இந்தக் கதை எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். "வெண்ணிற இரவுகள்" படிச்சிருந்தீங்கனா இன்னும் சுலபம். கிட்டத்தட்ட அதே கதை தான். சரி அதே கதையை ஏன் திரும்ப எழுதணும்னு கேக்க தோணுதுல்ல. அது அப்டித்தான். சித்தார்த்தன் ஏன் அந்த நேரத்துல வீட்டை விட்டு போனான்னு கேட்டா என்ன சொல்றது. அப்டிதான். சில நியாயங்கள் சில நேரங்களில்.....சில கோபங்கள் சில நேரங்களில்.....சில கதைகள் சில நேரங்களில்.

confused manநெடுந்தொலைவு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறான் அவன். பெயர் சித்தார்த்தன் என்றே வைத்துக் கொள்ளுங்கள். பெயரா முக்கியம். வாழ்வு தானே முக்கியம். அவனுக்கு புரிந்து விட்டது. ஒரு பெரு வெடிப்பு அவனை மூழ்கிக் கொண்டிருந்த துயிலில் இருந்து வெளிக் கொண்டு வந்து விட்டது. 

நீலி. . .

நாஸ்தென்கா இங்கு நீலி ஆகி இருக்கிறாள்.

விளையாட்டா தான் சொன்னா.... காதல் அப்படித்தான்.  பெரும் விளையாட்டில் சிறு ஒய்வைக்க கூட அனுமதியாக்காமல் மூச்சிரைக்க வைத்துக் கொண்டேயிருக்கும் என்பதில் புது மாலையை பொன்னிறமாக்கி அவள் வந்து சூடுகையில்...... அன்று வரை உடன் இருந்தவள் தானே என்று வரவேயில்லை காதல். சித்தார்த்தன்... புத்தனாகி விட்டான். துறவறமல்ல. நிலவரம். பொருளாதாரம் அவனை மேற்கு நோக்கி அனுப்பி விட்டது. அவள் போட்ட எந்த கடிதத்துக்கும் பதில் அனுப்பவில்லை. பதில் அனுப்ப தோன்றவில்லை. காதலால் ஆகி விட இன்னும் அவன் தயாராகவில்லை. 

காலம் நிறுத்திய புள்ளியில்.... ஓர் அதிகாலை பொழுதொன்றில்... வேர்க்க வியர்க்க விழித்து கொண்டு ஓவென அழுதிடத் தோன்றியது. காரணம் ஒன்றுமில்லை என்று தானே சூனியம் சொல்லும். சூனியப் பிறழ்வில்....சிறகு தேடி தனிமை படபடத்தது. அவன் பட்டென்று நிலையை நினைத்துக் கொண்டான்.  நீக்கமற அவளின் உள்ளம் முழுக்க அந்த அறையை ஓர் ஆன்ம பலத்தோடு சுற்றிக் கொண்டிருந்ததை உணர்ந்த பொழுதில்....ஊருக்கு கிளம்பி விட்டான். 

ஆறு வருடங்களுக்கு முன் காதலித்தவள். கடைசி கடிதம் வந்து நின்று போனது 3 வருடங்களுக்கு பின். அவள் இன்னும் எழுதிக் கொண்டேதான் இருந்திருப்பாள். முகவரி மாற்றியது, நாட்டையே மாற்றியது அவளுக்கு தெரியாது. ஒரு கணம் ஒரே கணம்...அது வெம்மையை சுமந்து கொண்டு, இருக்கின்ற பனியையெல்லாம் உருக்கி கிறக்கி விட்டு தேகத்தில் ஊடுருவிச் சென்று நிஜத்தை முகத்தில் அறைந்து விட செய்தது. ஆழ் மனம் பற்றிக் கொண்ட எதையுமே ஆழ்மனமே ஒரு நாள் விடுதலை செய்யும். அவனுள் அவனால் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தான். புறப்பட்டு விட்டான். வழியெங்கும் அழுகை. காரணம் முழுக்க அவளின் பெயரை சொட்டியது. அடைத்து வைத்திருந்த ஊற்று கொப்பளித்துக் கொண்டு வந்தது. எல்லா அழுகைக்கும் லாஜிக் இருக்க வேண்டிய அவசியம் இல்லை....என்று எப்போதோ அவள் கூறியது நினைவுக்கு வந்தது.

