தொண்டை வலி ஒட்டுமொத்த உடலையும் ரணப்படுத்தி கொண்டிருந்தது. தொண்டையில் ஏற்பட்ட அசூசையனால் கூட இப்படி வறட்டு இருமல் வரக்கூடும் என்று இலவச மருத்துவ ஆலோசனை பலர் சொன்னாலும் அம்மாதான் சுடு தண்ணியில் உப்பை போட்டு கொப்பளிக்க சரியாகிவிடும் என்ற மருத்துவ குறிப்பை சொன்னாள். அப்படி செய்தும் பலனளிக்கவில்லை. லொக்கு லொக்குவென்று கம்பெனியில் இரும்புவதை பார்த்து முதலாளியே விடுப்பு எடுக்க சொல்லி விடுமுறை அளித்ததால் வெகு நாளைக்கு பிறகு  ஞாயிறு தவிர்த்து வீட்டில் இருப்பது இன்று தான், அநேகமாய் போகும் போக்கை பார்த்தால் இரண்டு மூன்று நாட்கள் இந்த அவஸ்தி இருக்கும் என்றே தோன்றுகிறது.

man painஇயந்திரமாய் ஓடிக்கொண்டிருக்கும் திருப்பூர் வாழ்கையில் ஒருநாள் கூடுதல் விடுமுறை என்பது மனநோய் பிடித்த மனிதனுக்கு தலை தடவும் சுகம் அது. அநேகமாய் பலரும் இங்கு மனம் பாதித்த சதைகள் கொண்ட இயந்திரமாய் தான் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நகரம் ஒரு குட்டி தமிழ்நாடு எல்லா மாவட்ட மைந்தர்களின் புகலிடம். ஓய்வு இல்லாமல் ஓடும் இயந்திரத்திற்கு ஒரு நாள் விடுமுறை எடுத்துகொள் என வழங்குவது அரிதான சம்பவங்களில் ஒன்று அது இன்று அன்வருக்கு  வாய்த்திருகிறது.

.வெகு நேரம் தொலைகாட்சியையே பார்த்து சோர்வு தள்ளி உட்கார்ந்த நிலையிலேயே ஆழ்ந்து உறங்கிய போது “பாய்யம்மா போஸ்ட்.... பாய்யம்மா போஸ்ட்.. ” தபால்காரர் தூக்கம் களைத்தார்.

வீட்டிற்கு கடிதம் வருவது என்பது புதிதல்ல. ஒவ்வொரு மாதமும் இப்படி சில கடிதங்கள்  வருவது வழக்கம் தான். இலக்கிய நிகழ்ச்சி பற்றிய கடிதங்கள் தான் அதிகம் இருக்கும். ஒரு காலத்தில் ஏதோ ஒன்றை எழுதி அது கவிதை என்று பல  இலக்கிய கூட்டங்களுக்கு ஆர்வ கோளாரில் போய் வாசித்து கொண்டிருந்த போது அங்கு கையெழுத்து நோட்டில் எழுதி வைத்த முகவரிக்கு மறக்காமல் கடிதம் போட்டுவிடுகிறார்கள். அந்த கடிதங்கள் வரும் போது தான்  ஒரு கவிஞனாக முன்னொரு காலத்தில் வாழ்ந்த நியாபகம் வருகிறது. அப்போது எழுதிய கவிதைகள் கூட்டத்தில் எந்த கருமாந்திரத்தையும் உருவாக்கததால் அது கவிதை இல்லை என்று இலக்கிய கூட்டத்திற்கே முழுக்கு போட்ட பின்பும் கடிதங்கள்   விட்டபாடில்லை.  எழுதிய கவிதைலேயே ஒரு கவிதைக்கு தான் உற்சக கைதட்டு கிடைத்தது. கவிதையின் உள்ளடக்கம் டீயும் மேரிகோல்டு பிஸ்கட்டும் அது என்னவோ தெரியவில்லை எல்லா இலக்கிய கூட்டத்திற்கும் இந்த ரெண்டு கூட்டாளிகளை வைத்து நிகழ்ச்சியை முடித்து விடுகிறர்கள். அதை சாப்பிட முடியாமல் ஒவ்வொருவரும்  சிரித்துகொண்டே சாப்பிடும் நடிப்பு பற்றி தான் அந்த கவிதை. “மிச்ச தவிட்டு பிஸ்கட்டும் இலக்கிய விமர்சனமும்” இப்படி தலைப்பிட்டு வாசித்த கவிதை ரெண்டு கூட்டதிற்கு சுக்கு டீ கிடைத்தது. பின்னால் கட்டுபடி ஆகவில்லை என்று மீண்டும் பழையமுறை, இப்படியான  சின்ன விளைவுகளை தவிர்த்து இது  வரை எதுவும் என்கவிதைகள் செய்யவில்லை. அப்பிடி இருக்கும் போது ஒருவேளை மீண்டும் கவிதை எழுத சொல்லி அழைப்பு கடிதமா? என்று வாங்கியபோது “அப்துல் சுக்கூர்” என்று கடித பெறுனர் முகவரி. அம்மா இது வேற

