குர்லா, மும்பை.

வருடம் 2010. செப்டம்பர் 10. வெள்ளிக் கிழமை.

காலை ஐந்து மணி.

மழை சீசன் என்பதால், சொத சொதவென மழை தூறிக்கொண்டிருந்தது

நடக்கப்போகும் விபரீதம் எதுவும் தெரியாது, அன்றும் வழக்கம்போல் நர்மதா, வயது 24, சீக்கிரமாக எழுந்து தன் அலுவலகத்திற்கு கிளம்ப ஆயத்தமானாள். ஒன்பது மணிக்கு அலுவலகம் செல்ல, தினமும் ஆறரை மணிக்கு வேகமாகச் செல்லும் மின்சார ரயிலைப் பிடித்தால்தான் விடி ஸ்டேஷன் சென்று அங்கிருந்து பதினைந்து நிமிடங்கள் நடந்து அலுவலகம் சென்றடைய முடியும்.

ஒருநாள் தாமதமாகச் சென்றாலும் அவளுடைய ப்ராஜெட் மானேஜர் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்வான்.

நர்மதாவின் தந்தை தன் மகளை, ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு குர்லா ரயில்வே ஸ்டேஷனில் கொண்டு விட்டுச் சென்றார். அப்போது காலை ஆறு பத்து. சீசன் டிக்கெட் வைத்திருக்கும் நர்மதா விடுவிடுவென ஸ்டேஷன் ஓவர் பிரிட்ஜில் ஏறி, அங்கிருந்தபடியே விடி வேக வண்டிக்கான பிளாட்பாரம் எது என்று நோட்டமிட்டாள். மூன்றாவது பிளாட்பாரம் என்று இண்டிகேட்டர் பார்த்து உறுதி செய்து கொண்டு, அதில் இறங்கி அப்போதுதான் பிளாட்பாரத்தில் மெலிதாக திரள ஆரம்பித்திருந்த கூட்டத்தினரின் நடுவே சென்று நின்று கொண்டாள்.

ஆறரை மணி.

எலெக்ட்ரிக் ரயில் வேகமாக வந்து நின்றதும், நர்மதா அவசரமாக ஓடிச் சென்று லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஏறி, உடனே வலது கையினால் நடுவில் ஆதாரமாக இருக்கும் பெரிய கம்பியைப் பிடித்துக்கொண்டு உள்ளே உட்கார இடம் இருக்கிறதா என்று பார்த்தாள்.

‘பம்’ என்று ஹாரன் அடித்து எஞ்சின் கிளம்பியபோது, ஒருத்தன் அசுர வேகத்தில் ஓடிவந்து நர்மதாவை கூரிய அரிவாளால் கழுத்தைச் சீவிவிட்டு எதிர் திசையில் ஓடிச்சென்று மறைந்தான்.

நர்மதா கழுத்து துண்டாகி ரத்தம் பீறிட்டு தெறிக்க, ரயிலினுள் சரிந்து விழுந்து துடி துடித்து இரண்டு வினாடிகளில் இறந்து போனாள்.

சக பயணிகள் அதிர்ந்துபோய் உடனே அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.

குர்லா வரும் மின்சார ரயில்களின் டிராபிக் நிறுத்தப்பட்டு, நர்மதாவின் உடல், அருகிலுள்ள ஹாஸ்பிடலுக்கு அவசரமாக எடுத்துச் செல்லப்பட்டது.

நர்மதாவின் அம்மா, அப்பா ஓடிவந்து அவள் பிணத்தைப் பார்த்து கதறி அழுதனர்.

செய்தி தீயாகப் பரவி, டி.வி.சேனல், பத்திரிகைத் துறையினர் கூடிவிட்டனர். அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்தன. சட்டசபை தேர்தலில் மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்ட உதிரிக் கட்சிகளிலிருந்து, லெட்டர் பேட் பொட்டல கட்சிகளும் காரசாரமாக அறிக்கைகள் வெளியிட்டன. மஹாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என ஒப்பாரி வைத்தன. பிண அரசியல் செய்தனர். எதிர்க் கட்சித்தலைவர் நர்மதாவின் வீட்டிற்கே சென்று துக்கம் விசாரித்தார். அறுபது வயதான நர்மதாவின் தந்தை மங்கள் பாண்டே அரசாங்க உத்தியோகம் பார்த்து ஒய்வு பெற்றவர். மிக உக்கிரமான சக்கரை நோயினால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார்.