நீலி...... இப்போது எப்படி இருப்பாள்...?

அதே பாவாடை சட்டை போட்டுக் கொண்டு வலப்பக்கம் வகிடு எடுத்து தலை வாரி அந்த நீல நிறக் கண்களில்...நட்சத்திரங்கள் சுமந்து கொண்டு வீதி முழுக்க நிறைந்து நிற்பாளே...இப்போதும் அப்படித்தான் இருப்பாளா... இல்லை.. புடவை கட்டிக் கொண்டு வேறு ஊருக்கு டீச்சர் வேலைக்கு எதுவும் போயிருப்பாளா.....? அவனுக்கு அவளை பற்றி எதுவும் தெரியவில்லை. அவன் மீது கோபம் கொண்டு வானத்தில் இருந்து குதித்த யாரையாவது கல்யாணம் கூட செய்திருக்கலாம். அதனாலென்ன. நானும் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்ல அவள் யாராக இருந்தால் என்ன?

அவளுள் கொஞ்சமேனும் பழைய நீலி இருக்கத்தானே செய்வாள். பைத்தியக்காரத்தனத்தோடு பேரழகு வழியும், வானம் கொத்தி தின்னும் கண்கள் கொண்ட அவளாகத்தானே இருப்பாள். அவன் உடல் அவனை சுமையாக சுமந்தது. புத்தனாய் மாறுவது சுலபம். சித்தார்த்தனாய் மாறுவது அத்தனை சுலபமல்ல என்பதை உணரும் நொடியெல்லாம் அவளின் பெரும்பற்கள் அவனை கடித்தன. பெருங்கண்கள் அவனை திகைத்தன. கொரியா சாயல் கொண்ட யவனப்பெண்ணை போலொரு தோற்றம் கொண்டவள் அவள். அவளை நினைக்கையில் எல்லாம்.. ஒரு கப்பலும்.. அதன் தூரத்து உறுமலும் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை அவனுக்கு.

******

அரேபிய இரவுகள் போல அந்த இலக்கிய விழா பாலைவனத்தில் நெருப்பை சுற்றி நடந்து கொண்டிருந்தது. 

எல்லாரும் சொல்வதை எல்லாரும் சொல்வதாக கூற வேண்டும். நீலியின் எழுத்தில்... அவனின் எழுத்தும் அவனின் எழுத்தில் நீலியின் எழுத்தும் இருப்பதை ஊர் அறியும். சமீப காலமாக இருவரும் நெருங்கி பழகி வருவதை இருவருமே மறுக்கவும் இல்லை. மறைக்கவும் இல்லை. விழாவில் கவிதை அரங்கேற... வானம் நட்சத்திரங்களை அவர்கள் மீது தூவுவதாக இருவருமே கற்பனித்துக் கொண்டார்கள். அவளின் நீல நிற கண்களைக் கொண்டு அவனின்.. செந்நிற கண்களைக் கண்டெடுத்தாள். அவளின் பிங்க் நிற எண்ணங்களை அவனின் மஞ்சள் நிற பார்வையால் வென்றெடுத்தான். 

விழா முடிந்து மது நிறைய... மணல் வழிய... இரவின் குளிர்... பறந்து கொண்டிருந்தது பிசாசுகளின் வல்லினம் போல. 