                                                                                                2

யாருக்கோ வந்த கடுதாசி போஸ்ட்மேன் மாத்தி கொடுத்துட்டாரு என்று  தெருவின் முக்கு திரும்பிய தபால்காரரை அழைத்து திரும்ப கொடுத்த போது, அவர் “சரியா தானே தம்பி இருக்கு அப்புறம் என்ன” என்றார். “அண்ணா என்பேரு அப்துல் ரசாக்” என்றேன். “வீட்டு முகவரி உங்களோடு தானே தம்பி  இந்த தெருவுலே  “அப்துல்” என்ற பேரு உங்களுக்கு  மட்டும் தான் இருக்கு’ என்று சொல்லி சைக்கிளை மிதித்து நகர்ந்தார்.  தபால்காரர் சொன்னது போல் என்வீட்டு முகவரி தான் அதுவும் இந்த தெருவில் என்னுடையே பேர் மட்டும் தான் அப்துல் என்று இருக்கிறது. ஒரு வேலை அவசரத்தில் பெயர் மாற்றி எழுதி அனுப்பி விட்டார்களோ என்று கடிதத்தை திருப்பி பார்த்த போது அனுப்புனர் முகவரி அப்துல் நாசர்,73a, இராமேஸ்வரம் மெயின் ரோடு, பள்ளிவாசல்(பின்புறம்) இராமநாதபுரம் மாவட்டம். என்று எழுதப்பட்டு இருந்தது. இந்த முகவரியில் எனக்கு யாரையும் தெரியாது. நிச்சியமாக யாருக்கோ வந்த கடிதம் தபால்காரர் மாற்றி கொடுத்து விட்டார். நாளை மறக்காமல் கொடுத்துவிட வேண்டுமென்று அலமாரிக்குள் வைத்தேன்.

தொண்டை வலி இம்சை செய்து கொண்டிருப்பதை தாங்க முடியாமல் ஒரு மத்திரரையை வாயில் போட்டு தூங்கிபோனேன். அப்போதும் வலி தீர்ந்தபாடில்லை அநேகமாக தொண்டையில் சிருநாக்கு வளர்ந்தாலும் இந்த வரட்டு இருமல் இருக்கலாம் என்று பக்கத்துக்கு வீட்டு  ஆத்தா சொல்லி உப்பும் குருமிளகும் சேர்த்து அரைத்து சிருநாக்கில் வைத்து அழுத்தியதில் தொண்டையை பிடித்து நசிக்கியது போல் இருந்தாலும் கொஞ்சம் நன்றாய் இருந்தது. கருவாட்டு குழம்பு மூக்கில் துளைத்து எழுப்பிய போது மணி மதியம் இரண்டை காட்டியது. ஆசுவாசமாய் உட்கார்ந்து சாப்பிட்டு எவ்வளவு நாளாகிறது. தினமும் மதியம் ஆறிப்போன தாளிச்ச சோறு தின்ன நாற்கிற்கு கருவாட்டு குழம்பு உணத்தியாக இருந்தது. “கருவாட்டு குழம்பு நல்ல ருசிமா” என்றேன். “என்னடா ருசி மனெமே இல்ல உங்க அத்தா வாங்கி வருவாக பாரு கருவாடு, அப்பிடி ஒரு மணமும் ருசியும் இருக்கும் எல்லா அவரோடு போனது” பொருமினாள்.

