இன்னும் அரை மணி நேரத்திற்குள் குயில் மேட்டை அடைந்திடுவேன். “இந்த ஊரிலே யாரை சார் பாக்கப் போறீங்க?” ஓட்டுனரின் கேள்விக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு “சொல்லாளன்” என்று மிகச் சுருக்கமாக முடித்துக்கொண்டேன். சொற்கள்தானே நம் ஒவ்வொருவரையும் ஆள்கிறது. இல்லை ஆட்டிப்படைக்கிறது. பிறகெப்படி ஒரு தனி மனிதன் சொற்களை ஆளமுடியும். மீண்டும் ஒரு முறை அந்தப் பெயரைச் சொல்லிப்பார்த்தேன். அந்தப் பெயரில் வார்த்தைகளால் விளக்க  முடியாத ஒரு வசீகரம் இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.  மிடுக்கான தோற்றத்துடன், கம்பீர நடையில் ஒரு கிராமத்து உருவத்தை என் மனதிற்குள் உருவகப்படுத்தி இருந்தேன். அவரின் படிப்பு, தொழில், குடும்பம் என்று எதுவும் எனக்குத் தெரியாது.

hand shakingஒரு ஆங்கிலச் செய்தித் தாளில் பத்து வரிகளில் கட்டம் போட்டு சொல்லாளனைப் பற்றிய ஒரு குறிப்பு இருந்தது. இரண்டு வருடங்களாக ஒரு இலக்கியப் பத்திரிக்கை அலுவலகத்தில் இணை எடிட்டராக பணியாற்றுகிறேன். தலைமை எடிட்டர் எழிலன் தான் மூன்று நாட்களாக என்னைத் துரிதப்படுத்தி குயில் மேட்டிற்கு அனுப்பி வைத்தார். சென்னையில் இருந்து பத்து மணி நேரப் பயணம்.

கைபேசியைப் பார்த்தேன். காலை மணி ஐந்து. அடிவானத்தில் தீற்றாக சில இடங்களில் ஆரஞ்சு நிறம்  கலந்த சிகப்பாக இருந்தது. ஆறு மணிக்குள் குயில் மேட்டை நிச்சயம் அடைந்து விடலாம்.

“நல்லா தூங்கிட்டீங்களா சார்?” கொஞ்சம் முன்னாடி டீ குடிக்க உங்களை எழுப்பினேன்”. நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. காரை ஒரு சாலையோர மரத்திற்கு அருகில் நிற்கச் செய்து வாட்டர் பாட்டிலில் இருந்த நீரைக் கொண்டு முகம் கழுவி, சிறிது குடிக்கவும் செய்து ஓட்டுனரிடம் நீட்டினேன். “வேண்டாம் சார், நான் கொஞ்சம் முன்னாடிதான் டீ குடிச்சேன்” என்றான். அவன் கண்களில் ஒரு இரவின் மொத்த தூக்கமும் பளிச்சென்று அப்பட்டமாகத் தெரிந்தது. குயில் மேட்டை நோக்கி வண்டி விரைந்தது.

“சார், நீங்க அவ்வளவா பேச மாட்டீங்களோ?” என்று கேட்டான். இந்தக் கேள்விக்கும் என்னால் எந்தவிதமான பதிலும் கூறமுடியாமல் சிரித்துக்கொண்டே தலையை மட்டும் ஆட்டி மறுதலித்தேன்.

“யார் வீட்டுக்கு போகனும்னு சொன்னீங்க சார்?’ என்று மறுபடியும்  சொல்லாளனின் பெயரை வாய்விட்டு ஒரு முறை தனக்குத்தானே கூறிக்கொண்டான்.