பாலைவனம் மணற்குன்றுகளால்... நீண்டு நெளிந்து நிறைந்து வளைந்து.. மிதந்து.. புதைத்து கொண்டிருக்க.... இரவு பௌர்ணமியின் வெண்ணிறத்தை அலை அலையாய் வீசிக் கொண்டிருந்தது. ஆளுக்கொரு கண்களில்...நிறைந்து வழிந்தார்கள் இருவரும்.  மெல்ல மெல்ல கண்டது கவிதையாகி விட்டது போல இருவரும்.....கூடாரம் கடந்து சற்று தொலைவுக்கு வந்து விட்டிருந்தார்கள். எங்கேயாவது தொலைந்து போவது இருவருக்கும் பிடிக்கும். இலக்கிய உலகம் கண்டு கொண்டுதான் இருந்தது. அவள் அப்படித்தான் என்பது போல திரும்பி மதுவில் நீந்தத் துவங்கியது. மது வேண்டாத சில கூட்டம் கவிதை பேசிக் கொண்டிருந்தது. வெறித்துக் கிடந்தது சில கூட்டம். நிகழ்த்துக் கலைக்குள் வட்டமிட்டது சில. வானம் பறிக்க சென்றிருந்தது சில. 

"தான்தான்..... என்னிடம்.....என் மூலமாகத்தான் இங்கு எல்லாமே வருகிறது. எனக்கு என்னைப்  பற்றி... நானொரு.... நானெல்லாம்... நான் ஒரு பெரும் கவி....என்னிடமே இந்த உலகத்துக்கான விடுதலை இருக்கிறது' என்று தன் புராணம் பேசிக் கொண்டிருந்தது சில.

இரு கணம் ஒன்றாகிட நீலியும் அவனும்.. மெல்ல நடந்து கொண்டிருந்தார்கள். நடை பயின்று கொண்டிருந்தது தொடும் வானம்.

'நான் யார வேணாலும் தூக்கி போட்ருவேன்..... ஆனா உன்னை தூக்கி போட முடியல....."

"ஒரு மிகப் பெரிய இருள் என்னை சூழ்ந்திருந்துச்சு......நான் மொத்தமா காணாம போக இருந்தேன்.... "

"நீ வருகிறாய்.. காற்றோடு.. கவிதையோடு.. கனவோடு.. எனக்கான உயரத்தோடு...கலையான முகம் உனது. உன்னோடு வாழ விடாத இந்த உலகை நான் வெறுக்கிறேன்... உனக்கு எல்லாமே புரியுது. என்னைப்பற்றிய சுதந்திரம் எனக்கு கிடைக்கிறது. உன்னிடம் கேட்காமலே என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது......"

"நீ ஆன்மாக்குள்ள  போய்ட்ட..."

"எல்லாருக்கும் உன்ன பிடிக்கும் தான..."

ஒரு நீண்ட கவிதையை அவள் வாக்கில் எடுத்துக் கொண்ட முன்னுரையைப் போல இருந்தது அவள் பேச்சு.

"உன் நீல ஆக்கங்களில்....நித்திரை கடந்து விட்டேன். ஒரு ஈர்ப்பின் இரு துருவத்தை என் முகத்தை உன் முகத்தோடு பார்க்கிறேன்." என்றான் அவன்.

சொல்லத்தான் வேண்டும்.... காற்றில் வரிகள் மிதப்பதை இரவுக்குள் வெண்ணிறம் பூசி காட்சி படுத்துவதை. குளிர் திமிர் பிடித்து ஆட... கூட திமிர் குளிர் பிடித்து பார்த்தது. சற்று நடுங்கிக் கொண்டுதான் பார்க்க முடிந்தது. பாலைவன இரவு... எத்தனை காதல் போர்த்தினாலும்... குளிர் அடங்குவதில்லை. தொடுவானம் நோக்கி நடந்து கொண்டிருக்கும் இரு ஆதிகளின் ஆன்மாவைப் போல இருந்தது அவர்களுக்கான காட்சி. ஆதாமும் ஏவாளும் ஆதாமும் ஏவாளுமாக ஆவதற்கு முன் அப்படித்தான் சிறு இடைவெளியோடு இருந்திருப்பார்கள் என்று தோன்றியது. ஒரு பாலைவனம் வரைந்து முடித்த களிப்போடு காற்றின் கதவுகள் கண்கள் மறந்து ஓடிக் கொண்டிருப்பதை எங்கனம் விவரிக்க. அவளின் ஒரு 'அச்சோ' போதும். அவனின் ஒரு தோன்றுதல் போதும். அவளின் தலையில் செல்லமாக பொய்யாக அடிப்பதில் ஒரு ஹைக்கூ கிடைத்திருக்கலாம் நிலவுக்கு.