 “ஆரம்பிச்சட்டாய அத்தா  புராணத்த” என்றேன்.  

“அட நெசமாத்தான் சொல்றேன் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ருசி இறுக்கு  உன் அத்தா லாரிக்கு போறப்ப  ராமநாதபுரத்திலிருந்து அவரு சிநேகிதர்  தங்கச்சிமடத்தில் இருக்கிற திமோத் மேரி ஆத்தா கருவாட்டு கடையிலிருந்து கருவாடு கொடுத்து அனுப்புவாரு அப்பிடி ஒரு ருசி, அந்த ஆத்தா மனசு மாறியே நல்ல தரமான கருவாட வாங்கி உன் அத்தா எப்பவருவாருனு தெருஞ்சு அந்த மனுசன்  கொடுத்து அனுப்புவாரு அப்பிடி சாப்பிட்டு வளந்த புள்ள நீ” என்றாள்.

“ராமநாதபுரமா...?” இப்பதானே எங்கோ படுசேன்” சட்டென நினைவுக்கு வரவில்லை, எங்கோ படித்த நியாபகம் ஆ! காலையில் வந்த கடித்ததின் முகவரி  ஒருவேளை அத்தாவின் சிநேகிதர் எழுதிய கடிதமா? என்ற யோசனையிலே பிரிப்பதா வேண்டமா பெரிய குழப்பத்தில்  தெளிவு பெற கடிதம் பிரித்து படித்தேன். “அஸ்லாம் அழைக்கும்” “ சொல்லி கடிதம் ஆரம்பித்தது.