குயில் மேடு 1 கி.மீ.  தூரத்தே ஊரின் பெயர்ப்பலகை தெரிந்தது. வேகமாக வீசும் காற்றிற்கு எதிர்பாரா திசைகளில் பேயாட்டம் போடும் அந்தப் பெயர்ப் பலகையை  இரு புறமும்  தாங்கி நிற்கும்  மெலிதான பைப்பின் அடியில் அதிகம் துருவேறி எந்த நேரத்திலும் உடையக் காத்திருந்தது. வானம் சீக்கிரமே வெளுக்க ஆரம்பித்திருந்தது. தார் சாலை ஓரத்தில் இருந்த  புளிய மரத்தில் இருந்து கீழே விழுந்த புளியம் பழங்கள் ஒன்று கூட சிதையாமல் அப்படியே இருந்தது. ஊரின் எல்லையைக் கடந்து உள்ளே வந்து விட்டோம். சாலையோர டீக்கடையின் அருகில் வண்டியை நிறுத்திய ஓட்டுனர் தன்  இருக்கையில் இருந்துகொண்டே “இங்கே சொல்லாளனின் வீடு எங்கே இருக்கு?” என்று கேட்க டீக்கடைக்காரன் செய்கையில் காட்டினான். ஓட்டுனரும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்.  “ஓ, பெரிய ஆல மரம் வருமா, அதைத் தாண்டிப்போனா, என்னாது. ஒன்னும் புரியலை !”  ஓட்டுனர் மிகவும் குழம்பிப் போனான். பொறுமையை இழந்து  “வாயத் தொறந்து சொல்லுய்யா” என்று  ஓட்டுனர் கடைக்காரனக் கேட்க, அவன்   பெஞ்சில் டீ குடித்துக்கொண்டிருக்கும் ஒரு முதியவரை சுட்டிக் காண்பித்தான். அந்த முதியவரும் ஆலமரம் போல விரல்களை படர்த்திக் காட்டி இடது புறத்தை காண்பித்து வணங்கினார். மீண்டும் வலது புறத்தைக் காட்டி வாயை இறுகப் பொத்தினார். எனக்கு லேசாகப் புரிய ஆரம்பித்தது. நான் ஓட்டுனரிடம் விளக்கினேன்.

“நேராப் போனா ஒரு பெரிய ஆலமரம் வரும். அதன் இடது புறத்தில் ஒரு கோயில் வரும். வலது புறத்தில்தால்தான் சொல்லாளனின் வீடு இருக்கவேண்டும்”. என்றேன்.

“எதுக்கு சார் அந்த ஆளு கடைசியிலே வாயப் பொத்தினான்?”. ஓட்டுனரின் கேள்விக்கு இப்பொழுதும் என்னிடம் எந்த ஒரு பதிலும் இல்லை.

அந்தக் காலத்தில் கட்டிய ஜமீன் வீடு போல இருந்தது. வேலையாட்கள் மும்முரமாக இங்கும் அங்கும் போய்க்கொண்டிருந்தார்கள். கைபேசியைப் பார்த்தேன். மணி 6.20. சீக்கிரமாக வந்துவிட்டேனோ என்று மனசில் தோன்றியது. காரிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன். படர்ந்து வளர்ந்த புங்கை மரத்திலிருந்து குயில்களின் ஓசை, மாடுகளின் கழுத்து மணி ஓசை, இடைவெளிகளுடன் மாடுகளின் சிறு நீர் இரைச்சல். இதைத் தவிர எந்த மனிதர்களின் பேச்சுக் குரலும் கேட்கவே இல்லை. ஒரு சிறுவன் என்னைப் பார்த்து ஓடிவந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டான். தலை உயர்த்தி என்னைப் பார்த்து கேள்வி கேட்பதைப் போல புருவத்தை உயர்த்தினான். “சொல்லாளன்” என்று மட்டும் கூறினேன்.   என் கைகளை விடாமல் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் அழைத்து சோபாவில்  அமர  சைகையால் உணர்த்தினான்.

சிறிது நேரத்தில் ஒருவர் வாசல் திரையை விலக்கி வெளியே வந்தார். சொல்லாளனைப் பற்றிய என் கற்பனைப் பதிவில் அந்த உருவம் துளியும் பொருந்தாததால் வந்தவரைக் கவனிக்காமல், அந்த அறையைக் கவனித்தேன். இடது பக்கச் சுவற்றில் சில காட்டு மிருகங்களின் தலைகளை மாட்டியிருந்தார்கள். இரண்டு தலைமுறைக்கு முன்பு பதப்படுத்தியதைப் போலத் தோன்றியது. வலது பக்க ஜன்னலிற்குக் கீழ் இருந்த சிறிய மேஜையில் எழுதாத பத்திரத் தாள்கள் காற்றில் படபடத்தது. சுவற்றில் இருந்த கடிகாரத்தின் ஒலி அதிகப்படியாகக் எனக்குக் கேட்பது போல இருந்தது. இரண்டு நொடிகளிற்கிடையே “கிறுக்” என்ற சப்தம் எனக்கு அதிக எரிச்சலைக் கொடுத்தது.

