காலை ஸ்வரம் கேட்காத
எழுச்சி
அதிகாரம் இல்லாமல்
வீட்டை நெருக்கும்
சூன்யம்
பிறிதொருநாள் எழுதிவைக்கும்
பிரிவென்ற கவிதை.

அழுது முடித்த மூன்றாம் மாதத்தில்
பெற்றவன் திருமணம் பார்க்கும் வாய்ப்பு
என் தாய்க்கு ஒரு மாற்று.

பச்சிளம் குழந்தையை மீறும்
மென்மை அவளிடம்
சொல்ல வார்த்தை இல்லை
உண்மை அவளிடம்

இன்று
அபஸ்வரம் இல்லாத காலை
அதிகார நெருக்கடியைக் குடித்த காலை
பிறிதொருநாள் எழுதிவைக்கும்
பரிவென்ற கவிதை.

ஆயின்
என்றேனும் ஒருநாள்
அம்மாவின் நினைவு வரலாம்
அழுது முடித்த பின் தோன்றும்

"அழாமல் இருந்திருக்கலாம்..."

- ஆதவா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)