Muthukumar Bodyதீயின் கிணறுகள் வெடித்து விரிகிற
நகரங்களில்
உன்னை பற்றியெறித்து விடிந்த
காலையில் உனது
கனதியான சொற்கள் தீப்பிடித்தன.

அணையாத பெருந்தீயில் எரிந்துருகியபோது
நமது தலையின் தீ கனக்கிறது.
வழிகள் அடைபட்டு வீடுகளை தீ வைத்து
வருகிற படைகளிடம்
இனத்தின் வேர் கருகுவதற்கான
தீ எரிக்கிற கோப்பையில்
நமது சொற்கள் போடப்படுகின்றன.

உயிர் வளர்த்த சொற்களினை
தேடுகிற உனது கடைசிச் சொற்கள்
எண்ணையில் மிதக்கிறது.

கதிரைகளை கிழித்தெறிந்த காலையின்
தீயில் சூரியன் வேகிட
வானம் வாடிப்போயிற்று.
தீயெழுதுகிற கவிதையின் சொற்கள்
பற்றி உயிர் எரிகிறது.

இன்னும் அணையாமல் பரவுகிற
தீயில் உனது சொற்கள் பிரகாசிக்க
தீயை கருக்கும் உயிரின் வாசம் பெருகுகிறது.

மண்ணை தின்னுகிற கால்களின்
அடியை உனது நினைவுத் தீயெரிக்கிறது.
உனதுறவுகள் புதைகிற மண்ணில்
எரிபடுகிற சாம்பலில் பெரும் கற்களென
உனது உயிரும் சொற்களும்
அனல் கொண்டு வருகிறது.

எரிந்து கருகிய முகத்தினை தேடுகிறது
நமது சனங்களின் தீக்கிடங்குகள்.

(தீக்குளித்து தியாகச் சாவடைந்த முத்துக்குமரனுக்கு)

தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)