காலையில் கண்விழிக்கும்போதும்
இரவில் உறங்குவதற்கு முன்பும்
இந்த மலை முகத்தை
பார்க்காமல் இருக்க முடியவில்லை
மலையும்தான்..
என் வீட்டில்
வீதியில்
ஊரில்
ஊர் தாண்டி எங்குபோய் ஒழிந்து கொண்டாலும்
எட்டிப்பார்த்து கண்டுபிடித்து விடும்.
மறைந்து கொண்டு விளையாட முடியாது
உள்ளேயும் வெளியிலும்
சுற்றிச் சுற்றி வரும் இந்த மலையிடம்
தோற்றுப்போகிறேன் நான்
சில சமயம் மலையும் ...
இந்தப் பிரம்மாண்ட உயரமும்
நீள அகலமுமான கொல்லிமலையை
எண்ணி வியக்காத நாள்
நான் விழிக்காத நாள்தான்..
என் பரம்பரை மரபணுவில் கலந்து
உயிரணுவில் கரைந்து
உடலணுவாய் எழுந்து நடமாடும் இந்த மலைதான்
என் பாட்டன், பூட்டன்
பூட்டனின் பாட்டன் ஆடு மாடுகளின் மேய்ச்சல் நிலம்.
மலைப்பால் வார்த்து
பயிர் வளர்த்து உயிர் வளர்த்தது இந்த மலை.
இன்று நான் உண்ணும் தட்டில்
உணவாய் குவிந்திருக்கிறது
ஒவ்வொரு பருக்கையும்
சிறு குன்றாய் எல்லோர் தட்டிலும்...
கவளம் கவளமாய் அள்ளி
விழுங்குகின்றனர்
குன்றுகளை உணவாக...

- சதீஷ் குமரன்