கொலை ரயில்வே ஸ்டேஷனில் நடந்ததால், விசாரணை ரயில்வே போலீஸின் பொறுப்பு என்று மாநில அரசாங்கம் முதல் இரண்டு தினங்கள் மெத்தனமாக இருந்துவிட்டு, பிறகு ஹைகோர்ட் எச்சரித்தபிறகு, எட்டு வகையான போலீஸ் படையை களத்தில் இறக்கிவிட்டது. மஹாராஷ்டிர முதல்வர் நர்மதா கொலை சம்பந்தமாக எதிர்க் கட்சியின் ஏகப்பட்ட கேள்விக் கணைகளை சட்டசயையில் சமாளிக்க வேண்டியிருந்தது.

போலீஸ் எவ்வளவோ முயற்சி செய்தும் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆறு வருடங்கள் ஓடிவிட்டன. மக்களும் இந்த துயரச் சம்பவத்தை மறந்து விட்டனர்.

மகள் கொலை செய்யப்பட்ட சோகத்தில் நர்மதாவின் அம்மாவும் இறந்துவிட்டாள். மங்கள் பாண்டே தனித்து விடப்பட்டார்.

வருடம் 2016. ஜூன் 30, வியாழக்கிழமை காலை பத்து மணி.

குர்லா ஈஸ்ட் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தேஷ்பாண்டே அன்றைய சாம்னா தினசரியை மேய்ந்து கொண்டிருந்தார். அப்போது தாடி மீசையுடன் ஒரு வயதானவர் தயங்கித் தயங்கி உள்ளே வந்தார். இன்ஸ்பெக்டரின் முன் அமர்ந்து, “நான் ஒரு கொலை செய்து விட்டேன். என்னைக் கைது செய்யுங்கள்” என்றார்.

இன்ஸ் அதிர்ந்து, “என்னது கொலையா? நீங்க யாரு, உங்க பெயரென்ன?” என்றார்.

“என் பெயர் மங்கள் பாண்டே...ஆறு வருஷத்துக்கு முன்னால குர்லா ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் நர்மதா என்கிற பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப் பட்டாளே...அவள் என் ஒரே மகள். அவளை கூலிப்படை வைத்து கொலை செய்தது அவள் அப்பாவாகிய நான்தான்.”

இன்ஸ் தேஷ்பாண்டே உடனே சுதாரித்துக்கொண்டு சுறுசுறுப்பானார். தன் அனுபவத்தினால் ஒரே கல்லில் பல மாங்காய்கள் விழச் செய்யும் புத்திசாலி அவர். ‘இவன் என் ஜாதிக்காரன். இவனை காட்டிக் கொடுக்காமல் வேறு வகையில் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா பார்க்கலாம்’ என்று நினைத்தார்.

தவிர, இந்தக் கேஸ் குர்லா வெஸ்ட் இன்ஸ்பெக்டர் ஏக்நாத் கேல்கருக்கு போக வேண்டியது. அவர் நேர்மையானவர். நேர் கோட்டில் இந்தக் கொலைக் கேஸை முடித்து நல்ல பெயரையும் தட்டிச் சென்றுவிடுவார். பதவி உயர்வும் கிடைத்து விடலாம். அவரிடம் இவரை போக விடக்கூடாது என்று தீர்மானித்தார்.

“ஐயா நீங்க இதப்பத்தி வேறு யாரிடமாவது சொன்னீங்களா?”

“இதுவரை இல்லை. நான் தனிமையில் குற்ற உணர்ச்சியில் கடந்த ஆறு வருடங்களாக தவித்துக் கொண்டிருந்தேன். சர்க்கரை நோயினால் முழங்காலுக்கு கீழே என் வலது காலை வெட்டி எடுத்து விட்டனர். உண்மையை ஒப்புக்கொண்டு, தண்டனையை ஏற்றுக்கொள்ள இன்று நேரில் வந்துள்ளேன்.”

தன் தொள தொள பைஜாமைவைத் மடித்து, ஜெய்ப்பூர் காலைக் காண்பித்தார்.

“ஐயா உங்களைப் பார்த்தா ரொம்ப நல்லவரா தெரியறீங்க. நாம ஒரே ஜாதி. ஒருவேளை நாம் உறவினராகக்கூட இருக்கலாம்.... நம்ம ஜாதில ஜெயிலுக்குப் போனா ரொம்ப அவமானம். உங்க அட்ரஸை சொல்லுங்க, இன்று இரவு எட்டு மணிக்கு உங்க வீட்டுக்கு வரேன். மத்தத நாம நேர்ல பேசிக்கலாம்.”