"நீ எங்கிருந்து வந்த....உன் கண்கள் என்னை தின்னுது..." என்று சொல்லி இரவைக் கிழித்துக் கொண்டு திரும்பி பார்த்தாள். இன்னும் கிழிய பெரிய இதயம் வேண்டும் என்று நம்பினான்.

"இந்த வாழ்க்கை என்னை தோற்கடிச்சிடுச்சு... உன்ன மாதிரி ஒருத்தன்கிட்ட எல்லாத்தையும் விட்டு சரணடைஞ்சறதுலதான் உண்மைக்கு நிகரா நான் இருக்கேங்கிற உண்மை இருக்கு...:"

******

மறுநாளும் இரவு வந்துதானே தீரும். வந்தது. 

"இப்போ இல்ல... இன்னைக்கு இல்ல.. எப்போ லெட்டர் எழுதிகிட்டோமா.....அப்பவே கொஞ்ச கொஞ்சமா நான் தொலைய ஆரம்பிச்சிட்டேன்..." 

"நானும்...."

அவள் மௌனித்தாள். 

"நீ ஏன் இவ்ளோ லேட்டா பொறந்த....சீக்கிரம் பொறந்திருக்கணும்..."- அவன் நின்று விட்ட பின்னும் அவள் சற்று கொஞ்ச தூரம் முன்னோக்கி சென்று நின்று மெல்ல திரும்பி பார்த்து இரவுக்கு நிறமூட்டும் அற்புத நிகழ்வை செய்து கொண்டிருக்கிறாள் என்று நம்பினான். 

ஓவியம் நின்று திரும்பும். சிரிக்கும். வெட்கப்படும் பெரும் பெரு வெடிப்பை அந்த இரவு நிகழ்த்திக் கொண்டிருந்தது. நீல நிற சட்டையை கிரீம் வண்ண பேண்ட்டில் இன் பண்ணியிருந்தாள். மூக்குத்தியின் நிறம் இன்று பச்சை மின்னியது. வானத்தில் இருந்து படக்கென்று எட்டிக் குதித்து வந்த வேற்று கிரக மனுஷியை ஒத்திருந்தது அவளின் பார்வையும்.. முக பாவனையும். காதில் இரு உலகை தொங்க விட்டுக்  கொண்டிருந்தாள்.  தலை கலைத்துப்  போன காற்றின் மெல்லிய நரம்புகளை விரல் கோர்த்து சரி செய்தபடி அவளை நெருங்கினான். அருகில் அவளின் சூட்டை உணர முடிந்த தருணத்தில் அவளின் வெக்கையின் தீர்க்கமாகவும் அந்த கணமே இருந்தது.

"நீ பிரிஞ்சு போய்டுவியா... பயமா இருக்கு.."

"நாம் பிரிவது இல்லை" என்றான்.

"எனக்கு கோபம் வந்தா விதவிதமா சமைச்சு சாப்பிடுவேன்..."

"எனக்கு கோபம் வந்தா.. உன்னை மாதிரியே நடந்து பார்த்து, தூங்கிடுவேன்..."

