒற்றை நபர் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தது அந்தக் குழந்தை. அவசர அவசரமாக தன் இருக்கையை முழுமையாக ஆக்கிரமித்து வசதியாக அமர்ந்து கொண்டது. அடுத்து வந்த இரயில் நிலையத்தில் சொல்லி வைத்தற்போல் ஒரு இளைஞன் ஏறினார். ஏதாவது அமர இடம் இருக்குமா என்று பார்த்துக் கொண்டே உள்ளே வந்தார். தன் அருகே வரும் போதுதான் தெரிந்தது அவர் கால் ஊனமுற்றவர் என்பது.

 மறுபடியும் அந்தக் குழந்தை தாயிடம் தன் பார்வையாலேயே அனுமதி பெற்றுக் கொண்டு அந்த இளைஞருக்கு தன் இருக்கையை பகிர்ந்தது. அடுத்த ஒருமணி நேரத்தில் அந்த இளைஞரும் குழந்தைக்கு நன்றி சொல்லிவிட்டு ஆம்பூர் இரயில் நிலையத்தில் இறங்கினார். அடுத்தடுத்து தன் அருகில் வெகு நேரமாக அமர இடமில்லாமல் நின்று கொண்டிருப்போருக்கு தன் இடத்தை பகிர்ந்துகொண்டு வருவதை ஒரு விளையாட்டாகவே செய்து வந்தாள். ஆனால் ஒவ்வொரு முறையும், அந்த 'பங்கார்பேட்' ல் ஏறிய அந்த பெரிய மனிதர் மட்டும் தன் இருக்கையில் அமர்ந்து விடாதபடி மிகக் கவனமாக இருந்தது. அந்த நபரும், இந்தப் பெண் தன்னை அதன் இருக்கையில் அமரச் சொல்லாதா என்ற எதிர்பார்ப்பில் நின்று கொண்டே வந்தார். ஆனால் குழந்தையிடமிருந்து அந்த வாய்ப்பு கிட்டவில்லை.

 வழக்கமாக அரக்கோணம் இரயில் நிலையம் வரும்போதெல்லாம் பெரும்பாலான இருக்கைகள் காலியாகத்தான் இருக்கும். ஆனால் அன்றய தினம் என்னவோ தொடர்ச்சியான விடுமுறைகள் வந்ததால் அரக்கோணம் தாண்டியும் பெரும்பாலானோர் பெரம்பூர் வரையிலும் நின்று கொண்டுதான் வந்தார்கள்.

 அதுவரையிலும் நின்று கொண்டிருந்த அந்த அநாகரீக மனிதர் பெரம்பூர் இரயில் நிலையத்தில் இறங்கிச் சென்றார். இந்தக் குழந்தையின் மனதிலும், முகத்திலும் பெரிய மகிழ்ச்சி. தவறு செய்த ஒருவருக்குத் தண்டணை கொடுத்து விட்டதாக ஒரு திருப்தி.

 அவளுடைய நடவடிக்கைகளை அரைகுறையாக கவனித்துக் கொண்டிருந்த தாயின் முகம் பார்த்ததும் சிரித்தாள் குழந்தை.

"என்னடி சிரிக்கிற?" என்று செல்லமாய்க் கேட்டாள் தாய்.

" அந்த அங்கிள் ஏதோ தப்பு தப்பா பேசினாருன்னுதானே நீங்க அவ்வளவு கோபமாய் இருந்தீங்க. அதுக்குத்தான் உட்க்கார இடமே கிடைக்கல. நானும் என் இடத்தைக் கொடுக்கல." என்று பெருமையாக கூறியது குழந்தை.

குழந்தையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்த தாய்,

"இல்லம்மா. நீயோ, நானோ யாருக்கும் தண்டனை கொடுக்க முடியாது. கடவுள்தான் தண்டனை கொடுப்பார்." என்றார்.

"அப்படின்னா கடவுள் உடனே தண்டனைக் கொடுக்க மாட்டாராம்மா?" - கேட்டாள் குழந்தை.

"கண்டிப்பா கொடுப்பார். அதுமட்டுமில்லாம, நம்ம நாட்டுல சட்டம்ன்னு ஒன்னு இருக்கு. 'ஜட்ஜ் ' ன்னு ஒருத்தர் இருக்கார். நீ பெரியவளா ஆனதுக்கப்புறம் அதைப்பற்றியெல்லாம் தெரிஞ்சுக்குவ."

மறுபடியும் 'அம்மா ' என்று சிணுங்கியவாறு தாயின் முகம் பார்த்தாள்.

"இன்னும் என்னடி வேணும்?" - தாய்.

"அம்மா ! அப்படின்னா நான் பெரியவளா ஆனதும் ' ஜட்ஜ் ' ஆகட்டுமாம்மா?"

"ம்...ம்..ஆகலாம் " என்று புன்னகைத்தவாறு குழந்தையை அணைத்துக் கொண்டாள் தாய்.

இரயில் 'சென்னை சென்ட்ரல்' நிலையத்தை வந்தடைந்தது. அந்தக் குழந்தைக் கடவுளும், தன் தாயுடனும், பாட்டியுடனும் கீழே இறங்கி சென்னை ஜனசமுத்திரத்தில் கலந்து போனார்கள்.

 - நெல்லை சுதன்