லிபரேஷன் நடவடிக்கையின் போது
உன் முந்தானையை இறுகப் பற்றிய நான்
தாடிமாமா வீடுவரை ஓடியதாக ஞாபகம்.
முன்னேறிப் பாய்தலின்போது
இடியெனெக் கேட்ட
வெடியொலி ஒவ்வொன்றுக்கும்
உன்னருகில் முகம் புதைத்து
நடுங்கியதாய் நினைவலை
இடிமுழக்கம் மின்னலென
கொட்டித் தீர்த்த போதுதான்
முதன் முதலில் - ஊரை விட்டு
இடம் பெயர்ந்து போனதாக
நினைக்கிறேனம்மா
கைகுலுக்கல் ஒன்றும் ரண்டும்
குலுக்கிய போதுதானே நாம்
முற்றும் துறந்து முழுமையாய்
அகதியானோம்.
யாழ்தேவி நடவடிக்கை தொடங்கியபோது
செல்மழையில் நனைந்தெழுந்து
பதுங்கு குழியே கதியென அலைந்தோமே
சூரியக்கதிர்தானே சுழற்றி அடித்தெம்மை
கிளாலி தாண்டிவர வைத்ததம்மா
கொஞ்சம் மூச்சிழுத்து நிம்மதியாய்
வாழ்ந்திருந்த வேளையில் தான்
சத்ஜெய வந்தெம்மை மீண்டும்
கதி கலங்க வைத்ததம்மா
மீண்டும் தெற்கு நோக்கி மீளுகையில் ஜெய
சிக்குறு வந்தெம்மை
நிலைகுலைய வைத்ததுவே
காலச் சுழற்சியிலே ரணகோஷ தானே எம்மை
முதல் முற்றுகைக்குள்
அகப்படுத்திக் கொண்டதம்மா
அதிலிருந்து மீண்டெழுந்து காலூன்றி
நின்ற வேளை ரிவிகிரண வந்தெம்மை
வல்வளைக்க முயன்ற போதும்
வளைந்து கொடுக்காது
வன்மத்துடன்தானே இருந்தோமம்மா.
இத்தனைக்கும் உன்னுடன்
துணையாக இருந்த நான் இப்போது மட்டும்
உன்னை தனிமையிலே தவிக்கவிட்டு
வந்த மண்ணில் அகதியாக
நீயோ சொந்த மண்ணில் அகதியாக

2

மின்மினிகள் ஒளியூட்டும்
கும்மிருட்டு வேளையிலே
உலங்குவானூர்தி வந்து வானில் வட்டமிட்டு
சுட்டுத் தீர்த்த போதும் நான்
உன்னருகில்தானே உண்டு உறங்கி
உயிர்த்தெழுந்னேனம்மா
சியாமாச்செட்டி வந்து வானில்
வேடிக்கை காட்டி
குத்தி எழும்பும் போதெல்லாம்
உருண்டு புரண்டு ஓடி
ஒழித்து உயிர்த்திருந்தோமே
சீப்பிளேன் அதன் பின்னர்
சீனத்துச்சகடை வந்து
மலப் பீப்பாய் உருட்டிய போது கூட
மருளாமல்தானே வாழ்ந்திருந்தோம்
அவ்ரோ , அன்ரனோவ்
அதன் வரிசையில் பின்னர்
புக்காரா எது வந்தபோதும் நாங்கள்
அசரவில்லைத்தானேயம்மா
சுப்பர்சொனிக் போட்ட குண்டு
துரவு தோண்டி வைத்தபோதும்
கிபிர் சத்தம் எங்கள்
காதில் இரைத்த போதும்
உன்னுடன்தானேயம்மா துணையாக
நானிருந்தேன்.
மிக் விமானம் வந்து இன்று
குண்டுமழை போடும்போதுமட்டும்
உன்னைத் தவிக்கவிட்டு
நான் மட்டும் ஏன் வந்தேன் தனியாக

3.

சொட்கண்கள் சோடை போன பின்னர்
ஏ.கே.47 வந்து குடித்தனம் நடத்தியது
எல்.எம்.ஜி களும் ஐம்பது கலிபரும்
சன்னங்களை விதைத்து
உயிர் குடித்த வேளையிலும்
மிதிவெடிகள் எங்கள் வேலியோரம் வெடித்து
மனிசர் காலிழந்த நேரத்திலும்
எங்கள் வீதியிலே கண்ணிவெடி
வெடித்து ஊர்
களையிழந்த போதினிலும்
அஞ்சிஞ்சி பின்னர் ஆட்டிலறி
ஒன்றன்பின் ஒன்றாக
அணிவகுத்த போதெல்லாம்
உன்னருகில் இருந்த நான்
பல்குழல் பீரங்கி
மழைமாரியாய் பொழிந்தபோதும்
கொத்தணிக் குண்டுகள்
கொட்டித் தீர்த்தபோதும்
உன்னைத் தவிக்கவிட்டு வந்தேனே

தாயே யுத்த காலமெல்லாம்
உன்னருகில் வலக்கரமாய்
இருந்த நான்
உன்னை விட்டுப் பிரிய
சமாதான காலந்தானே
சதிவலை விரித்ததம்மா
சமாதானம் தந்த பரிசு - எனக்கு
அன்னிய மண்ணில்
அகதி வாழ்வு உனக்கு
சொந்த மண்ணில்
அகதி வாழ்வு.