எல்லோருக்குமான
வண்ண மலர் தோட்டமவள்
இலையுதிர் காலங்களில்
பூ சொரிய கட்டாயப்படுத்தப்பட்டாலும்
யாசித்தவர்க்கு ஒரு மொட்டேனும்
பரிசாகக் கொடுத்து விடுவாள்
வண்ணத்துப்பூச்சிகள் கீறிய
அதரமிலே அவை உண்ண
மகரந்தத் தேனை விட்டுச் செல்லும்
அவளுக்கான தத்துவம்
தன் மலர்களின் குருதியால் வரையப்பட்ட
கூண்டை விடுத்து பறக்கும் புறாவின்
ஓவியத்தில் பதிந்திருக்கும்
நறுவீயின் வனப்பில் கவனம் சிதறிய
நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள்
அவள் வேர்களின் வலியை
மணல் கூட்டின்மேல்
மண்புழுவாய் காலம் ஊர
ஒருநாள் தோட்டம் செல்லரித்துப் போகும்
அன்று வண்ணத்துப்பூச்சிகளின்
யாசகத்திற்கு செவி சாய்க்காமல்
நிர்வாணமாய் இந்தக் காலவெளியில்
பெருமூச்சிரைத்து புளகாங்கிதமடைவாள்
யாதுமற்று நிற்கும் அந்நாளில்
பிரபஞ்சத்தின் துளியெனக் கரைந்து
ஆசுவாசப்படும் அவளது குமுறல்
அதில் ஒளிந்திருக்கும் உங்களுக்கான
ஓர் உண்மை.

- வே.ஹேமலதா