14.03.2016..இன்று அனிச்ச மலர்க்கு பிறந்த நாள்...அது அவர்களின் திட்டம்தான்... சரியான நேரத்தில்... செயல் படுத்தத் தொடங்கினாள் அனிச்ச மலர்...

"என்ன பொம்பள புள்ளை பயந்ருவான்னு நினைச்சிங்களா....?..... ம்ஹும்.... நா......ன் வே......ற........!... இந்த காட்டை.. இந்த ஒரு கிலோ மீட்டர் சுத்தளவுள்ள காட்டை.... நீங்க மரம் வெட்டி முடிக்கறக்குள்ள சுத்திட்டு வரேன்... சாட்சிக்கு.. இந்தக் காட்டோட கடைசில பூக்கற பொன்னிற பூவை பறிச்சிட்டு வரேன்...... என்ன போட்டிக்கு ரெடியா......?" என்றாள் அனிச்ச மலர்...

mystery girlஅவளின் மனம்....நந்தவனத்தை மிதக்க வைத்துக் கொண்டிருந்தது.... 

போட்டிக்கு அனைவரும் தயார்... கூட இருந்த தங்கை... மித்ரை... அண்ணன் ராவணன்.... அப்பா துருவன்... அம்மா லோட்சனி... பக்கத்துக்கு வீட்டுக் காரர்கள் சிலர்.... மாமா மாவீரன்... என்று அனைவரும் சரி என்றார்கள்....

அனிச்ச மலர் புறப்பட்டாள்..... 

காட்டின் முடிவில்... அசோக் சக்கரவர்த்தி காத்துக் கொண்டிருப்பான்.... பார்த்து மாதக்கணக்கில் ஆகி விட்டது.... பெருங்காதல் கனவுகளுக்குள் குடும்பம்.. ஊர்.. மதம்.. சாதி.... என்று எல்லாமே வந்து விட.. பிரிவின் ஞாபகங்களில்.... அவள் மெழுவர்த்தி ஆகி இருந்தாள்...மென் முனை வெளிகளின் கைகளில் சறுக்கி விழும் வரத்தோடு.. அவள் ஓடினாள்...பிறந்த நாளுக்கு, பரிசாக தாலி தருவதாகக் கூறி இருந்தான்.....  

"அவன்.. தீராத் துயரோடு....இளைத்திருப்பான்... ஓடிச் சென்று தாவி அணைக்கப் போகும் தன் எடையைத் தாங்குவானா.. என் மன்னவன்..."- அவளின் குறுநகை உடல் பரவி... உயிர் திருகியது...

அவள் ஓடிக் கொண்டே இருந்தாள்... அவள் செல்லும் ஒற்றையடி திடும்மென பிறழ்ந்து அது வழி இல்லை என்றது.. திரும்பிய கண்களில்.. ஒற்றையடி திசை மாறிக் கிடத்தது.. மரங்களின் கிரீச் சப்தங்கள்... ஒரு அந்தகாரச் சூனியத்துக்குள்...வளர்ந்து நின்ற தலை மயிர்களென அச்சமூட்டின.. பெரும்பாம்புக் கூட்டத்தின் நெளிவுகளைப் போல.. புகை தீண்டும்.. மொழிகள்... மிகக் கடுமையான பனியின் உறவைக் கொட்டின...அவள் ஓடிக் கொண்டே இருந்தாள்...

திசை அற்று......திக்கற்று... கனவின் விளிம்பில் விழும் கட்டிலின் தடுமாற்றத்தின் திடுக்கைப் போல... புரண்டு படுத்த கதறலோடு.. அவளின் ஆர்வம்.. மெல்ல கை விடத் தொடங்கியது...... அவளின் புரிதல்.. எங்கோ இடையில் நின்று விட்டதாக நேரமற்ற சூனியம் அந்தக் காட்டை ஆளத் துவங்கியது...இரவின் மினுமினுப்பு..... பகலின் அலைக்கழிப்பு...... பனியின் மூழ்கடிப்பு..... மழையின் குமிழ் வெடிப்பு.. காற்றின் திசை மடிப்பு.....கனவுகளின் சோர்வுக்குள்..... பசியின் தீர்வுக்குள்... அலையாகி..... இணுங்கி... சருகாகி.. மீண்டும் உயிர்த்தெழுந்த பொழுதொன்றில்... அவள் மறதியின் ஞாபகத்தில்... ஒரு துளியாகி விட்டிருந்தாள்...... தன் முகம் மறக்கும் தூரத்துக்குள்.. பார்வையின் இருண்மையின் தீரா தவத்தைக் கலைக்க, எறிந்த கல்லெல்லாம் அவளையே நிரப்பியதாக உணர்ந்தாள்.... 