கைகளைக் குவித்து வணக்கம் போட்டுக்கொண்டே என் எதிரில் வந்தவர் “சொல்லாளன்” என்றார். வயது முப்பத்தைந்திற்குள் இருக்கலாம். வெள்ளை முழுக்கை  சட்டை அணிந்திருந்தார். வானத்து நீலத்தில் ஜீன்ஸ். தேவைக்கு மீறியபடிக்கு ஜெல்லைத் தடவி வகிடில்லாமல் அழுத்தமாக பின்னோக்கி சீவி இருந்தார். மிடுக்கான தோற்றம். சிரித்தால் மட்டுமே தெரியும் ஆழமான கன்னக்குழி. அவரைக் கண்டு வேகமாக எழுந்த என் தோளைப்பிடித்து அழுத்தி உட்காரவைத்து எதிரில் இருக்கும் சோபாவில் முழு உடலும் பொருந்துமாறு கைகளை விரித்து அமர்ந்து கொண்டார்.

“என்ன சார், வழியிலே ஊர்க்காரங்க எல்லாம் உங்களை ரொம்ப கலவரப்படுத்திட்டாங்களோ?” என்று அளவாகச் சிரித்தார். என்னை அழைத்து வந்த சிறுவனுடன் ஒரு பெண் கையில் காப்பி டம்ளருடன் வந்தாள். “முதல்லே காப்பி குடிங்க” என்று முதல் டம்ளரை என்னிடம் நீட்டினார். அடுத்த டம்ளரை எடுத்துக்கொண்டே  அந்தச் சிறுவனிடம் “உள்ளே போய் அம்மாவுக்கு கூடமாட ஒத்தாசையா இரு” என்றார். அந்தப் பெண் செய்கையிலே என்ன வைக்க என்று கை குவித்துக் கேட்க “பொங்கல் வடை செஞ்சிடு” என்று என்னைப் பார்த்து தலையாட்டி ஒப்புதலும் வாங்கிக்கொண்டார்.

சொல்லாளன் பேச ஆரம்பித்தார்.  “முதல்லே ஒரு விளையாட்டாத்தான் ஆரம்பிச்சேன். பிறகு அதுவே ஒரு பழக்கம் ஆயிடுச்சு”

காலி டம்ளரை சப்தம் இல்லாமல் என் முன் இருக்கும் கண்ணாடி டீப்பாயில் அதிக கவனத்துடன் வைத்தேன்.

“மூனு தலைமுறையா நாங்க இந்த ஊரிலே இருக்கோம். அப்போ இந்த ஊருக்குப் பேர் குயில் மேடு. என் அப்பா பஞ்சாயத்துத் தலைவரான பிறகுதான் சுதந்திரபுரம் என்று பேரை மாற்றி வைத்தார். ஆனால் இங்கே இருக்கிற ஜனங்களுக்கு இது எப்பவும் குயில் மேடுதான்னு அப்புறமா தெரிஞ்சுக்கிட்டார்.  நான் படிச்சதெல்லாம் இந்த ஊருலேதான். நான் ஏழாவது படிக்கும் போது துடுக்கான என் பள்ளி நண்பனிடம் ஒவ்வொரு சொல்லிற்கும் விலைகளை நிர்ணயித்து சொற்களை வாங்க ஆரம்பித்தேன். தினமும் புழங்கும் சொற்கள் ஒவ்வொன்றிற்கும் ஐம்பது ரூபாய் கொடுக்க ஆரம்பித்தேன். வாய் வழியாக இதைக் கேட்ட கிராமத்து ஆட்கள் சொற்களை கோணிப் பைகளில், தூக்குச் சட்டியில், மஞ்சள் பைகளில் வைத்துக்கொண்டு எனக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். எனக்கு விற்ற சொற்கள் எதையும் எந்த சந்தர்பத்திலும் அவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது என்பதுதான் முக்கியமான விதி.