                                                                                                3

“அன்புள்ள மகன் சுக்குருக்கு உன் அத்தா எழுதுவது, நான் நலமாக உள்ளேன். எனது கடிதம் உனக்கு அதிர்ச்சியை தந்திருக்கும் என்று எனக்கு தெரியும் உன்முகவரிய உன் சினகிதான் அமீர்ட தான் வாங்கினேன். கடைசிவரை உன் சிநேகிதன் தரவே இல்ல, உன்ன பத்தி எதுவுமே தெரியாதுன்னு பிடிவாதமா சொல்லிட்டே இருந்தான் என்னோட தொல்ல தாங்காம இப்பதான் உன்முகவரி கொடுத்தான். முகவரி கொடுத்ததிற்காக அவன கொவிசுடதே நான் தான் தொல்ல செஞ்சு வாங்குனே. என் மீது  உனக்கு இன்னும் கோவம் இருக்கும்னு எனக்கு தெரியும்.  ஒட்டுமொத்த ஊரு முன்னாடியும் ஜமாஅத் முன்னாடி இனிமே என்மகனே இல்ல அவன் மௌத்தா போய்ட்டானு நெனச்சுக்கிறேன்னு எல்லோர் முன்னாடி சொன்னது இன்னும் உன் மனச விட்டு விலகாதுன்னு தெரியும். அதமட்டும் இல்லாம ஒருமுறை கூட அடிக்காத உன்ன  ஊர்முன்னாடி கை நீட்டி அடுச்சது எனக்கே கஷ்டமா தான் இருக்கு. நீ எந்த முஸ்லீம் புள்ளைய கூட்டி வந்தாலும் கட்டி வச்சிருப்பேன். ஆனா ஒரு குடியான பொண்ண அதுவும் தாலி அருந்த குழந்தையோடு இருக்கிற புள்ளைய கட்டிகிறேனு சொன்ன போது துடு துடுச்சு போய்டேன். இத நம்மாளுங்களுக்கு தெருஞ்ச கேவலப்படுத்தி அசிங்கப்டுதிடுவாங்கனு நான் சொன்ன எந்த புத்திமதியும் நீ கேட்கலேன்னு கோவத்துலதான் நான் அப்பிடி நடந்துட்டேன்.  எந்த ஒரு  நல்ல முஸ்லிம் நீ செஞ்ச காரியம்  ஒத்துக்குவான்.   என்னோட நிலைமையில நீ இருந்தாலும் அப்பிடி தான் நடந்துக்குவேன். ஒரு உண்மைய இன்னைக்கு சொல்லுறேன். அந்த புள்ள செல்வி புருசன் அல்ப ஆய்சுல போனப்ப கைகொலந்தைய வச்சுட்டு இந்த புள்ள என்ன பண்ணுவான்னு பல நாள் மனசுக்குள் பொரிமிருக்கேன். அந்த புள்ளைய பாக்கும் போதெல்லாம் உன் தங்க ஆய்சவா அடிக்கடி நெனச்குவேன். நம்ம ஊட்டுல ரெண்டு பேரும் ஒன்ன விளயாடிய ஒரு சோட்டு புள்ளைங்க ஒன்னு தாலி அறுந்து கிடதப்ப எம்புள்ளேயே கிடந்த மாறி உறுத்துச்சு. முஸ்லீமா இருந்திருந்த என்பையன கட்டிக்கிறயானு  அந்த புள்ளயட்டயே  கேட்கலாம்னு பல நேரம் தோனிருக்கு, ஆனா என்னானு தெரியல அந்த புள்ளய நீ கட்டிகிறேனு சொன்னப்ப என்முன்னாடி நீ தெரியல நம்ம சனமும் ஜமாத்தும் தான் தெருஞ்சது. என்மனசுக்கு மார்க்கம் தடையா இருந்துச்சு. இப்ப சொல்லுறேன் எனக்கு எம்புள்ள தான் முக்கியம் ஜனமோ ஜமாஅத்தோ முக்கியமில்ல உடேன வந்துரு அத்தா. எதுவா இருந்தாளும் பாப்போம். அல்லாவுக்கு தெரியும் எம்புள்ள தப்பு செய்யலேன்னு. இதுக்கு முன்னாடி ஒன்னும் மண்ணுமாதானே பழகினோம். மனசு நல்ல இருந்த போதும் எந்த சாதியவும் இருக்கலாம் மதமாகவும் இருக்கலாம். நமக்கு  நல்ல மனுசங்க முக்கியம் புள்ளைய புடுங்கிற ஜமாஅத் முக்கியமில்ல புரிய வைப்போம்.. நீ தைரியமா வா, என்பேரனையும், மருமவளையும் கேட்டதா சொல்லு. மருமவட்ட கொவிசுக்க வேண்டான்னு சொல்லு. என் உசரு போரகுள்ள உன்முகத்த பாத்திடோனும் கடுதாசி கிடச்ச உடனே வா பேரனோட மருமவளோட.

இப்படிக்கு,

உன் அத்தா அப்துல் நாசர்.