காற்றினில்... குளிரினில் அவள் தேகம் கிட்டாரின் கம்பிகளை போல மெல்ல அதிர்ந்தன. ஒரு சிறு உலகம்... வெம்மை பூசிக் கொண்டு... அவளின் காதோரம் கதை கேட்டுக் கொண்டு வருவதை போல இருந்தது இருப்பது. சிரித்துக் கொண்டான்.

******

மீண்டும் ஓர் இரவு இருந்தால் சுகமே. சுகம்தான் போல இரவுக்கும்...

"ஏன் சிரிப்பு......" என்றாள். 

செல்லமாக தலை தட்டி "நீ பேரலை" என்று கிசு கிசுத்தான்.

"பொய் சொல்லாத..." என்று வலப்பக்கம் கண்கள் உருட்டினாள். வலசைக்கு வந்த நிலா இரவை கண்களால் உருட்டுவது போல இருந்தது.

"உன் எழுத்து எனக்கு பேரெழுத்து" என்றான்.

அவள் அவன் எழுத்தை "ஜீவ எழுத்து" என்றாள்.

"கொஞ்ச காமம் அதிகமா இருக்கு" என்றாள்.

"காமம் தானே ஆரம்பம்" என்றான்.

"கனவுக்குள் நீ யார் எனக்கு. தினமும் வந்து இம்சிக்கிறாய் என்றாள்.

"கனவே நீ தானே" என்றான்.

"உன்னை எப்டி கூப்பிடறது...?"

"இப்ப எப்படி கூப்பிடறயோ அப்டி..."

"ம்ஹும்......என்னங்க" என்று கூறி நாக்கு கடித்துக் கொண்டாள்.

"இது தீரா சொந்தம்..." என்றான்.

"நீ என் மாமா பையனா பொறந்திருக்க கூடாதா..... அதோ தெரியுது பார் அந்த தொடுவானத்துல மணல் வீடு கட்டி விளையாடிட்டு  இருந்திருக்கலாம்.." என்றாள்...

"இப்போ மட்டும் என்னவா.. விளையாடலாம். வானம் உனக்கு.... வண்ணம் எனக்கு...காலம் நம்மை தாலாட்டும்... உன் கனவுக்குள் நானாக வந்து நீயாக மாறும் அற்புத நிகழ்வை நிகழ்த்துவோம் வா" என்றான்.

"நல்லா பேசறீங்க" என்றாள்.

"நல்லா காதலிக்கவும் செய்வேன்" என்றான். 

"கலையான முகம் உங்களுக்கு..."

"கொள்ளை அடிக்கும் பார்வை உனக்கு. கொரியாக்காரி மாதிரி மூக்கு...."

'ஏன் நல்லா இல்லையா..." பொய் கோபம். 

"அதுதான் அழகு" மெய் தீண்டியது மிச்சம்.

ஒரு  கணம் உடைய...அவனும் அவளும் ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் அழைக்க.. இருவருமே சிரித்துக் கொண்டார்கள்... 

"நாம ஏங்க இப்டி இருக்கோம்... அயோ செமயா இருக்கு... லவ் யூ...யு ஆர் மை டெஸ்டினி.... 

"எல்லாமே ஆகி விட்டவள் நீ... உன்னையன்றி நான் எப்படி......" அவள் இரவை இழுத்து பூசி வெம்மை போர்த்தினான். 

"you are unbeatable idiot, but intelligence of era.." என்று சொல்லி கண்களுக்குள் புக பார்த்தாள் .

சிறு மௌனம் சர்ப்பமென ஊர்ந்தது. மணல்வெளி நழுவி கண்களுக்குள் கொட்டி விட்டாற் போல அவளின் முகம் மெல்ல மாறியது.

"நீ இல்லனா நான் நார்மலா இருக்கறது இல்ல... நான் உண்மையா இருக்கேன்.. நீ அப்டி இல்லையோனு பயமா இருக்கு.......நான் தனியா இருக்கேன்.... எனக்கு யாரும் இல்ல.. வீட்டுல மாப்ள பாக்கறாங்க.... கல்யாணம் பண்ணிட்டு போய்டுவா..." அவள் குரல் மாறி இருந்தது. அவளுள் இருக்கும் அவள்  பேசத் தொடங்கி விட்டாள்.

