Womanதிலகாவின் பகல்கள்
வெறுமையானவை
விதிகளின் கீழ் இயங்குவை
எதிர் சுவரில் சரிந்து விழும்
வெய்யிலின் பரப்பில்
அபூர்வமாய் கடந்து மறையும்
பறவையின் நிழலும்,
வடகங்கள், வானொலி
கீரைக்காரியுடனான பேரமும்
நிரப்பப்பட்ட பகல்கள் அவளுடையவை;
திலகாவின் இரவுகள்
திலகாவினுடையதே இல்லையென்பது
முன் அறிந்ததே;
அயர்ச்சியுடைய பகல்களிலிருந்து
அவனை மீட்டெடுகின்ற
மாலை வேளையில்
களைத்து வீடு திரும்புகிற
நமக்கு தினசரி தவறாது
ஒரு கோப்பை தேனீரும்,
மிதமான புன்னகையும் வழங்குகிறாள்
என்றாவது ஒருநாள்
அக் கோப்பைத் தேநீரில் இனிப்பு
தூக்கலாகவோ, குறைவாகவோ
மாறி விடுகின்ற தருணத்திலிருந்து
துவங்குகிறது நமது பதட்டம்.

*******

மேஜையில் கிடக்கிறார்
பாப்லோ நெரூடா

முழுவதுமாய் புகைக்கப்பட்ட
சிகரட் துண்டுகள்
சாம்பல் கிண்ணத்தில்

செந்நிற மதுப்புட்டியில்
சற்றே மீதமிருக்கிறது

இசைத்தட்டில் வழிகின்ற
வயலினின் மென்கேவலுக்கேற்ப
நைலான் சுருக்கில்
நிர்வாணமாய் ஆடுகிறது
நடராஜனின் உடல்

தற்கொலைகள்
விரக்தி மட்டுமின்றி
நிறையும் சார்ந்தவை.