 

                                                                                                4

அந்த கடிதம் என்னை என்னமோ செய்து விட்டது. ஒரு தந்தைக்கும் மகனுக்கும் நடந்த ஒரு ஈரமன போராட்டம் தூக்கத்தை தொலைத்து விட்டது. ஒரு வேலை இந்த கடிதம் அவன் மகனுக்கு கிடைத்து இருந்தால். எவ்வளவு சந்தோசம் கிடைத்திருக்கும் அதை தடுத்த மனிதனாக  கண்ணாடி முன் தெரிந்தேன். இந்த ஊரில் எங்கு இருந்தாலும் அந்த சுக்கூரை சந்தித்து கடிதம் கொடுத்திட வேண்டும் இல்லையென்றால் இந்த கண்ணாடியும் கடிதமும் என்னை உயிரோடு கொன்று விடும் போல.

யாருக்கோ போக வேண்டிய கடிதம் உயிர் வலி சுமந்து புத்தக அலமாரில்துடித்து கொண்டிருந்தது. ஒரு அப்பா தன் மகனின் உறவை புதுப்பிக்கப்படும் நல்ல காரியத்தை  தடுப்பதற்கான தடையாய் நான் இருப்பதாக உணர்ந்தேன்.  தொண்டை வலி சரியாகி  மூன்று நாட்கள் இப்பகுதி முழுக்க தேடியும் அப்துல் சுக்கூர் என்ற நபர் இருப்பதற்கான எந்த சுவடும் கிடைக்கவில்லை. தொண்டை வலியை இருந்ததை விட கடிதவலி பெரும் சிரமமாக இருந்தது. யாரோ ஒருவரின் கடிதத்தை வைத்திருப்பது எவ்வளவு பெரிய சுமை. அதனால் தான் மற்றவர்களின் கடிதம் படிக்க கூடாது என்று சொல்லுகிறார்களோ படித்தால் பித்து பிடிக்கும்.

“என் மருமவளையும், பேரனையும் கேட்டதா சொல்லு உங்களுக்காக காத்திருக்கேன்” என்ற வார்த்தைகள் விடாமல் என்னை தொல்லை செய்து கொண்டிருந்தது. வேலைக்கு போனாலும் கடித்ததின் வரிகள் கண் முன் வந்து வந்து போனது. பல இடம் விசாரித்தும் சுக்கூரை பற்றிய தகவல் இல்லை.

அப்துல் சுக்கூரை கண்டுபிடிக்க முடியாமல் அலைந்து தேய்ந்து ஒருமாதம் கடந்த பின்பு வேலை பழுவில்  அப்துல் சுக்கூரையும் அவன் அத்தாவையும் மறந்து போனேன். திருப்பூரின் இயந்தர வாழ்க்கை எல்லாவற்றையும் மறக்கடிக்கிற யுக்தி தெரிந்தது. வேலை வேலையென தொழிற்சாலை இயந்திரங்களாக மனிதர்கள் மாறிப்போவது இங்கு சாதாரணம். “அல்லாகுவே, சாப்பிடமா அப்பிடியே தூங்கிடலாம் போல இருக்கு ச்சே மிசின் மாறி ஓடிட்டே இருக்க வேண்டி இருக்கு” உடல் அழுப்பில் புலம்பிகொண்டே வீட்டிற்க்குள் நுழைந்த போது அப்துல் சுக்கூருக்கு மற்றொரு கடிதம் மேசையின் மீது. அதே அனுப்புனர் முகவரி.

கடிதத்தை பிரிக்காமலேயே மனஉளைச்சல் துவங்கியது. இம்முறை கடிதத்தை பிரிக்காமல் இருப்பது எல்லா வகையிலும் நல்லது. இந்த போஸ்ட்மேன் திட்டமிட்டு கொடுக்கிறார? இல்லை எனக்கானது தான் என்று முடிவு செய்து கொடுகிறார? குழப்பமாக இருந்துது. படிக்காமல் அலமாரிக்குள் சொருகி வைத்தேன். கடிதம் பல கதைகளை எனக்குள் பின்னியது கடிதத்தை நினைத்த வாறே தூங்கிபோனேன். நடு இரவில் அந்த கடிதம் உயிர் பெற்று அழைப்பது போல குரல் கேட்டு சட்டென விழிப்பு வந்தது. அதை பற்றியே நினைத்தவாரே இருப்பதினால்  நினைப்பு  எழுப்பி இருக்கும்.  அப்பொழுது தான் முதல் கடிதம் சொன்ன ஒரு ரகசியம் பொறி தட்டியது. முதல் கடிதத்ததில் “உன்முகவரிய உன் சினேகிதான் அமீர்ட தான் வாங்கினேன். கடைசிவரை உன் சிநேகித்தான் தரவே இல்ல, உன்ன பத்தி எதுவுமே தெரியாதுன்னு சொல்லிட்டே இருந்தான் என்னோட தொல்ல தாங்காம இப்பதான் உன்முகவரி கொடுத்தான்.

