அன்றாடம் புலரும் பொழுதுகள்
நடுக்கங்கள் தாங்கியபடி
நாழிகைகளைக் கடத்துகிறது
வீட்டுவாயிலை விட்டு
வீதியைக் கடந்துவிட்டால்
உத்திரவாதம் இல்லை
ஊனுக்கும் உயிருக்கும்...
எங்கோ ஒரு மூலையில் காமத்தின்
எரிகுடலன் சிதைத்துக் கொண்டுதான்
இருக்கிறான் யுவதிகளை...
நம்மால் என்ன முடியும்
அதிகபட்சம் வலைதளங்களில்
கண்களை மேயவிட்டு
கண்ணீர் சொரியும் ஸ்மைலிகள்
இரண்டு மூன்றுமாய்
இட்டுவைப்பதைத் தவிர...
நகரத்து வீதிகளில்
பதாகைகள் தாங்கிய போராட்டங்கள்
எதிர்ப்புகளை மட்டும்
காட்டுவதோடு நின்றுவிடும்
எதுவும் செய்ய இயலாது நம்மால்..
யாரென்றே தெரியாத
அரக்கர்களால் சூறையாடப்பட்டு
சண்டப்பைகள் கிழிபட
குருதி வழிந்தோட
உயிருக்காய் போராடி
மடிந்த யுவதிகள் பலரின்
ஆன்மாக்கள் கைகொட்டி
சிரிக்கின்றன ஆகாயத்தில்
இந்த இருண்ட தேசத்தின்
நேர்மைகளையும் நியாயங்களையும்
பார்த்து..
கனவுகளை சுமந்த வண்ணம்
வண்ணத்துப்பூச்சிகளாய்
வலம் வரும்
ஏதுமறியாத பேதைகளைப்
பாதுகாக்க இயலாமல்
ஓநாய்களுக்குப் பலிகொடுக்கும்
கையாலாகாத நிலைஎண்ணி
வெட்கித் தலைகுனிகிறேன் நான்...

- எஸ்தர்