நோய்கள்  சம்பந்தப்பட்ட சொற்களுக்கு முதலில் ஒரு சில சலுகைகள் கொடுத்திருந்தேன். மருத்துவ மனையைத் தாண்டிப் போகும் போது அவர்களின் இரைச்சல் தாங்கமுடியாமல், உடனே அனைத்து சலுகைகளையும் விலக்கிக் கொண்டேன். முதலில் அவர்கள் விற்க வருவது பெற்றோர்களின் பெயர்களை. அதற்கடுத்து மனவி, பிள்ளைகளின் பெயர்களை. இந்த சமயத்தில்தான் நான் பல சவால்களை எதிரி கொள்ள வேண்டியிருந்தது.  நடு நிலைப் பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர் மூலம்  எனக்கு முதல் சவால் வரும் என்று துளியும் நான் நினைக்கவே இல்லை. அவர்தான் கிராம மக்கள்  என்னிடம் விற்ற சொற்களுக்கு ஈடான மாற்று சொற்களை தேடித் தேடிக் கண்டுபிடித்து கொடுக்க ஆரம்பித்தார். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் எனக்குக் கூடுதல் செலவானது. எவ்வளவு முயன்றும் என்னால் தமிழ் ஆசிரியரை மட்டும் என் பக்கம்  பணியவைக்கூடிய விலையை மட்டும் தீர்மானிக்கவே முடியவில்லை. பிறகுதான் என் ஒப்பந்தத்தில் “ஒரு சொல்லையோ அல்லது அதற்கு ஈடான எந்த ஒரு மாற்றுச் சொல்லையோ உபயோகப்படுத்தக் கூடாது” என்ற விதியைச் சேர்த்தேன். வாய்விட்டு அவர்கள் பேசவே கூடாது என்ற அவர்களின் பொது ஒப்புதலிற்கு முதலில் ரூபாய் மூவாயிரம் கொடுக்க ஆரம்பித்தேன்”.

அதற்குள் பொங்கல் வந்தது. இருவருக்கும் தட்டத்தை வைத்து அந்தப் பெண் பரிமாறினாள். அவளுடன் வந்த அந்தச் சிறுவன் டம்ளரில் நீர் ஊற்றினான். அந்தச் சிறுவன் என்னருகில் வந்து செய்கையினால் அவன் பெயரைக் கூறினான். ஒரு பெரிய போராட்டத்திற்குப் பிறகே என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. அவனின்  பெயர் குகன்.  இவர்களைப் பற்றி  சொல்லாளன் மேலும் தொடர்ந்தான்.

“இந்தப் பசங்களோட அப்பா அம்மா இரண்டு தலைமுறைக்கு எந்தச்சொற்களையும் உபயோகிக்க மாட்டேன் என்று ஒப்புக்கொண்டு ரூபாய் இரண்டாயிரம் பெற்றுக்கொண்டவர்கள். இந்தப் பொடியன் வாலுசார். துருதுருன்னு வீட்டிலே சுத்திக்கிட்டே இருப்பான். இந்தப் பெண் குகனின் அக்கா. பெயர் எழில் மங்கையற்கரசி”.

அந்தப் பெண் அவளின் பெயரை எப்படி செய்கையால் காட்டி விளக்குவாள் என்று நான் யேசிக்க ஆரம்பித்தேன். 

“நீங்கள் செய்வது தனி மனித சுதந்திரத்தை பாதிக்காதா? அரசாங்கமும் இதை எப்படி எடுத்துக்கொள்கிறது?” 

இதைக் கேட்டவுடன் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே மீண்டும் தொடர்ந்தார் சொல்லாளன்.

