சற்றுநேரத்திற்கு முன்பு வரை
சூரியனைக் கொண்டிருந்த வானம்
கருத்துத் திரண்டது,
rain
காளிசிலையின் உருவம் போல.
வானம் மிணுத்து,
மேகம் தளும்பியது.

தூரத்தில் ஒரு மின்னல்
கருத்தத் திரையில்
வெள்ளிக் கோலம் போட்டுப் போனது
தொடர்ந்து வந்த ஒலியில்
கும்மியடித்தது வானம்.

புள்ளியாய்த் துவங்கி
சாரலாய்த் தொடர்ந்து
வேகமெடுத்தன,
நீர்த்துளிகள்

காய்ந்த தரை
ஈரம்பட்டுச் சிரித்தது
கூடிமுயங்கியது போல
சூழலில் சப்தம்.
நீர்த்துளியின்
பொருண்மை மிகுந்து
குளிர்ந்த நிலம்
ஈரத்தில் நடுங்கியது

மழை நின்றபோது
வெற்றிபெற்ற காளைபோல
மேகம் கரைந்து போயிருந்தது

தரையின் ஈரம்,
பெண்மனம்போல்
நாணிச் சிலிர்த்தது.
இனி எப்போது வரும்
இதுபோல் ஓர்நாள்?

 

-கருப்பு நிலா