                                                                                                5

முகவரி கொடுத்ததிற்காக அவன கொவிசுடதே நான் தான் தொல்ல செஞ்சு வாங்குனே” ஒரு வேலை உண்மையாக அமீர் என்பவனுக்கு  தெரியாததினால் வேண்டுமென்றே அவர் தொல்லை தாங்காமல் தப்பான முகவரி கொடுத்திருப்பானோ? இல்லை வேண்டுமென்றே கொடுத்திருப்பானோ எதுவாக இருந்தாலும் அவஸ்த்தை படுவது நானும், அந்த வயதான ஜீவனுமே. எதாவது முக்கியமான தகவல் இருக்க போய் அது தெரியாமல் போனால் என்ன செய்வது. வேறு  வழி இல்லை கடிதத்தை பிரித்து படித்து விட்டு அவருக்கு ஒரு பதில் அனுப்பிவிட வேண்டியதுதான் உங்கள் மகன் இங்கு இல்லை தவறாக கடிதம் வருகிறது என்று, கடிதம் பிரித்து விரித்த போது,

“அஸ்லாம் அழைக்கும்,

அத்தா சுக்கூர் உனக்கா காத்திருந்தேன். இன்னும் உன் கோவம் தீரலையா, இல்லாட்டி உன் கடுதாசியாட்டும் கபர்ஸ்தான் போற உசுரு  தேத்த வருமுனு பார்த்தேன். அன்னக்கி  என்கோவம் நியாந்தேங்கிறது உன்னால புருஞ்சிகிலையா, உன்னை தூக்கி வளர்த்தி ஆளாக்கின உன் அத்தாவுக்கு உன்மீது கோவம் வர கண்டிக்க  உரிமை இல்லையா, உன்னப்போல எல்லாத்தையும்  என்னாலே  உதறிட்டு  வர முடியாது. ஆனாலும் உனக்காக எல்லாத்தையும் பாக்கெ  தயாராக இருக்கிறேன். நம்பிக்கையோடு வர சொல்லியும் நீ வர மாட்டிங்கிரே, ஒரு கடுதாசி  போடவும் இல்ல. உடம்புக்கும் சரியில்லை போற உசுரு உன்ன  பாக்கவே அல்லாவிடம் உயிர் பிச்சை கேட்டு துவா செய்துட்டு இருக்கு. மையத்திற்கு போவதற்குள்ள  வா பாவா.

அன்புடன் அப்துல் நாசர்.

இரண்டாம் கடிதம் ஒரு ஜீவனின் கடைசி உயிர் போராட்டத்தை முன்மொழிந்தது. கடிதம் முடிந்த போது கண்ணில் நீர் குவிந்து இருந்தது. யாருக்கோ போக வேண்டிய கடிதம் எனக்கு வந்து எனது மறுப்பு கடிதம் எழுதும் முடிவை சிதைத்து கொண்டிருந்தது. அநேகமாய் இன்னும் சில நாட்கள் என்தூக்கதை கபளீகரம் செய்துவிடும்.

