எரியுண்ட நகரத்தில்
இருந்து சேதிகள் வருவதற்கான..
கடைசி வழியையும்
Man in wound
நேற்று மூடினர்..
கொஞ்சமாய்க் கேட்டுக்கொண்டிருந்த
விசும்பல்களும் தேம்பல்களும் கூட
கேட்காது போகும் இனி..
கருவறையின்
கதவுகளிற்குப் பின்னால்
ஒழித்தபடி..
இடுக்குகள் வழியே
கடவுள் பார்த்துக்கொண்டிருந்தார்..
தனது பலிபீடத்தில் வழிந்துகொண்டிருக்கும்..
குருதியின் கொடும்பசுமையை
கடவுளின் பார்வை நடுங்கிக் கொண்டிருந்தது...

பதுங்குகுழிகளில் இருந்து
சிலந்திகள் வெளியேறிய அன்றைக்கு..
குழந்தைகள் சம்மணமிட்டு அமர்வதை மறந்தார்கள்..
அந்நியர்களின்
காலரவங்கள் நொருக்கிய சருகோசைக்கு
மான்கள் பதகளித்துத்
திசைகளில் தெறித்தன..

சுடுகுழல்களின் வெடியோசை
புகுந்த நிலத்தின்
பூமரங்களில் நாளைக்கான
மொட்டுக்களும் இருந்தன
புத்தகங்களும்
கவிதைகளும் கூட..

எண்ணிக்கைகளைக் கூட மறந்துவிடலாம்
நாங்கள் எத்தனையாவது தடைவையாக
புதிய பட்டினங்களைச் சமைக்கிறோம்
என்கிற கவலைகள் ஏதுமற்று
காடுகளை வனையத்தொடங்குகிறோம்
துப்பாக்கிகளின் ஏவலின் கீழ்
திரும்பத் திரும்ப
காடுகள் இரக்கமுள்ளவை..

நாளைக்குத் திரும்பிவிடலாம் வீட்டுக்கு
குழந்தைகள் கேள்விகளை நிறுத்துவதாயில்லை
நிச்சயமாய் சென்றதடைவையைப்போல
வேலிச் செம்பரத்தையின் பச்சையம்
செத்துப்போவதற்கிடையில்
திரும்புதல் சாத்தியமாகாவிடினும்
நம்பிக்கைகள் செத்துப்போகமுதலாவது
திரும்பிவிடவேண்டும்.. ஊருக்கு..

த.அகிலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)