ஓய்ந்த கால்களின்... ஒவ்வாத துணுக்களோடு... திமிறித் திறந்திருந்த மார்பின் வலிமையின் வலியோடு..... அவள்.. தொடை விரிந்து.. கிடந்த பனி பூக்களின் புல் வெளிகளில் அவள் மட்டுமே கிடந்தாள்.......இலை பேசும் மொழி..... வழி பேசும் காதல்..... மரம் சொல்லும் தத்துவம்... பாறையின் வரட்டுக் கத்தல்.....மரங்களின் கீச்சொலி... அந்தகாரம் அத்து மீறும்.. கவனிப்பின் எத்தனிப்பு  என்று அவளின் நுண்ணறிவு கூம்பித் திரியும்.. குரலாய் நிறம் செய்து கொண்டே இருந்தது......

அசோக் சக்ரவர்த்தியைக் காணவில்லை.. அந்தக் குடும்பத்தைக் காணவில்லை... திடும்மென முளைத்து விட்ட  திரைக்குள் அடைபட்ட  வெளியின் கொண்டியை எங்கனம் அவிழ்க்க ....?....... அது அத்துவானக் கதவடைப்பு ...

அலையும் கேசத்தில்.. அடங்காப் பிடாரியின் அனுமானக் கூடு சிதறிடும் ஒலிகளினூடாக..... பறவைகள் செய்தே பறந்தாள்..... கானகம் விரிந்தே கிடந்தாள்....காடுகளின் கதவைத் தாண்டி வெளிவரவே முடியவில்லை.. எப்படி சுற்றினாலும் அதற்குள்ளேயே அவள் வந்து சேர்ந்தாள்... எட்டிப் பார்க்கும் திசையில் பூமி.... சுற்றுவதை உணர முடிந்தது......

"என்ன நடக்கிறது....."- புரியாத மௌனத்தில் ஓங்கி கத்தி அழுது வற்றினாள்....ஆனாலும்... அது கொஞ்ச நேர... ஒரு நாளின் தவிப்புக்குள் அடங்கி விட்டது....

பலகட்ட முயற்சிக்குப் பின்...பன்னி ஒன்றின் வால் பிடித்து பொந்தொன்றுக்குள் நுழைகையில் காடு விட்டு வெளியேறி இருந்தாள் நம்பவும் முடியாமல்......

தானாக சிரித்துக் கொண்டு... காட்டைத் திரும்பி பார்த்து..... பயந்து.. அது மிரட்டும் களிப்புக்குள் சிக்கி விடாத சிறுபிள்ளையின் தவிப்போடு..."முதலில் வீடு போக வேண்டும்... பின் காரணம் கண்டறிவோம்" என்று சமாதானித்து வீட்டை அடைந்தாள் கூட்டை அடைந்தவள் போல... 

கதவு... இறுகிக் கிடந்தது...

தட்டினாள்.................... தட்டினாள்........................ தட்டினாள்..........

சற்று கணத்தில் திறந்த கதவுக்குப் பின் ஒரு வயதான பாட்டி நின்று கொண்டிருந்தாள்....

"யார் இந்த.... பாட்டி?!" என்று உற்று நோக்கிக் கொண்டே... "என்ன...... நீங்க...... யாரு.......?"- என்று வாய் திறக்கும் முன்னே முணுமுணுக்கும் மனதோடு அவளையும் தாண்டி வீட்டை எட்டிப் பார்க்க வீட்டின் தோற்றமே மாறி இருந்தது....

"அம்மா...... அம்மா...."-கத்திக் கொண்டே அந்தப் பாட்டியை "யார் நீ?"- என்பது போல பார்த்தாள் அனிச்ச மலர்... 

"யாரு....என்ன என்பது போல... பார்த்த அந்தப் பாட்டி..... நொடியில் உடைந்து கத்தியபடியே...."அக்........................கா...... நான் மித்ரை...."என்று நடுங்கிக் கொண்டு அழுது சரிந்தாள்...மித்ரை...

மிரண்டு போன அனிச்ச மலர் பயந்தபடியே வீட்டுக்குள் நுழைந்தாள்...

அப்பா அம்மா போட்டோவுக்கு மாலை மாட்டி இருக்க.......பக்கத்தில் இருந்த காலெண்டரில்... வருடம் 2080 என்றிருந்தது...

-       கவிஜி