அதிகாலைப் பொழுதில்
கனவைத் துரத்திவிட்ட நொடியிலிருந்து
எனக்கான இம்சைகள் ஆரம்பிக்கின்றன

அது
எழுதுபொருளும் காகிதமுமாய்
பல்துலக்கும் முன்
துருத்திக் கொண்டு நிற்கின்றன

என் சலிப்பு தழுவிய இம்சைகள்
மோகனப்புன்னகை ஒன்றை
இதழோரம் புதைத்து
விழியோரம் காத்துக்கிடக்கின்றன

செல்லும் வழியெங்கும் இரைந்து
என் பாதச்சுவட்டை
அரித்து சிரிக்கின்றன

அதன்மேல் இஷ்டமில்லாத
என்மீது தழுவி
மூர்க்கத்தனமாய் முத்தங்களைப்
பொழிகின்றன

கொடும் பகல் அடங்கிய இருளில்
என் படுக்கைக்கு அருகே
மாளாத மயக்கத்துடன்
நெளிந்து வளைகின்றன

இம்சைகளிடமிருந்து இன்னும்
விடுபடாத சூழ்நிலையில்
பொழுது புலர்கிறது

இம்சைகள் ஆரம்பிக்கின்றன மீண்டும்

ஆதவா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)