ஒருவாரத்திற்கு பிறகு ஒருவழியாய் முடிவுக்கு வந்தேன். அவர் மகன் எழுதியதை போல உயிருக்கு போராடும் ஒரு ஜீவனுக்கு விரைவில் வந்து பார்ப்பதாகவும் கோபம் எதுவும் இல்லையென்று சமாதனம் செய்து ஒரு கடிதம் போடுவதாக முடிவு செய்து விட்டேன். அந்த நிம்மதியாவது அவருக்கு கிடைத்து விட்டு போகட்டும். நான் சிறுவனாக இருந்த போதே என் அத்தா மௌத்தாகிவிட்டார். ஆனால் இல்லாத என் அத்தாவிற்கு கடிதம் எழுதுவது எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஒருவேளை நானும் சுக்கூர் போல ஒரு முடிவு எடுத்து குடியான  பெண்ணை கல்யாணம் செய்திருந்தால் என் அத்தாவும் இதைபோல ஒரு கடிதம் எதிர்பார்த்து காத்திருந்தா? எவ்வளவு கொடுமையாக இருக்கும்.

                                                                                                6

என் அத்தாவுக்கு நான் எழுதினா எப்படி எழுதுவோமோ அதையே மனசு வச்சு எழுதுவோம். ஒரு ஜீவனின் உயிர் போராட்டத்திற்கு உரம் கொடுத்தா இருக்கட்டும். எப்பிடி எழுதுவது என்று இரண்டு நாட்கள் மனதில் எழுதி வெள்ளை தாளில் பேனாவை வைதேன்.

அன்புள்ள அத்தாவிற்கு,

சுக்கூர் எழுதுவது, நான் நலம் உங்கள் கடிதம் கிடைத்தது. வேலை காரணமாக பதில் எழுத முடியவில்லை, இங்கு எல்லோரும் நலம். உங்கள் மீது கொஞ்சம் கோவம் இருந்தது. ஆனாலும் உங்கள் நிலைமையே எனக்கு ரெம்ப தாமதமாதான் புருஞ்சுகிட்டேன். எனக்கும் உங்களை பார்க்க மனசு தோணுச்சு ஆனா உங்களுக்கு இன்னும் கோவம் இருக்கும் என நினைச்சு கடிதம் போடால, என்ன பத்தி கவல படாம நீங்க உடம்ப பாத்துக்குங்க அல்லா உங்கள நல்ல படிய பாத்துக்குவான். உங்களுக்காக நான் துவா  செய்யுறேன். எனக்கு நீங்க ரெம்ப முக்கியம் உங்க லெட்டர் எனக்கு நெறைய சந்தோசம் கொடுத்துச்சு, நீங்க எவ்வளவு கஷ்டபட்டு என்னையும் ஆய்சாவையும் வளதீங்கனு தெரியும், நிம்மதியா இருங்க சீக்கிரமே வந்து பாக்கிறேன். அன்புடன் உங்கள் மகன் சுக்கூர்.

கடிதம் முடித்தவுடன் மனம் எதோ என் அத்தாவை நினைவு படுத்தியது. அவர் வண்டி போய் வந்தால் கடை தெருவு முழுக்க தூக்கி சென்று கேட்டதெல்லாம் வாங்கி தருவதும், எந்த ஊர் போனாலும் அந்த ஊர் திண்பண்டங்கள் பழங்கள் வாங்கி தருவதுமாக என்னை பார்த்து பார்த்து வளர்த்த நினைவுகள், யாருக்குமே கடிதம் எழுதாத எனக்கு என் அத்தாவிற்கே கடிதம் எழுதிய உணர்வு. கடிதம் நெஞ்சு முழுக்க பாரமாய் அழுத்தியது. நாளை வெள்ளிகிழமை ஜும்மா தொழுகை முடிந்த பின் மன நிறைவாய் இந்த கடிதம் அனுப்பலாம் ”இன்ஷா அல்லா”  கடிதத்தை அலமாரியில் வைத்தேன். கடிதம் எழுதிய பின் தான் எதோ ஒரு நிம்மதி உணர்ந்தேன்.