மங்கள் பாண்டே சற்றே குழம்பினார். பின்பு இரவு எட்டு மணிக்கு தான் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு விடைபெற்றார்.

இரவு எட்டு மணிக்கு சரியாக தேஷ்பாண்டே மப்டியில் மங்கள் பாண்டே வீட்டிற்கு சென்றார்.

வீடு விஸ்தாரமாக அழகாக இருந்தது. வீட்டை ஏற இறங்கப் பார்த்த தேஷ்பாண்டே, “இவ்வளவு பெரிய வீட்டில் தனிமையாக இருக்கிறீர்களே” என்றார்.

“ஆமாம்... இந்தத் தனிமையும், குற்ற உணர்ச்சியும்தான் என்னை வாட்டுகிறது....இந்த வீடு என் மாமனார் என் திருமணத்தின்போது எனக்கு கொடுத்த சொத்து. நான் இறப்பதற்கு முன் இதை எதாவது ஒரு அநாதை ஆசிரமத்துக்கு எழுதி வைத்துவிட வேண்டும்.”

தேஷ்பாண்டே முழித்துக் கொண்டார்.

“நாம் பாண்டே வம்சம். நாம் தவறுகள் செய்ய முடியாது. எதற்காக உங்கள் மகளை கொன்றீர்கள்?”

“நன்றாகச் சொன்னீர்கள்...எனக்கும் ஜாதிப்பற்று ரொம்ப அதிகம். அந்தப் பற்றினால்தான் என் ஒரே மகளையும் கொலை செய்தேன். அவள் தன்னுடன் வேலை செய்யும் மரியசகாயம் என்கிற கிறிஸ்துவ பையனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தாள். அவன் தமிழ் நாட்டின் தூத்துக்குடியைச் சேர்ந்தவன். அவனைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கவில்லை. அவனைக் கொல்லத்தான் ஸ்கெட்ச் போட்டேன். ஆனால் அதற்குள் நர்மதா அவனுடன் ஓடிவிடும் திட்டத்தில் இருந்தாள். நான் உடனே பஷீர்பாய்கிட்ட மூன்று லட்சம் பேசி நாள் குறித்து என் மகளை முடித்தேன். ஒருவேளை நான் ஜாதித்திமிர் இல்லாது பொறுமை காட்டியிருந்தால் இன்றைக்கு என் மனைவி உயிருடன் இருந்திருப்பாள். பேரன் பேத்திகளுடன் நான் சந்தோஷமாக இருந்திருப்பேன்.”

ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டார்.

“உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்த வயதில் நீங்கள் போலீஸ், கேஸ், கோர்ட் என்று கஷ்டப் பட நான் விடமாட்டேன். நம் ஜாதிக்காகத்தானே கொலை செய்தீர்கள்? பழசை மறந்துவிட்டு நாளை முதல் என் வீட்டிற்கு வந்து விடுங்கள். நீங்கள் என் அப்பா மாதிரி. நான் உங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறேன்.”

மங்கள்பாண்டே இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. வெடித்து அழுதார்.

தேஷ்பாண்டே மனதில், இவ்வளவு பெரிய வீட்டை தான் எப்படியாவது எழுதி வாங்கிவிட வேண்டும்... என்கிற வெறி தலைக்கேறியது. அதை அவர் இன்னும் சில மாதங்களில் சாதித்தும் விடுவார்.

அன்று இரவு அவர் மனைவி, “என்னங்க நம்ம ஜாதின்னு அவரைக் காப்பாற்றப் போய் நீங்க ஏதாவது ஆபத்துல மாட்டிக்காதீங்க” என்றாள்.

“அட போடி முட்டாள்... வீட்டை எழுதி வாங்கியவுடன், ஸ்லோ பாய்சன் எதுக்கு இருக்கு? அதுக்கு முன்னால அவர் தன் மகளை கொலை செய்ததை கோர்வையாக எழுதி வாங்கி அதை நோட்டரைஸ்

பண்ணி வைத்துக்கொள்ள வேண்டும்.”

“அவர்தான் தூக்குமேடைக்கும் போகத் தயாராக இருக்கிறாரே? அப்புறம் எதுக்கு எழுதி வாங்கணும்?”

“இவர்கிட்ட பெரிய வீடு மாதிரி, பஷீர்பாய்கிட்ட பெரிய தோட்டம் இருக்காதா என்ன?”

தேஷ்பாண்டே எடுத்தது ஒரே கல்தான். ஆனாலும் பல மாங்காய்கள் சீக்கிரம் அவருக்கு விழுந்துவிடும்.

- எஸ்.கண்ணன்