Black catஅழகிய விடிகாலையொன்றில்
விழித்து வாயில் திறக்க
நின்றிருந்தது கறுப்புப் பூனை.
நிறக்கலப்புப் பாவனைக்காய்
மட்டும்
முகத்தில் இரண்டு
பச்சைக் கண்மணிகள்
பதித்து.
உறுத்துப் பார்த்தது.
ஏதோ என்னில் தான்
விழித்தது போல.
விசனமுறும் மனம் எனது.
'பார்த்துப் போகச்' சொல்கின்ற
தாயின் வார்த்தைகள் ரீங்காரிப்பதும்
கறுத்த பூனையினாலாகும்
துர்ச்சகுனம் பற்றிய
பாட்டி வழிக் கதைகளுக்கு
பழக்கமானதுமான
என் காதுகளைச் சுமந்த
அன்றைய பயணம்
நிம்மதி தொலைத்தது.
அவ்விதமான பயணங்களும்
காலைச் சகுனங்களும்
முடிவுற்ற
ஒரு அழகான அந்தியில்
வீடு வந்தேன்.
வீட்டின் முன்பதாகுமோர்
குறுக்குத் தெருவில்
கழுத்தில் தெறித்த
குருதிக்கோட்டுடன்
கிடந்தது கறுப்புப் பூனை
தன் மென்பச்சை விழிகளை
நிரந்தரமாய் மூடி.

சாரங்கா தயாநந்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.