வன்மங்கொண்ட பெருநாயெனெ
நகரத்தில் கவிழ்கிறது
பாதரச பகற்பொழுது

வாலாட்டி உருமி
உருமி வாலாட்டி நடித்தபடி
தன்னை மறந்து போகிறான்
முன்பு மனிதனென
அழைக்கப்பட்ட சித்தன்

விரல் நுனிகள்
பழகிவிடுகிறது
பாதக நகக்கண்கள்

யாரும் வாங்காத பூக்கள்
கசக்கிக் கொடுக்கப் படுகின்றன
எதுவும் தெரியாத குழந்தைகளுக்கு

ஒளியிழந்த மிருகக் கண்கள்
புணர்ந்து போய்க்கொண்டிருக்கிறது
காட்டின் முடுக்குகளுக்கு

கையெழுத்துகள் அற்றுப்போய்
இருள் கவியும் வரை
கைப்பழக்கத்தில் கீபோர்ட்
அடித்துக் கொண்டிருக்கிறது
பிண்டமொன்று

வன்மங்கொண்ட பெருநாயெனெ
நகரத்தில் கவிழ்கிறது
பாதரச பகற்பொழுது

- லதாமகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)