நிசப்தமாய் நின்றிருந்த நீர் பரப்பில்
கற்களை எறியத் துவங்கினேன்

முற்றிலும் எதிர்பாராத சலனங்கள் ...
வளர்தலை மட்டுமே பறைசாற்றப் பிறந்த வட்டங்கள்
அவற்றினூடே பிம்பமாய் நானும் வளர்கிறேன்
சின்னக் குழந்தையின் குதூகலத்தை ஒத்த நீர்த்திவலைகள்
அசைந்திராத எல்லாமும் அசைகிறது
குறுகிய எல்லாமும் வளர்கிறது
எனினும்
வளர்ந்த எதுவும் மேலும் வளரவில்லை
தேய்தலுக்கு உட்படவும் இல்லை
இறத்தலை ஒத்த பிரிதல்
மீண்டும் நிசப்தம் ...

இம்முறை நேர்ந்த
நிசப்தம் கொடியதாய் தோன்றியது
நான் ஏற்படுத்த விழைந்த சலனத்தின் பிரிவு
நீர்பரப்பை கொஞ்சம் கொஞ்சமாய் தின்னத்தொடங்கியது ...

அவசியமற்றதாகத் தோன்றியது என் செயல்
நிகழாமை நிகழ்ந்திருக்கலாம்
உன்னில் வாழ்ந்த அதே குரூரம் இப்பொழுது என்னிலும் ..
நீர்பரப்பை ஒத்திருக்கிறது என்நெஞ்சம் .

- லஷ்மி சாஹம்பரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)