காற்றின் கரங்கள் தீண்டலால்
கதறிய மணியோசையைக் கேட்டு
பதறி எழுந்தான் இறைவன்.
விபூதி மணத்துடன்
இருள்பூசிக் கிடந்தது பிரகாரம்.
காய்ந்த மாலைகளோடு
காலடியில் கிடப்பவை
என்ன எனப்பார்த்தான் இறைவன்.
வீடு ஏலம் போகாமல் மானம் காக்க
கை. கால்களின் சுகம் காக்க
வளைத்துப் போட்ட நிலம் காக்க
பவிசான பதவி காக்க
வேலை கொடு குடும்பம் காக்க
என பக்தர்களின்
இரைஞ்சல் வேண்டுதல்கள்.

தொடரும் மணியோசை
துயரமாய் விரட்ட
கொட்டிக்கிடந்த
இரைஞ்சல்களின் மீதேறி
வெளியே வந்தான் இறைவன்.
மரத்தில்
குழந்தை வரம்வேண்டி கட்டப்பட்ட
தொட்டில்களில்
குழந்தை இருப்பதாய் நினைத்து
அவற்றை
ஆட்டிவிட்டுக்கொண்டிருந்தது காற்று.
கருப்பணன் அம்பலம் உபயத்தால்
வார்க்கப்பட்ட
பித்தளை உண்டியல்
பெரிய பூட்டோடு காட்சி தந்தது.
வெட்கப்பட்ட இறைவன்
பிரகாரத்திற்குள்
ஓடி ஒளிந்து கொண்டான்.

ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)