"அப்போ......நான்?"

"அப்போ நீயே கல்யாணம் பண்ணிக்கோ.....வா..."

"சரி பண்ணிக்கலாம்..."

"எப்டி பண்ணிக்க முடியும்... இந்த உலகம் ஒத்துக்குமா.... நீ எனக்கு மட்டும் இருக்க முடியுமா.... உன் உலகம் வேற... இந்த உலகம் வேற... நாம் எப்படி சேர்ந்து வாழ முடியும்..."

அவள் மணல் அள்ளி வீசத் தொடங்கி விட்டாள். அது ஊழித் தாண்டவமென தொடுவானம் உடைக்க ஆரம்பித்தது. 

******

அடுத்த இரவில் வெடித்த நிலவு...

"அப்பப்போ உன்னை கடந்து போய்டணும்னு தோணும்.... நீ ஏன் இவ்ளோ லேட்டா வந்த... நான் உன்ன பார்த்திருக்கவே கூடாது..." 

"ஆரம்பிச்சிட்டியா... நான் இருக்கேன்ல... அப்புறம் என்ன..."

வெண்ணிறத்தை தனித்த கழுகு ஒன்று கொத்தி தின்ன நெருங்குவது போல வட்டமடித்துக் கொண்டிருந்தது. பின்னிரவு காற்று... மாயத்தை பூசிக் கொண்டு திரிவது போல இருந்தது. நான்காவது இரவு சமநிலையில் இல்லை. அது திசைகளற்று முயங்கிக் கிடந்தது.

"அதுதான் பயமா இருக்கு. நீ தான் இருக்க. நான் எங்க இருக்கேன்... உங்கிட்ட நான் கொஞ்சம் கொஞ்சமா காணாம போய்ட்டிருக்கேன்.....நான் தப்பு பண்றேன்.. உன் வாழ்க்கை வேற.. என் வாழ்க்கை வேற.. இது சரியா வருமான்னு பயமா இருக்கு...."

'ஏன்டி இப்டி லூசுத்தனமா பேசற... என்னை தவிர உன்ன யாரும் பாத்துக்க முடியாதுடி... சொன்னா புரிஞ்சுக்கோ..."

"நாம ரெண்டு பேருமே கத்திங்க..... ஒரே உறைக்குள்ள எப்டி எத்தனை நாள் தங்கும்னு தெர்ல...."

அவளின் கண்கள் இருட்டை கவ்வத் தொடங்கி இருந்தது. அதில் இருந்து வேக வேகமாய் வெப்ப சலனம் பாம்பின் இரைச்சலோடு மூச்சிரைத்தது. 

"அதுமில்லாம உன் உலகத்துல...நீ பெரிய ஆளா வரணும் அதுக்கு நான் இடைஞ்சலா இருக்கேனோன்னு பயமா இருக்கு. நீ நிறைய சாதிக்கணும்..."

"அப்போ நீ கூட இருக்கணும்..."

"இல்லைங்க ...உங்கள நான் கடந்து போவேன் பாருங்க....கண்டிப்பா ஒரு நாள் கடந்து போய்டுவேன்...."

"ஏன்டி இப்டி பேசுற... உனக்கு புரியவே புரியாதா...அடிக்கடி உன் வேதாளம் தொடுவானத்துல ஏறிக்கிட்டா நான் என்னதான் பண்றது..."

"நீ ஏன் வந்த.... நீ வந்துருக்கவே கூடாது..... உங்கிட்ட ஒரு ஹஸ்பண்ட் பீலிங் வருது..." 

"அது நிஜம் தானே.. அதுக்கு ஏன் கவலைப் படற.." 

