மேலை நாடெங்கும்
ஈழத்தின்
Old manஏழைப் புத்திரர்கள்
உழைத்துழைத்து வரி கட்டி
வளம் பெருக்கி;
வாழ எண்ணி
திசை நகர்ந்து
சமுத்திரத்து மீன்களாக
சகதியிலே
மாட்டி மாட்டி
யாசித்துக் கிடக்கின்றார்.

*** *** ***

தன் தேசம்
அங்கே
தீப்பற்றி எரிகையிலே
மக்களங்கே
தெருத் தெருவாய்
அலைகையிலே
வாயில் நுழைய மறுக்கும்
ஓர் மேலை நாட்டில்
ஓர் வீட்டில்,
இன்றைய துயர்ச் செய்தியை
தொலைக்காடசி பார்த்தோ
அன்றி;
யாதொன்றில் கேட்டோ
மனம் சோர்ந்து
தூங்கிப் பின்
கண் விழிப்பான்.

*** *** ***

காலத்தின் சதியினாலே
அவனுமோர்
அகதிதான்.
நகர் நகராய்
நாடு நாடாய்
விட்டலையும்
ஈழத்து அகதியவன்.
இணைபிரிந்த
தனியாடு.

*** *** ***

ஊரில்
உறவுகள்
நிலை அறிவான்
தீ எரியும் தேசமாக
துயர் பெருகும்
உறவுகளின்
கதை அறிவான்.
நாளை
துயர் முட்டி
வந்த திசைச்சுவடு
தெரியாமல்
மடிந்தும் போகலாம்.
கடல் வந்து
அலை மோதி
மணல் மூடித்
திட்டாகி
சிறு நண்டுப்
படம் போல
சிலவேளை
அவர் வாழ்வு
மறைந்தும் போகலாம்.

*** *** ***

வாழ்க்கை
சீவியமாகி...
போராட்டமாய்
இன்னும் தொடர்கிறது
நாட்கள்...
ஆனால்?
பின்னொரு நாளில்
அகதித் தேசத்து
அடிமைகள் அனைவரும்
முடிவிலாப்
பெருவெளி கடந்து
நாடு மீள்கையில்...
அவலம் மட்டுமே
பேசித் துயருறும்
அந்தர நிலைக்குள்ளும்
தள்ளப் படலாம்.

*** *** ***

பிணங்களால் நிறைந்து
இரத்தத்தில்
குளித்து
இன்னும் நிறம் மாறி
வெண்மணல்
சிவக்கிறது.
வயிறொட்டும் பட்டினியும்
உடலுருக்கும்
நோயும் வந்து
உயிரறுக்கும்.
கந்தகப் புகையாலே
எழுதப்பட்ட
தினச் சாவுக் குறிப்புக்கள்
இல்லாமல்
என் ஊர்
என் நகரம்
என் நாடு
இனி
என்று மீளும்???

- தியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)