railway crossing

ஒரு நாள் ஒரு வாரம் என்றால் அவன் அப்படி யோசித்திருக்க மாட்டான்.

கடந்த 3 மாதங்களாக அவன் அவளை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஏறக்குறைய அவளுடைய எல்லா நாட்களும் எப்படி இருக்கும் என்று அவனால் கணிக்க முடிந்தது. எதிரே வரும் சில நொடிகளில் அவனைக் கடந்து விடுவாள். கடக்க முடியா தூரத்தில் அவன் திரும்பவும் போய்க் கொண்டே இருப்பான்.

அவள் யார்? எங்கிருந்து வருகிறாள்? எங்கே போகிறாள்? ஒன்றும் தெரியாது. இதுவரை தெரிந்து கொள்ளவும் யோசித்ததில்லை.

அவளை சந்திக்கும் "ஆவாரம் பாளையம்" ரயில்வே கேட் எப்போதும் கூட்டமாகத்தான் இருக்கும். அதன் பொருட்டு வாகனங்கள் மெதுவாகி கொஞ்சம் கொஞ்சமாக அந்த குறுகிய பாலத்தை கடக்கையில் தூரத்தில் இருந்தே கண்கொண்டு மெல்ல மெல்ல சிறுக சிறுக சேர்ந்து மிதந்து வரும் சிறு அலையென காண்பதும், அதில்.. எங்கேயோ தொலைந்து போன ஆழ்கடல் துளி ஒன்றாய் அவள் மேலெழுந்து வந்து.....நெருங்கி, பின் கடந்து தூரமாய் போவதும் காலத்தின் நிகழ்வெனவே படும். துளி நேர நிழல் என நடக்கும் மாய யதார்த்தம் அது.

முடிந்தவரை ரியர் கண்ணாடியில் அவளின் பிம்பம் தெரிவதை கண்களுக்குள் கடத்துவான். காணும்வரை கவிதை. கண்டபிறகு கதை. பின் கடந்த பிறகு ஓவியம்.

வெள்ளிக்கிழமை ஆனால் தலை விரிந்து கிடக்கும். நெற்றியில் குங்குமம் நிறைந்து கிடக்கும். நறுமணம் ஒன்று அவள் பக்கமிருந்து புறப்படும். பெரும்பாலும் அவள்.. விடுமுறை எடுத்தது கிடையாது. அவன் போகாத நாளில் அவளும் வராமல் இருந்திருக்கலாம். திங்களில் சில நாட்கள் முகம் சோர்ந்து கிடக்கும். சில சனிகளில் கூட சோர்ந்து கிடக்கும். மாறாக புதன்களில் எல்லாம் அவள் முகம் பிரகாசமாக இருந்ததைக் கண்டு வியந்திருக்கிறான். வயது கண்டிப்பாக 40 ஐ கடந்திருக்கும். ஆனால் ஒல்லியான தேகம். யாருக்கோ சிரிப்பை தேக்கி வைத்தார் போல அவள் எப்போதாவது வந்து போவாள். அன்றெல்லாம் கூடுதலாக அவன் மனத்துக்குள்... இனம் புரியா சோலை ஒன்று விரிந்து அசைந்தாடும். தனித்தீவில் நிறங்களின் தூதுவனாக அவன் இடம் பெயரும் அற்புத கணங்கள் அவைகள்.

அவளின் ஸ்கூட்டி, ஸ்கூட்டி பெப் ஆக மாறிய நாளில்... அவன் தன் பைக்கை சாலையில் சிறகாக்கி சரிந்து சரிந்து போனதை அடிக்கடி நினைத்துக் கொள்வான். "நினைவோ ஒரு பறவை" பாடல் முணுமுணுக்கத் தோன்றும். மழை வரும் நாளில்... அவளின் கவனம் முழுக்க ஆடை நனைந்து விடக் கூடாதே என்பதில்தான் இருக்கும். வேகமாய் சந்து பொந்துகளில் தன் வண்டியை நடுங்கிக் கொண்டே ஒரு வித தடுமாற்றத்தில் நுழைத்து கடந்த போது......"அச்சோ......"என்று அவன் கடந்திருக்கிறான். அன்று முழுவதும் மழையை திட்டி முணுமுணுத்திருக்கிறான்.

எப்போதாவது மாலையில் அவள் திரும்பி வருவதை கண்டிருக்கிறான். அது விறுவிறுப்பு கூட்டும் வெகு அருகே வந்து போகும் அற்புத நட்சத்திர இரவாக அவனுக்கு இருந்திருக்கிறது.

பின் ஒரு நாள் எல் போர்ட் போட்டுக் கொண்டு மாருதி ஆல்டோ கார் ஒட்டிக் கொண்டு வருகையில் வண்டியை சற்று ஓரம் கட்டி நிறுத்தி திரும்பி அவளின் கார் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான். அன்று மதியம் உடன் பணிபுரிவோருக்கு வடை வாங்கிக் கொடுத்தான். காரணம் கேட்டார்கள்.. கார் கனவு பலித்தது என்று சொல்ல தோன்றி பின் அடுத்த மாசம் எனக்கு பிறந்த நாள் என்று கூறி மௌனமாக சாப்பிட்டான்.

முகத்தில் ஒரு குழந்தை தவழும் சந்தர்ப்பத்தை அவள் அடிக்கடி வாய்க்க பெற்றிருந்தாள். ஒரு கூட்டத்தை அழகாக்க அவள் வருகைக்கு தெரிந்திருக்கிறதே எப்படி என்று யோசித்துக் கொண்டே அலுவலகம் செல்கையில் அவன் முகத்தில் ஆயிரம் சூரியக் கதிர்கள் அதன் விரல் நுனிகளில் விளையாடிக் கொண்டிருந்ததை உணர்ந்திருக்கிறான்.

இப்படி இருந்த நாட்களில் அப்படி ஒரு நாளில் அவள் வரவில்லை. மறுநாளும் வரவில்லை. அதன் பின் வாரக் கணக்கில் காண முடியவில்லை.

"வேறு வழியாக சென்று விட்டாளோ... உடம்பு சரி இல்லையோ... வேறு ஊருக்கு மாற்றல் ஆகி போய் விட்டாளோ.. வி ஆர் எஸ் வாங்கி விட்டாளோ... ஒரு வேளை.... சேச்.....சே.... அந்த முகம் மரணிக்க முடியாத முகம்........"என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே கண்கள் தேட மனது தடுமாற பெரும் சோகமென போய்க் கொண்டிருந்தான்.

அதே ரயில்வே கேட் பாலத்தின் அடியில் "கண்ணீர் அஞ்சலி" போஸ்டரில் மென் சோக முகத்தோடு காட்சியளித்துக் கொண்டிருந்தாள்.

பெயர்..."நியந்தா" என்றிருந்தது.

- கவிஜி