“அதற்குத் துளியும் வாய்ப்பே இல்லை நண்பரே. மறைமுகமாக என்னை ஊக்குவிப்பதே இந்த அரசாங்கம்தான். ஆளும் கட்சி, எதிர் கட்சி என்ற பேதமெல்லாம் இதற்குக் கிடையாது. இருசாராரும் முழு மனதுடன் இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்” என்று மேஜையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து என்னைப் படிக்கச் சொன்னார். தற்போதைய அரசு என் திட்டத்தை முழு மனதுடன் ஆதரிப்பது மட்டும் இல்லாமல் எங்களைச் சுற்றி இருக்கும் இருபது கிராமங்களுக்கு தேர்தலுக்கு முன்பே இதை எப்படி அமுல் படுத்தலாம் என்று திட்ட அறிக்கையையும் தயார் செய்யப் பணித்திருக்கிறது. அந்த ஒப்புதல் கடிதம்தான் உங்களின் கைகளில் இருக்கிறது. ஒரு அரசியல் தலைவர் பேசும் போது ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் கைகளை மட்டும் தட்டி கரகோஷம் எழுப்பும் மக்களை எந்த அரசியல் கட்சிதான் வேண்டாம் என்று கூறும். நீங்களே சொல்லுங்கள்?”.

இது எப்படி சாத்தியம் என்று நெற்றியைச் சுருக்கி யோசித்துக்கொண்டிருக்கும் போது

“சாப்பிடுங்க சார்” என்று என்னை சுய நினைவிற்கு மீட்டுக் கொண்டுவந்தார்.

“இந்த ஊரில் வாயையே திறக்கவே கூடாது என்று ஒரு திட்டத்தையும் நீங்கள் அறிமுகப்படுத்தியிருந்தால், அதற்கு கூடுதல் வரவேற்பு இருந்திருக்குமே” என்று என் கோபத்தை மறைத்து அவரிடம் கேட்க உடனே அவர்

“அவர்கள் நன்றாக சாப்பிட்டால்தானே ஆரோக்கியமாக இருப்பார்கள். அதற்காகவாவது அவர்கள் வாய் திறக்க வேண்டுமே. எனக்குத் தேவை பேசாத ஆனால் ஆரோக்கியமான அடிமைகள்.” என்று கூறிச்  சிரித்தார். சொல்லாளன்.

காலை உணவு முடிந்த பிறகு இருவரும் காலாற ஊரைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். இருபது நிமிடங்கள் நடந்த பிறகு ஒரு ஆற்றுப்படுகைக்கு வந்தோம். திட்டு திட்டாக சில பள்ளங்களில் நீர் தேங்கி இருந்தது. அதற்கடுத்து ஒரு தொழிற்சாலை.

“எங்கப்பா காலத்திலே இருந்து இந்தத் தொழிற்சாலை இங்கேதான் இருக்கிறது” என்றான் சொல்லாளன். சாராய வீச்சம் காற்றில் இழையோடிக் கலந்து என் நாசியை உறுத்தியது.  “அப்பா காலத்திற்குப் பிறகு நான்தான் முழுப் பொறுப்பேற்று நடத்துகிறேன். எதிர்ப்படும் ஊர் ஜனங்கள் சைகையால் எதையோ சொல்லாளனிடம் பகிர்ந்து கொண்டு பணிவுடன் இரண்டு கைகளாலும் வணக்கத்தைத் தெரிவிக்க எவரையும் பொருட்படுத்தாமல் என்னிடம் பேசிக்கொண்டே வந்தார். காரின் கதவைத் திறந்து வைத்து எனக்காகக் காத்திருந்தார் ஓட்டுனர். 

“நீங்களெல்லாம் பத்திரிக்கையாளர்கள். அதிகம் பேசுவீர்கள் அப்படித்தானே? உங்களின் பத்திரிக்கை சமூகத்தில் அதிகம் புழங்கும் சொல் ஒன்றைக் கூறுங்களேன். நீங்கள் துளியும் கற்பனை செய்ய முடியாத  அளவிற்கு என் ஊக்கத்தொகை நிச்சயம் இருக்கும்”

என்னிடம் சிரித்தபடியே  கைகுலுக்கி வழியனுப்பி வைத்தார்  சொல்லாளன். 

- பிரேம பிரபா