love
வெளிக்காட்டாமல் அடங்கியிருந்த
மெளனப்படலத்தைக் கிழித்து
நீர்த் திரை கோர்த்து
எனக்குள்ளான வாயிலில்
காத்துக்கிடந்தது
உன் பழைய கவிதைகள்

நீண்டும் குறுகியுமிருந்த
அதன் வடிவங்களையும்
படிம விவாதங்களைத் தாங்கி நிற்கும்
வார்த்தையினடி கோடுகளையும்
என்னுள் அடர்ந்து வளர்ந்திருந்த
மொழியை சுண்டியெழுப்பியது

பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று

நான் என்ற தொடர்பு முதல்
கண்ணீர் என்ற முடிவு வரையிலும்
அங்குல அங்குலமாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்தது
கவிதை எனும் பலகையினூடு

ஒற்றைச் சாளர வழிதிறந்து
அறை நிரப்பிய காற்றாய்
அருகிருந்த மனைவி என்னை
இருக்கினாள்

தவறவிட்ட பழைய கவிதைகள்
கைக்ககப்படாத தூரத்தில்
பயணித்துக் கொண்டிருந்தன

ஆதவா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)