கம்பெனியிக்கு அருகிலிருந்த இருந்து பள்ளிவாசலில்  ஜும்மா முடிந்து கையோடு ஒருவித உறுத்தலோடும்,  ஏதோவொரு நல்ல காரியம் முடிந்த நிறைவில் தபால்பெட்டியில் கடிதம் போட்டேன். வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் நிம்மதியான மதிய உணவு. அன்றைய ஜும்மா தொழுகையில் அந்த பெரியவருக்கும் அத்தாவிற்க்கும் சேர்ந்து மனம் உருகி துவா  செய்தது அவர்க்கு அல்லா கபுல் செய்வார்.  எதோ ஒருவகையில் இன்று நிறைவான நிம்மதி. நடந்தது அனைத்தும் இன்று அம்மாவிடம் சொல்லிவிட வேண்டும். யாராவது தேடி வந்தாலும் திருதிருவென்று முழிக்காமல் பதில் சொல்லுவாள். இன்று நிம்மதியாகவும் தூங்கலாம்.

மனம் முழுக்க அந்த பெரியவர் பற்றிய நினைவே நிறைந்திருந்தது. அவர் அருகிலிருந்து பேசுவது போல் இருந்தது. சின்ன வயதில் அத்தாவை இழந்த வலி வெகு காலத்திற்கு பிறகு இன்று வாட்டியது. ஒருமுறை அம்மா அடித்த போது “என்பையன கை நீற்ற வேல வச்சுக்காத கைய முருச்சுருவே ஜாக்கிரத” என்று என்னை இறுக பிடித்து அம்மாவிடம் செய்த சண்டை என்னை சமாதானம் செய்ய நடந்த போலி சண்டை என இப்போது தெரிந்தாலும், அந்த பாசத்தின் ஈர்ப்பு உனக்காக நான் எப்போதும் இருப்பேன் என்ற வாழ்வின் பிடி அவர் மௌத்தான போது தளர்ந்தது இன்று வலித்தது.

                                                                                                7

ஒரு கடிதம் வழியே அத்தாவின் நினைவை சுமந்து வந்த அந்த பெரியவரும் மனதில் அத்தா இடத்தை அடைந்தார். என்னை அறியாமல் இன்று  அத்தாவிற்க்கும் பெரியவருக்கும் துவ செய்தது கூட அத்தாவின் மீதான அடியாழ அன்பின் ஏக்கமாக இருக்கலாம், மனதில் ஒரு சேர அத்தாவும் பெரியவரும் நிறைந்து இருந்தனர். நான் இன்று எழுதிய அந்த ஒற்றை கடிதம் ஒரு ஜீவனுக்கு நிறைந்த மன அமைதி தரும், நிச்சயம் அப்துல் சுக்கூர் உண்மையாகவே அவரை பார்ப்பார். அதுவரை என் கடிதம் அவரை நடமாட வைக்கும். 

வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைகையில் மேசையின் மீது வைத்திருந்த  புத்தகத்தின் கீழ் பிரித்து வைக்கப்பட்ட ஒரு வெள்ளை நிற கடிதம் போல காகிதம். உள்ளிருந்து வந்த அம்மா “யாரோ நாசரமா மௌத் ஆய்டதான் தந்தி, உனக்கு தெருஞ்சவருனு போஸ்ட்மேன் சொன்னாரு யாரு மவனே அது” கேட்டபடி அம்மா நின்றுகொண்டு இருந்தாள். வார்த்தை வெளிய வர தடுமாறியது, அழுது விடுவதற்கான எல்லா சமிக்கைகளும் கண்ணில் உருவானது. எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று தாளிட்டேன். தந்தி காகிதம் முழுக்க நனைந்தது.   

- அ.கரீம்