"இல்லை... நிஜம் அது இல்ல.. நாம சேரவே முடியாது. நிஜம் வேற..."

"லூசு மாதிரி பேசாதடி..."

இருவரும் மௌனத்தோடு.. தொடுவானம் பார்த்தே நடந்து கொண்டிருந்தார்கள். தொடுவானத்துக்குள்தான் நடந்து கொண்டிருந்தார்கள்.

மௌனம்.... நொடிகளில்.. நிமிடங்களில்....

மீண்டும் மௌனம்...

"என்கிட்ட பேசாத... நான் தனியா இருக்கணும்.. நீ போய்டு" என்றாள் தீர்க்கமாக.

அதிகாலை சூரியனோடு மூச்சிரைக்க பேச்சற்று வந்து சேர்ந்திருந்தான் சித்தார்த்தன்.

யார் கண்ணுக்கும் தெரியாத அவன், சித்தார்த்தன் கண்ணுக்கும் தெரியவில்லை. நீலியின் கண்களில் அவன் வேண்டுமென்றே விழுந்தான். அழுதான். அரட்டினான். 

அவள் "போய்டு......போய்டு .... நீ உருவமற்றவன். நான் வாழ வேண்டியவள். சித்தார்த்தன் மனம் திரும்பி வந்திருக்கிறான். என் பதின்ம வயது காதலோடு வந்திருக்கிறான்... நாங்கள்தான் சரி... நீயும் நானும் அல்ல. போய்டு ..... உன் உலகத்துக்கே போய்டு....."என்று ஜாடையில் கெஞ்சினாள்.  

"நமக்கு இரட்டை பசங்க... அப்புறம் ஒரு பொண்ணு வேணும்னு கேப்பியே....அயோ எனக்கு பைத்தியம் பிடிக்குது..." அவன் மணல்வெளியில் துகள்களாகி புரண்டான். தன்னை கொல்லவும் முடியாத ஆத்திரத்தில்... தன்னையே அடித்துக் கொண்டான். "யார் கண்ணுக்கும் தெரியாத நான் ஏன் இவள் கண்ணுக்கு தெரிய வேண்டும்" என்று புலம்பினான்.  

எங்கிருந்தோ வந்த காற்றில் மிதந்து வேகமாய் மிக வேகமாய் ஓடத் தொடங்கினான். காடு மலை காற்று கடல் வெளி என்று எங்கெல்லாமோ அவன் கடக்க வேண்டி இருந்தது....

அது எதிர் காலமோ... இறந்த காலமோ... காலமற்ற வெளியோ, ஒருத்தி சாலையோரம் நின்று கொண்டு யோனி பிடித்து மூத்திரம் போய்க் கொண்டிருந்தாள்.

மூச்சிரைக்க ஓடி வந்தவன் நின்று நிதானிக்க....."என்ன..., வர்ற இவ்ளோ தாமதம்...?" என்றாள்... செய்யும் வேலையை தொடர்ந்து செய்தபடி.

"நான் உன் கண்ணுக்கு தெரியறேனா..." என்று கேட்டு கத்தி கூச்சலிட்டு சிரித்தான். ஒரு பைத்தியக்காரனைப் போல இருந்தது அவனின் அற்புத தோற்றம்.

"நல்லாவே தெரியற... வா போலாம்..." என்று அவன் கையைப் பற்றி நொடியில் பறக்கத் தொடங்கினாள்.

"உன்பேர் என்ன...?" என்று தூரத்தில் அவன் கேட்பதும்.. அதற்கு அவள் "நியந்தா" என்று கூறுவதும் வெளி எங்கும் இறகாய் மிதக்கத் தொடங்கியது.

"கதை சொல்ற சுவாரஷ்யத்துல ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.... இந்த கதையை உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கற நான்....... அந்த "வெண்ணிற இரவுக"ளை எழுதின அதே "தாஸ்தாவெஸ்கி" தான்....'

- கவிஜி